
அந்த வகையிலே எனக்கு இந்த 2011 மிகவும் முக்கியமான வருடம் என்றே கூற முடியும். பல விடயங்களை கொடுத்ததும் எடுத்ததும் இந்த 2011 தான். எடுத்தவைகளைப் பற்றி பேசுவது நன்மையளிக்கப் போவதில்லை என்பதாலும் என்னை வருத்தமடையச் செய்யும் என்பதாலும் அதை விடுத்து மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை மட்டும் பேசலாம் என நினைக்கிறேன். (மொக்கையப் போடுறான் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்...ஹி ஹி ஹி )
எனது எழுத்துக் கனவு என்பது நீண்டநாள் வயதைக் கொண்டது. ஆனால் எனது எழுத்துப் பயணம் என்பது மிகவும் குறுகிய காலத்தை கடந்து செல்வது. என்னையும் எனது கவிதைகளையும் 2011 ஏ இலக்கிய உலகத்திற்கு அறிமுகப் படுத்தியது என்பதுதான் இந்த 2011 எனக்கு மிகவும் முக்கியமான வருடம் என சொல்லவேண்டி வந்ததற்கு காரணம். நீண்டநாட்களாக எனது கணினியிலும், மட்டைக் கொவைகளிலும் தேங்கிக் கிடந்த கவிதைகளை தூசு தட்டி வெளியே எடுத்து, எனது அந்த கிறுக்கல்கள் கவிதைகள் தான் என்கின்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த இந்த 2011 ஐ எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்?
எனது முதல் கவிதைத் தொகுப்பான "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற கவிதை நூலையும் இரண்டாவதாக "வேர்களும் பூக்காட்டும்" எனப்படும் உளவியல் நூலையும் நான் வெளியிட்டது இந்த வருடத்தில் தான். இந்த இரண்டு நூல்களிற்கும் பிள்ளையார் சுழி போட்டு எனது இந்த இலக்கிய பயணத்தை இந்த வருடம் இனிதே ஆரம்பித்து வைத்த அந்த நல்ல மனிதர்களை மறந்து விட முடியாது. கலைஞர் பாலச்சந்திரன், எழுத்தாளர் சிவகரன், தமிழ் மணி அகளங்கன், கவிஞர் மன்னார் மணி, அருட்திரு செபஸ்டியன் அடிகளார் மற்றும் அன்பிற்குரிய A.R.V.லோஷன் அண்ணா போன்றவர்களே அவர்கள். இவர்களுக்கும் நான் என்றும் கடமைப் பட்டே இருக்கிறேன். ஆக, இந்த இரண்டு நூல்களின் வெளியீட்டின் பின்னரே 'பி.அமல்ராஜ்' என்கின்ற ஒரு நபரை கொஞ்சம் அதிகமான மனிதர்களுக்கு தெரிய வந்தது. மிகப் பரந்த இலக்கிய உலகத்தில் எனக்கும் ஒரு சிறு இடத்தையும் ஒரு மிகச் சிறிய பெயரையும் பெற்றுத் தந்த இந்த 2011 ஐ மறக்க முடியாது.
இந்த இலக்கிய உலகத்தில் எனக்கென்று ஒரு சிறு இடத்தைத் தவிர பல இலக்கிய நண்பர்களையும் பல இலக்கிய மேதாவிகளின் உறவுகளையும் பெற்றுத்தந்த இந்த வருடம் என்றும் எனது மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கும்.
இதை தவிர்த்து அடுத்து மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தேறியதும் இந்த வருடம் தான். எனக்கு மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பம் வரை இந்த பதிவுலகம் பற்றி எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. தற்செயலாக ஒருமுறை லோஷன் அண்ணாவின் வலைப் பூவிற்கு சென்று பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் அவருடைய அந்த வலைப்பூவில் நான் முதல் முதல் வாசித்த பதிவு 'நல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்???' என்கின்ற வெறித்தனமான ஒரு பதிவு. எனக்கு பதிவுலகில் ஆரம்பமே அமர்களமாய் இருக்கிறதே என அந்த முழு பதிவையும் வாசித்து விட்டு அட பதிவுலகத்திற்குள் இத்தனை ப்ராப்ளமா என எண்ணிக்கொண்டு ஒரு பெருமூச்சு வேறு விட்ட பின் சரி நாமும் எழுதலாம் என எண்ணி ஆரம்பித்ததே இந்த புலம்பல் என்னும் எனது வலைப்பூ. அப்பொழுதெல்லாம் இந்த பதிவர்களுக்கிடையில் நடைபெறும் சர்ச்சைகளை லோஷனின் களத்தினூடாக நான் அதிகம் ரசித்ததுண்டு. (அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த லோஷனின் களத்தைத் தவிர வேறு எவரின் வலைப்பூவும் அறிமுகமில்லை..) என்னமாயா அடிச்சுக் கொள்ளுறாங்க என முகத்தை நீட்டியபடிதான் எனது இந்த பதிவுலகத்துள் என்னால் நுழைய முடிந்தது.
இலக்கிய உலகத்தின் உள் வெளிக் குத்துக்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தமையால் இந்த பதிவுலக முரண்பாடுகள் எனக்கு அந்தளவிற்கு ஆச்சரியமாய் தெரியவில்லை. இவ்வாறு இந்த பதிவுலகத்தையும் அறிமுகப் படுத்தியது இந்த 2011 தான். ஏதோ அன்றிலிருந்து மனதில் பட்டதை அப்பப்போ எனது வலைப்பூவில் பதிவதுண்டு. அப்பொழுதெல்லாம் (இப்பொழுதும் தான்) மனதில் படும் சகல உணர்வுகளையும் கொட்டிவிடுவதற்கு ஒரு நல்ல தொட்டியாகவே நான் எனது வலைப்பூவை பயன்படுத்துகிறேன். (சத்தியமா பேர், புகழ், சிறந்த வலைப்பதிவர் என்கின்ற மகுடம் என எதற்காகவும் நான் பதிவிடுவதில்லேங்க... அட சத்தியமா.. அப்பிடி முயற்சித்தாலும் நடக்குமாங்க... ஐயோ ஐயோ..)
பதிவுலக ஆரம்பமே இப்படி இருக்க, இன்றுவரை எனக்கு இந்த பதிவுலக உள்குத்து வெளிக்குத்துக்கள் புரியவே இல்லேங்க.. (கொய்யாலே, இப்பதான் 77 பதிவு போட்டிருக்காய், அதற்குள்ள இதெல்லாம் தெரியணுமாக்கும் என நீங்கள் நாக்கைக் கடிப்பதும் புரிகிறது..) சரி அதை விடுத்து, இவ்வாறு இந்த வருடம் இந்த அருமையான வலைப்பூவையும் பதிவுலகத்தையும் காட்டியிருக்கிறது என்பது சந்தோசமான விடயம்.
அதன் பின்னர், என்னால் அதிகமான பதிவர்களின் வலைப்பூக்களை சென்று பார்க்க முடிந்ததும் அவர்களுடனான நட்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்ததும் இந்த வருடத்தின் சாதனை என்று கூட சொல்ல முடியும். அவ்வாறு நான் தொடரும் அந்த பதிவர்களின் வலைப்பூக்கள் ஏராளம். எனது வலைப்பூவையும் சில பிரபல பதிவர்கள் வாசிக்கிறார்கள் என்பது எனக்கு பெருமையே. அதிலும் ஈழவயலில் என்னை சேர்த்துக்கொள்ள நிரூபனிற்கு வந்த துணிவை என்னால் இன்றுவரை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எனது பதிவுகளின் மேல் அவர் கொண்ட நம்பிக்கையும், என்மேல் கொண்ட நம்பிக்கையுமே அவரை இப்படி ஒரு விடயம் செய்வதற்கு தூண்டியிருக்கும் என எண்ணுகின்றேன். அதற்காக அவரிற்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
ஆக, எனது எழுத்துப் பயணத்தின் மிக முக்கிய கட்டம் இந்த 2011 இலேயே நிகழ்ந்திருக்கிறது. எனது எழுத்துக்களை இலக்கியம், பதிவுலகம் என இரு பெரும் தளங்களில் கொண்டு போய் சேர்த்த இந்த வருடம் எனக்கு என்றுமே பொன்னான வருடமே. இந்த கடந்த கால மீட்டல் எனக்கு மிகவும் ஒரு மன சந்தோசத்தை கொடுத்திருந்தாலும் இவற்றை அடுத்த வருடம் காப்பாற்றியாக வேண்டும் என்பது மனதளவில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் ஆகும்.
பி.கு. இந்த பதிவு எவரையும் புகழ், துதி பாடும் பதிவு என யாராவது மக்கள்ஸ் எடுத்துக்கொண்டால்.. ப்ளீஸ் அப்பிடி எடுத்துக் கொள்ளாதேங்கோ... வெறுமனே இது எனது 2011 பயணத்தை மீட்டிப் பார்க்கும் பொழுது ஆங்காங்கே கொட்டிய உணர்வுகளை பதிவாக்கியிருக்கிறேன். அவ்வளவுதான். ஓகே....??? அது.
எனது நண்பர்கள், உறவுகள், இலக்கிய நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், வாசக நண்பர்கள் அனைவரிற்கும் பிறக்கப்போகும் புத்தாண்டு சகல சௌபாக்கியங்களும் கொடுக்கும் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கின்றேன்.
10 comments:
வாழ்த்துக்கள் அமல்...! தொடர்ந்து எழுதுங்கள்.
பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் அண்ணா,
இவ் வருடத்தில் நீங்கள் கடந்து வந்த எழுத்துலகப் பாதையினை மீட்டியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்!
இதனை விட புலரப் போகும் புதிய வருடமும் தங்களுக்கு இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
வணக்கம் அமல்..
கடந்து வந்த பாதையை மீட்டியிருக்கிறீங்க.ஆனா உங்க எழுத்துக்களை இப்போதான் படிக்க தொடங்கி இருக்கேன்.. !!
வாழ்த்துக்கள்..!!
//வாழ்த்துக்கள் அமல்...! தொடர்ந்து எழுதுங்கள்.//
நன்றி மருதமூரான்.
//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
நன்றி மகேந்திரன் ஐயா. உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.
நன்றி நிரூபன். உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.
//வணக்கம் அமல்..
கடந்து வந்த பாதையை மீட்டியிருக்கிறீங்க.ஆனா உங்க எழுத்துக்களை இப்போதான் படிக்க தொடங்கி இருக்கேன்.. !!
வாழ்த்துக்கள்..!!//
நன்றி காட்டான் ஐயா, தொடர்ந்தும் எனது எழுத்துக்களையும் வாசித்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
முதல் முறை வருகிறேன் இனி தொடர்ந்து வருகிறேன் மாப்ள!
ரொம்ப ரொம்ப நன்றி விக்கி அண்ணா..
Post a Comment