Tuesday, January 31, 2012

ஐந்தே மீட்டரில் காதல் ஈகோ.

ஐந்தே மீட்டரில்
அவன்.
ஐந்தங்குலப் பார்வையோடு
இவள்.

அவன்
அழைப்பதாயும் இல்லை.
இவள் 
நகர்வதாயும் இல்லை.

ஐந்தே மீட்டரில்
ஒரு 
சேக்ஸ்பியர் நாடகம்.

அவன்
தொலைபேசி அடிக்க,
ஹலோ சொன்னது
இவள்.

இவள்
கைக்குட்டை
கீழே விழ
வருத்தப்பட்டவன் 
அவன்.

அதே
ஐந்து மீட்டர்
அநாதரவாய்...
அவனுக்கும்
இவளுக்கும்
இடையில்.

இறுதியாய்,
அவன்
ஹலோ சொன்னான்,
இவள் முகத்தில்
கிலோக்கணக்கில்
புன்னகை.

நீண்டு
நிமிர்ந்த
நடுவிரலை ஆட்டி,
வா என்றான்
அவன்.

அவளோ,
விரலைக் கடித்தபடி
விடுக்கெனக் குனிந்தாள்
வெட்கத்தில்.

இந்த
ஐந்துநிமிடம் போதும்,
அவள்
வெட்கத்தை
இவன் படிக்க,
இவன்
தட்பத்தில் 
அவள் துடிக்க.

மரங்கள்
தலை சாய்த்து நிற்க,
மாலை
மங்கிக் கருக,
வந்த காதல்
இருவரிற்கும் 
அதே 
ஐந்து மீட்டர் தொலைவில்
அம்மணமாய்..

'நீ சொல்'
இவன் பேச,
'நீயே சொல்'
அவள் வீச,
பார்வைகள் மட்டும்
காதலில்.

இறுதியில்,
அவன் செரும
இவள் நிமிர
'காதலிக்கிறேன்' என்றான் 
அவன்.

இவளோ
மனதிற்குள் சொன்னாள்,
'நல்லவேளை
நீ சொன்னாய் - இல்லையேல்
என்
ஈகோவிடம் 
நான்
தோற்க வேண்டியிருந்திருக்கும்.
கடந்த 
ஐந்து வருடங்களின் பிறகு.."


Sunday, January 29, 2012

வெங்காயத்தை வெறுக்க கண்ணீருக்கு உபதேசமா?


உன்னை
வெறுப்பதற்கு
காரணங்கள்
சொல்லித்தராதே
எனக்கு.
காரணமின்றியே
உன்னை
நேசித்தவன்
நான்.
வெங்காயத்தை வெறுக்க
கண்ணீரிற்கு
உபதேசம் பயனில்லை.

உனது பெயரில்
விலைபோகும்
விபச்சாரியைக் கூட,
கைபிடிக்க
சம்மதிப்பவன்
நான்.

நீ
இல்லையெனில்,
உன்
நினைவோடு
குடும்பம் நடாத்த
பழகிக் கொண்டவன்
நான்.

உன் கழுத்தில்
தாலி ஏறும் வரை,
கனவிலே
உன்கூடவே
தாம்பத்தியம் நடாத்தும்
வித்தை தெரிந்தவன்
நான்.

ஒன்றை
புரிந்துகொள்,
உனக்கும் எனக்கும்
உள்ள பந்தம்,
உணவிற்கும்
உப்பிற்கும் உள்ள
சொந்தம்.
உப்பில்லையேல்
உணவு குப்பையில்,
நீ இல்லையேல்
வாழ்க்கை சாக்கடையில்.

Saturday, January 28, 2012

என் கவிதையின் கவனம்.

எப்பொழுதுமே
என்னை
கட்டிப் போடுவதும்
காட்டிக் கொடுப்பதும்
என்
கவிதைகள்தான்.

எனது கவிதை
எங்கும் பேசும்.
ஆனால்,
எனது
கவிதை பற்றி - நான்
எங்கும் பேசியதில்லை.

முட்டிமோதும்
உணர்வுத் தொல்லைகளை
எப்பொழுதுமே
புணர வைப்பவை 
எனது
கவிதைகள்.

சிலர்
சொல்வதைப்போல்
வரிகள் அமைக்க
முடிவதில்லை
என்
கவிதைகளில்.
காரணம்,
உணர்வில் பிறக்கும்
வரிகளை
கொலை செய்வதில்
எனக்கு
உடன்பாடு இல்லை.

என்னை
விமர்சிப்பவர்கள்
அதிகம்
நேசிப்பது
என்
கவிதைகளைத்தான்.
இலகுவாக,
இவை
கவிதைகளா
என்பார்கள்?

இரண்டு வரிகளை
இலகுவாய் போட்டாலும்
புருவம் உயர
ரோமம் நிமிர
உணர்வு தித்திக்க 
உதிரம் பத்திக்க 
உள் மனதில்
ஒரு
வருடல் பிறக்கணும்.
அதுதான் 
கவிதை.

இதற்காகவே
பேனா பிடிக்கிறேன்.
இந்த
பேரும் புகழும்
எனக்கும் வேண்டாம்
என்
கவிதைக்கும் வேண்டாம்.

வாசகனுக்காகவே 
எழுதுகிறேன்.
என்றும் 
என் கவிதைகளை
வாசகம் செய்யவேண்டியது
அவனே.
நான் அல்லன்.


பி.கு. என் அன்பிற்குரிய விமர்சகர் ஒருவரிற்கு எழுதி அனுப்பியது.

Thursday, January 26, 2012

காலி செய்து வலி தந்தாய்..நீண்டு கடந்த
நாட்களின் பின்
தூரத்திலாவது
உன்னை
கண்டபோதுதான்
கனவுகள் மரித்தாலும்
என் - கண்கள்
இன்னும்
உயிர்வாழ்வதை உணர்ந்தேன்.

இமைக்காமல்
பார்த்திருக்கலாம்.
கண்ணுள் வந்த உன்னை
இமைத்து
உடனே
அழித்துவிட
இஷ்டம் இல்லை எனக்கு.

உறக்கத்திலிருந்த
என்
உணர்வுகளின்
பற்றைகளுக்குள்
தீமூட்டிப் போனது
உன்
திடீர் தரிசனம்.

இதயத்தை
காலி செய்தாய்
நேற்று.
பின்னர்,
என்
கண்களுக்குள்
ஏன்
வலி தந்தாய்
இன்று?

உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.

காதலியாய்
பார்த்துப் பழகிய
கண்கள்,
கண்டவுடம்
கண்டபடி கூசின.
முதல் முறை
உன்னை
யாரோ ஒருவராய் பார்க்க.

உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

Wednesday, January 25, 2012

இது அப்பிடி இருக்குமோ? அல்லது இப்பிடி இருக்குமோ??

எமது பார்வைகளை அடிப்படையாகக் கொண்டே எங்கள் கருத்துக்கள் உருவம் பெறுகின்றன. அதாவது நாங்கள் எதை எப்படி பார்க்கின்றோம் என்பதில்தான் அந்த விடயத்தை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்ளுகின்றோம் என்பது தங்கியிருக்கிறது. அதாவது, நோக்கியோன் நோக்கிய பொருளை நோக்கியவாறே நோக்கின் நோக்கிய பொருள் நோக்கியவாறே அமையும் என்பது நடைமுறைக்கு சாத்தியமான கூற்று. மனிதர்கள் தங்கள் பார்வைகளாலேயே தாங்கள் காண்பவற்றை தாங்களாகவே விளங்கி புரிந்து கொள்கிறார்கள். அந்தளவிற்கு ஒவ்வொருத்தரினதும் பார்வைகள் அவர்கள் புரிதலுடன் அவ்வளவு ஒற்றுமை வாய்ந்தவை.அதிகமானவர்கள் தங்கள் ஆளுமையை தங்கள் பார்வையில் வெளிப்படுத்தி விடுவார்கள். இந்த ஆளுமை என்கின்ற ஒரு விடயம் அடிப்படையில் இந்த பார்வையின் கோணத்தில்தான் கட்டப்படுகின்றன. அதிலும் மனிதர்கள் மற்றவர் மேல் கொண்டிருக்கும் தங்களின் பார்வை எப்பொழுதுமே திருப்தியற்றதாகவே இருக்கிறது. எம் ஒவ்வொருத்தர் மேலும் விழும் பார்வைகள் அதிகமாக எங்கள் புறத்தோற்றத்தை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றன. ஆக, ஒருவர் மீதான எமது முதல் பார்வையே அவர் பற்றிய விடயங்களை மதிப்பிட போதுமானவையாக அமைந்து விடுகின்றன.

மற்றவர்கள் மட்டிலான எங்களது பார்வைகள் எப்பொழுதுமே நடுநிலையுடையனவாக இருத்தல் அவசியம். எந்தப் பக்கத்தையும் (நேர், மறை) சாராமல் இருந்தால் ஒருவர் மீதான எங்களது பார்வை மிகச் சரியானதாக இருக்கும். ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இந்தப் பொண்ணு 'அப்பிடியான' பொண்ணா இருக்கும் போல இருக்கு, அல்லது 'அந்த தொழில்' செய்யும் பொண்ணாக இருக்கும் போல இருக்கு என எமது புறப் பார்வைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவிற்கு வந்துவிடுகின்றோம். சில வேளைகளில் அது உண்மையானதாகவும் இருக்கலாம். ஆனால், தவறாக இருந்துவிட்டால் அது நல்லதல்லவே. நம்ம வடிவேல் ஜோக் மாதிரி, 'டேய் சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா..'

அதிலும் இந்த பெண்கள் மீதான பெரும்பாலான ஆண்களின் பார்வையும், ஆண்கள் மீதான அதிகமான பெண்களின் பார்வையும் மிக மிக முக்கியமானவை. உண்மையிலேயே, ஒரு விடயம் தொடர்பான எங்களது பார்வை நிற்சயமாக எங்கள் ஆளுமை சம்மந்தப்பட்டவை. சிலரது பார்வை மிகவும் நேரானவை. சிலரது பார்வைகள் எப்பொழுதும் எதிர்மறையானவை. பொதுவாக ஆண்கள் எல்லாரும் மனைவியின் விடயத்தில் ஆணாதிக்கப் போக்கை கொண்டவர்கள் என்பது அநேகமான பெண்களின் பார்வை. அதேபோல, பெண்கள் என்பவர்கள் குடும்பம், குட்டி, வீடு என்கின்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்கள் அல்லது இருக்க வேண்டியவர்கள் என்பது பொதுவாக பல ஆண்களில் பார்வையாக இருக்கும்.

ஆக நான் சொல்லவரும் விடயம் என்னவெனில், உங்கள் புறப்பார்வைகளை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்து விடாதீர்கள். காரணம் உங்களது பார்வை அது உங்கள் ஆளுமை தொடர்பானது. உங்கள் பார்வை தவறாகவும் இருக்கலாம். உங்கள் பார்வைகளை நடுநிலையாக்கும் வரை உங்கள் எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் மாறப்போவதில்லை.எதை நோக்கும் பொழுதும் உங்கள் பார்வை நடு நிலையாக இருக்கட்டும். எந்த நபர் பற்றிய உங்கள் முதற் பார்வையும் மிகவும் நடுநிலையானதாக இருக்கட்டும். உங்கள் ஆளுமை குறுகிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டிருந்தால் உங்கள் பார்வையும் குறுகியதாகவே இருக்கும். அதனால் நீங்கள் பார்க்கும் விடயங்களை முற்றிலும் தவறு எனச் சொல்வதில் நியாயம் இல்லை.


அதேபோல எங்கள் பார்வைகள் மற்றவரைப் பற்றி ஒரு கருத்தை முன்மொழியலாம். ஆனால் அப்படித்தான் என முடிவெடுத்தல் தவறானது. எதையும் தீர அறியாமல் எங்கள் பார்வைகளை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுகள் எடுத்தல் பல பாதகமான விடயங்களை ஏற்படுத்திவிடும். மற்றவர் மட்டில் எமது பார்வைகள் பல எடுகோள்களை உருவாக்கலாமே தவிர அவற்றை எமது பார்வைகளை மட்டும் வைத்துக்கொண்டு நியாயப்படுத்திவிட முடியாது.

எமது பார்வைகளைத் தாண்டி மனிதரிற்குள் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. அதேபோல, சில பார்வைகள் கெட்ட விடயங்களையும்  நல்லவையாகக் காட்டக் கூடியன. அவற்றையும் நாம் புரிந்திருத்தல் அவசியம். ஆக, எமது பார்வைகளின் அடிப்படையில் ஒருத்தரை மதிப்பிடுதல் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மீண்டும், ஒருத்தர் மீதான எமது பார்வைகள் அவர் பற்றிய சில விடயங்களை முன்மொழியலாம், முடிவெடுக்க முடியாது. ஒருவரை, அவர் மேல் எனக்கிருக்கும் குறித்த பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு அவரை நாம் மதிப்பிடுதல் தவறானதாகும். இவற்றை மனதில் கொள்தல் பல மனிதர் மட்டிலான பல புரிதலின்மையை தீர்த்துவைக்கும்.


Tuesday, January 24, 2012

நீதான் கொடு !!


கனவு வெளியில் 
என்னை 
காதல் செய்பவளே,

காதருகே வந்து
ஒரு
காதல் 
கதை சொல்.
என் 
செவிப்பறை கொஞ்சம் 
செம்மையாகட்டும்.

மேகம் எடுத்து - உன்
மோகக் கையால்
ஒரு
கீறல் இடு - என்
தோரணை மூக்கில்.
மூக்குத்துவாரம்
உன்
வாசனையோடு 
வாழ்ந்துவிடட்டும்.

எட்டி வந்து - என் 
உதடு தொட்டு
ஒரு
கோலம் போடு - உன்
பஞ்சணை இதழால்.
பங்கஸ் ஏறிய
என்
பழைய உதடு
பள பளக்கட்டும்.

வானம் மூடிய - உன்
கருங்கூந்தல் எடுத்து
என்
முகம் மூடு.
வாடிக் களைத்த
என்
திருமுகம் கொஞ்சம்
மறுபடியும் மலரட்டும்.

இல்லையெனில்,

ஓடிவந்து
ஒட்டறை போர்த்திய
என்
ஆறடிக் கிடங்கை
ஆசிர்வதித்துப் போ.
என்
மானங்கெட்ட காதல் 
மண்ணோடு
மடியட்டும்
நீயில்லாமல்.


Monday, January 23, 2012

இதயத்திற்கும் மூளைக்குமான பரம்பரைப் பகை.


வணக்கம் நண்பர்களே. நலமா? இன்றைய பதிவு கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

எப்பொழுதுமே உணர்வுகள் அழகானவை. என்னைப்பொறுத்த வரையில், மனித வாழ்க்கையை அழகுற பேணுவதில் இந்த உணர்வுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உணர்வுகள் இல்லாத மனிதர்கள் ஏன் விலங்குகள் கூட இல்லை. கல்லையும் நம்மையும் பிரிக்கும் மிக முக்கியமான காரணி இந்த உணர்வுதான். உடலை மற்றவர் மதிக்கக் காரணமாக இருப்பதும் இந்த உணர்வுகள் தான். இந்த உணர்வுகள் இன்றேல் எங்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தாலே தலை சுற்றும்.

இந்த உணர்வுகள் நமது வாழ்க்கையை இன்பமாக மட்டுமே வைத்திருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்னை என்ன செய்வீர்கள் என்று நன்றாகவே புரியும். ஆமாம், உணர்வுகள் எந்தளவிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதோ அதேபோல பல துன்பங்களுக்கும் அதிகம் காரணமாக அமைந்திவிடுகின்றன என்பதையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 

இந்த உணர்வுகளே எமது அன்றாட வாழ்வின் அழுகை தொடங்கி காதல் வரை சகலதிற்கும் மிக முக்கியமான காரணங்களாக அமைந்து விடுகின்றன. உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்கள் உணர்வுகளின் வலிமையை அதிகம் தெரிந்துகொள்வார்கள். அதாவது இந்த உணர்வுகள் வலிமை மிக்கவை. திருமண தொடங்கி தற்கொலை வரை சகல சாதக பாதக மனித செயற்பாடுகளிற்கும் அடிப்படை காரணம் இந்த உணர்வுகள்தான்.

இந்த உணர்வு சம்மந்தப்பட்ட விடயங்களை நம்முடைய உடல் சட்டகத்தில் எந்த அக உறுப்பு கட்டுப்படுத்துகிறது? அது மூளையா அல்லது இதயமா? என்கின்ற கேள்விகள் அந்தக் காலம் தொடங்கி உளவியலை ஆட்டிப்படைத்த ஒரு தர்க்கம் ஆகும். இறுதியாக இந்த உணர்வுகள் ரீதியான அதிகமான செயற்பாடுகளில் இந்த மூளைக்கும் இதயத்திற்கும் யார் கட்டுப்படுத்துவது என்பதில் எப்பொழுதுமே ஒரு தற்காலிக தெளிவின்மை இருப்பதாக சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.


அப்படியெனின், உணர்வு ரீதியான அநேக விடயங்களை இதயம் கட்டுப்படுத்துகிறது. அதற்காக அந்த எல்லா விடயங்களையும் மூளையும் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கில்லை. அதனால் பலதடவைகளில் இந்த மூளையும் இதயமும் முட்டிமோதிக் கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில முடிவுகளை எடுப்பதற்கு மூளை முன்மொழிகின்ற வழியையா அல்லது இதயம் முன்மொழிகின்ற வழியையா பின்பற்றுவது என்பதில் மனிதர்கள் அதிக  நேரத்தை செலவு செய்து விடுகிறார்கள். எப்பொழுதுமே மூளை அறிவு சார்ந்ததும், நமது இதயம் உணர்வு சார்ந்ததும் என்பதை ஞாபகம் வைத்திருத்தல் வேண்டும். 

நம்மில் அநேகமானவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் இதயங்களையே பின்தொடர்கிறார்கள். ஒவ்வொருத்தரினுள்ளும் வித்தியாசம் வித்தியாசம் நிறைந்த இதயமும் மூளையும் காணப்படுகிறது என்கிறார் உளவியலாளர் சார்லி ஷீன். இதனாலேயே ஒவ்வொருத்தர் எண்ணங்களும், சிந்தனைகளும், முடிவுகளும், வாழ்க்கை முறைமைகளும் வித்தியாசமடைகின்றன. எப்பொழுதுமே இதயத்தை பின்தொடர்பவர்கள் உணர்வியல் விடயங்களோடு அதிகம் ஒட்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதிகம் உணர்ச்சிவசப்படும் ஒருத்தனின் இதயமே மூளையை கட்டுப்படுத்துகிறது.

எமக்கு வரும் அதிகமான துன்பங்களுக்கு நாம் அதிகம் நம் இதயத்திற்கு செவி சாய்ப்பதும், இதயத்தை பின் தொடர்வதுமே காரணமாகிப் போகிறது. அதுவும், காதல் போன்ற உணர்வியல் விடயங்களில் அதிகமானோர் தங்கள் இதயங்களை மட்டுமே பாவித்துக்கொள்கிறார்கள். மூளை பாவிக்கப் படுவது இல்லை. திரும்பவும், அறிவு சார்ந்த விடயங்கள் மூளையோடு தொடர்புபட்டவை என்பது எமக்கு தெரியும். எப்பொழுதுமே எமது இதயம் தேனர் நிலையான (positive) பக்கத்தையே அதிகம் சார்வன. அதனாலோ என்னவோ இதயம் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதுமே குறித்த சந்தர்ப்பத்திற்கு சந்தோசமானதாக அமைந்தாலும் பின்னர் துன்பத்தையே கொடுக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதென்றால் மூளையோடு ஒப்பிடும் பொழுது எமது இதயம் ஆளுமை குறைந்தது எனலாம். ஆளுமை நிறைந்த முடிவுகளை அதிகம் மூளையே எடுக்கிறது.ஆக, எமது வாழ்வியலில் பல உணர்வு ரீதியான விடயங்களை தனித்தே இதயம் சார்ந்து நோக்காமல் கொஞ்சம் மூளை சார்ந்தும் ஜோசித்தல் அவசியம். அதிலும், இளைஞர்கள் எப்பொழுதுமே வெறும் இதயத்தை மட்டும்  பயன்படுத்துவதை குறைத்தல் நீண்ட நோக்கில் நன்மையைத் தரும். காதலில் அதிகம் விழுபவர்கள் வெறும் இதயத்தை மட்டும் கேட்டு செயற்படுபவர்களே என்கிறது அண்மைய உளவியல் ஆய்வு ஒன்று. விசேடமாக காதலில் முடிவுகளை நீங்கள் எட்டும் பொழுது கொஞ்சம் இதயத்தை விலக்கி மூளை சம்மந்தப்படுத்தி சிந்தித்தல் மிக மிக ஆரோக்கியமான ஒன்றாக அமையும். இதயம் சரி என்று சொல்லும் பல விடயங்களை மூளை பிழை என்று சொல்லும். காரணம், இதயம் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. மூளை அறிவை அடிப்படையாகக் கொண்டது. 

எப்பொழுதுமே செண்டிமெண்ட் பேசுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எப்பொழுதும் மூளையை விட இதயத்தையே அதிகம் நம்புபவர்கள். இவர்கள் வாழ்க்கை முறை குறுகிய கால சந்தோசம் என்கின்ற இலக்கைக் கொண்டதே தவிர நீண்ட கால நோக்கு இல்லை. அதிகமான இளைஞர்கள் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுத்தே தங்கள் வாழ்க்கைகளை அழித்துக்கொள்கிறார்கள். சுகத்திற்காக போ என்று சொல்லும் இதயம், அதனால் வரும் பின் விளைவை மூளை ஜோசிக்கும் வரை தாமதிப்பதில்லை. இதனாலேயே அதிக இளவயது பாலியல் தவறுகள் நிகழ்கின்றன. 


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இதயம் சொல்வது எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் ஆனால் பின்னர் வரும் அதன் விளைவு கஷ்டமாக இருக்கும். மூளை சொல்வது எப்பொழுதும் கஷ்டமாக இருக்கும் ஆனால் விளைவு சந்தோசமிக்கதாகவும், உங்களுக்கு நன்மை பயப்பனவாயும் இருக்கும். இதயத்தை கூடவே வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் மூளை சொல்வதையே செய்யுங்கள். உங்கள் உணர்வு ரீதியான வாழ்வியல் சிறக்கும். 

Saturday, January 21, 2012

நியாயம்தான்.

என்னை
நிமிர்த்தியவளும்
நீதான்..
சாய்த்துப் போனவளும்
நீதான்.

எனக்காக
உறங்கிய பகலை விட
உனக்காக
விழித்திருந்த
இரவுகள் ஏராளம்.

மாற்றம் தந்தவள்
நீ.
இன்னும்
மாறாமலே இருப்பவன்
நான்.

என் 
ஏழு பொழுதுகளில்
எனக்காக விடிந்தவை
ஒன்றுமில்லை.

நீ 
சட்டெனக் கடிக்கும்
உன்
நிகத்தைகூட
பாவம் என்றவன்
நான்.

நீ
என் 
உயிரை பிய்த்தபோதும் 
உனதழகில் 
கிறங்கிக் கிடந்தவன்
நான்.

உனக்கு 
நன்கே தெரிந்த 
என்
முகத்தையே 
மறக்கமுடிந்தால்,
உனக்கே 
சரியாய்ப் புரியாத 
என்
இதயத்தை 
எப்படி
ஞாபகம் வைத்திருப்பாய்?

Sunday, January 15, 2012

கொலைவெறியும் அரிவாளோடு அலைபவர்களும்.

மனதில் உளத்திக்கொண்டிருக்கும் விடயங்களை எழுதித் தொலைத்து விட்டால் மனம் அமைதியாகிவிடும் என்பதுதான் வலைப்பூவின் அடிப்படை சித்தார்ந்தம். நானும்  அதற்காகவே  இந்த  புலம்பலை  தொடங்க வேண்டியதாயிற்று. சரி இவற்றை எதற்காக சொல்கிறேன் என்றால் இன்று உங்களிடம் கொண்டுவரும் பதிவும் இப்படிப்பட்ட ஒரு மனதை அலட்டிக்கொண்டிருக்கும்  ஒரு  விடயம்தான். நீண்ட  நாட்களாக காத்துக்கிடந்த பதிவு என்பதால் உடனடியாகவே விடயத்திற்குள் செல்லலாம்.

இந்த கொலைவெறி என்பதே நிறையப் பேருக்கு ஒரு கொலை வெறியான  கடுப்பை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை. இந்த அனிருத் மற்றும் தனுசின் கொலைவெறி என்கின்ற பாடல் இன்று நான்கு கோடி மக்களையும் தாண்டி ரசிக்கப்படுகிறது என்றால் இந்தப்பாடலின் வெற்றியை எம்மால் யூகிக்க முடியும். அதேபோல, இந்த கொலைவெறிப் பாடல் போதுமான அளவு எதிர்ப்பையும், காரசாரமான விமர்சனங்களையும் சம்பாதிக்கத் தவறவில்லை. அதிலும் சிலர் கடுமையாக, வெறித்தனமாக  தனுஷை விமர்சிக்கும் அளவிற்கு இந்தப் பாடல் சிலரை அதிகம் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதான்.


'மூணு' என்கின்ற  திரைப்படத்திற்காய் அனிருத்தின் இசையில்  தனுஷ் எழுதிப் பாடிய பாடல் இந்த கொலைவெரிடி என்கின்ற பாடல். இந்தப் பாடல்  வெளியாகிய  நாட்களில்  இருந்து  அதிகபடியான  மக்கள்  இணையத்தில் பார்வையிட்ட   அல்லது  கேட்ட  பாடல்  என்கின்ற  ஒரு  இமையத்தை   எட்டிபிடிப்  பிடித்தது  இந்தப் பாடல்.

இந்தப் பாடல் இரண்டு வகையான சர்ச்சைகளை பொதுவாக தோற்றுவித்தது. ஒன்று, பெண்ணிய வாதிகளும், பெண்ணியம் போற்றும் தரப்பினரும், பெண்களும்  இந்தப்  பாடல்  பெண்களை  கேவலப்  படுத்துவதாயும்  அவமானப் படுத்துவதாயும்  இருக்கிறது  என்கின்ற ஒரு பிரச்சனை. இரண்டாவது, தமிழ் உணர்வாளர்களும், தங்களை  தமிழ் மொழியின் காருணியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் இந்தப் பாடல் தமிழை அவமதிப்பதாயும், தமிழ்  மொழியை  கொலை  செய்வதாயும் இருக்கிறது என்பது அடுத்த பிரச்சனை. இந்த  இரண்டுமே இந்தப் பாடல் தொடர்பான மிகப் பிரதானமான இரு எதிர்மறை விமர்சனங்கள் ஆகும். 

இப்ப  விடயத்திற்கு  வருவோம். நீங்களே  சொல்லுங்க, இந்த விமர்சனங்களை  ஏற்றுக்கொள்கிறீர்களா? என்னவோங்க, என்னால் இவற்றை ஏற்றுகொள்ள முடிவதில்லை. இதெல்லாம் சிறு பிள்ளை தனம் என்றே  எனக்கு  தோணும். ஏன்  எனக்கு  இவற்றை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதற்காக, அவர்கள்  விமர்சனம்  அவர்கள் கருத்தில், கணிப்பில் சரியாக இருக்கலாம். எனது பார்வையில் இவற்றை என்னால் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

முதலில் அனைவரும் இதுவொரு சினிமா திரைப்படப் பாடல் என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும். திரைப்படத்திற்காய் உருவாக்கப் படும் பாடல்களின் இயல்புகள் எப்படிப்பட்டவை. அடிப்படையில், சினிமா என்பதே ஒரு பொழுதுபோக்கு சாதனமே. ஆக, சினிமா இலக்கியத்தையோ, தமிழ் மொழி இலக்கனங்கலையோ திருப்திப் படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ரசிகனை  பொழுதுபோக்க  வைத்தால்  சரி. அதன் இலட்சியம் முடிந்து விடும். இன்னுமொன்றையும்  நாம்  புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர்களின்  இலக்கியப்  படைப்புக்கள்  வேறு. ஜனரஞ்சகப் படைப்புக்கள்  வேறு. இரண்டிற்கும்  பெரிய  வித்தியாசம்  இருக்கிறது. இதனால், சினிமாப்  பாடல்கள்  எல்லாம்  இலக்கியக்  கவிதைகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்பொழுது சினிமாப் பாடல் ஒன்று தமிழ் மொழியைக் கொலைசெய்கிறது என்றால் 'சிக்கு புக்கு ரயிலே..''முக்காலா முக்காபுல்லா', 'ஒ மக சீயா', 'ஆத்திசூடி', 'மை நேம் இஸ் பில்லா..' போன்ற பாடல்களை ஏன் கொண்டாடினீர்கள்? தமிழ்  சினிமாவில்  யாரையா  தமிழ்  இலக்கியத்தில் பாடல் எழுதுகிறார்கள் பாப நாச சிவன், கண்ணதாசன தவிர.? சரி அதை விடுங்கள்  மங்காத்தா  பல்லேலக்கா  பாடலை  கொண்டாடினீர்களே.. அந்த பாடல் தமிழ் மொழிக்கு மகுடம் சேர்த்திருக்கிறதா? எல்லாவற்றையும் விட, தமிழ் சினிமாப் பாடல் ஒன்று தமிழை கொச்சைப் படுத்துகிறது என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாய் தெரியவில்லையா? அப்படியெனின், காலா காலமாய் அதிகமான சினிமாப் பாடல்கள் தமிழை கேவலப் படுத்தித்தானே வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அடுத்து, ஜனரஞ்சகம்  என்கின்ற  ஒரு  விடயம்  இருக்கிறது. அதுவும் பொழுதுபோக்கு சினிமாவில் இது மிக மிக முக்கியம். அடுத்து  சினிமாப் பாடல் எப்பொழுதும் குறித்த ஒரு சந்தர்ப்பத்திற்காகவே எழுதப்படுகிறது. இந்தப் படத்தில் இப்படியான ஒரு பாடல் தேவைப்படும் சந்தர்ப்பம் ஒன்று வந்திருக்கலாம். இதை  தனுஷே  ஒரு  பேட்டியில்  சொல்லியிருப்பார். தமிழை வளர்ப்பதற்கு  பல  இடங்கள்  இருக்கிறது  நண்பர்களே.. தனுஷின் கொலை வெறிப் பாடலில்தான் உங்க தமிழ் நேயத்தை காட்டணும் என்று இல்லை.

நானும் இலக்கிய பரப்பில் இருக்கும் ஒருத்தன் என்ற வகையில் தயவுசெய்து இலக்கியத்திற்கும் ஜனரஞ்சக படைப்புக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொண்டால் இவ்வாறான விமர்சனங்கள் வருவதைக் குறைக்கலாம். கவிதைக்கும் பாடலுக்கும் கூட சிறு  சிறு  வேறுபாடுகள்  இருக்கின்றன. பாடல்  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பேச்சு மொழியை பிரதிபலிக்க வேண்டி இருக்கலாம். அப்பொழுது இலக்கணப் பிழை இருக்கிறது என்று யாராவது கொடி பிடிக்க முடியுமா? இந்த  கொலைவெறிப்  பாடலை  வெறும்  ஜனரஞ்சக சினிமாப் பாடலாய் மட்டும் ரசிக்கிறவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே  இல்லை. நானும்  தமிழன். எனக்கும்  தமிழ்  மேல்  உங்களைப் போன்று பற்று உண்டு.. சிலவேளைகளில் உங்களைவிட அதிகமாகவே.

அடுத்து, நமது  பெண்கள்  அந்தப்  பாடல்  தங்களை  அவமதிப்பதாயும், கேவலப் படுத்துவதாயும்  சண்டைக்கு  வருகிறார்கள். அதைவிட  ஒரு நகைச்சுவையான  விடயம்  என்னவென்றால்  தென்  இந்தியாவில்  அதிகம் பெண்களையே இந்தப் பாடல் கவர்ந்திருப்பதாக தனுசினதும், அனிருத்தினதும்,  ஐஸ்வர்யாவினதும்  டுவீடறிற்கு  வந்த  தகவல்கள் சொல்கின்றனவாம். ஆக, தங்கள்  பிரச்சனைக்கு  உதவியாய் இந்த  பிரச்சனையை  உருவாக்கியவர்கள்  நான்  மேலே  சொன்ன  அந்த தமிழ் பிரியர்கள்தான் என்பதை நான் சொன்னாலும் பிழையில்லை.


இதிலே அப்படியென்ன பிழை இருக்கிறது என்று தெரியவில்லை. திரும்பவும், அப்படி  ஒரு  பெண்  ஆணை  ஏமாற்றுவதாக  அந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கியிருக்கலாம் இல்லையா? (அதுதான் உண்மையும்) தங்களை சரியாக சொல்லாமல் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் பாடல் இருக்கிறது என்று வரிந்து கட்டிக்கொள்ளும் பெண்களும் சில ஆண்களும் 'தேவதாசு கதையைப் போல என் கதையாச்சு..', 'கடவுளே போதும் நிறுத்து..' மற்றும் 'யம்மா யம்மா காதல் பொன்னம்மா..' போன்ற பாடல்களை நீங்கள் கேட்டதே இல்லையோ? கீழே உள்ள பாடலை கொஞ்சம் பாருங்கள். பிறகு சொல்லுங்கள். இந்தப்பாடலை விட கொலைவெறிப் பாடல் பெண்களைப் பற்றி அப்படி என்ன தவறாக சொல்லியிருக்கிறது என்று.


இந்த பாடல் எல்லாவற்றையும் இவ்வளவுகாலம் கேட்டு முடித்து விட்டு இப்பொழுது பெண்களைப் பற்றி தவறாக ஒரு பாடல் சொல்கிறது என்று கதை விடுவதுதான் எனக்கு ஆச்சரியம். ஆக, ஒட்டு மொத்தத்தில், திரும்பவும் சொல்கிறேன் இந்த கொலைவெறிப் பாடலை வெறும் இசை ரசனைமிக்க ஒரு சினிமாப் பாடலாக மட்டும் பாருங்கள். எந்த தவறும் தெரியாது.

இந்தப்பாடலை  நான்  அதன்  இசைக்காகவும், தமாசாக  எழுத்தப்பட்ட வரிகளுக்காகவும், அதை  அழகாக (தனது பாணியில்) பாடியிருக்கும் தனுஷுக்காக்கவுமே பிடிக்கும். அதையும் தாண்டி, ஒன்றுமே இல்லாத இந்தப்பாடல் BBC, CNN வரைக்கும் போனதன் ஆச்சரியமும் என்னை இந்தப் பாடல்  கவர்வதற்கு  காரணமாக  அமைந்திருக்கலாம். ரசனைகளுக்கு வரம்புகள் போடாத எவனும், அதை  அதை  அது  அதுவாக  பார்க்கின்ற எவனும், சினிமாப் பாடலிற்கும் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை சரியாக தெரிந்துகொண்ட எவனும், இசை என்பது மொழிகள் தாண்டிய ஒரு இன்பம் என்பதை அனுபவிக்கத் தெரிந்த எவனும் இந்த கொலைவெறிப் பாடலை கொண்டாடுவான்.

இன்னுமொரு விடயம் முடிப்பதற்குள், இந்த பாடலிற்கு பல வித்தியாசம் வித்தியாசமான பிரதிகள் ஒவ்வொரு நாட்டிலும் உருவாகியிருக்கின்றன. அந்தவகையில் இதுவரை வந்த இந்த கொலைவெறி வெர்ஷன்களில் எனக்கு பிடித்தவை இரண்டு. ஒன்று  பிரபல  பாடகர்  சோனு  நிஹாம் அவர்களின்  மகன்  பாடியது. மற்றது  நம்ம  யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான  தமிழ்  வெர்ஷன். இவை  இரண்டையும்  நான்  அதிகம் ரசித்ததுண்டு.

                                    பிரபல பாடகர் சோனு நிஹாம் அவர்களின் மகன் பாடியது.


                                                      யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான தமிழ் வெர்ஷன்.

பி.கு. இந்த  தமிழ்  வெர்ஷன்  தொடர்பான  எனது  கருத்து  "இப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்." அவ்வளவுதான். ஹி ஹி ஹி. இருந்தும் இந்த வெர்ஷனில் பாடியிருக்கும் நண்பரின் குரலிற்கும், வரிகளிற்கும் வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியாது.

Saturday, January 14, 2012

பகலவனுக்கு பந்திவைக்கும் நாள்.


பகலவனுக்கும்
பந்தி வைக்கும்
நாள்.

உலகை உருட்டும்
அவனுக்கு
உலை வைப்பதில்
என்ன தவறு?

செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.
வயல் பூக்க
வாரிக்கொடுத்தவன்
இந்த
வள்ளல்.
அவனுக்கு
ஒரு பானைப் பொங்கல்..
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.

இன்று
புலரும் திங்கள்,
புதுமை செய்யட்டும்.
பொசுங்கிய உடல்களில்,
பிதுங்கிய கண்களில்,
கனத்த கனவுகளில்,
காணாமல் போன சுதந்திரத்தில்,
கண்டித்துப் போன மகிழ்ச்சியில்,
மாரடித்துப்போன சாவுகளில்...
இன்னும்
சவுக்கடி வாங்கும்
தமிழ் மனங்களில்
ஏதாவது
புதுமை செய்யட்டும்..

புதிய திங்கள்
பூவாய்ப் பூக்கட்டும்
தமிழர் மேல்.
பட்ட துன்பங்கள்
பாழாய்ப் போகட்டும்
பாரின் மேல்.


எனது நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், உறவுகள் அனைவரிற்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஒரு கவிதைக்கு அக்கப்போரா?

வணக்கம் நண்பர்களே. எல்லாரும் பொங்க ரெடியா?? (யோவ்வ்.. தண்ணிப் பொங்கல் இல்ல.. அரிசிப்  பொங்கல்...) அனைவரிற்கும் முன்கூட்டிய தித்திக்கும் அன்பான பொங்கல் தின வாழ்த்துக்கள். சரி இனி விடயத்திற்கு வருவோம்.

இது  ஒரு  விளக்கப்பதிவு  மட்டுமே. நான்  எப்பொழுதும்  மனிதர்களின் கருத்துக்களை  மதிப்பவன். எனது  நாக்கை  மதிக்க  தெரிந்த  எனக்கு அடுத்தவன் நாக்கையும் மதிக்கத் தெரியும். தெரிய வேண்டும். ஆனால் நம்மில் பலர் தங்கள் வார்த்தைகளை மதிக்கத்தெரிந்த அளவிற்கு அடுத்தவர் கருத்துக்களை மதிக்கத் தெரிவதில்லை.


அண்மையில் எனது வலைப்பூவில் நீ மாறுபட்டவள்தான்!  என்கின்ற ஒரு கவிதையை பதிவிட்டிருந்தேன். இந்த கவிதையை வாசித்தவர்கள் தங்கள் தங்கள்  கருத்துக்களை  அவரவர்  ஆளுமை, பாலிசிக்கு  ஏற்ப சொல்லியிருந்தார்கள். அதில் எனக்கு வந்த சில கருத்துக்கள் நான் பெண்களை  மட்டமாக  மதிப்பிட்டிருப்பதாகவும், பெண்களை கேவலப்படுத்தும் ஒரு ஆணாத்திக்கப் போக்காளன் நான் எனவும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

நான்  எப்பொழுதும்  மற்றவர்  கருத்துக்களை, உணர்வுகளை  எப்படி மதிக்கிறேனோ அப்படி மற்றவர்களும் எனது கருத்துக்களை, உணர்வுகளை மதிக்க  வேண்டும்  என  ஆசைப்படுபவன். சில  வேளைகளில்  அது வாய்க்கும். பல வேளைகளில் போட்டுக்கும். அதுவும் இலக்கிய உலகில் நான் வாங்கின அடி எக்கச்சக்கம்.

சரி அந்த கவிதையில் அப்படி என்னதான் இருக்கிறது என்றால் கடைசி பந்தி ஒன்று இப்படி,

"நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்."

பூரண கவிதையையும் படிக்க நீ மாறுபட்டவள்தான்!

முதலில்  இது  ஒரு  கவிதை. தனது  உணர்வுகளை  வரிகளில் கொண்டுவருவது  கவிஞனின்  அடிப்படை  உரிமை. ஆனால்  அது சமூதாயத்தையோ அல்லது குறித்த ஒருவரையோ பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற நியதியையும் நான் மதிக்கிறேன். காதலால் அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தால் பெண்களை வெறுக்கும் ஒரு இளைஞனின் உணர்வுகள்  எனது  வரியில்  வந்திருக்கிறது. பெண்கள்  மீதான  எனது பார்வையும் அதுதான். இது எனது கருத்து. யாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. மதித்தால் போதும்.


எனக்கும் அம்மா, அக்கா, நண்பிகள் என்றெல்லாம் பெண்கள் நெருக்கத்தில் இருக்கிறார்கள்தான். இவர்களிடமும்  இந்த  குறையை  நான்  பார்த்தே இருக்கிறேன் என்றால் அதை நான் எதற்காக வெளியில் சொல்ல தயங்க வேண்டும். இந்த விடயத்தை சரியான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் நான் சொல்லியிருக்கிறேன். அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை பொதுமைப் படுத்தும் நோக்கில் சொல்லவில்லை என்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கு பிழையாகிவிடும்.

ஆண்களிலும் பல குறைவான இயல்புகள் இருக்கத்தான் செய்யும் பலரது கருத்துக்களில். இந்த  கவிதை  ஆண்கள்  எல்லாம்  ஆளுமை  நிறைந்த, வைரங்களை மட்டும் தேடுபவர்கள் என்று சொல்லவில்லை. அதைவிடுத்து, எனது கருத்தில் இது உண்மை என்றால் அது சிலர் கருத்தில் பொய்யாக இருக்கலாம். இதெல்லாம் நம் சிந்தனை ஆளுமை சம்மந்தப்பட்ட விடயம் தானே. உதாரணமாக  அண்மையில்  வந்த  கொலைவெறி  பாடலை  ஒரு சுவாரசியமான  ஜனரஞ்சக  பாடலாக, ஒரு  மனதை  தொடும்  இசையாக அனுபவித்தவர்கள் சந்தோசப் படுகிறார்கள். அதன்  வரிகளை  மட்டும், இலக்கியப் போக்கில் பார்ப்பவர்கள் கொதிக்கிறார்கள். இது  அவர்  அவர் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில்தானே தங்கி இருக்கிறது.

ஒரு சகோதரி என்னை இந்த கவிதைக்காய் வெறுக்கிறேன் என்று முகப் புத்தகத்தில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். நான்  'நீங்கள்  பாவம்..'  என்று மட்டும்  பதில்  அனுப்பினேன். என்னை  வெறுக்கும்  அளவிற்கு  இந்த கவிதையில்  என்ன  இருக்கிறது  என்று  தெரியவில்லை  எனக்கு. கனக்க  வேண்டாம். இப்பொழுது  இந்த  சகோதரி  இந்த  கவிதையை  உண்மையாக்கிப் போகவில்லையா?

இந்த விடயம் தொடர்பாக எனது போக்கை மாற்ற விரும்பினாலும் எதையும் அனுபவிக்கும் வரை அதை எப்படி மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியும். சரி அதை விடுவோம். பெண்கள் மீதான பார்வை என்றுமே எனக்கு ஆணாதிக்கப் போக்கில் இருந்ததில்லை. பெண்களை புகழ்பவர்கள் நல்லாவர்களா? பெண்களின் எதிர்மறையான விடயங்களை சொல்பவர்கள் ஆணாத்திக்கவாதிகளா? இந்தகவிதையில் நான் சொல்லவரும் விடயம் பெண்கள் எல்லாரும் இப்படித்தான் என்பதை விட இப்படி இல்லாமல் இருந்தால் நல்லது என்பதுதான். (நன்றி கமல்ஹாசன்..)

ஆணாதிக்கம், பெண்ணியம் என்றெல்லாம் பேசுபவர்கள் இந்த சொற்களின் அர்த்தம் சரியாக தெரிந்துதான் பேசுகிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. நீங்களே  சொல்லுங்கள், எங்களது  கருத்துக்களை மற்றவர்கள்  ஏற்றுக்கொள்ள  வேண்டாம். மதிக்கலாம்  அல்லவா? ஒவ்வொருத்தரின்  ஆளுமையும், எண்ணத்தின்  வீரியமுமே  எமது பாலிசியினை தீர்மானிக்கின்றன. இந்த  பாலிசியே  நமது  கருத்துக்களை தீர்மானிக்கின்றன. அதை முதல் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இது தொடர்பில் என்ன சொல்கிறீர்கள்? உங்கள்  கருத்துக்களை கேட்கவும் ஆவல்.

Tuesday, January 10, 2012

நீ மாறுபட்டவள்தான்!

கல்லைக்கூட
கனியவைத்தது
என்
கவிதை.
உன்னிடம் மட்டும்
அது
கல்லாய்ப் போனது.

என்
இதயத்தை
சுவாசித்திருக்கிறார்கள்
பலர்.
அதை
வாசிக்கக்கூட
முடியாமல் போனது
உன்னால்.

கருவண்டின்
கானத்தைக் கூட
ரசித்திருக்கிறார்கள்
அநேகம் பேர்.
உன்னால்
இந்த
குயில் பாட்டைக்கூட
சகிக்க முடியாமல் போனது.

நீர்மட்டம்
பார்த்து
ஆம்பல்கள் வளர்ந்தன.
நீ மட்டும்
ஆம்பலுக்காய்
நீர்மட்டத்தை மாற்றினாய்.

இந்த
நிலாவைப்பார்த்து
நின்று ரசித்தனர்
பலர்.
நீ - அதை
பிசாசு என்றாய்.

நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.  பி.கு. இது ஒட்டுமொத்த தாய்க்குலத்தையும் குற்றம் கூறும் கவிதை என யாரும் சண்டைக்கு வராதீர்கள். இது குறித்த ஒரு சந்தர்ப்பத்திற்காய் புனையப்பட்ட கவிதை என்பதை நமது மக்கள்ஸ் அனைவரிற்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
 

எனது ஏனைய கவிதைகளைப் படிக்க கீழே  சொடுக்கவும்.

Saturday, January 7, 2012

மாடி என்ன, என் மடியே உனக்கு!தம்பி,
நம்மைப் பார்ப்பதற்கு
எவரிற்கும் நேரமில்லை.
மனிதர்கள்
ஏழாம் அறிவு பார்ப்பதில்
பிஸியாய் இருக்கிறார்கள்.

கவலை வேண்டாம்.
உன்னைப் பார்க்க
நான் இருக்கிறேன்.
என்னைப்பார்க்க
கடவுள் இருக்கிறான்.

பிள்ளையைப் பெற்று
கணவனிடம்
கொடுப்பார்கள்
அன்னையர்கள்.
உன்னை பெற்று
என்னிடம் கொடுத்தவள்
நம் தாய்.

உனக்கு
சாப்பாடு கொடுப்பதற்கே
சாயங்காலம் வரை
பிச்சை எடுக்கிறேன்.
இந்த மனிதர்களோ
அதிகம்
மிச்சம் பிடிக்கிறார்கள்.

போதாது என்றாலும்
உன்னைக் காட்டி
பிச்சை கேட்க
எனக்கு இஷ்டம் இல்லை.

கொஞ்சம் பொறு தம்பி,
இன்னும் - எனக்கு 
கொஞ்சம் வயது வரட்டும்.
வேலைக்கு போய் 
அதிகம் சம்பாத்திக்கிறேன்
உனக்காய்.
காரணம்,
இப்பொழுதெல்லாம் 
எனக்கு - எவரும் 
வேலை கொடுக்கமாட்டார்கள்.
சிறுவர் துஸ்பிரயோகமாம்.

மடியில்
கண்ணார தூங்கு.
அவர்கள்
மாடிகளை விட
இந்த 
படிகளில் - என்
மடி
சுகமாய் இருக்கும்.

சூப்பிப் போத்தல்
வாங்கித்தந்த கனவான்
நல்லா இருக்கணும்.
அதற்குள்
கொஞ்சம் 
பால் கேட்டால்
கண்டபடி ஏசுகிறார்
அந்த கடைக்காரர்.
மனதற்ற அவரின் பாலைவிட
மனதார நான் தரும்
இந்த தண்ணீர்
உனக்கு நல்லம்.

தம்பி,
திரும்பவும்
உனக்கு 
கண்டிப்பாய் ஒன்று சொல்கிறேன்.
உன்
வாயை மூடித் தூங்கு.
நமக்கு அருகில் 
உமிழ்ந்து போபவர்கள்
உன் வாய்க்குள்
உமிழ்ந்துவிடலாம்.

அவர்கள்
பணக்கார எச்சில்
உன்னை
நோய்வாய்ப் படுத்தலாம்.

தம்பி,
நீ அழுவதெல்லாம்
ஒன்று
பசிக்கு
இன்னுமொன்று
தாகத்திற்கு.
அவர்கள் குழந்தைகள்
அழுகிறார்கள்
கிண்டர் ஜோய்க்கும்
வொன்டர் வேர்ல்டுக்கும் .

எனக்கும் 
உனக்கும்
ஒரே நம்பிக்கைதான்.
அது 
கடவுள்.


படம்: நன்றி அதிர்வு. 


இன்றைய தினமே நான் இட்ட இன்னுமொரு பதிவை வாசிக்க கீழே சொடுக்கவும்:
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.Friday, January 6, 2012

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.


வணக்கம் நண்பர்களே. எழுதுவதற்கு பல விடயங்கள் இருந்த பொழுதும் நேற்று எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது குறித்த சந்தர்ப்ப சூழ்நிலையில் எனக்கு நான் சிறுவயதில் விரும்பிப் படித்த  'Shake it off and take a step up' என்ற அந்த  ஆங்கிலக்  கதை  ஞாபகம்  வந்தது.  நீங்களும்  அதை கேட்டிருப்பீர்கள் அல்லது வாசித்திருப்பீர்கள். அந்த கதையை சிறுவயதில் கேட்டாலும் அந்த கதை சொல்லும் பாடம் எமது வாழ்க்கை முழுவதற்கும் பொருந்தக்கூடியது. சரி முதல் கதை. பின்னர் பாடம்/அறிவுரை.

விவசாயி ஒருவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது அவரது நீண்டகால சொத்து. ஒரு நாள் இந்த விவசாயியைத் தேடிவந்த சரசு அக்காவோடு அவரது தோட்டத்துக் கொட்டிலினுள் இருந்து அளவளாவிக்கொண்டு இருந்த பொழுது (??) அவரது கழுதையின் அழுகை சத்தம் தோட்டத்தின் தெற்கு பக்கமிருந்து ஓலமாய் ஒலித்தது. தனது கழுதைக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என தீர்க்கமாய் அறிந்த விவசாயி சரசு அக்காவ கொஞ்ச நேரம் அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு (அப்படியே மீன்ஸ், பேசிக்கொண்டு இருந்தவாறே..) கழுதையின் அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தார்.


அங்கு சென்று பார்க்கும் பொழுதுதான் அவரது கழுதை தவறுதலாக அருகில் இருந்த பெரிய கிணற்றினுள் விழுந்து விட்டதை பார்த்த அந்த விவசாயி அதற்கு என்ன செய்யலாம் என அவசர அவசரமாக சிந்திக்கத் தொடங்கினார். இரண்டு விடயங்கள் அவர் சிந்தனையில் வந்து டமார் என விழுந்தது. ஒன்று அந்த கழுதை மிகவும் வயதான் ஒரு ஓல்டு கழுதை. அதனால் முன்பு போல அது இது என்று எதுவுமே செய்ய முடிவதில்லை. சாவுக்கு இந்தா அந்தா என்று இருக்கிறது அந்த கழுதை. இரண்டாவது, அந்த கிணற்றை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இன்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பாழடைந்த கிணறு இப்பொழுதெல்லாம் எதற்கும் பிரயோசனப் படுவதில்லை.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் ஆராய்ந்த இந்த பாவி மனுஷன் ஒரு முடிவிற்கு வந்தது. 'ஓகே. கழுதைக்கும் சாகிற வயசு. கிணறும் மூடவேண்டி இருக்கு. ஆகவே, அப்படியே கழுதைய உள்ளே விட்டு இந்த கிணற்றை மண்ணையும் குப்பைகளையும் கொட்டி மூடிவிடுவோம்.' இதுதான் அந்த விவசாயி எடுத்த இறுதி முடிவு. (அட பாவி.. பட் இந்த டீலிங் நல்லாதானே இருக்கு..) எனவே, ஊராரை உதவிக்கு அழைத்து அந்த கிணற்றை மூட ஆரம்பித்தனர் அனைவரும்.


சவலை எடுத்து ஒவ்வொரு தடவையாக ஒவ்வொருவரும் சுற்றியிருந்த அழுக்குகளையும் மண்ணையும் வாரி அள்ளி அந்த கிணற்றினுள் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு சவல் அழுக்கும் கிணற்றினுள்ளே விழும் பொழுதும், அதுதான் கிணற்றினுள் இருக்கும் அந்த கழுதையின் மேல் விழும் பொழுதும் அந்த கழுதை குவீர் குவீர் என சத்தமிட்டு அழுதது. இவர்களும் விடுவதாய் இல்லை. சிறிது நேரம் சென்றதும் கழுதையின் சத்தம் இல்லாமல் போக அந்த விவசாயி 'அப்பாடா அது செத்துட்டுது.. சத்தத்த காணோம்..' என எண்ணியபடி கிணற்றை எட்டிப் பார்த்து மலைத்து நின்றார்.

ஒவ்வொரு முறை தனக்கு மேலே இந்த அழுக்குகள் விழுந்ததும் தனது உடலை ஒருமுறை குலுக்கியதும் அந்த அழுக்குகளும் மண்ணும் கீழே விழுந்துவிடுகின்றன. பின்னர் கீழே விழுந்த அந்த அழுக்குகள் மீது ஒரு எட்டு வைத்து மேலே ஏறி நின்றுகொண்டிருந்தது அந்த கழுதை. இதைப் பார்த்த விவசாயி, அதன் புத்திசாதூரியத்தை எண்ணி வியந்து தொடர்ந்தும் அழுக்குகளையும் மண்ணையும் அள்ளிப் போடும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் அவ்வாறே தொடர்ந்து அவற்றை கழுதை மேலே போட்டுக்கொண்டிருந்தனர். நம்ம புத்திசாலிக் கழுதையும் அவரது பாணியிலே உடலை உலுப்பி கீழே தட்டிவிடுவதும் பின்னர் அதன் மேல் ஒரு படி ஏறி மேலே வருவதுமாய் இருந்தது.

சொற்ப நேரத்தில் கிணற்றை திரும்பிப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர் அனைவரும். காரணம் மேலே மேலே வந்து வந்து இப்பொழுது கிணற்றின் மேல் விளிம்பில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது கழுதை. அடுத்த சவல் அழுக்கை அள்ள, சிம்பிள் ஆக வெளியே குதித்து தனது எஜமான்  அருகே  போய்  நின்றது  கழுதை. இறுதியில்  கிணறு மூடப்பட்டாலும்  கழுதை தப்பிக் கொண்டது.பாடம். (ஓடாதேங்கோ, இது அந்த பாடம் இல்ல... வாழ்க்கைப் பாடம்.. ஹி ஹி ஹி)

வாழ்க்கை உங்கள் மேலே எல்லா வகையான குப்பைகளையும் கொட்டிக்கொண்டே இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி இந்த கழுதை செய்தது போன்று அழுக்கை தட்டிவிட்டு அதன் மேல் ஏறி நடப்பது தான். 'Shake it off and take a step up'. அதிலும், நாம் உடனடியாகவே அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாய் தொடர்ந்தும் அதே முயற்சியை செய்யும் போதுதான் வெளியே வரமுடியும்.


அடுத்து ஒரு மொக்க அட்வைஸ். (???)

சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள்.
  1. மன்னிப்பு. வெறுப்பு, பகைமையிலிருந்து உங்கள் மனங்களை அப்புறப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. கவலைகளிலிருந்து இலகுவாக வெளியே வரக்கூடிய வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
  3. எளிமையாக வாழுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்திப்  பட்டுக்கொள்ளுங்கள்.  
  4. அதிகம் கொடுங்கள்.
  5. கொஞ்சமாய் எதிர்பாருங்கள்.

என்னப்பா.. மொறைக்கிறீங்க... ஓவரா சாகடிச்சிட்டேனா? சரி சரி.. விடுங்கப்பா.. உங்கள் பொறுமைக்கு ரொம்ப தேங்க்ஸ். மீண்டும் சந்திப்போம்.

பிற்குறிப்பு: கதையில் அந்த சரக்கு சாரி சரசு அக்காக்கு இறுதியில் என்ன நடந்திச்சு எண்டு யாராவது சின்சியரா கேட்டீங்க.. கடுப்பாகிடுவன். அது இந்த ஒரிஜினல் கதையில இல்லேங்க.. நான் சும்மாமாமா சேர்த்தது.


இன்றைய தினமே நான் இட்ட இன்னுமொரு பதிவை வாசிக்க கீழே சொடுக்கவும்:
மாடி என்ன, என் மடியே உனக்கு!


Wednesday, January 4, 2012

நாகரீக பொண்டாட்டி.


நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட 
உடலைத்தான் 
அதிகம் பார்த்திருக்கிறோம்.

நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல் 
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?

"உன்
பொண்டாட்டியில் 
குறைவாய் இருக்கும் 
ஆடையை விட
தெளிவாய் தெரியும் 
உடல் 
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள். 

Tuesday, January 3, 2012

தீ மூட்டியவன் நீ. எரிவதோ நான்.

அன்று சனிக்கிழமை. அன்று சூரியனும் பிந்தியே வந்ததால் ஒன்பது மணிக்கு துயில்களையும் கவிதாவைப் பற்றி அவள் தாய் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. வழமை போலவே போர்வையை கொஞ்சம் தளர்த்தி, மூட்டுக்களையும் புருவங்களையும் கொஞ்சமாய் உயர்த்தி சோம்பலிற்கு விடைகொடுத்து அம்மா நிற்கும் குசினிப் பக்கம் நடந்தாள் கவிதா. 

"அப்பாடா.. இப்பவாவது எழும்பினியே.." கொஞ்சம் நக்கலும் கொஞ்சம் கடுப்பும் நிறைந்த வார்த்தைகளை உச்சரிக்கும் முன்னமே தாயின் கடுப்பை இரண்டு மடங்காக்கினாள் கவிதா. "அம்மா, டீ போடு..". 

"ம்ம்ம்.. இந்த வருடம் உனக்கு இருவத்தி ஒரு வயசு கவிதா.. இன்னும் சின்னப் பிள்ளைக்கு நடிக்காத.." என பேசியபடி கவிதாவிற்கு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள் கவிதாவின் அம்மா. கவிதா வீட்டில் ஒரேயொரு பெண் பிள்ளை. அதனாலோ என்னவோ கவிதாவிற்கு கிச்சின் பக்கம் அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம். ஒருநாளைக்கு சமையலறைப் பக்கம் ஒருமுறை போவது கூட அதிகம் என நினைப்பவள் இந்த கவிதா. வீட்டின் முற்றத்தில் இருந்த சாக்குக் கட்டிலில் அமர்ந்தபடி வர இருக்கும் தேநீரிற்காய் காத்துக் கொண்டு இருந்தாள். "இந்தா டீ.." கையில் கொடுத்த தேநீரோடு "குடிச்சிட்டு ஒருக்கா சாமி மாமா வீட்ட போய் சீட்டுக்காச கொடுத்திட்டு வா கவிதா.." என ஒரு வேலையையும் கொடுத்து மீண்டும் சமையலறைப் பக்கம் போய் மறைந்தாள் கவிதாவின் அம்மா.

"இவக்கு வேற வேல இல்ல.. எப்ப பாத்தாலும் எனக்கே வேல சொல்லிக்கிட்டு.." என மனச்சாட்சி இல்லாமல் தனக்கு தானே கதை விட்டுக்கொண்டு இருந்தாள் கவிதா. இருந்தாலும் வேறு வழி இல்லை. இவள் தான் போய் ஆகவேண்டும் என தெரிந்ததும் முற்றத்தை விட்டு கழன்று ஒரு வாறு கிணற்றடிப் பக்கம் செட்டில் ஆனாள் கவிதா. பின் கால்கள் தடவும் கூந்தலை அழகாக நீரில் போட்டு கழுவி, ஊர் பசங்களை ஒரு கை பார்க்கும் அந்த கட்டுடலை சவர்க்காரத்தால் இங்கும் அங்கும் தடவி, நீரினால் அபிசேகம் செய்துகொண்டிருந்தாள் கவிதா. "காணும் காணும், தடுமல் பிடிக்க போகுது, கெதியா வா கவிதா.." என சமையலறை பக்கம் இருந்து வந்த சப்தத்தை கேட்டு கூந்தலை ஒரு துவாயில் முடிந்து, அரைத்தேகத்தை இன்னுமொரு துவாயில் சுத்தி அறையினுள் போய் வழமை போலவே நேற்றைய நாளை கிழிப்பதற்காக கலண்டரில் கை வைக்கும் போதுதான் இன்று சனிக்கிழமை என்பது கவிதாவிற்கு ஞாபகம் வந்தது.  

"ஓ.. இன்னைக்கு சனிக்கிழம.. சனியன் புடிச்ச சனி இன்னைக்கா வரணும்... எல்லாம் எண்ட தல எழுத்து..' என பற்களுக்குள் முட்டி மோதிய வார்த்தைகளால் அழகிய முகம் கொஞ்சம் அசிங்கமானது கவிதாவிற்கு. எதற்காக இந்த பரிதவிப்பு. எதற்காக இந்த சனி மேல் இப்படி ஒரு வெறுப்பு. காரணமும் இல்லாமல் இல்லை. இவளது உற்ற நண்பன் குணாவின் "நான் உன்னை காதலிக்கிறேன் கவிதா, நீ என்ன சொல்லுறாய்... அவசரம் இல்லை, வரும் சனிக்கிழம மூணு மணிக்கு பிள்ளையார் கோவிலுக்கு வருவன்.. உண்ட பதில சொல்லு.." என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அந்த கடைசி நாள் இன்று. கடைசி நேரம் இன்னும் அருகில். அதுதான் இத்தனை பதட்டம்.

"ஏன் தான் கடவுள் இந்த காதல படைச்சானோ.. அவஸ்தை அவஸ்தை.. சீ..." என காதலை இன்னுமொரு கோணத்தில் விமர்சித்து மீண்டும் சமையலறைப் பக்கம் நடந்தாள் கவிதா. "அம்மா.. இப்ப அவசரமா இந்த சீட்டு காச கொண்டுபோய் கொடுக்கணுமா? அல்லது மூணு மணிக்கு நான் கோயிலுக்கு போவன், அப்ப கொண்டு போய் குடுத்தா என்ன..??" என அம்மாவை நோக்கி கேட்டாள் கவிதா. "சரி கவி, அப்பேக்க கொண்டுபோய் கொடு.." என அனுமதி அளித்தாள் அம்மா. 'அப்பாடா..' என மீண்டும் தனது அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கதிரையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு தரையில் கால் நீட்டி  அமர்ந்தாள் கவிதா. 

"சீ.. இவனுக்கு என்மேல இப்பிடி ஒரு எண்ணம் வரும் எண்ணு நான் கொஞ்சம் கூட நினைக்கலையே..அவனும் குழம்பி என்னையும் குழப்பிட்டானே.." என வீட்டின் முகட்டைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் கவிதா. இவளது மனம் இன்று போல் என்றும் அமைதியின்றி இருந்ததில்லை. இவளது இரத்தஓட்டம் இன்று போல் என்றுமே தட புட என ஓடியதில்லை. இவள் இதயம் கூட இன்றுபோல் என்றுமே கட்டுக்கடங்காமல் துடித்ததில்லை. அட இவள் மூக்கு கூட இன்று போல என்றுமே பொலு பொலு என வியர்த்ததில்லை. இப்படி மாற்றங்கள் நிகழ்ந்துகொள்ள முடிவு மட்டும் இவளால் எடுக்க முடியவில்லை. 'இவனைத்தான் எனக்கு பிடிக்கும். ஆனால் காதல் இல்லை' என்றாற்போல் கண்ணாடியைப் பார்த்து கொஞ்சம் கூட வெட்கமின்றி பொய் சொல்லிப்  பார்த்தாள். கண்ணாடி கூட அதை நம்புவதாய் இல்லை. 'குணா, உன் மேல நான் அளவு கடந்த பிரியம் வச்சிருக்கேன், ஆனால் காதல் இல்லை.., அட அதிகம் பிரியமும் காதல் தானே... ஆமா, இவன் மேல எனக்கு பிரியமா காதலா??.. ஐயோ ஒண்ணும் புரியலையே.." என தலையனையோடு சண்டை போட்டாள் கவிதா. தலையணை கூட பதில் சொல்வதாய் இல்லை.  

கவிதாவின் தெளிவான குழப்பம் முடிவை நோக்கி நகர்ந்தது. "ஓகே. இங்க பாரு கவி, குணாவ விட்டா இந்த உலகத்தில உன்ன அதிகம் புரிஞ்சுகொண்டவங்க யாரு இருக்கா? யாரும் இல்லை! குணாவ விட உனக்கு பிடிச்ச ஆம்பிளைங்க யாரு இருக்கா? யாரும் இல்ல!, குணாவ விட உனக்கு தெரிஞ்ச நல்லவங்க யாரு இருக்கா? யாரும் இல்ல. குணாவ விட உன்ன சந்தோசமா வச்சிருக்கக் கூடியவங்க உனக்கு தெரிஞ்சு வேறு யாரு இருக்கா? யாரும் இல்ல. குணாவ விட உன்னைய ராணி மாரி சந்தோசமா அக்கறையோட பாத்துக்க வேறு யாராலையும் முடியுமா? யாராலையும் முடியாது.. எல்லா கேள்விக்கும் இல்ல இல்ல எண்டு துணிவா தெளிவா பதில் சொன்னா அவன் தானே உனக்கு சரியான ஆளு...!!" என கண்ணாடிக்கு முன்னாள் நின்று தானே தனக்கு கேள்வி கேட்டு தானே தனக்கு பதிலளித்து ஒருவாறு முடிவிற்கு  வந்தாள் கவிதா.  

"எனக்கு குணாவ மிஸ் பண்ண விருப்பம் இல்ல.. வீட்டாக்கள பிறகு கொஞ்சம் கொஞ்சமா சமாளிச்சிடலாம்.. சரி அவனுக்கு ஓகே சொல்லிடலாம் என.." தெளிவாய் ஒரு முடிவோடு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கவிதா. மனதில் பறந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது. முதல் முறை குணாவை நண்பனாக அல்லாமல் காதலனாக பார்க்கப் போவதை எண்ணி மனதுள் அவஸ்தைப் பட்டுக்கொண்டாள். 

சனிக்கிழமை. மூணு மணி. பிள்ளையார் கோவில். கவிதா சொன்னா இடத்திற்கு வந்து சேர்ந்தாள். குணா இன்னும் அங்கு வந்து சேரவில்லை. "ஒரு வேளை, நான் வரும்வரை கோயிலுக்குள் இருப்போம் என எண்ணி உள்ளே போய் இருப்பானோ.." என எண்ணியபடி கோவிலுக்குள் நடந்தாள் கவிதா. அன்றுதான் முதல் முறை கோவிலுக்குள் பிள்ளையாரை விடுத்து குணாவை தேடுகிறாள் கவிதா. அங்கு பிள்ளையாரையும், இரண்டு பூசாரியையும் தவிர யாரும் இல்லை. "சீ, இவன் எங்க போய்ட்டான்.." என எண்ணியபடி வெளியில் வந்த கவிதா எதிரே இருந்த சுவரில் சாய்ந்த படி நின்ற குணாவைப் பார்த்து பரவசமானாள். குணாவை மூன்றாம் வகுப்பில் இருந்து தெரியும் கவிதாவிற்கு. ஆனாலும் ஏதோ இன்றுதான் முதல் முறை பார்ப்பதைப்  போல ஒரு பதற்றம். ஹன்சிகாவை பார்க்கும் நம்ம பசங்க போல் ஒரு மாதிரியாய், கண்வெட்டாமல் அவனையே பார்த்தபடி அவனை நோக்கி நடந்தாள் கவிதா. அட, வெட்கமும் அன்றுதான் அவளிற்கு முதல் முதல் அறிமுகம் ஆகிறது..

குணா, அவனது பாணியில் இரண்டு சொக்குகளிலும் சின்ன குழிகள் விழ ஓரமாய் இருக்கும் அந்த தத்திப் பல்லு எட்டிப்பார்க்க சலனம் இன்றி ஒரு புன்னகை செய்தான். அருகில் போன கவிதா, பேச முன்னமே வார்த்தைகளை சாப்பிட ஆரம்பித்தாள். குணா, தொடங்க கவிதாவும் தொடங்கினாள். இப்படி மூன்று நான்கு தடவை நடந்த போராட்டத்தை முடித்து "ஓகே, நான் ஆரம்பிக்கிறன்." என குணா ஆரம்பித்தான்.

"நான் எண்ட மனசில பட்டத போன கிழமை உன்கிட்ட சொன்னன், உண்ட முகம் உடனே மாறினதையும் பார்த்தன்.. பேந்து வீட்ட போய் தான் ஜோசிச்சன்.. நான் உன்னட்ட அப்படி பேசியிருக்க கூடாது கவிதா. நீ என்னைய ஒரு நல்ல பிரெண்டா தான் நெனச்சிருப்பா என்றத நான் அப்ப ஜோசிக்கல.. சின்னப்புள்ள மாரி வாயில வந்தத உன்னட்ட உளறிட்டன் அண்டைக்கு.. வெரி சாரி கவிதா.. என்னைய மன்னிச்சுக்கோ. நான் உண்மையா அப்பிடி உன்னைய நெனச்சிருக்க கூடாது.. இப்ப ஓகே. நான் விட்ட பிளைய உணர்ந்திட்டன். அன்னைக்கு நான் கதைச்ச எல்லாத்தையும் நீ மறந்திடு ப்ளீஸ்..." என ஒரு பூகம்பத்தை வீசிப் போனது குணாவின் வார்த்தைகள். 

"அட பாவி, இவனுக்கு என்ன ஆச்சு.. நான் ஓகே சொல்லத்தானே வந்தன்.. இவன் இப்படி மாறிட்டான்.. ஏன் நல்ல நண்பர்கள் காதலர்களாக இருக்கக் கூடாதா? நான் எப்ப இது தப்பு எண்டன். இவனாவே ஒரு முடிவுக்கு வந்திட்டானே அட கடவுளே." என மனதுள் கட்டுப் பட்டாசாய் வெடிக்க ஆரம்பித்தாள் கவிதா. "அவனே, ப்ரெண்ட்ஷிப்ப பத்தி இப்படி பேசும் போது நான் எப்படி இல்லை நான் உன்னைய லவ் பண்றேன் எண்டு சொல்ல முடியும்.. அப்படி சொன்னால் நான் பிரெண்ட்சிப்ப கொச்சைப் படுத்துறதாய் அவன் நெனைப்பானே. கைவர வந்தது வாய் வரைக்கும் வராமல் போயிட்டே. " என எண்ணியபடி ஏதோ சொல்ல வாய் எடுத்து மௌனத்தை மட்டும் வெளியிட்டாள் கவிதா. "குணா, ஐ லவ் யூ" என இவளிற்கும் "கவிதா, என்னைய மன்னிச்சிட்டியா?" என இவனிற்கும் இந்த கவிதாவின் மௌனம் ஒவ்வொருவிதமாய் மொழி பெயர்த்துப் போனது.

"அதுதான், சாரி கேட்டிட்டன் அல்லா.. இன்னும் எதுக்கு இந்த கோவம்.. பேசு கவிதா ப்ளீஸ்.." என இவள் மௌனத்தை அவளிற்கே தப்பாய் மொழி பெயர்த்தான் குணா. "நான் படும் அவஸ்தை இவனுக்கு எங்கு புரியப் போகிறது... இவ்வளவுதானா இவன் என்னைய புரிஞ்சு கொண்டது.. ச்சே.." என மீண்டும் மனதிற்குள்ளேயே பேசிய படி, "சரி, அத விடு குணா.. டைம் ஆச்சு நான் கிளம்புறன்.." என காதலை அடைத்து முதல் அடியை எடுத்து வைத்தாள் கவிதா.

"நீ நண்பியாய் எனக்கு போதும்.." என்ற மன நிறைவோடு குணாவும் "நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன் குணா" என்கின்ற மன வலியோடு கவிதாவும் பிள்ளையார் கோவில் மதிலை விட்டு அவரவர் திசையில் நடந்தனர். காதல் மட்டும் அப்படியே மதிலோடு ஒட்டிக்கொண்டது. Popular Posts