Wednesday, January 25, 2012

இது அப்பிடி இருக்குமோ? அல்லது இப்பிடி இருக்குமோ??

எமது பார்வைகளை அடிப்படையாகக் கொண்டே எங்கள் கருத்துக்கள் உருவம் பெறுகின்றன. அதாவது நாங்கள் எதை எப்படி பார்க்கின்றோம் என்பதில்தான் அந்த விடயத்தை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்ளுகின்றோம் என்பது தங்கியிருக்கிறது. அதாவது, நோக்கியோன் நோக்கிய பொருளை நோக்கியவாறே நோக்கின் நோக்கிய பொருள் நோக்கியவாறே அமையும் என்பது நடைமுறைக்கு சாத்தியமான கூற்று. மனிதர்கள் தங்கள் பார்வைகளாலேயே தாங்கள் காண்பவற்றை தாங்களாகவே விளங்கி புரிந்து கொள்கிறார்கள். அந்தளவிற்கு ஒவ்வொருத்தரினதும் பார்வைகள் அவர்கள் புரிதலுடன் அவ்வளவு ஒற்றுமை வாய்ந்தவை.



அதிகமானவர்கள் தங்கள் ஆளுமையை தங்கள் பார்வையில் வெளிப்படுத்தி விடுவார்கள். இந்த ஆளுமை என்கின்ற ஒரு விடயம் அடிப்படையில் இந்த பார்வையின் கோணத்தில்தான் கட்டப்படுகின்றன. அதிலும் மனிதர்கள் மற்றவர் மேல் கொண்டிருக்கும் தங்களின் பார்வை எப்பொழுதுமே திருப்தியற்றதாகவே இருக்கிறது. எம் ஒவ்வொருத்தர் மேலும் விழும் பார்வைகள் அதிகமாக எங்கள் புறத்தோற்றத்தை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றன. ஆக, ஒருவர் மீதான எமது முதல் பார்வையே அவர் பற்றிய விடயங்களை மதிப்பிட போதுமானவையாக அமைந்து விடுகின்றன.

மற்றவர்கள் மட்டிலான எங்களது பார்வைகள் எப்பொழுதுமே நடுநிலையுடையனவாக இருத்தல் அவசியம். எந்தப் பக்கத்தையும் (நேர், மறை) சாராமல் இருந்தால் ஒருவர் மீதான எங்களது பார்வை மிகச் சரியானதாக இருக்கும். ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இந்தப் பொண்ணு 'அப்பிடியான' பொண்ணா இருக்கும் போல இருக்கு, அல்லது 'அந்த தொழில்' செய்யும் பொண்ணாக இருக்கும் போல இருக்கு என எமது புறப் பார்வைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவிற்கு வந்துவிடுகின்றோம். சில வேளைகளில் அது உண்மையானதாகவும் இருக்கலாம். ஆனால், தவறாக இருந்துவிட்டால் அது நல்லதல்லவே. நம்ம வடிவேல் ஜோக் மாதிரி, 'டேய் சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா..'

அதிலும் இந்த பெண்கள் மீதான பெரும்பாலான ஆண்களின் பார்வையும், ஆண்கள் மீதான அதிகமான பெண்களின் பார்வையும் மிக மிக முக்கியமானவை. உண்மையிலேயே, ஒரு விடயம் தொடர்பான எங்களது பார்வை நிற்சயமாக எங்கள் ஆளுமை சம்மந்தப்பட்டவை. சிலரது பார்வை மிகவும் நேரானவை. சிலரது பார்வைகள் எப்பொழுதும் எதிர்மறையானவை. பொதுவாக ஆண்கள் எல்லாரும் மனைவியின் விடயத்தில் ஆணாதிக்கப் போக்கை கொண்டவர்கள் என்பது அநேகமான பெண்களின் பார்வை. அதேபோல, பெண்கள் என்பவர்கள் குடும்பம், குட்டி, வீடு என்கின்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்கள் அல்லது இருக்க வேண்டியவர்கள் என்பது பொதுவாக பல ஆண்களில் பார்வையாக இருக்கும்.

ஆக நான் சொல்லவரும் விடயம் என்னவெனில், உங்கள் புறப்பார்வைகளை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்து விடாதீர்கள். காரணம் உங்களது பார்வை அது உங்கள் ஆளுமை தொடர்பானது. உங்கள் பார்வை தவறாகவும் இருக்கலாம். உங்கள் பார்வைகளை நடுநிலையாக்கும் வரை உங்கள் எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் மாறப்போவதில்லை.எதை நோக்கும் பொழுதும் உங்கள் பார்வை நடு நிலையாக இருக்கட்டும். எந்த நபர் பற்றிய உங்கள் முதற் பார்வையும் மிகவும் நடுநிலையானதாக இருக்கட்டும். உங்கள் ஆளுமை குறுகிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டிருந்தால் உங்கள் பார்வையும் குறுகியதாகவே இருக்கும். அதனால் நீங்கள் பார்க்கும் விடயங்களை முற்றிலும் தவறு எனச் சொல்வதில் நியாயம் இல்லை.


அதேபோல எங்கள் பார்வைகள் மற்றவரைப் பற்றி ஒரு கருத்தை முன்மொழியலாம். ஆனால் அப்படித்தான் என முடிவெடுத்தல் தவறானது. எதையும் தீர அறியாமல் எங்கள் பார்வைகளை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுகள் எடுத்தல் பல பாதகமான விடயங்களை ஏற்படுத்திவிடும். மற்றவர் மட்டில் எமது பார்வைகள் பல எடுகோள்களை உருவாக்கலாமே தவிர அவற்றை எமது பார்வைகளை மட்டும் வைத்துக்கொண்டு நியாயப்படுத்திவிட முடியாது.

எமது பார்வைகளைத் தாண்டி மனிதரிற்குள் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. அதேபோல, சில பார்வைகள் கெட்ட விடயங்களையும்  நல்லவையாகக் காட்டக் கூடியன. அவற்றையும் நாம் புரிந்திருத்தல் அவசியம். ஆக, எமது பார்வைகளின் அடிப்படையில் ஒருத்தரை மதிப்பிடுதல் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மீண்டும், ஒருத்தர் மீதான எமது பார்வைகள் அவர் பற்றிய சில விடயங்களை முன்மொழியலாம், முடிவெடுக்க முடியாது. ஒருவரை, அவர் மேல் எனக்கிருக்கும் குறித்த பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு அவரை நாம் மதிப்பிடுதல் தவறானதாகும். இவற்றை மனதில் கொள்தல் பல மனிதர் மட்டிலான பல புரிதலின்மையை தீர்த்துவைக்கும்.


4 comments:

K.s.s.Rajh said...

நல்ல ஒரு கட்டுரை பாஸ்
பதிவுலகில் இப்படியான கட்டுரைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன..
உங்கள் பகிர்வு சிறப்பு

பி.அமல்ராஜ் said...

K.s.s.Rajh said...
நல்ல ஒரு கட்டுரை பாஸ்
பதிவுலகில் இப்படியான கட்டுரைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன..
உங்கள் பகிர்வு சிறப்பு//

ஓ.. அப்பிடியா பாஸ்.. அப்படியென்றால் ரொம்ப நன்றி.

மகேந்திரன் said...

சமூகத்தில் ஒவ்வொரு விடையத்தையும் வெவ்வேறு கோணங்களில்
பார்க்கும் பார்வைகளுக்கு அளவுகளே கிடையாது சகோ..
பாதைகளில் மனிதனின் பார்வைகள் என்று
பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்....

நிரூபன் said...

வணக்கம் அண்ணா.

நல்லதோர் கட்டுரையினைக் கொடுத்திருக்கிறீங்க.
படைப்புக்களைப் பற்றிய பார்வைகள் என்பது ஆளுக்காள் வேறுபடும். இதனை அருமையாக விளக்கி எழுதியிருக்கிறீங்க.

Popular Posts