பெண்களோடு சண்டையிட்டு அல்லது அவர்களின் கடும் பேச்சிற்கு இலக்காகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதனால் மீண்டும் அவற்றை எதிர்பார்த்து இந்த பதிவை தொடங்குகிறேன். இறுதியாக ஒரு சகோதரி என்னை 'நீங்க ஒரு ஆணாதிக்கவாதி, பெண்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்...' என விமர்சனம் + அறிவுரை சேர்த்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பெண்களின் எதிர்மறை இயல்பு ஒன்றை கவிதையில் சொன்னதே அதற்கு காரணம்.
இன்று நான் சொல்லவரும் விடயம், என்னை பாதித்த விடயம். அதனால் பொதுவாக பல ஆண்களையும் இந்த விடயம் பாதித்திருக்கும் அல்லது பாத்திக்கும் என்பது எனது பயம். அதாவது பெண்கள் ஆண்கள் பற்றி தாங்களாகவே ஒரு வட்டத்தைப் போட்டு அதனுள் இருந்துவிடுகிறார்கள். பலவகையான ஆண்களின் இயல்புகளை வைத்துக்கொண்டு ஆண்கள் இப்படித்தான் என ஒரு வட்டத்தைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் ஏராளம்.
அவ்வாறான ஒரு விடயத்தை மட்டும் பேசலாம் என நினைக்கிறேன். அண்மையில் ஒரு சகோதரி என்னிடம் சொன்னார் "எல்லாம் கலியாணம் கட்டும் வரைக்கும்தான் அமல். புருஷன் வந்தபுறகு உதெல்லாம் எப்பிடி..?" இந்த பதிலுக்கு நான் கேட்ட கேள்வி, "கலியாணம் கட்டினதும் இந்தவேலையை தொடர்வதாய் பிளான் இருக்கா?"
ஏன் திருமணம் என்பது ஆண்களுக்கு சுதந்திரத்தையும் பெண்களுக்கு அடக்கு முறையையும் கொடுக்கும் ஒரு சம்பிரதாயமா? பொதுவாகவே பெண்கள் வரப்போகும் கணவன் தங்களை அதிகாரம் பண்ணும் ஒருத்தனாகத்தான் இருப்பான் என எண்ணுகிறார்கள். ஏன்? அப்படித்தான் இருக்க வேண்டுமா? அல்லது அப்படி எதிர்பார்த்தால்தான் ஓரளவாவது சுதந்திரம் கொடுக்கும் கணவன் வருவான் என்கின்ற சிந்தனையா?
என்னைப்பொறுத்த வரையில் இந்த வட்டம் பெண்களாலேயே அவர்களுக்கு போடப்பட்டது. அதற்காக ஆண்கள் காரணம் இல்லை என்று சொல்லமுடியாது. ஏன் எத்தனை ஆண்கள் பெண்களை அதாவது தங்கள் மனைவியை சமத்துவத்துடன் நடாத்துகிறார்கள். உளவியல் போக்கில் அதிகமான பெண்கள் ஆண்களை ஒரு கடுமைப் போக்காளனாகவே கருதுகிறார்கள். இது இவர்களுடைய பிரமை. அதாவது illusion. இருந்தும் அதிகளவான பெண்களுக்கு திருமணத்தின் பின் தன கணவன் தன மேல் கொஞ்சம் கடும்போக்கை கையாளவேண்டும் என்பதையும் விரும்புகிறார்கள். அதிகமான பெண்கள் ஆண்களிடம் அடங்கிப்போகவே விரும்புகிறார்கள். அதற்கு சென்டிமென்ட் + பயம் காரணமாகிறது.
எப்பொழுதுமே, ஆண்கள் எதை பெண்களிடம் இருந்து விரும்புகிறார்களோ அது பெண்களிடமிருந்து கிடைக்காவிடில் ஆண்கள் கடும் போக்காளர்களாக தங்களை சித்தரித்துக்கொள்ள முயல்கின்றனர். இதுதான் ஆண்களின் அடக்குமுறைக்கான முதல் படி. அதேபோல, தங்களுக்கு கொடுக்கப்படும் அளவுகடந்த சுதந்திரமும் கடும்போக்கின்மையும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உகந்தது அல்ல என்பதையும் பல பெண்கள் நம்புகிறார்கள். இதுவே ஆண்கள் பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த பெரும் காரணியாகிவிடுகிறது. அதேபோல இந்த ஆண்களின் கடினப்போக்கை பெண்கள் விரும்புவதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அது, தங்கள் மேல் நல்ல நம்பிக்கை வந்துவிட வேண்டும் என்பதற்காய்.
அடுத்து, தன்மேலும் தனது கற்பின் மேலும் எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அதிகமான் பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க முயற்ச்சிக்கிறார்கள். கணவனிடம் பயந்து வாழும் பெண் தனக்கு மட்டும் உடைமையாய் இருப்பாள் என்பது ஆண்களின் கனவும் கூட. ஆக, ஆண்கள் பெண்கள் மீது திணிக்கும் கட்டுப்பாடு சில வேளைகளில் பெண்களின் மறைமுக நிர்பந்தத்தினாலே வருகிறது என நியாயப்படுத்தலாம். ஆனால் எப்பொழுதும் அவ்வாறில்லை. அதேபோல, ஆண்களுக்கு அடங்கி வாழ ஆசைப்படும் பல பெண்கள் தங்கள் மேல் தங்களுக்கு அதிகம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது மட்டும் வெளிப்படை உண்மை.
எனவே, ஒரு பெண் திருமணம் ஆகும் பொழுதே தனது கணவன் அதை செய்ய விடமாட்டான், அங்கு போக விடமாட்டான், அவரோடு கதைக்க விடமாட்டான் என்கின்ற ஒரு மனப் படத்தோடு வந்துவிடுகிறார்கள். அதன் பின்னர் கணவன் அப்படி இருக்கிறானோ இல்லையோ அவர்கள் மனம் அதையே நாடும். ஆக, நான் சொல்லவருவது, உங்கள் கணவனை சரியாகப் புரிந்துகொள்ளும் வரை எதற்க்காக கணவன் பற்றிய ஒரு பொதுமைபடுத்தப்பட்ட வட்டத்தோடு வருகிறீர்கள்.
ஆண்களை பல வகைப்படுத்தலாம் பெண்கள். அதற்காக அவர்களை ஒரு பொதுவான வட்டத்திற்குள்வைத்து பொதுமைப்படுத்தாதீர்கள். பல நல்ல ஆண்கள் வருகிறார்கள். உங்கள் கேவலமான பார்வை அவர்களையும் மாற்றிவிடுகிறது. முதலில் ஆண்கள் பற்றிய அந்த அடக்குமுறை சிந்தனையை மாற்றுங்கள். வரும் கணவன் பெண்களை புரிந்தவனாக நிற்சயம் வருவான்.
பி.கு. அதற்காக, ஆண்கள் எல்லாரும் நூறு வீதம் நல்லவர்கள், எல்லா ஆண்களும் பெண்களை நூறு வீதம் சுதந்திரமாக நடத்துபவர்கள் என்கின்ற எடுகோளிற்குள் வரவில்லை. சொல்லவும் இல்லை.
1 comment:
பெரும்பாலான பெண்ணாடிமைத்தனங்களுக்கு பெண்கள் தனக்கு தானே போட்டுக்கொள்ளும் வட்டமும் காரணம் என்று மிக அருமையாக கூறி உள்ளீர்கள்.
Post a Comment