Friday, December 16, 2011

காதல் பாடம்.

காதலை
நீ
எப்படி பார்த்திருக்கிறாய்?
கனவாய்..
கவிதையாய்..
காமமாய்..


இனிப்பை எடுத்து 
கசக்கி வீசியதும் 
குப்பையில் குடியேறும் 
இனிப்புப் பையின்
கண்ணீரை
பார்த்ததுண்டா நீ??

வாசல் வரை
வந்த உன்னை
இதயம் வரை
கொண்டு போனதில்
நான் பட்ட கஷ்டங்களை
அனுபவித்ததுண்டா நீ ?

விழியில் வந்துபோனதும்
என் 
மொழிகூட நீயென
என்
கவிதை மேலே 
சத்தியம் செய்ததை
அறிந்ததுண்டா நீ?

வீடு குழம்ப
முற்றம் முறைக்க 
எங்கள் சமையலறை 
சாம்பல் கூட எரிய
உன்னை
மனைவியாக்கிய 
அந்த 
புயல்
முத்தமிட்டுப்போன 
குடிசையை
பார்த்ததுண்டா நீ? 

ஒன்றை தெரிந்துகொள்,
காதலும்
கடவுளும்
ஒன்றுதான்..
நல்ல
மனிதனாக இருந்தால் போதும்,
நம்பிக்கை ஒன்றிலேயே
வாழ்க்கையை ஓட்டிவிடலாம்.

காதலில் 
மற்றவர்களை பார்க்கும்
உன் கண்ணால்
உன்னை இருமுறை
பார்த்திருக்கலாம்
காதலும் பிழைத்திருக்கும்
வாழ்க்கையும் தப்பியிருக்கும்.

ஏதோ,
உன்னை
இதயம்வரை
கொண்டுபோனத்தில் 
ஒரேயொரு நன்மை.
இரத்தம் 
இப்பொழுதெல்லாம்
திமிர் பிடித்து அலைகிறது
உன்னைபோலவே..

நீயும்
நானும்
காதலித்ததில்
இருவரும்
இறுதிவரை 
சேமித்துக்கொண்டது
'சுயநலம்' தவிர
வேறு என்ன?

உணர்வை
மதிக்கத்தெரியாத 
உங்களுக்கு
காதலும்
காமமும்
ஒன்றுதான்.

ஒன்றை புரிந்துகொள்,
காதலில்
கலியாணத்தைவிட  
கௌரவம் 
மிகவும் முக்கியம்..

மனிதனை
மதிக்கத்தெரியாத உனக்கு
எப்படி
இதயத்தை பூசிக்கத்தெரிந்திருக்கும்?

என்னை
வெறுத்தால்
இதயம் அனாதையாகும்.
எரித்தால்???

காதல்
அசிங்கப்படும்போதுதான்
ஆண்கள்
கற்பழிக்கப் படுகிறார்கள்.

ஆகமொத்தத்தில்
உங்கள் கற்பும்
எங்கள் கற்பும்
காதலால்தான் 
காப்பாற்றப்படுகிறதே ஒழிய 
காமத்தால் அல்ல.

.

2 comments:

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?

காதலால் தான் கற்பும் காப்பாற்றப்படுகின்றது எனும் தத்துவத்தினை உள்ளடக்கி காதல் பாடத்தினைக் கற்பித்திருக்கிறீங்க.
ஹே...ஹே..

அழகிய மொழி நடையில் அர்த்தங்கள் நிறைந்து மனதில் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் கவி இது!

மைந்தன் சிவா said...

அழகிய கவிதை!!

Popular Posts