Thursday, September 22, 2011

முல்லைத்தீவு சிறுவனும் ஊடகங்களின் சின்னப்புள்ளத்தனமும்..


நான் அதிகம் அரசியல் பக்கம் தலை காட்டுவது மிக குறைவு. காரணம் பயம் என்பது மட்டுமல்ல பயமேதான். என்னய்யா சும்மா வேலில போற ஓணான புடிச்சு நம்ம வேட்டிக்குள்ள போடா முடியுமா. அது மட்டுமல்ல அரசியலைப் பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடோ அல்லது அரசியல் நோக்கு அறிவோ இருத்தல் வேண்டும். நமக்கு இது இரண்டும் இல்லேங்க. சரி அதை விடுத்து இவற்றை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், உங்களுக்கே புரிந்திருக்கும் நான் ஒரு அரசியல் சமாச்சாரத்தைப் பற்றி பேச வரப் போகிறேன் என்பது. இதை நான் ஒரு அரசியல் பதிவாக இல்லாமல் முடிந்தளவு எனது உணர்வு ரீதியான வெளிப்பாட்டு பதிவாகவே உருவப் படுத்த முயல்கிறேன்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நமது தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் பேசித் தள்ளிய விடயம் அந்த முல்லைத்தீவு சிறுவன் பற்றிய கதை. ஊடகங்கள் தங்களுக்கு செய்தி கிடைத்துவிட்டால் போதும் என மட்டும் எண்ணி அதனால் வரும் எதிர்வினைகளை கொஞ்சம் கூட ஜோசிக்காமல் சுயநலமாக செயற்படுகின்றனவா என்பதையும் இந்த சம்பவம் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பல மாற்றுக்கருத்துக்கள் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன. எனக்குள்ளேயும் பலவகையான முரண்பாட்டு கருத்துக்கள் கூட வந்துதான் போயின. என்னதான் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால் இந்த செய்தி அந்த மாணவன் மற்றும் அவரது குடும்பம் போன்றோருக்கு பல சிக்கல்களை உருவாக்கக் கூடியன என்றே சொல்ல வேண்டும். அந்த சிக்கல்கள் நேரானதாகவோ அல்லது மறைமுகமானதாகவோ இருக்கலாம். இது எனது பயம்.

அந்த சிறுவன் குறித்த அந்த மிக முக்கிய அமைச்சரின் கால்களில் விழவில்லை என்பதே அந்த பரபரப்பான செய்தி. இந்த சம்பவம் இவ்வாறே இருந்துவிட்டுப் போனால் பரவாயில்லை. ஆனால் இந்த சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வெளிக்கிட்டாலேயே பல பாதகமான சிக்கல்கள் உருவாகும். இதை சிலர் ஏன் தங்கள் சொந்த லாபத்திற்காக அரசியல் ஆக்கமாட்டார்கள் என்கின்ற ஒரு சந்தேகமும் எனக்குள் இருக்கிறது? எவ்வாறு என்று ஜோசித்தால் பல வகையான கேள்விகளை இந்த சம்பவம் உருவாக்குகிறது. இந்த சிறுவன் அந்த இடத்திற்கு வருவதற்கு முதல் அந்த சிறுவன் யாரோ ஒரு தரப்பினரால் இவ்வாறு நீ நடந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டு அறிவுறுத்தப்பட்டானா? அப்படியாயின் அந்த அறிவுறுத்தல்களை அவனுடைய பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் அல்லது யாரோ ஒரு குழுவினர் தான் வழங்கினார்களா? இது குறித்த அமைச்சரையும் அவர் சார்ந்த அரசாங்கத்தையும் அவமானப் படுத்தவேண்டும் அல்லது கேவலப் படுத்த வேண்டும் என யாரும் போட்ட திட்டத்தில்தான் இந்த சிறுவன் மாட்டிக்கொண்டானா? அல்லது இந்த அளவிற்கு ஜோசித்து தானாகவே செய்வதற்கு அவனது சிந்தனை ஆளுமை அடைந்து விட்டதா? இந்த நிகழ்ச்சி அந்த குறித்த அமைச்சரை அல்லது அவர் சார்ந்த அரசாங்கத்தை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டதா? என பல வகையான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது இந்த சம்பவம்.


மறு புறத்தில், பல உணர்ச்சி மிக்க தமிழர்கள் சிறுவன் செய்தது 'சபாஷ்' என மார்பு தட்டி அந்த சிறுவனை வாழ்த்தவும் செய்கிறார்கள். அதற்குள் சில மாண்பு மிக்க தமிழர்கள் 'நீ எங்கள் இனமடா' என்று கொஞ்சம் கூட அறிவில்லாமல் பெருமைப் படுகிறார்கள். ஆகவே அந்த சிறுவன் செய்தது சரியா? அல்லது தவறா? நமது தமிழர்கள் இன்னொருவருடைய காலில் விழுவது என்பது காலா காலமாய் இரண்டு விடயங்களுக்காக நடைபெறுகிறது. ஒன்று அவர் மேலுள்ள மரியாதை, மதிப்பு காரணமாக அவர் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்பதற்காய். இரண்டாவது இன்னொருவரின் காலில் விழுந்து அவரை உசுப்பேத்தி விட்டு தங்கள் காரியங்களை சாதித்தல் (அதுதான் வாளி வைக்கிறது எண்டு சொல்லுவாங்களே).

அப்படியாயின் இந்த சிறுவன் மேலே சொன்ன இரண்டாவது காரணத்திற்காய் விழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. காரணம் அவன் இன்னும் சிறுவன். அப்படியென்றால் அவன் முதற்காரணத்திற்காகவே அவர் கால்களில் விழுந்திருக்க வேண்டும். அனால் அதை அவன் செய்யவில்லை. ஒருவர் கால்களில் விழுவதும் விழாமல் இருப்பதும் அவரவர் விருப்பம், கொள்கைகளைப் பொறுத்தது. (அந்த சிறுவனை காலில் விழும்படி சூழ இருந்தவர்கள் நிர்ப்பந்தித்ததும் என்னை கொஞ்சம் வேதனைப்பட வைத்தது.) ஒரு சிறுவனுக்கு தனக்கென்று சில கொள்கைகள் இருக்கக் கூடாதா? அப்படி இருப்பின் அது ஆரோக்கியமான வளர்ச்சிதானே. அவன் அவனாக இருக்கின்றான் என்று நாம் பெருமைப் பட வேண்டாமா? அதை விடுத்து ஏன் அந்த நிகழ்வை ஒரு சிங்கள தமிழ் முரண்பாடாக நாம் பார்க்க வேண்டும். சிலவேளை அந்த இடத்தில் அந்த அமைச்சர் இல்லாமல் யார் இருந்திருந்தாலும் அவ்வாறுதான் செய்திருப்பான் என ஏன் நாங்கள் ஜோசிக்கக் கூடாது?

அவன் இந்த சம்பவத்தை தானாகவே எண்ணி செய்த்திருப்பானாயின் அவனை நாங்கள் மதித்தே ஆகவேண்டும். எதற்காக? அவன் அமைச்சரை அவமானப் படுத்தினான் என்பதற்காகவா? இல்லை. இந்த வயதிலேயே தனக்கென்ற கொள்கைகளுடன், இப்படித்தான் வாழ வேண்டும் என்கின்ற உயரிய நோக்கோடு 'அவனாக' வாழ்கிறான் என்பதற்காய். அத்தோடு அவன் சொன்ன காரணங்களையும் நான் மதிக்கிறேன். ஏதோ அவனுடைய வயதிற்கு அவன் அதிகமாகவே ஜோசிக்கிறான். ஆக, அவன் தானாகவே இவ்வாறு ஜோசித்து நடந்திருப்பானாயின் அவன் அந்த அமைச்சரையோ அல்லது அரசாங்கத்தையோ அவமானப் படுத்தவேண்டும் என்கின்ற ஒரு நோக்கோடு செய்திருக்க முடியாது. அவ்வாறு அந்த நோக்கத்தோடு செய்யப்படாத ஒரு சிறுவனின் செயலை பெரியவர்கள் இன்னுமொரு மாற்று அர்த்தத்தோடு பார்ப்பது மிகவும் கேவலமான செயல் என்றே தோன்றுகிறது.

சரி, பிழை போன்றவற்றை விடுத்து, இந்த சம்பவத்தை ஊடகங்கள் சரியாக வெளிப்படுத்தினவா என்ற கேள்வியே எனக்கு மிக முக்கியமானது. அதிலும் அந்த காணொளியைக் கூட சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த செய்திகள் அந்த சிறுவனை, அல்லது அவனது பெற்றோர்களை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை இந்த ஊடகங்கள் சிந்தித்தனவா? இந்த நிகழ்ச்சியை கடும் சிங்களப் போக்காளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி எப்படியெல்லாம் அரசியல் மயப்படுத்தப்படப் போகிறது என்பதையும் இந்த ஊடகங்கள் கொஞ்சமேனும் சிந்தித்தனவா? அவ்வாறு இந்த நிகழ்ச்சி அரசியலாக்கப் பட்டால் அந்த சிறுவனின் எதிர்காலம், மற்றும் அந்த பெற்றோர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும் இவர்கள் ஏன் ஜோசிக்க வில்லை. அந்த சிறுவன் 'தமிழன்' என்றெல்லாம் சில ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மறைமுகமாக அந்த 'தமிழன்' என்ற வார்த்தையில் அந்த சிறுவனை யாருக்கு ஒப்பிட்டிருந்தார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல அந்த செய்தியை வாசித்த அனைவருக்கும் புரிந்திருக்கும். இது அந்த சிறுவன் மீதான இன வெறியாளர்களின் பார்வைக்கு இலகுவாக பெற்றோல் போடும் என்பதை ஏன் அந்த ஊடகம் நினைக்கவில்லை.

எனவே, எது எப்படி இருப்பினும் ஊடகங்கள் கொஞ்சமேனும் தங்கள் சமூக நல்லெண்ணக் கொள்கைகளை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் ஊடக சுதந்திரத்திற்காக மக்களின் சுதந்திரத்தை கெடுக்க முற்படக்கூடாது. அதுவும் இன்றைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தங்கள் ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக, சரியான ஆளுமையோடு நகர்த்த வேண்டும் இந்த ஊடகங்கள். அதுவே எனதும் எமது மக்களின் வேண்டுதலும் கூட.


.

5 comments:

Vivikthan said...

மிகவும் யதார்த்தமான கருத்துக்கள். இதைத்தான் நானும் முகப்புத்தகத்தில் சிலருடன் கடந்த இரு நாட்களாக சூடாக விவாதித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சிறுவனை வைத்து எல்லோரும் அரசியல் செய்ய நினைக்கிறார்களே தவிர அவனது எதிர்காலத்தைப் பற்றியும், இதனால் அவன் எதிர்நோக்க வேண்டி வரும் அச்சுறுத்தலைப் பற்றியும் பலருக்குக் கவலையில்லை. உங்கள் பதிவு மிகவும் அருமை. பின்வரும் இணைப்பில் சென்று பாருங்கள் சிலரின் எண்ண ஓட்டங்களை!

http://vivikthan.blogspot.com/2011/09/blog-post.html

Anonymous said...

மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, சிறந்த பதவியை அடைந்து விட்டாலோ, அதிகாரத்துக்கு வந்து விட்டாலோ, மற்றவர்களை விட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்து விட்டாலோ இவற்றைப் பெறாத இன்னொருவன் அவனுக்குச் சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் விழுகின்றான்.

அரசியல் தலைவர்களுடைய கால்களில் விழும் கட்சிகளின் தொண்டர்களையும், செல்வந்தர்களின் கால்களில் விழும் ஏழைகளையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

தன்னை விடச் சிறந்தவன் என்று ஒருவனைப் பற்றி என்னும் போது அவனுடைய கால்களில் விழ வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றான்.

இப்படிச் செய்வதிலிருந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற தத்துவம் மனிதனைத் தடுத்து நிறுத்துகின்றது.

'கடவுளுக்கு மாத்திரம் தான் மனிதன் அடிமை. கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது.

அனைவரும் நம்மைப் போலவே மல ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் என்பதையும். அனைவரும் தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் என்பதையும் எல்லா மனிதர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தன்னப் போல உள்ள மனிதனின் காலில் விழ மாட்டார்கள். தன் காலில் மற்றவர்கள் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.
இதைத் தான் திருக்குர்ஆன் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

மனிதர்களே என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள். உங்கள் அனைவரின் மூலப் பிதா ஒரு ஆண் தான். உங்கள் அனைவரின் மூலத் தாய் ஒரு பெண் தான்.

ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களைக் குடும்பங்களாகவும், கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத் தான். உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். 'மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 624

Anonymous said...

cont...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத்

எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சிகளில் வலிமை மிக்கதாக இருந்தது.

இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும், தமக்காக எழுந்து நிற்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கொள்கைப் பிரகடனமே காரணம். அந்தக் கொள்கைக்கு மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.
நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை. எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.

வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?

அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.
Shahul Hameed Roohul Razmi
roohulrazmi@yahoo.com

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
கீழ்த்தரமான, தம் ஊடகங்களின் வியாபாரத்தினைப் பெருக்க வேண்டும் எனும் நோக்கம் கொண்டோர் மூலமாகத் தான் இன்று சமூகத்தில் பல சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.

ஒரு சிறிய விடயத்தினையும் ஊதிப் பெருப்ப்பிப்பதும் இவர்கள் தான்.
அது பொய் என்றதும் கதையைத் திசை திருப்பிச் செய்தி போடுவதும் இந்த மனிதர்கள் தான்.

என்று மாறுமோ இந்த நிலை?

ஆன்ம திருப்தியோடும், மக்களுக்கான நடுவு நிலமையோடும் இணையத்தளங்கள் செயற்பட்டாலே எம் தமிழர்களின் பல்வேறு சம்பவங்களிற்கு உலகளவில் மதிப்புக்கள் கிடைத்திருக்கும், இந்த மாதிரியான ஊடகங்களால் தான் எம் சமூகத்தின் பல விடயங்கள் புஷ்வானமாகி விடுகின்றது.

பி.அமல்ராஜ் said...

வணக்கம்.. வாங்க பாஸ்,

நீங்கள் சொல்வது சரி.. இந்த சமுதாய விடயங்களில் நமது ஊடகங்கள் கொஞ்சம் சிரத்தை எடுப்பது நல்லம் என்பதே எம் அனைவரினதும் ஆவல்.

Popular Posts