Tuesday, January 3, 2012

தீ மூட்டியவன் நீ. எரிவதோ நான்.

அன்று சனிக்கிழமை. அன்று சூரியனும் பிந்தியே வந்ததால் ஒன்பது மணிக்கு துயில்களையும் கவிதாவைப் பற்றி அவள் தாய் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. வழமை போலவே போர்வையை கொஞ்சம் தளர்த்தி, மூட்டுக்களையும் புருவங்களையும் கொஞ்சமாய் உயர்த்தி சோம்பலிற்கு விடைகொடுத்து அம்மா நிற்கும் குசினிப் பக்கம் நடந்தாள் கவிதா. 

"அப்பாடா.. இப்பவாவது எழும்பினியே.." கொஞ்சம் நக்கலும் கொஞ்சம் கடுப்பும் நிறைந்த வார்த்தைகளை உச்சரிக்கும் முன்னமே தாயின் கடுப்பை இரண்டு மடங்காக்கினாள் கவிதா. "அம்மா, டீ போடு..". 

"ம்ம்ம்.. இந்த வருடம் உனக்கு இருவத்தி ஒரு வயசு கவிதா.. இன்னும் சின்னப் பிள்ளைக்கு நடிக்காத.." என பேசியபடி கவிதாவிற்கு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள் கவிதாவின் அம்மா. கவிதா வீட்டில் ஒரேயொரு பெண் பிள்ளை. அதனாலோ என்னவோ கவிதாவிற்கு கிச்சின் பக்கம் அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம். ஒருநாளைக்கு சமையலறைப் பக்கம் ஒருமுறை போவது கூட அதிகம் என நினைப்பவள் இந்த கவிதா. வீட்டின் முற்றத்தில் இருந்த சாக்குக் கட்டிலில் அமர்ந்தபடி வர இருக்கும் தேநீரிற்காய் காத்துக் கொண்டு இருந்தாள். "இந்தா டீ.." கையில் கொடுத்த தேநீரோடு "குடிச்சிட்டு ஒருக்கா சாமி மாமா வீட்ட போய் சீட்டுக்காச கொடுத்திட்டு வா கவிதா.." என ஒரு வேலையையும் கொடுத்து மீண்டும் சமையலறைப் பக்கம் போய் மறைந்தாள் கவிதாவின் அம்மா.

"இவக்கு வேற வேல இல்ல.. எப்ப பாத்தாலும் எனக்கே வேல சொல்லிக்கிட்டு.." என மனச்சாட்சி இல்லாமல் தனக்கு தானே கதை விட்டுக்கொண்டு இருந்தாள் கவிதா. இருந்தாலும் வேறு வழி இல்லை. இவள் தான் போய் ஆகவேண்டும் என தெரிந்ததும் முற்றத்தை விட்டு கழன்று ஒரு வாறு கிணற்றடிப் பக்கம் செட்டில் ஆனாள் கவிதா. பின் கால்கள் தடவும் கூந்தலை அழகாக நீரில் போட்டு கழுவி, ஊர் பசங்களை ஒரு கை பார்க்கும் அந்த கட்டுடலை சவர்க்காரத்தால் இங்கும் அங்கும் தடவி, நீரினால் அபிசேகம் செய்துகொண்டிருந்தாள் கவிதா. "காணும் காணும், தடுமல் பிடிக்க போகுது, கெதியா வா கவிதா.." என சமையலறை பக்கம் இருந்து வந்த சப்தத்தை கேட்டு கூந்தலை ஒரு துவாயில் முடிந்து, அரைத்தேகத்தை இன்னுமொரு துவாயில் சுத்தி அறையினுள் போய் வழமை போலவே நேற்றைய நாளை கிழிப்பதற்காக கலண்டரில் கை வைக்கும் போதுதான் இன்று சனிக்கிழமை என்பது கவிதாவிற்கு ஞாபகம் வந்தது.  

"ஓ.. இன்னைக்கு சனிக்கிழம.. சனியன் புடிச்ச சனி இன்னைக்கா வரணும்... எல்லாம் எண்ட தல எழுத்து..' என பற்களுக்குள் முட்டி மோதிய வார்த்தைகளால் அழகிய முகம் கொஞ்சம் அசிங்கமானது கவிதாவிற்கு. எதற்காக இந்த பரிதவிப்பு. எதற்காக இந்த சனி மேல் இப்படி ஒரு வெறுப்பு. காரணமும் இல்லாமல் இல்லை. இவளது உற்ற நண்பன் குணாவின் "நான் உன்னை காதலிக்கிறேன் கவிதா, நீ என்ன சொல்லுறாய்... அவசரம் இல்லை, வரும் சனிக்கிழம மூணு மணிக்கு பிள்ளையார் கோவிலுக்கு வருவன்.. உண்ட பதில சொல்லு.." என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அந்த கடைசி நாள் இன்று. கடைசி நேரம் இன்னும் அருகில். அதுதான் இத்தனை பதட்டம்.

"ஏன் தான் கடவுள் இந்த காதல படைச்சானோ.. அவஸ்தை அவஸ்தை.. சீ..." என காதலை இன்னுமொரு கோணத்தில் விமர்சித்து மீண்டும் சமையலறைப் பக்கம் நடந்தாள் கவிதா. "அம்மா.. இப்ப அவசரமா இந்த சீட்டு காச கொண்டுபோய் கொடுக்கணுமா? அல்லது மூணு மணிக்கு நான் கோயிலுக்கு போவன், அப்ப கொண்டு போய் குடுத்தா என்ன..??" என அம்மாவை நோக்கி கேட்டாள் கவிதா. "சரி கவி, அப்பேக்க கொண்டுபோய் கொடு.." என அனுமதி அளித்தாள் அம்மா. 'அப்பாடா..' என மீண்டும் தனது அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கதிரையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு தரையில் கால் நீட்டி  அமர்ந்தாள் கவிதா. 

"சீ.. இவனுக்கு என்மேல இப்பிடி ஒரு எண்ணம் வரும் எண்ணு நான் கொஞ்சம் கூட நினைக்கலையே..அவனும் குழம்பி என்னையும் குழப்பிட்டானே.." என வீட்டின் முகட்டைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் கவிதா. இவளது மனம் இன்று போல் என்றும் அமைதியின்றி இருந்ததில்லை. இவளது இரத்தஓட்டம் இன்று போல் என்றுமே தட புட என ஓடியதில்லை. இவள் இதயம் கூட இன்றுபோல் என்றுமே கட்டுக்கடங்காமல் துடித்ததில்லை. அட இவள் மூக்கு கூட இன்று போல என்றுமே பொலு பொலு என வியர்த்ததில்லை. இப்படி மாற்றங்கள் நிகழ்ந்துகொள்ள முடிவு மட்டும் இவளால் எடுக்க முடியவில்லை. 'இவனைத்தான் எனக்கு பிடிக்கும். ஆனால் காதல் இல்லை' என்றாற்போல் கண்ணாடியைப் பார்த்து கொஞ்சம் கூட வெட்கமின்றி பொய் சொல்லிப்  பார்த்தாள். கண்ணாடி கூட அதை நம்புவதாய் இல்லை. 'குணா, உன் மேல நான் அளவு கடந்த பிரியம் வச்சிருக்கேன், ஆனால் காதல் இல்லை.., அட அதிகம் பிரியமும் காதல் தானே... ஆமா, இவன் மேல எனக்கு பிரியமா காதலா??.. ஐயோ ஒண்ணும் புரியலையே.." என தலையனையோடு சண்டை போட்டாள் கவிதா. தலையணை கூட பதில் சொல்வதாய் இல்லை.  

கவிதாவின் தெளிவான குழப்பம் முடிவை நோக்கி நகர்ந்தது. "ஓகே. இங்க பாரு கவி, குணாவ விட்டா இந்த உலகத்தில உன்ன அதிகம் புரிஞ்சுகொண்டவங்க யாரு இருக்கா? யாரும் இல்லை! குணாவ விட உனக்கு பிடிச்ச ஆம்பிளைங்க யாரு இருக்கா? யாரும் இல்ல!, குணாவ விட உனக்கு தெரிஞ்ச நல்லவங்க யாரு இருக்கா? யாரும் இல்ல. குணாவ விட உன்ன சந்தோசமா வச்சிருக்கக் கூடியவங்க உனக்கு தெரிஞ்சு வேறு யாரு இருக்கா? யாரும் இல்ல. குணாவ விட உன்னைய ராணி மாரி சந்தோசமா அக்கறையோட பாத்துக்க வேறு யாராலையும் முடியுமா? யாராலையும் முடியாது.. எல்லா கேள்விக்கும் இல்ல இல்ல எண்டு துணிவா தெளிவா பதில் சொன்னா அவன் தானே உனக்கு சரியான ஆளு...!!" என கண்ணாடிக்கு முன்னாள் நின்று தானே தனக்கு கேள்வி கேட்டு தானே தனக்கு பதிலளித்து ஒருவாறு முடிவிற்கு  வந்தாள் கவிதா.  

"எனக்கு குணாவ மிஸ் பண்ண விருப்பம் இல்ல.. வீட்டாக்கள பிறகு கொஞ்சம் கொஞ்சமா சமாளிச்சிடலாம்.. சரி அவனுக்கு ஓகே சொல்லிடலாம் என.." தெளிவாய் ஒரு முடிவோடு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கவிதா. மனதில் பறந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது. முதல் முறை குணாவை நண்பனாக அல்லாமல் காதலனாக பார்க்கப் போவதை எண்ணி மனதுள் அவஸ்தைப் பட்டுக்கொண்டாள். 

சனிக்கிழமை. மூணு மணி. பிள்ளையார் கோவில். கவிதா சொன்னா இடத்திற்கு வந்து சேர்ந்தாள். குணா இன்னும் அங்கு வந்து சேரவில்லை. "ஒரு வேளை, நான் வரும்வரை கோயிலுக்குள் இருப்போம் என எண்ணி உள்ளே போய் இருப்பானோ.." என எண்ணியபடி கோவிலுக்குள் நடந்தாள் கவிதா. அன்றுதான் முதல் முறை கோவிலுக்குள் பிள்ளையாரை விடுத்து குணாவை தேடுகிறாள் கவிதா. அங்கு பிள்ளையாரையும், இரண்டு பூசாரியையும் தவிர யாரும் இல்லை. "சீ, இவன் எங்க போய்ட்டான்.." என எண்ணியபடி வெளியில் வந்த கவிதா எதிரே இருந்த சுவரில் சாய்ந்த படி நின்ற குணாவைப் பார்த்து பரவசமானாள். குணாவை மூன்றாம் வகுப்பில் இருந்து தெரியும் கவிதாவிற்கு. ஆனாலும் ஏதோ இன்றுதான் முதல் முறை பார்ப்பதைப்  போல ஒரு பதற்றம். ஹன்சிகாவை பார்க்கும் நம்ம பசங்க போல் ஒரு மாதிரியாய், கண்வெட்டாமல் அவனையே பார்த்தபடி அவனை நோக்கி நடந்தாள் கவிதா. அட, வெட்கமும் அன்றுதான் அவளிற்கு முதல் முதல் அறிமுகம் ஆகிறது..

குணா, அவனது பாணியில் இரண்டு சொக்குகளிலும் சின்ன குழிகள் விழ ஓரமாய் இருக்கும் அந்த தத்திப் பல்லு எட்டிப்பார்க்க சலனம் இன்றி ஒரு புன்னகை செய்தான். அருகில் போன கவிதா, பேச முன்னமே வார்த்தைகளை சாப்பிட ஆரம்பித்தாள். குணா, தொடங்க கவிதாவும் தொடங்கினாள். இப்படி மூன்று நான்கு தடவை நடந்த போராட்டத்தை முடித்து "ஓகே, நான் ஆரம்பிக்கிறன்." என குணா ஆரம்பித்தான்.

"நான் எண்ட மனசில பட்டத போன கிழமை உன்கிட்ட சொன்னன், உண்ட முகம் உடனே மாறினதையும் பார்த்தன்.. பேந்து வீட்ட போய் தான் ஜோசிச்சன்.. நான் உன்னட்ட அப்படி பேசியிருக்க கூடாது கவிதா. நீ என்னைய ஒரு நல்ல பிரெண்டா தான் நெனச்சிருப்பா என்றத நான் அப்ப ஜோசிக்கல.. சின்னப்புள்ள மாரி வாயில வந்தத உன்னட்ட உளறிட்டன் அண்டைக்கு.. வெரி சாரி கவிதா.. என்னைய மன்னிச்சுக்கோ. நான் உண்மையா அப்பிடி உன்னைய நெனச்சிருக்க கூடாது.. இப்ப ஓகே. நான் விட்ட பிளைய உணர்ந்திட்டன். அன்னைக்கு நான் கதைச்ச எல்லாத்தையும் நீ மறந்திடு ப்ளீஸ்..." என ஒரு பூகம்பத்தை வீசிப் போனது குணாவின் வார்த்தைகள். 

"அட பாவி, இவனுக்கு என்ன ஆச்சு.. நான் ஓகே சொல்லத்தானே வந்தன்.. இவன் இப்படி மாறிட்டான்.. ஏன் நல்ல நண்பர்கள் காதலர்களாக இருக்கக் கூடாதா? நான் எப்ப இது தப்பு எண்டன். இவனாவே ஒரு முடிவுக்கு வந்திட்டானே அட கடவுளே." என மனதுள் கட்டுப் பட்டாசாய் வெடிக்க ஆரம்பித்தாள் கவிதா. "அவனே, ப்ரெண்ட்ஷிப்ப பத்தி இப்படி பேசும் போது நான் எப்படி இல்லை நான் உன்னைய லவ் பண்றேன் எண்டு சொல்ல முடியும்.. அப்படி சொன்னால் நான் பிரெண்ட்சிப்ப கொச்சைப் படுத்துறதாய் அவன் நெனைப்பானே. கைவர வந்தது வாய் வரைக்கும் வராமல் போயிட்டே. " என எண்ணியபடி ஏதோ சொல்ல வாய் எடுத்து மௌனத்தை மட்டும் வெளியிட்டாள் கவிதா. "குணா, ஐ லவ் யூ" என இவளிற்கும் "கவிதா, என்னைய மன்னிச்சிட்டியா?" என இவனிற்கும் இந்த கவிதாவின் மௌனம் ஒவ்வொருவிதமாய் மொழி பெயர்த்துப் போனது.

"அதுதான், சாரி கேட்டிட்டன் அல்லா.. இன்னும் எதுக்கு இந்த கோவம்.. பேசு கவிதா ப்ளீஸ்.." என இவள் மௌனத்தை அவளிற்கே தப்பாய் மொழி பெயர்த்தான் குணா. "நான் படும் அவஸ்தை இவனுக்கு எங்கு புரியப் போகிறது... இவ்வளவுதானா இவன் என்னைய புரிஞ்சு கொண்டது.. ச்சே.." என மீண்டும் மனதிற்குள்ளேயே பேசிய படி, "சரி, அத விடு குணா.. டைம் ஆச்சு நான் கிளம்புறன்.." என காதலை அடைத்து முதல் அடியை எடுத்து வைத்தாள் கவிதா.

"நீ நண்பியாய் எனக்கு போதும்.." என்ற மன நிறைவோடு குணாவும் "நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன் குணா" என்கின்ற மன வலியோடு கவிதாவும் பிள்ளையார் கோவில் மதிலை விட்டு அவரவர் திசையில் நடந்தனர். காதல் மட்டும் அப்படியே மதிலோடு ஒட்டிக்கொண்டது. 7 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

பி.அமல்ராஜ் said...

நன்றி ரத்னவேல் ஐயா..

சரியில்ல....... said...

காதல் வலி.... சூப்பர்ப்!:-)

பி.அமல்ராஜ் said...

நன்றி சரியில்ல.....

காட்டான் said...

இததான் சொல்லுவாங்க "கடும் கூர் கடும் மொட்டை"ன்னு இரண்டு பக்கமும் அளவுக்கு அதிகமா யோசிச்சிட்டாங்க..!!

ஆனா நற்பாய் இருந்து பின் காதலாவும் மாறலாம்..!!

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

ஒரு நீண்ட கதையினைப் சந்தோசமாகத் தொடங்கிப் படித்து முடித்த மன நிறைவு.
வர்ணனைகள், உவமிப்புக்கள், வார்த்தைச் சொருகல்கள் அத்தனையும் அழகு!
ஆனால் எழுத்துப் பிழைகள் தொடர்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

//
ஊர் பசங்களை ஒரு கை பார்க்கும் அந்த கட்டுடலை சவர்க்காரத்தால் இங்கும் அங்கும் தடவி, நீரினால் அபிசேகம் செய்துகொண்டிருந்தாள் கவிதா//

அண்ணர் என்னம்மா அழகை ரசித்திருக்கிறார். ஹே...ஹே.. அண்ணே...இந்த இடத்தைப் படிக்கையில் என்னமோ செய்யுது.

இவனைத்தான் எனக்கு பிடிக்கும். ஆனால் காதல் இல்லை' என்றாற்போல் கண்ணாடியைப் பார்த்து கொஞ்சம் கூட வெட்கமின்றி பொய் சொல்லிப் பார்த்தால்.?//

அத்தனையும் ஆழமாக ரசித்து எழுதியது போல இருக்கு! சபாஷ்//

ஹன்சிகாவை பார்க்கும் நம்ம பசங்க போல் ஒரு மாதிரியாய், கண்வெட்டாமல் அவனையே பார்த்தபடி அவனை நோக்கி நடந்தாள் கவிதா.//

எதை எதோட முடிச்சுப் போட்டிருக்கார்...ஹே...ஹே. ஹன்சிகா ரசிகர்களுக்கும் ஒரு குத்தா...
அவ்வ்வ்வ்வ்

முடிவு சுபம்! எதிர்பார்ப்பிற்கு வேட்டு வைக்காத கதையினை இலகுவாக நகர்த்தி முடிவினைத் தந்திருக்கிறீங்க.

K.s.s.Rajh said...

பாஸ் கதை ஒரு பாலசந்தர் படம் பார்த்தது போல இருக்கு

கிளைமாக்ஸ் சூப்பர்

Popular Posts