இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எனது அம்மாவிற்காக தூரத்தில் இருந்துகொண்டு அனுப்பும் எனது பிறந்தநாள் பரிசு..
அப்பாவைப்போல்
எனக்கும்
நீதான்
நிரந்தர நாயகி.
இன்று
உனக்குகொடுப்பதற்கு
எதுவும் இல்லை
நீ கொடுத்த
மூச்சையும் பேச்சையும் தவிர..
எனக்கு
மூச்சூதியவள் நீ..
அப்படியெனின்
இந்த ஆதாமிற்கு
நீ தானே கடவுள்.
உன்னை உரசிப்பார்த்தேன்
உணர்வு கிடைத்தது.
நீ வாயசைத்தாய்
நான் பேசினேன்.
நான் சிரிக்க
நீ அழுதாய்
காரணம் கேட்டபோது
நீ எண்ட செல்லம் என்றாய்..
உன்
கைபிடித்து நடந்தேன்
கால்கள்
பூபெய்தியது..
உன்னை
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்
வானம் அருகில் தெரிந்தது.
நீ
அடிக்கும்போதெல்லாம்
நான் அழுவேன்.
என்னில்தான் தவறு,
ஆனால்
இறுதியில்
இருவரும் அழுவோம்..
என்மேல்கொண்ட
உன் பயணம்
நீண்டது..
என்னை
உண்டாக்கியது முதல்
உருவாக்கியது வரை.
என்னை உச்சரி
என்றாய்,
நான்
வாசித்தேன்,
என்
விரல்களில் பிறந்தன
கவிதைகள்..
உனது
சிரிப்பு மட்டும்தான்
ஏனோ
இன்றும்
எனக்கு
மாறா மந்திரம்.
இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேன்.
இருந்தும்,
பிறந்தநாள் தர்மம்
எதையும் கொடுத்தே ஆகவேண்டும்.
அதற்காய்
உனக்கு
மூன்று பரிசுகள்
என்னிடமிருந்து..
ஒன்று 'நான்'
இரண்டு 'நான்'
மூன்றும் 'நான்'!!!
.
3 comments:
அருமை! அம்மாவுக்கு இணை எவருமே இல்லை.
அம்மாவின் அன்புக்கு முன் எதுவும் பெரிது இல்லை
அம்மாவை விட இந்த உலகத்தில் அழகான சிற்பம் யாருமே இல்லை
இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேன்.
Post a Comment