Friday, December 2, 2011

எழுத வந்தவர்களும் எழும்பி ஓடியவர்களும்.

எழுது கோல்களின் முனைகளை சவரம் செய்து காலத்திற்கு ஏற்றாற்போல் படைப்புக்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் நமது இலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. உலகத்தில் அந்தந்த தாய் மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் இலக்கிய உலகத்தில் தமிழ் இலக்கிய உலகம் என்பது கி.மு.300 தொடங்கி இன்றைவரை கட்டி எழுப்பப்படும் ஒரு பழமை மிக்க இலக்கிய தளம் ஆகும். சங்க இலக்கியம் தொடங்கி (கி.மு.300௦௦ - கி.பி. 300) இந்த பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் வரை மிகவும் நீண்ட வயதினைக் கொண்டது நமது இந்த தமிழ் இலக்கிய உலகம். இந்த நீண்ட கால இலக்கிய போக்கிலே அந்தந்த காலங்களுக்கு ஏற்றாற்போல் ஆங்காங்கே பிறப்பெய்திய பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், புராண இலக்கியங்கள், சமையம் சார் தமிழ் இலக்கியங்கள், புதினம், புதுக்கவிதை, ஆராட்சிக்கட்டுரைகள், அறிவியல் இலக்கியங்கள் என காலத்தின் கண்ணாடியாக உருப்பெற்ற தமிழ் இலக்கியங்கள் இந்த நீண்ட கால புராதன தமிழ் இலக்கிய வெற்றிக்கு வழிகோலின எனலாம். இப்படிப்பட்ட தமிழ் இலக்கிய உலகில் நமது ஈழத்து இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. தமிழ் இலக்கியம் என்று வருகிறபொழுது ஈழத்து தமிழ் இலக்கியத்தை புறம் தள்ளிவிட்டு ஆராய்வது அடிப்படையிலேயே பொருத்தமற்றது என்பது யாவரும் அறிந்த வெளிப்படை உண்மை. 

அந்த வகையில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் தொடர்ச்சியாக நடை பெற்றிருப்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கும். ஈழத்து பூதந்தேவனாரின் சில அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை பாடல்கள் தொடங்கி இன்றைய இளம் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் வரை இந்த ஈழத்து தமிழ் இலக்கிய உலகு விரிந்து செல்கிறது. இவ்வாறான இந்த தொன்மையான ஈழத்து இலக்கிய படைப்புக்கள் இன்று காலத்திற்கு ஏற்றாற்போல் நவீனத்துவ முறைமைகளின் அடிப்படையில் புத்துணர்ச்சி பெற்று காலத்தை காட்டும் கண்ணாடியாக படைக்கபடுதல் ஈழத்து இலக்கிய போக்கில் ஒரு நல்ல வளர்ச்சியின் குறிகாட்டியாகவே நோக்கப் படுகிறது. இவ்வாறானதொரு நீண்ட இலக்கிய தளத்தில் எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வதற்கு என்னால் முடியாது என்பதாலும் அதற்குரிய அறிவும் பக்குவமும் இன்னும் எனக்கு வரவில்லை என்பதாலும் மிகச்சாதாரணமாக இந்த நவீன காலத்தில் இளம் தலைமுறை படைப்பாளிகள் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றி அதிக பிரசங்கித் தனம் இல்லாமல் எளிமையாக பேச முயல்வதுதான் எனது இந்த கட்டுரையின் முதல் நோக்கம். 

இன்றைய ஈழத்து தமிழ் இலக்கிய மேடையில் மிகப் பிரதானமாக மூன்று தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்கள் பேனாக்களோடு படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியத்தை தவிர்த்து பொதுவாகவே தலைமுறை இடைவெளி என்பது இன்று பல மட்டங்களிலே பரவலாக பேசப்பட்டு வருகின்ற அல்லது பல எதிர் மறை விமர்சனங்களை உருவாக்கிவருகின்ற ஒரு விடயம். இதற்கு எங்களுடைய வீடுகளிலே எங்கள் பாட்டன் பாட்டிக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் இடையில் அரங்கேறும் மோதல்களும், பாடசாலைகளிலே ஆசிரியரிற்கும் மாணவனிற்கும் இடையில் உருவாகும் அறிவுரை சார் சண்டைகளும், வேலைத் தளங்களிலே மூத்த அதிகாரிகளுக்கும் இளம் தலைமுறை வேலையாட்களுக்கும் இடையில் நடைபெறும் கருத்துச் சண்டையும் பொதுவான உதாரணங்களாகும். இதற்கு காலத்தின் நவீனத்துவ மாற்றமும், பழமைவாத அல்லது புராதன கொள்கைவாத கோட்பாடுகளும், சுழல் கலாச்சார கொள்கைகளும் மற்றும் மிக முக்கியமான தன முனைப்பான குறிக்கோள் (ego), பகட்டு மரியாதை தேடல் முனைப்பு போன்ற உளவியல் சார்ந்த விடயங்களும் காரணங்கள் என சொல்ல முடியும். இவ்வாறான இந்த தலைமுறை இடைவெளி குடும்பங்களை தாண்டி, குழுக்களைத்தாண்டி,  சமுதாயங்களைத்தாண்டி, இலக்கிய சூழலில் எவ்வாறான தாக்கங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தால் அதன் விளைவுகள் வாய்விட்டு பேசக்கூடியவை. 

நான் ஏற்கனவே மேலே கூறியதைப்போல இரண்டு மூன்று தலைமுறை படைப்பாளிகள் ஒரே தளத்தில் நின்று இலக்கியங்களை படைக்கும் பொழுது, இங்கு உருவாகும் சில பல தலைமுறை இடைவெளி தொடர்பான முரண்பாட்டு விடயங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அந்தவகையிலே, ஈழத்து தமிழ் இலக்கிய உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முது பெரும் இலக்கிய ஜாம்பவான்களோடு அதே தளத்தில் புதிதாக எழுதுகோல்களுடன் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகள் எவ்வாறு ஒருவரை ஒருவர் முகம் கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விடயம். முதலிலே, இந்த மூத்த இலக்கியவாதிகளை இந்த இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் மனங்களிலும் தலைகளிலும் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதற்குரிய காரணங்களை இந்த இளம் படைப்பாளிகள் சிறப்பாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஒரு விடயத்திலே தேர்ச்சி, அனுபவம் மிக்கவர்கள் எப்பொழுதுமே அந்த விடத்திற்குள் வரும் புதுமுகங்களுக்கு நல்ல வழிகாட்டிகள் என்பதாகும். இரண்டாவது, இந்த தேர்ச்சி மிக்கவர்களிடமிருந்து இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ளவேண்டிய விடயங்கள் ஏராளமாக இருக்கிறது என்பதாகும். மூன்றாவதாக, இந்த இளம் தலைமுறையினரால் நமது பெரியவர்களை புறம்தள்ளிவிட்டு தனித்து இலக்கிய கிரீடத்தை தலையில் சுமந்துகொள்ள அறிவு, அனுபவம் ரீதியாக தகுதியானவர்கள் அல்ல என்பதாகும். அடுத்து, மூத்த படைப்பாளிகள் அவர்களின் முன்னோர்களிடமிருந்து எடுத்துக்கொண்டுவந்த இந்த இலக்கிய பொறுப்பை இந்த தலைமுறையினர் மூலமாகவே அடுத்த சந்ததியினரிற்கு கடத்த முடியும் என்கின்ற “பொறுப்பு கடத்தல்“ சரியாக நடைபெற இந்த மூத்த எழுத்தாளர்கள்தான் மிக முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள் என்பதாகும். இவ்வாறன பல உண்மையான விடயங்களை இந்த இளம் தலைமுறையினர் சரியாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.

ஆகவே, இந்த மூத்த படைப்பாளிகளை இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் வழிகாட்டிகளாக, குருக்களாக, முன்னோடிகளாக, பல்கலைக் கழகங்களாக ஏற்று போற்றுகிறார்கள். மதிக்கிறார்கள். வணங்குகிறார்கள். அந்தவகையிலே இளம் எழுத்தாளர்கள் தங்கள் மூத்தவர்கள் மட்டில் சரியான புரிதல்களை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியும். ஆனாலும், இது எந்தளவிற்கு நூறு வீதம் உண்மை என்பதையும் நாம் சற்று எண்ணிப்பார்த்தல் அவசியம். இந்த மனநிலையில் இல்லாத சில இளம் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது கைகளில் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லையே. இவ்வாறு சில இளம் எழுத்தாளர்கள் ஏன் தங்கள் மூத்த படைப்பாளிகளை மதிப்பதில்லை, கொண்டாடுவதில்லை என்றால் அதற்கும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று சிறியவர்களின் குழந்தை செருக்கு, அவர்களின் குறுகிய மட்டுப்படுத்தப் பட்ட மனநிலை என அடிப்படையான இரு காரணங்களைச் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் மீதான சில மூத்தவர்களின் தவறான போக்குகளும் நடத்தைகளும் காரணமாக அமைந்து விடுகின்றன. 

பொதுவாகவே, அண்மைக் காலங்களில் இந்த சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான சில முரண்பாடுகள் நா தொடங்கி முகப் புத்தகம் வரை விரிந்து கிடக்கின்றன. பெர்யவர்கள் இளம் படைப்பாளிகளை குறை சொல்வதும், இவர்கள் பெரியவர்களை பொல்லாப்பு பேசுவதும் சகஜமாகிப் போன ஒன்று. இந்த முரண்பாட்டு மோதல்களிற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அதற்கு இருவரும்தான் காரணம் என அடித்து கூறமுடியும். இன்று வரை பல மூத்த எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களில் அதிகம் நாட்டம் கொண்டு வாசிப்பதும் இல்லை. அதேபோல, சிறுசுகளும் தங்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிப்பதுவும், அவர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. இதுவே இந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்று சொல்லமுடியும். அதில் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. ஒரு மூத்த படைப்பாளி தன்னை அடையாள படுத்திக்கொள்ள முன்பெல்லாம் பல வருடங்கள் எடுத்தன. பல கஷ்டங்களை முகம்கொள்ள வேண்டி இருந்தன. சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், இன்றைய இளசுகள் வெறும் குறுகிய காலங்களில் தங்களை வேகமாக அடையாள படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இன்று அவர்களிற்கு தேவையான அளவு வேகமான சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றன. எனவே, தன்னை அடையாள படுத்திக்கொள்ள பத்து வருடங்கள் பல கஸ்ரங்களை பொறுத்திருந்த ஒரு மூத்த படைப்பாளி வெறும் சில மாதங்களிலேயே தன்னை ஒரு கவிஞனாக அடையாள படுத்திக்கொள்ளும் ஒரு இளம் படைப்பாளியை எப்படி நோக்குவார் என்பது கஷ்டமான விடயம்தான். இதை நான் உளவியல் அடிப்படியில் சொல்கிறேன். 


அதேபோல, நான் வெறும் ஒரே வருடத்தில் பல நூல்களை போட்டிருக்கிறேன், பொதுவாக அனைத்து ஊடகங்களும் என்னை அடையாள படுத்தி விட்டன, இலக்கிய உலகத்தில் இப்பொழுது என்னை பொதுவாக அனைவரிற்கும் தெரிகிறது. அப்படியெனில் இந்த மூத்த படைப்பாளிகள் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என ஒரு இளம் படைப்பாளி சொன்னதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இதையும் தாண்டி வயதெல்லை கடந்து நோக்குகிற பொழுது இலக்கியம் என்பதில் மூத்தவர்களும் இளையவர்களும் சமம்தானே. அப்படியாயின் தங்கள் எழுத்துக்கள் மற்றவருடைய எழுத்துக்களுடன் ஒப்பீடு செய்யும் பொழுது தரமிக்கவையாக இருக்காவிடில் இங்கு ஏற்றத்தாழ்வுகள் தானாகவே வந்துவிடும். இதை தவறு என்றும் நான் சொல்வதாக இல்லை. படைப்புக்கள் வயதைத்தாண்டியும் தரம் என்று வருகிற பொழுது இயல்பாகவே இந்த இரு தலைமுறையினரிற்கும் இடையில் போட்டித்தன்மை வந்துவிடுகிறது. தரத்தைப் பற்றி பேசுகிறபொழுது வயது, தலைமுறை இடைவெளி என்பன காணாமல் போய் விடுகின்றன. போய்விட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சிறியவர்கள் இடையில் சில மனக்கசப்புக்கள் வந்துவிடுகின்றன (எழுத்தாளனும் ஒரு சராசரி மனிதன் தானே). இவ்வாறான தரம் குறைந்த எழுத்துக்களை எப்பொழுதுமே எவருமே கொண்டாடுவதில்லை. எனவே, சிறியவர்களோ பெரியவர்களோ தரமான படைப்புக்களை படிக்கும்பொழுது மிகவும் இலகுவாக அவர் அடையாள படுத்தப்பட்டுவிடுகிறார். என்னைபொறுத்த மட்டில், எழுத்திலே, "தரமான சரக்கிருப்பவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.."

ஆக, இந்த இளம் தலைமுறையினர் சில விடயங்களை மிகச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்திலே பல விடயங்களைக் கற்பதற்கு மிகவும் பொருத்தமான புத்தகம் எது என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயமாக அது ஒவ்வொரு வாழும் மூத்த இலக்கியவாதிகள்தான் என்று சொல்வேன். இவர்களை விலக்கி, இலக்கியத்தில் அறிவும் அனுபவமும் பெற நினைப்பது சிறியவர்களின் முட்டாள்த்தனம் என்றே சொல்லத் தோணுகிறது. இந்த மூத்த படைப்பாளிகளை நாம் அவர்களின் காலங்களுக்குள் எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்தி எம்மை வளர்த்துக்கொள்வதே ஒரு இளம் படைப்பாளியின் புத்திசாலித்தனம் என நான் சொல்வேன். அத்தோடு, இன்னுமொரு விடயத்தையும் மிகவும் வெளிப்படையாக சொல்லியே ஆகவேண்டும். இந்த நமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளிகளை பகைத்து எம்மால் இலக்கிய உலகத்தில் மேலே வரமுடியாது என்பதையும் வெளிப்படையாக சிறியவர்கள் புரிந்தே கொள்ளவேண்டும். (இதனாலோ என்னவோ, சில இளம் படைப்பாளிகள் பல மூத்த இலக்கியவாதிகளிற்கு குடை பிடிக்கிறார்கள், இடுப்பு சொறிகிறார்கள்..) காரணம், ஒரு மூத்த இலக்கியவாதி ஒரு சாதாரண ஒருவரை இவர் ஒரு நல்ல கவிஞர் என்று சொன்னால் இலக்கிய உலகம் அவரை முளுமனதாகவே ஏற்று போற்றுகிறது. அதேபோல, ஒரு நல்ல இளம் கவிஞரை ஒரு மூத்த இலக்கியவாதி இவர் நல்ல கவிஞர் இல்லை என்று சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். 

அதேபோல, எமது மதிப்பிற்குரிய மூத்த இலக்கிய ஜாம்பவான்களும் சிறியவர்களின் ஏக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் எழுதினாலும் பேசினாதும் சிறியவர்கள் சிறியவர்கள்தானே? சிறியவர்களை வளர்த்துவிடவேண்டிய தார்மீக சமூகப் பொறுப்பு மூத்த படைப்பாளிகள் ஒவ்வொருவரின் தோள்களிலும் இருக்கிறது என்பது எமக்கு தெரியும். ஆகவே இந்த மூத்தவர்கள் இந்த சமூக வரலாற்று தவறினை இளைக்க விரும்பமாட்டார்கள் என்பது திண்ணம். இந்த இலக்கியத்தை அடுத்த சந்ததியினரிற்கு மூத்த படைப்பாளிகள் கொண்டுசெல்ல விரும்பினால் அது இந்த இளம் தலைமுறை படைப்பாளிகளால் மட்டுமே முடியும்.  அத்தோடு, சிறியவர்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிக்கவேண்டியது கட்டாயக் கடமை. அதேபோல, மூத்தவர்களும் இந்த இளையவர்களின் படைப்புக்களை வாசித்து அவர்களை இனம்கண்டு தோள் கொடுக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தவிர்த்து இளம் படைப்பாளிகளை அவர்களின் படைப்பினைக்கொண்டு மட்டும் அவர்களை அடையாள படுத்துவதை எப்பொழுதும் நேர்மையாக செய்தல் மிகவும் அவசியமான ஒன்று ஆகும். அதேபோல, தங்கள் எழுத்துக்களை கோவைகளிலும், கைகளிலும், கடதாசிகளிலும், வலைப் பூக்களிலும், முகப் புத்தகங்களிலும் வைத்துக்கொண்டு மூத்த படைப்பாளிகளின் ஒரு சிறிய தட்டிக்கொடுப்பிற்காய் காத்துக்கிடக்கும் எத்தனையோ புதுமுக படைப்பாளிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத மூத்தவர்களையும் அதேபோல தங்கள் நேரத்தை செலவழித்து, நின்று அவர்களை தட்டிக்கொடுத்து போகும் மூத்தவர்களையும் நான் தினம் தினம் பார்க்கிறேன். இவை அனைத்தும் அவரவர் மேல் திணிக்கப் பட்டிருக்கின்ற இலக்கியக் கடமைகள் என்பதை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது. 

இறுதியாக, இவ்வாறான சில சிறிய சிறிய விடயங்களே இந்த இலக்கிய தலைமுறை இடைவெளியை அகலப் படுத்துகிறது. இவ்வாறன சின்ன சின்ன விடயங்களை முகம் கொள்ள முடியாமல் எழுத்தும் வேண்டாம் இந்த இலக்கியமும் வேண்டாம் என ஒதுங்கியவர்களையும் ஓடியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அத்தோடு, இந்த சிறு சிறு விடயங்களினால் மன உளைச்சலோடு வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல புதியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறான பயம் பொருந்திய, மணி கட்ட துணிவு இல்லாத சில இளைய படைப்பாளிகளுக்காகவே இந்த கட்டுரை. பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி மற்றவரின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் இந்த இடைவெளிச் சிக்கல் மாயமாக மறைந்துவிடும். நிறைகளை கூற மனமில்லாத படைப்பாளிகள் மாற்றாரின் படைப்பின் மேல் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதும் ஆரோக்கியமான தலைமுறை இடைவெளியை உருவாக்காது. ஆக, இது எங்கள் இலக்கியம், எங்கள் மொழி, எங்கள் உலகம். நாங்களே எங்களை வளர்த்துக்கொள்தல் அவசியம். அதற்காக வானிலிருந்து எவருமே குதிக்கப்போவதில்லை. எங்கள் மூச்செல்லாம் இலக்கியத்தின் மேலும், படைப்புக்களின் மேலுமே இருக்கவேண்டுமே தவிர தனிப்பட்ட மனித ஆசா பாசங்களின் அடிப்படையில் அமைதல் கூடாது. இந்த கட்டுரையின் நோக்கத்தை இக்கட்டுரை கடைசி வரை நிறைவேற்றி இருக்கிறதா என்பதை விட இக்கருத்துக்களை கருத்துக்களாகவே எடுத்துகொள்தல் இக்கட்டுரைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு என நினைக்கிறேன்.

இம்மாத ஜீவநதியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. நன்றி ஜீவநதி.

.

1 comment:

Anonymous said...

இது புலம்பல் அல்ல,புதையல்.பெயர் மாற்றம் செய்யமுடியுமா என்று பாருங்கள்.இது காலத்தால் பெரியவனின்,கவித்துவ ஆளுமையால் கற்றுகுட்டி ஒருவனின் கனிவான வேண்டுகோள்.நான் முன்னாள் காவல்துறையினன் என்ற வகையில் "கருணை மனு"என்று கூட கவனத்தில் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.

Popular Posts