Sunday, December 18, 2011

வாய்க்குள் போனதும் ஆம்பிளையாகும் நம்ம குடிமக்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. நேரமும் மனநிலையும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இன்று நான் உங்களோடு பேச வரும் விடயம் இந்த நல்லவங்க கெட்டவங்க என்கின்ற விடயத்தை அடித்தளமாகக் கொண்டது. மனிதர்களை இன்று நாங்கள் பல வகையறாக்களுக்குள் பிரித்து பார்க்க முடியும். அந்த சகல பகுப்பாய்வுகளையும் தாண்டி மிகவும் சாதாரணமாக நாம் மனிதர்களை வகைப்படுத்திக் கொள்ளும் ஒரு இலகுவான வகைப்படுத்தல் தான் இந்த 'நல்லவர்கள் கெட்டவர்கள்' என்கின்ற பாகுபாடு. 

ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் என்று எதைவைத்து பேரம் பேசுகிறார்கள் என்றால் அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. எந்த அளவுகோலைக் கொண்டு ஒரு மனிதரை நல்லவர் என்று சொல்லமுடியும்? அதேபோல கெட்டவர் என்று? இந்த விடயங்களை ஆராய்ந்தால் பல விடயங்கள் திரைக்கு வரும். ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் என்று அளப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதாரண அளவுகோல்கள் பல. ஒழுக்கம், சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், சமூக கட்டமைப்பிற்கு பொருந்துகையுடைய விடயங்கள், சமய நெறி, குடும்ப பழக்க வழக்கங்கள், பாரம்பரிய முறைமைகள் என பல அளவுகோல்களை சொல்ல முடியும். இந்த அளவுகோல்களைத் தாண்டி ஒரு சுவாரசியமான விடயமும் இருக்கிறது. அதாவது ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை அவர் மேல் நமக்கு இருக்கும் விருப்பு வெறுப்புக்களும் தீர்மானிக்கின்றன. பெரும்பாலும் நமக்கு பிடிக்காத ஒருத்தர் நமக்கு கெட்டவராகவே தென்படுவார். (அதேபோல கெட்டவர்கள் எல்லாரும் நமக்கு பிடிக்காதவர்கள்தான்) ஆக ஒருவர் மீதுள்ள நமது தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்களும் அவரை நல்லவரா கெட்டவரா என பாகுபடுத்துவதில் பெரும் இடம் வகிக்கின்றன. 

நல்லவர்கள் என்று இங்கு யாரும் இல்லை என்கின்ற ஒரு கோட்பாட்டை நான் அதிக காலம் கொண்டிருந்தாலும் பின்னர் கெட்டவன் என்று ஒன்று இருக்கும் பொழுது நல்லவன் என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும் என்கின்ற தர்கவியல் கோட்பாட்டினால் இப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியாயிற்று. அப்படியெனின் இந்த கெட்டவர்கள் எனப்படுவோர் யார்? எப்படி பெயரிடப்படுகிரார்கள்? என்னைபொறுத்த மட்டில் ஒருவன் செய்யும் தவறுகள் அல்லது திட்டமிட்டு செய்யப்படும் விடயங்கள் அவனையும் அவன் சார்ந்தவர்களையும் பாதிக்காமல் அல்லது வதைக்காமல் இருக்குமேயானால் அதை அவன் தவறு அல்லது தான் கெட்டவன் என்று அறிந்துகொள்ள அதிக நாட்கள் ஆகும். அவன் செய்யும் தவறுகளினுடைய வீரியம் குறையும் பொழுது அவன் கெட்டவன் என்கின்ற வகைப்படுத்தலின் தேவையும் குறையத்தான் செய்யும். 

சரி, விடயத்திற்கு வருகிறேன். பல நல்லவர்களை பார்த்திருந்தாலும் எப்பொழுதும் நாம் அனுபவிக்கும் சில கெட்டவர்களின் நினைவுகள் எம்மைவிட்டு அவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவதில்லை. அந்தவகையில், நான் பார்த்த ஒரு மிகப் பெரிய கெட்டவன் என்கின்ற ஆளுமை நமது சமூகத்தில் ஏராளமாய் திரியும் 'குடிமக்கள்". அதுதான் போதை ஏறும்போது மட்டும் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முனைபவர்கள். 'மது அருந்துபவர்கள்' என்கின்ற பதத்திற்கும் 'குடிகாரர்கள்' என்கின்ற பதத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருக்கிறது. கருத்தியலில் நோக்கின், மது அருந்துபவர்கள் எல்லாம் 'குடிகாரர்கள்' இல்லை. இங்கு குடிகாரர்கள் என நான் கருத்தியலில் சொல்ல முற்படும் மனிதர்கள் போதையில் சுய நினைவை மறந்து வன்முறையாளர்களாக மாறுபவர்கள். மது அருந்துதல் என்பது இன்று சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பழக்க வழக்கமாக இருந்தாலும் அது நமது சமூகத்தை முழுமையாக விட்டு நீங்கவில்லை. நீகவும் போவதில்லை. காரணம் நவீன சமூக நகரமயமாக்கல் உலக வளர்ச்சியில் மது அருந்துதல் என்பது ஒரு ஊக்கப்படுத்தப்படா பண்பாடாகவே வளர்கிறது. இந்தப் பண்பாட்டு சிக்கலுக்குள் வாழ்க்கை ஓட்டும் மனிதர்கள் இதை இப்பொழுதெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. வெளிநாட்டில்  வொட்காவும் வைனும் அருந்துபவனும் நம்ம ஊரில் பட்ட சாராயம் அருந்துபவனும் வகைப்படுத்தலில் குடிகாரன்தான். ஆக, நவீன மயப்படுத்தப்படும் இந்த சமூகம் விரும்பா மனித பழக்க வழக்கம் கூட  என்றோ ஒருநாள் வாழ்வியலில் சாதாரணமான விடயமாக போகலாம்.

நம்ம விடயத்திற்கு வந்தால், இந்த நம்ம குடிமக்கள் என போற்றப்படுவோர் செய்யும் அட்டகாசங்கள் நமது ஊர்களில் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. சிலரிற்கு சாராயத்தை கண்டால் மட்டுமே ஆண்மை மலரும். ரோசம் குதிக்கும். மானம் துள்ளும். படிக்கட்டில் மனைவி பேச்சை கேட்டு சமத்தாய் இருந்த சுப்பு மாமா வடி அடித்தால் மட்டும் முப்பது வருடம் கழிச்சும் இன்றும் அன்னம்மா அக்காவிடம் சீதனம் கேட்பதும் நமக்கு தெரியும். என்ன சொன்னாலும் கேட்கும் நம்ம சுந்தரம் மாமாவும் இப்படித்தான் கொஞ்சம் சாராயம் குடித்துவிட்டால் நான் சொல்லுற படிதான் நீ கேட்கணும் எண்டு மனைவி தலையை பிடித்து பிய்ப்பார் என்பதும் நாமறிந்த உண்மை.  500 ரூபாவிற்கு குடித்துவிட்டு வீடுவரும் சோமு அண்ண அன்று இரவு முழுவதும் தற்செயலாக மனைவி சந்தையில் தொலைத்த நூறு  ரூபாய்க்காய் மனைவியை வெளுத்து வாங்குவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி பல கதைகள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும்.


ஆக, நமது சமூகத்தில் இப்படிப்பட்ட குடிமக்களால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் நம்ம பெண்கள்தான். இந்த குடிமக்கள் தங்கள் போதை ஞானத்தில் நிரூபிக்க நினைக்கும் தங்கள் செத்துப்போன ஆண்மையை இலகுவாக காட்டுவதற்கு இலகுவாக கிடைப்பவர்கள் இந்த பெண்கள். என்றோ ஒருநாள் போதையில் வீரம் பேசும் போதை ஆண்மை கொண்டவனை மனைவி கடப்பாரையால் வெளுக்கும் வரை இந்த குடிமக்கள் மாறப்போவதில்லை. 

ஆகவே, மக்கள்ஸ், போதையில் வரும் வீரம் மொக்கை வீரம். போதையில் வரும் ஆண்மை செம மொக்கை காமடி. ஆக, நீங்கள் போதையில் உங்களை இளக்காதவரை மது உங்களை எதுவும் செய்யப்போவதில்லை. போதையில் உங்களை நீங்களே கட்டுப்படுத்தத் தெரியாவிடின் அந்த மதுவை விலக்குவது உங்களுக்கு நன்மை. குடித்தாலும் உங்கள் வீரத்தை வீதியில் உள்ள போலீஸ் காரனிடம் காட்டுங்கள். வீட்டிலுள்ள அந்த அக்காவிடமோ, அண்டியிடமோ அல்லது அம்மாவிடமோ காட்டாதீர்கள். உங்களை நீங்களே குறைத்துக்கொள்ளும் அதிகமான சந்தர்ப்பம் உங்களிற்கு போதையில்தான் ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். 

.

4 comments:

ARV Loshan said...

கிழி கிழி..
தேவையான் சாட்டையைத் தான் சுழற்றியுள்ளீர்கள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

போதையேறியதும் பாதை மாறி வீர புருஷர்களாக பாவனை செய்து ஏனையோருடன் முரண்படுவோரிற்கு உறைக்கும் படியான எள்ளலுடன் கூடிய பதிவு.

பி.அமல்ராஜ் said...

நன்றி லோஷன் அண்ணா.

பி.அமல்ராஜ் said...

வணக்கம். வணக்கம், நன்றி நிரூ..

Popular Posts