கெட்டவளா நான்?
கேட்காமல்
கொட்டிவிடாதீர்கள்.
ஒரு வாய்
கஞ்சி கொடுத்து
கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்கள்
நல்லவளாய் இருக்கிறேன்.
போராட்டம் என்று
தீ மூட்டிப்போனவன்
திரும்பவே இல்லையே
இன்றுவரை..
போராட்டத்தில்
அவன் மரித்தான்.
பசியோடு
நாங்கள் மரிக்கிறோம்.
தேசத்திற்காய்
அவன் எரிந்தான் - தினம்
தேகத்திற்காய்
நான் எரிகிறேன்.
எனது
மூன்றும்
முனங்கியபடி
மூலையில் இருக்கிறதே
பசியோடு,
யாரறிவார்?
அவர்கள் என்னை
அசிங்கம் செய்தால்தான்
இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள்.
என்னமோ,
மானத்தை விட - என்
மக்கள் முக்கியம்
எனக்கு!
நானும் என்ன
காமத்திற்காகவா
காடையர்களை சுமக்கிறேன்?
என்
உணர்வுகள் செத்து
காலம் கடந்து போச்சு,
சுகமும் சூம்பி
சூடில்லாமல் போச்சு.
மரத்து விட்டதாய்
உரத்து ஏசுகிறார்கள்.
நீங்களே சொல்லுங்கள்,
காமத்திற்காகவா - நான்
கட்டில் விரிக்கிறேன்??
வெறும் காசிற்குத்தானே..
எல்லை மீறி
மழுவர் போகையில்
விட்டுவிட நினைப்பேன் - வலி
கொட்டிவிடும் வேளைகளில்..
இருந்தும்,
கொட்டும் பஞ்சத்தில்
குழந்தைகள் பாவமே??
சிலர் அஞ்சுவார்கள்
சிலர் மிஞ்சுவார்கள்
அதற்குள்ளும் சிலர்
கொஞ்சி கொஞ்சி மெச்சுவார்கள்..
எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...
நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.
நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??
பி.கு. ஜீவநதி நவம்பர் மாத இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை. பிரசுரித்த ஆசிரியர் பரணீதரனிற்கும் துணை ஆசிரியர் துஷியந்தனிற்கும் எனது நன்றிகள்.
10 comments:
போராளிகளின் குடும்ப நிலையை யதார்த்தத்தை உரத்துச்சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் வீர வசனங்களும் வெற்றுப்பேச்சுக்களும் பேசிக்கொண்டிருக்கும் யாரும் இவர்களின் நிலைமாற எதுவும் செய்வதாக இல்லை.
வேதனையான கவிதை
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html
அருமையான கவிதை இன்னும் பல படைப்புகளை
தமிழில் பதிவு செய்ய வாழ்த்துகள்.
//எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.//
அருமையான கோர்வையாக வந்துள்ளது கவிதை... சிறப்பான சிந்தனைகள்... எழுத்தாக்கம் அருமை அமல்... வாழ்த்துக்கள்
Extremely super my dear friend........
வணக்கம் அமல் அண்ணா,
காலத்தின் அவலங்களால் கண் முன்னே துன்பப்படும் உறவுகளின் நிலையினையும் அதற்கான காரணத்தினையும் வலிகளுடன் கலந்த எம் உணர்வுகளிற்குச் சாட்டையடி கொடுக்கும் சொற்களால் கவிதையாக வடித்துள்ளீர்கள்.
அமல் ! அசத்தலான தலைப்பில் அருமையான சிந்தனை ஓட்டம் கொண்ட ஒரு சிறப்பான ஒரு கவி.
வரிகள் ஒவ்வொன்றும் யதார்த்தம் பேசும் வரிகளாகவே எனக்குள் பதிந்தன ........வாழ்த்துக்கள் .......
அவர்கள் என்னை
அசிங்கம் செய்தால்தான்
இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள்..........
அருமையான கவிதை அண்ணா...
அருமையான கவிதை அண்ணா.. கற்பனை வரிகள் அழகானவையே....
ஆனாலும் ஏதோ ஒரு நெருடல்....
செய்யும் தப்புக்கு நியாயம் பேசுவது போல்...... .. ..
வார்த்தைகள் ஏதும் இல்லை நான் பாராட்ட
ஆனால்,
சில துளி நீர் கன்னத்தை முத்தமிட்டு சென்றது
Post a Comment