
அதிகம் பேசாமல் விடயத்திற்கு வருகிறேன். ஒரு மாணவன் தனது இரண்டு முக்கிய கேள்விகளை அவனுடைய ஆசிரியரிடம் கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டான். ஆசிரியரும் அவன் கேட்க இருக்கும் வினாக்களுக்கு விடையளிக்க தயாரானார்.
முதலாவது கேள்வி, "காதல் என்றால் என்ன?"
ஆசிரியர், பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"உன்னுடைய கேள்விக்கு பதில் அளிப்பதாயின் நான் சொல்வதை நீ செய்யவேண்டியிருக்கும். அதோ தெரிகிறதே நெல் வயல். அந்த நெல் வயலில் போய் அவ் நெற் செடிகளில் மிகவும் நீளமான செடியை பிடுங்கிக் கொண்டு வா. ஆனால் அதை செய்யும் பொழுது நீ இரண்டு நிபந்தனைகளை கருத்தில் கொள்தல் வேண்டும். ஒன்று, இவ்வயலின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் போகும் வரை நீ ஒருமுறைதான் பயணிக்க முடியும். இரண்டாவது, நீ செடிகளைக் கடந்துபோகும் பொழுது மீண்டும் பின் நோக்கி வந்து எந்த செடியையும் பறிக்க முடியாது. அவ்வளவுதான்.."
ஆசிரியர் கூறியதை செய்வதற்க்காக அந்த வயல் நோக்கி புறப்பட்டான் மாணவன். வயலினுள் இறங்கி நடக்கும் பொழுது கண்ணில் ஒரு உயர்ந்த செடி தென்படவே அருகில் சென்று பறிக்க முற்படும் பொழுது மனம் சொன்னது இன்னும் அதிகம் செடிகள் இருக்கின்றனவே, இதை விட உயரமான செடி தொடர்ந்து நடக்கும் பொழுது கண்களில் தென்படலாம் என.. ஆக அவனை இன்னும் உயரமான செடி ஒன்று காத்துக்கொண்டு இருக்கலாம் என எண்ணியபடி தொடர்ந்தும் நடந்தான். இவ்வாறாக வயலின் அரைப்பகுதியை கடந்த அவன் நான் இப்பொழுது பார்க்கும் செடிகள் எல்லாம் முன்னர் பார்த்த செடிகளை விட உயரம் குறைந்த செடிகளாகவே இருக்கின்றனவே எனக்கண்டான். அதையும் கடந்து இன்னும் முன்னேறிப் போகப் போக அவனால் முன்னர் பார்த்த அந்த உயர்ந்த செடிகளை விட உயரமான செடிகள் கண்களில் படவேயில்லை. ஆக, அவனது வயலின் எல்லையைக் கடந்த பொழுது அவன் கையில் எந்த செடிகளும் இருக்கவில்லை. எனவே, வெறும் கையேடு ஆசிரியரிடம் திரும்பி வந்தான் மாணவன்.
ஆசிரியரிடம் வெறும் கையேடு வந்து நின்றதும் ஆசிரியர் ஆரம்பித்தார்.."இதுதான் காதல்!! நீ எப்பொழுதும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டபடி ஒருவரை விட ஒரு படி மேலான இன்னொருவரே தேவை என தேடிக்கொண்டிருக்கிறாய். .. இறுதியில், பயணம் முடிகையில், நீ தேடிய அந்த நபரை நீ இழந்துவிட்டதை உணர்கிறாய்...." என பதில் அளித்தார் அந்த ஆசிரியர்.
சபாஷ் டீச்சர்!! இதை விட காதலிற்கு என்ன விளக்கம் வேண்டும்?? இப்பொழுது மாணவனது இரண்டாவது கேள்விக்கு சந்தர்ப்பம்.
"டீச்சர், அப்படியெனின் "திருமணம்" என்றால் என்ன? அந்த ஆசிரியரிடம் மாணவன் கேட்டான். அதற்கு தனது பாணியிலே ஆசிரியர் பதிலைத் தொடர்ந்தார்.
"இப்பொழுது இதோ தெரிகிறதே இந்த பூசணிக்காய்த் தோட்டம். அந்த தோட்டத்தினுள் சென்று அந்த தோட்டத்திலேயே விளைந்திருக்கின்ற மிகவும் பெரிய பூசணிக்காயை பறித்துக்கொண்டு வா. திரும்பவும் மேலே சொன்ன அந்த இரண்டு நிபந்தனைகளையும் நீ ஏற்கவேண்டும். ஒன்று, ஒருமுறை மட்டுமே நீ அந்த தோட்டத்தினூடாக பயணிக்க முடியும். இரண்டு, ஒன்றை கடந்து சென்ற பின் மீண்டும் திரும்பி, கடந்து போன எந்த பூசணியையும் நீ பறிக்க முடியாது. புரிகிறதா.." கூறி அனுப்பினார் ஆசிரியர்.

"இம்முறை நீ ஒரு பூசணிக்காயோடு வந்திருக்கிறாய். நீ பாதிவழி போனதும் கிடைத்த ஒரு நடுத்தர அளவான பூசணியை பறித்துக்கொண்டாய். அதாவது இதை விட பெரிய பூசணி கிடைக்காமல் போகலாம் என உணர்ந்து, இது போதும் என திருப்திப் பட்டு இதை பறித்துக்கொண்டாய். இப்பொழுது நீ பார்த்தவரை இந்த பூசணிதான் பெரியது, இது எனக்கு போதும் என நம்பியதனாலேயே இதை பறிக்க உனது மனம் விரும்பியது. இறுதியில் உனக்கு ஆகிலும் சிறியதும் இல்லாமல் ஆகிலும் பெரியதும் இல்லாமல் உனக்கு திருப்தியான அளவில் ஒரு பூசணி கிடைத்தது.. மகிழ்கிறாய். இதுதான் திருமணம்..." என இலாவகரமாக கூறிமுடித்தார் அந்த ஆசிரியர்.
யப்பா.. எப்படியொரு விளக்கம். ஏதோ என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆசிரியரின் டீலிங் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கே எப்படி? இதுதானே உண்மை?? யதார்த்தமான உதாரணமும் பதிலும். நாம் எப்பொழுதும் அதிகபட்சமான விடயங்களுக்கு ஆசைப்பட்டே எமக்கு போதுமான விடயங்களை இழந்து விடுகின்றோம். இது நமது இளசுகளிற்கு ஒரு நல்ல பாடம் என நினைக்கின்றேன்.
.