நமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன செய்வது...
சரி, ஜோசித்து பதிவு போட நேரம் இல்லை என்றாலும் நம்ம நண்பர் ஐடியா மணி அவர்களின் ஒரு அன்புக் கோரிக்கையை இந்த பதிவு மூலம் நிறைவேற்றலாம் என்று முனைகிறேன். எனது கவிதை நூலான "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்கின்ற நூலில் இருந்து "முதிர்கன்னி" என்னும் கவிதையை தனக்காய் பகிர முடியுமா என்று கேட்டிருந்தார். அவரிற்காகவும் இன்னும் சிலர் கேட்டிருந்தார்கள், அவர்களுக்காகவும் இதோ அந்த கவிதை.. இது 2009 இல் எழுதப்பட்டது.
முதிர்கன்னி.
என்னையும்
கவனியுங்கள்..
மஞ்சத்துப் பெண்கள்
கொஞ்சிக் குலாவும்
முற்றத்தின் மூலையில்
மூச்சுமின்றி பேச்சுமின்றி
முக்காட்டோடே
முப்பது வருடங்கள்...
என்னில் - இந்த
இலைகளுக்குக்கூட
இராசனையில்லை.
அப்படியிருக்க
இவர்களுக்கு மட்டும்
எப்படி வரும்
இந்த
அலரிப்பூவில் ஆசை.?
பெண்ணாய் பிறந்ததன்
பாரம் புரிகிறது
பெற்றோரின் கண்ணில்
அதன்
பெறுமானம் தெரிகிறது.
மஞ்சளுக்கும் மாலைக்கும்
இல்லையா நெஞ்சம்?
என்
மஞ்சத்திற்கும் மணவறைக்கும்
எனிந்தப்பஞ்சம்..
'முதிர்கன்னி' என்று
முதுமானி கொடுக்கிறீர்கள்
யாராவது - என்
முந்தானைக்கு
முடிச்சிட நினைத்தீர்களா?
இது
அலரிப்பூவும்
அந்தஸ்து கேட்கும் காலம்.
அப்படியிருக்க
இந்த
அல்லிப்பூ மட்டும்
ஏன் இன்னும்
சாகாமலும்
சமையாமலும்..
இங்கு - என்னை
காலாவதியாய் போன
கத்தரிக்காய் என்கிறார்கள் சிலர்.
அழுதுகொள்கிறேன்
உண்மைதான்.
அனால்
அழுகிவிடவில்லை.
ஏன் என்னை
முறைக்கிறீர்கள்?
முறைகெட்டா போய்விட்டேன்?
என் மணவறைக்கு
தகுதிபெற்றவை
வயது மட்டும்தானே
வசதி?
காதலித்தாலும்
காவாலி என்பீர்கள்.
இப்படி தாமதித்தாலும்
காலாவதி என்கிறீர்கள்.
உணர்வுகளுக்குள் முட்டிமோதும்
மரண அவஸ்தை
தெரியுமா இவர்களுக்கு?
கல்யாணம் என்பதைவிட
ஏன் ஒரு
கடமை கூட
செய்யவில்லை
எனக்கு..
எனக்கென்று ஒருவன்
எங்கிருப்பான்?
உனக்குத்தான் நானென்று
எவன் வருவான்?
நான்வளர்த்த உடம்பும்,
உப்பிட்ட உணர்வுகளும்,
கண்ணியம் தவறாமல்
கடைசிவரை காப்பாற்றிய
காவியக் கற்பும்,
கடைசியில் என்னை
ஏமாற்றிப்போனதா?
யாராவது - நான்
உதிர்ந்துபோவதற்குள்
முகர்ந்துவிடுங்கள்.
பிந்திவிட்டால் - நான்
முந்திவிடுவேன்
முடிந்துபோவதற்கு..
20 comments:
அமல்.... கை கொடுங்கள்!
எப்படி வாழ்த்துவேன்? அவ்வளவு அருமையாக இருக்குது கவிதை! வரிக்கு வரி சொல்லாழம் + பொருளாழம்! மனம் நெகிந்த வாழ்த்துக்கள்!
- ஒரு பெண்ணினால்கூட இப்படி ஒரு கவிதையைப் படைத்திருக்க முடியாது! -
ரியலி கிரேட்!
பெண்ணாய் பிறந்ததன்
பாரம் புரிகிறது
பெற்றோரின் கண்ணில்
அதன்
பெறுமானம் தெரிகிறது.//////
ம்....... மகளின் கவலை மடு என்றால், பெற்றோரின் கவலை மலை போல....!! இப்படி எத்தனை பெற்றோர்கள்?
மஞ்சளுக்கும் மாலைக்கும்
இல்லையா நெஞ்சம்?
என்
மஞ்சத்திற்கும் மணவறைக்கும்
எனிந்தப்பஞ்சம்../////
புதுக்கவிதைகளில் சந்தங்கள் அளவாகக் கலக்கப்படும் போது, அவை தேனில் குழைத்த பலாச்சுளை என ஆகிவிடுகின்றன! இவ்வரிகள் அதற்குச் சான்றாக......!
'முதிர்கன்னி' என்று
முதுமானி கொடுக்கிறீர்கள்
யாராவது - என்
முந்தானைக்கு
முடிச்சிட நினைத்தீர்களா?/////
வாவ்! என்ன ஒரு சொல்லாடல்?
இது
அலரிப்பூவும்
அந்தஸ்து கேட்கும் காலம்.
அப்படியிருக்க
இந்த
அல்லிப்பூ மட்டும்
ஏன் இன்னும்
சாகாமலும்
சமையாமலும்../////
உருவகம் உச்சம்....!!
இங்கு - என்னை
காலாவதியாய் போன
கத்தரிக்காய் என்கிறார்கள் சிலர்.
அழுதுகொள்கிறேன்
உண்மைதான்.
அனால்
அழுகிவிடவில்லை./////
அழுகிவிடவில்லை என்ற வார்த்தை பல ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கிறது! இந்த ஒரு வரிக்காகவே விடிய விடிய பொழிப்புரை எழுத முடியும்! இதில் விஞ்ஞானமும் இருக்கிறது + உளவியலும் இருக்கிறது!
இங்கு - என்னை
காலாவதியாய் போன
கத்தரிக்காய் என்கிறார்கள் சிலர்.
அழுதுகொள்கிறேன்
உண்மைதான்.
அனால்
அழுகிவிடவில்லை./////
அழுகிவிடவில்லை என்ற வார்த்தை பல ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கிறது! இந்த ஒரு வரிக்காகவே விடிய விடிய பொழிப்புரை எழுத முடியும்! இதில் விஞ்ஞானமும் இருக்கிறது + உளவியலும் இருக்கிறது!
நான்வளர்த்த உடம்பும்,
உப்பிட்ட உணர்வுகளும்,
கண்ணியம் தவறாமல்
கடைசிவரை காப்பாற்றிய
காவியக் கற்பும்,
கடைசியில் என்னை
ஏமாற்றிப்போனதா?
யாராவது - நான்
உதிர்ந்துபோவதற்குள்
முகர்ந்துவிடுங்கள்.
பிந்திவிட்டால் - நான்
முந்திவிடுவேன்
முடிந்துபோவதற்கு../////
மிகச் சிறப்பான பாராட்டுக்கள் அமல்! மிகச் சிறந்த கவிதையப் படித்திருக்கிறேன்! எனது வேண்டுகையை ஏற்று வெளியிட்டமைக்கு நன்றிகள்!
ஐடியா சொன்னது போல் ஒரு பெண்ணால் கூட இந்த அளவுக்கு மனதை உருக்கும் விதமா எழுதியிருக்க முடியாது.. க்ரேட் அமல்..
நான்வளர்த்த உடம்பும்,
உப்பிட்ட உணர்வுகளும்,
கண்ணியம் தவறாமல்
கடைசிவரை காப்பாற்றிய
காவியக் கற்பும்,
கடைசியில் என்னை
ஏமாற்றிப்போனதா?//
அப்பெண்ணின் உச்சக்கட்ட வேதனையின் வலியை இந்த வார்த்தையை தவிர எதுவும் வெளிபடுத்திவிட முடியாது..
மனதின் வலியினை எழுத்தில் கொண்டு வந்த திறமை பாராட்டுக்குரியது
முதிர்கன்னியின் நெஞ்சத்தின் வேதனைகளை அழகு கவிதையில் அச்சாரமாக கோர்த்த அல்லிப்பூக் கவிதை மனதைக் குடைகின்றது.
அமல், நிஜமாகவே அசத்திட்டிங்க. இதுவரை படித்த உங்கள் பதிவுகளிலேயே மிகவும் பிடித்துப்போனது இந்தக்கவிதைதான்.
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
அமல்.... கை கொடுங்கள்!
எப்படி வாழ்த்துவேன்? அவ்வளவு அருமையாக இருக்குது கவிதை! வரிக்கு வரி சொல்லாழம் + பொருளாழம்! மனம் நெகிந்த வாழ்த்துக்கள்!
- ஒரு பெண்ணினால்கூட இப்படி ஒரு கவிதையைப் படைத்திருக்க முடியாது! -
ரியலி கிரேட்!
//
யோவ்வ்.. என்னய்யா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. நன்றி பாஸ்..
ஆமினா said...
ஐடியா சொன்னது போல் ஒரு பெண்ணால் கூட இந்த அளவுக்கு மனதை உருக்கும் விதமா எழுதியிருக்க முடியாது.. க்ரேட் அமல்..//
மிக்க மிக்க நன்றி அக்கா..
தனிமரம் said...
முதிர்கன்னியின் நெஞ்சத்தின் வேதனைகளை அழகு கவிதையில் அச்சாரமாக கோர்த்த அல்லிப்பூக் கவிதை மனதைக் குடைகின்றது.///
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.
அம்பலத்தார் said...
அமல், நிஜமாகவே அசத்திட்டிங்க. இதுவரை படித்த உங்கள் பதிவுகளிலேயே மிகவும் பிடித்துப்போனது இந்தக்கவிதைதான்.//
ஓ... அப்படியா?? மிக்க சந்தோசம் ஐயா... நன்றி.
மிக அருமை நண்பரே. மிக ஆழமாக சென்று ஊடுருவுகிறது உங்கள் வரிகள்.
கவிதையின் வீச்சும் அதன் வடிவமும் அருமை. ஆயினும் சின்ன நெருடல். இன்னும் ஒரு பெண் ஆண்துணையின்றி வாழ முடியாதென்ற எண்ணமே எங்கள் எழுத்தாளர்களின் அனசைவிட்டிறங்காமல் இருக்கிறதென்றதே நெருடுகிறது. காலங்கள் பெண்ணை திருமணத்துக்கு உரியவளாகவே சமைத்திருக்கிறது. அதனையே இரத்தவழித்தொடாராய் தொடர்கிறோம் என்பது துயர்தான்.
சாந்தி ரமேஷ் வவுனியன் said...
கவிதையின் வீச்சும் அதன் வடிவமும் அருமை. ஆயினும் சின்ன நெருடல். இன்னும் ஒரு பெண் ஆண்துணையின்றி வாழ முடியாதென்ற எண்ணமே எங்கள் எழுத்தாளர்களின் அனசைவிட்டிறங்காமல் இருக்கிறதென்றதே நெருடுகிறது. காலங்கள் பெண்ணை திருமணத்துக்கு உரியவளாகவே சமைத்திருக்கிறது. அதனையே இரத்தவழித்தொடாராய் தொடர்கிறோம் என்பது துயர்தான்.
///
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. உங்கள் நெருடல் எந்தளவிற்கு நியாயமானது என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் பெண்கள் திருமணமாகாமல் அதாவது ஆணின் துணை இல்லாமல் வாழ்வதற்கு விரும்புகிறார்களா? அல்லது சமூகம், நம்ம கலாச்சாரம் அதை அனுமதிக்குமா? நமது பெண்களை இன்னும் இந்த கலாச்சார வட்டத்திற்குள் வைத்துத்தானே பார்பதற்கு இந்த சமூகம், கலாச்சாரம் விரும்புகிறது. கடலினுள் இருந்துகொண்டு கரையில் வாழ ஆசைப்படுவது மீனின் முட்டாள்தனம் இல்லையா? மேலைத்தேய கலாச்சாரத்தில் ஆண்கள் பெண்களுக்கு அவசியம் இல்லை. அதைவைத்துக்கொண்டு நமது பெண்களையும் அதே தராசில் நிறுக்க முடியுமா? நிறுப்பதுதான் சரியா?? சரி நம் பெண்களும் அப்படி மேலைத்தேய பெண்கள் போல வாழ விரும்புகிறார்களா?? நமது பெண்கள் அதிகம் சந்தோசப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு. ஒன்று திருமணம், இரண்டாவது தாயாகும் போது.. இதில் ஒன்று நடக்காமல் போனால் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதுதானே இந்த கவிதையின் பொருள்....
பாலா said...
மிக அருமை நண்பரே. மிக ஆழமாக சென்று ஊடுருவுகிறது உங்கள் வரிகள்.
///
மிக்க நன்றி அண்ணா.
Post a Comment