அவள் போகட்டும்.
விட்டுவிடு..
அவள்
வந்ததால்
போன சந்தோசம்
அவள்
போவதில்
வரட்டுமே..
நீ அடிக்கடி சொல்வாய்,
மற்றவரோடு மட்டும்
நன்றாக பேசுகிறாள்,
என்னை மட்டும்
நன்றாக ஏசுகிறாள்..
அவள் போகட்டும்.
விட்டுவிடு..
மனமே,
நீ அழுவதால்
உனக்கு - நான்
ஆறுதல்தான் சொல்ல முடியும்
அவளையா கொல்ல முடியும்??
அவள் உன்னைத்தான்
புன்னகைத்தாள்
நீ - காதலித்தாய்.
இப்போ -
இன்னொருவனை புன்னகைக்கிறாள்
நீ - விட்டு விடுகிறாய்.
உனது வியாபாரத்திலும் - ஓர்
தர்மம் இருக்கிறது பார்..
உன்னை - நீ
ஏமாற்றுகிறாய் என்றா
அஞ்சுகிறாய்?
மனமே,
அப்படியெனின்
அவள்
தன்னையும்
உன்னையும்
சேர்த்தல்லவா ஏமாற்றிப்போகிறாள்??
மனமே,
நீ ஒரு கூடு,
அதில் - நேற்று
இவளொருத்தி இருந்தாள்.
இதில் - நாளை
இன்னொருத்தி வருவாள்.
அவர்கள்
இழப்பிற்காய் அஞ்சாதே,
அவர்கள் வந்துபோவதால்
நீ அடையும்
களைப்பிற்காய் அஞ்சு.
என் மனமே,
ஒன்று தெரியுமா
உனக்கு,
உன்னாலேதான் - என்
கண்கள் கலங்குகின்றன.
கனவுகள் இறக்கின்றன.
கவிதைகளும் பிறக்கின்றன.
ஆக,
அவள் நகர்ந்து விட்டாள் - அது
அவள் இஷ்டம்
நீ நூர்ந்து விடாதே - இது
எனக்கு கஷ்டம்.
.
1 comment:
மனச் சிறையில் சந்தோசமாக வந்திருந்தவள் விலகிச் செல்லுகையில் சந்தோசமாய் வழியனுப்பி தேற்றிக் கொள் எனும் தத்துவத்தை இக் கவிதை மென்மையாகச் சொல்லி நிற்கிறது.
Post a Comment