
அந்த வகையில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் தொடர்ச்சியாக நடை பெற்றிருப்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கும். ஈழத்து பூதந்தேவனாரின் சில அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை பாடல்கள் தொடங்கி இன்றைய இளம் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் வரை இந்த ஈழத்து தமிழ் இலக்கிய உலகு விரிந்து செல்கிறது. இவ்வாறான இந்த தொன்மையான ஈழத்து இலக்கிய படைப்புக்கள் இன்று காலத்திற்கு ஏற்றாற்போல் நவீனத்துவ முறைமைகளின் அடிப்படையில் புத்துணர்ச்சி பெற்று காலத்தை காட்டும் கண்ணாடியாக படைக்கபடுதல் ஈழத்து இலக்கிய போக்கில் ஒரு நல்ல வளர்ச்சியின் குறிகாட்டியாகவே நோக்கப் படுகிறது. இவ்வாறானதொரு நீண்ட இலக்கிய தளத்தில் எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வதற்கு என்னால் முடியாது என்பதாலும் அதற்குரிய அறிவும் பக்குவமும் இன்னும் எனக்கு வரவில்லை என்பதாலும் மிகச்சாதாரணமாக இந்த நவீன காலத்தில் இளம் தலைமுறை படைப்பாளிகள் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றி அதிக பிரசங்கித் தனம் இல்லாமல் எளிமையாக பேச முயல்வதுதான் எனது இந்த கட்டுரையின் முதல் நோக்கம்.
இன்றைய ஈழத்து தமிழ் இலக்கிய மேடையில் மிகப் பிரதானமாக மூன்று தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்கள் பேனாக்களோடு படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியத்தை தவிர்த்து பொதுவாகவே தலைமுறை இடைவெளி என்பது இன்று பல மட்டங்களிலே பரவலாக பேசப்பட்டு வருகின்ற அல்லது பல எதிர் மறை விமர்சனங்களை உருவாக்கிவருகின்ற ஒரு விடயம். இதற்கு எங்களுடைய வீடுகளிலே எங்கள் பாட்டன் பாட்டிக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் இடையில் அரங்கேறும் மோதல்களும், பாடசாலைகளிலே ஆசிரியரிற்கும் மாணவனிற்கும் இடையில் உருவாகும் அறிவுரை சார் சண்டைகளும், வேலைத் தளங்களிலே மூத்த அதிகாரிகளுக்கும் இளம் தலைமுறை வேலையாட்களுக்கும் இடையில் நடைபெறும் கருத்துச் சண்டையும் பொதுவான உதாரணங்களாகும். இதற்கு காலத்தின் நவீனத்துவ மாற்றமும், பழமைவாத அல்லது புராதன கொள்கைவாத கோட்பாடுகளும், சுழல் கலாச்சார கொள்கைகளும் மற்றும் மிக முக்கியமான தன முனைப்பான குறிக்கோள் (ego), பகட்டு மரியாதை தேடல் முனைப்பு போன்ற உளவியல் சார்ந்த விடயங்களும் காரணங்கள் என சொல்ல முடியும். இவ்வாறான இந்த தலைமுறை இடைவெளி குடும்பங்களை தாண்டி, குழுக்களைத்தாண்டி, சமுதாயங்களைத்தாண்டி, இலக்கிய சூழலில் எவ்வாறான தாக்கங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தால் அதன் விளைவுகள் வாய்விட்டு பேசக்கூடியவை.

ஆகவே, இந்த மூத்த படைப்பாளிகளை இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் வழிகாட்டிகளாக, குருக்களாக, முன்னோடிகளாக, பல்கலைக் கழகங்களாக ஏற்று போற்றுகிறார்கள். மதிக்கிறார்கள். வணங்குகிறார்கள். அந்தவகையிலே இளம் எழுத்தாளர்கள் தங்கள் மூத்தவர்கள் மட்டில் சரியான புரிதல்களை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியும். ஆனாலும், இது எந்தளவிற்கு நூறு வீதம் உண்மை என்பதையும் நாம் சற்று எண்ணிப்பார்த்தல் அவசியம். இந்த மனநிலையில் இல்லாத சில இளம் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது கைகளில் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லையே. இவ்வாறு சில இளம் எழுத்தாளர்கள் ஏன் தங்கள் மூத்த படைப்பாளிகளை மதிப்பதில்லை, கொண்டாடுவதில்லை என்றால் அதற்கும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று சிறியவர்களின் குழந்தை செருக்கு, அவர்களின் குறுகிய மட்டுப்படுத்தப் பட்ட மனநிலை என அடிப்படையான இரு காரணங்களைச் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் மீதான சில மூத்தவர்களின் தவறான போக்குகளும் நடத்தைகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.
பொதுவாகவே, அண்மைக் காலங்களில் இந்த சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான சில முரண்பாடுகள் நா தொடங்கி முகப் புத்தகம் வரை விரிந்து கிடக்கின்றன. பெர்யவர்கள் இளம் படைப்பாளிகளை குறை சொல்வதும், இவர்கள் பெரியவர்களை பொல்லாப்பு பேசுவதும் சகஜமாகிப் போன ஒன்று. இந்த முரண்பாட்டு மோதல்களிற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அதற்கு இருவரும்தான் காரணம் என அடித்து கூறமுடியும். இன்று வரை பல மூத்த எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களில் அதிகம் நாட்டம் கொண்டு வாசிப்பதும் இல்லை. அதேபோல, சிறுசுகளும் தங்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிப்பதுவும், அவர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. இதுவே இந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்று சொல்லமுடியும். அதில் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. ஒரு மூத்த படைப்பாளி தன்னை அடையாள படுத்திக்கொள்ள முன்பெல்லாம் பல வருடங்கள் எடுத்தன. பல கஷ்டங்களை முகம்கொள்ள வேண்டி இருந்தன. சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், இன்றைய இளசுகள் வெறும் குறுகிய காலங்களில் தங்களை வேகமாக அடையாள படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இன்று அவர்களிற்கு தேவையான அளவு வேகமான சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றன. எனவே, தன்னை அடையாள படுத்திக்கொள்ள பத்து வருடங்கள் பல கஸ்ரங்களை பொறுத்திருந்த ஒரு மூத்த படைப்பாளி வெறும் சில மாதங்களிலேயே தன்னை ஒரு கவிஞனாக அடையாள படுத்திக்கொள்ளும் ஒரு இளம் படைப்பாளியை எப்படி நோக்குவார் என்பது கஷ்டமான விடயம்தான். இதை நான் உளவியல் அடிப்படியில் சொல்கிறேன்.
ஆக, இந்த இளம் தலைமுறையினர் சில விடயங்களை மிகச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்திலே பல விடயங்களைக் கற்பதற்கு மிகவும் பொருத்தமான புத்தகம் எது என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயமாக அது ஒவ்வொரு வாழும் மூத்த இலக்கியவாதிகள்தான் என்று சொல்வேன். இவர்களை விலக்கி, இலக்கியத்தில் அறிவும் அனுபவமும் பெற நினைப்பது சிறியவர்களின் முட்டாள்த்தனம் என்றே சொல்லத் தோணுகிறது. இந்த மூத்த படைப்பாளிகளை நாம் அவர்களின் காலங்களுக்குள் எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்தி எம்மை வளர்த்துக்கொள்வதே ஒரு இளம் படைப்பாளியின் புத்திசாலித்தனம் என நான் சொல்வேன். அத்தோடு, இன்னுமொரு விடயத்தையும் மிகவும் வெளிப்படையாக சொல்லியே ஆகவேண்டும். இந்த நமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளிகளை பகைத்து எம்மால் இலக்கிய உலகத்தில் மேலே வரமுடியாது என்பதையும் வெளிப்படையாக சிறியவர்கள் புரிந்தே கொள்ளவேண்டும். (இதனாலோ என்னவோ, சில இளம் படைப்பாளிகள் பல மூத்த இலக்கியவாதிகளிற்கு குடை பிடிக்கிறார்கள், இடுப்பு சொறிகிறார்கள்..) காரணம், ஒரு மூத்த இலக்கியவாதி ஒரு சாதாரண ஒருவரை இவர் ஒரு நல்ல கவிஞர் என்று சொன்னால் இலக்கிய உலகம் அவரை முளுமனதாகவே ஏற்று போற்றுகிறது. அதேபோல, ஒரு நல்ல இளம் கவிஞரை ஒரு மூத்த இலக்கியவாதி இவர் நல்ல கவிஞர் இல்லை என்று சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்.
அதேபோல, எமது மதிப்பிற்குரிய மூத்த இலக்கிய ஜாம்பவான்களும் சிறியவர்களின் ஏக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் எழுதினாலும் பேசினாதும் சிறியவர்கள் சிறியவர்கள்தானே? சிறியவர்களை வளர்த்துவிடவேண்டிய தார்மீக சமூகப் பொறுப்பு மூத்த படைப்பாளிகள் ஒவ்வொருவரின் தோள்களிலும் இருக்கிறது என்பது எமக்கு தெரியும். ஆகவே இந்த மூத்தவர்கள் இந்த சமூக வரலாற்று தவறினை இளைக்க விரும்பமாட்டார்கள் என்பது திண்ணம். இந்த இலக்கியத்தை அடுத்த சந்ததியினரிற்கு மூத்த படைப்பாளிகள் கொண்டுசெல்ல விரும்பினால் அது இந்த இளம் தலைமுறை படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அத்தோடு, சிறியவர்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிக்கவேண்டியது கட்டாயக் கடமை. அதேபோல, மூத்தவர்களும் இந்த இளையவர்களின் படைப்புக்களை வாசித்து அவர்களை இனம்கண்டு தோள் கொடுக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தவிர்த்து இளம் படைப்பாளிகளை அவர்களின் படைப்பினைக்கொண்டு மட்டும் அவர்களை அடையாள படுத்துவதை எப்பொழுதும் நேர்மையாக செய்தல் மிகவும் அவசியமான ஒன்று ஆகும். அதேபோல, தங்கள் எழுத்துக்களை கோவைகளிலும், கைகளிலும், கடதாசிகளிலும், வலைப் பூக்களிலும், முகப் புத்தகங்களிலும் வைத்துக்கொண்டு மூத்த படைப்பாளிகளின் ஒரு சிறிய தட்டிக்கொடுப்பிற்காய் காத்துக்கிடக்கும் எத்தனையோ புதுமுக படைப்பாளிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத மூத்தவர்களையும் அதேபோல தங்கள் நேரத்தை செலவழித்து, நின்று அவர்களை தட்டிக்கொடுத்து போகும் மூத்தவர்களையும் நான் தினம் தினம் பார்க்கிறேன். இவை அனைத்தும் அவரவர் மேல் திணிக்கப் பட்டிருக்கின்ற இலக்கியக் கடமைகள் என்பதை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது.
இறுதியாக, இவ்வாறான சில சிறிய சிறிய விடயங்களே இந்த இலக்கிய தலைமுறை இடைவெளியை அகலப் படுத்துகிறது. இவ்வாறன சின்ன சின்ன விடயங்களை முகம் கொள்ள முடியாமல் எழுத்தும் வேண்டாம் இந்த இலக்கியமும் வேண்டாம் என ஒதுங்கியவர்களையும் ஓடியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அத்தோடு, இந்த சிறு சிறு விடயங்களினால் மன உளைச்சலோடு வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல புதியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறான பயம் பொருந்திய, மணி கட்ட துணிவு இல்லாத சில இளைய படைப்பாளிகளுக்காகவே இந்த கட்டுரை. பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி மற்றவரின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் இந்த இடைவெளிச் சிக்கல் மாயமாக மறைந்துவிடும். நிறைகளை கூற மனமில்லாத படைப்பாளிகள் மாற்றாரின் படைப்பின் மேல் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதும் ஆரோக்கியமான தலைமுறை இடைவெளியை உருவாக்காது. ஆக, இது எங்கள் இலக்கியம், எங்கள் மொழி, எங்கள் உலகம். நாங்களே எங்களை வளர்த்துக்கொள்தல் அவசியம். அதற்காக வானிலிருந்து எவருமே குதிக்கப்போவதில்லை. எங்கள் மூச்செல்லாம் இலக்கியத்தின் மேலும், படைப்புக்களின் மேலுமே இருக்கவேண்டுமே தவிர தனிப்பட்ட மனித ஆசா பாசங்களின் அடிப்படையில் அமைதல் கூடாது. இந்த கட்டுரையின் நோக்கத்தை இக்கட்டுரை கடைசி வரை நிறைவேற்றி இருக்கிறதா என்பதை விட இக்கருத்துக்களை கருத்துக்களாகவே எடுத்துகொள்தல் இக்கட்டுரைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு என நினைக்கிறேன்.
இம்மாத ஜீவநதியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. நன்றி ஜீவநதி.
.
இம்மாத ஜீவநதியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. நன்றி ஜீவநதி.
.
1 comment:
இது புலம்பல் அல்ல,புதையல்.பெயர் மாற்றம் செய்யமுடியுமா என்று பாருங்கள்.இது காலத்தால் பெரியவனின்,கவித்துவ ஆளுமையால் கற்றுகுட்டி ஒருவனின் கனிவான வேண்டுகோள்.நான் முன்னாள் காவல்துறையினன் என்ற வகையில் "கருணை மனு"என்று கூட கவனத்தில் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.
Post a Comment