Tuesday, September 20, 2011

வாசிப்பது தப்பா??


கடந்த இரண்டு வாரங்களாக கடும் வேலை. கொழும்பில் சில நாட்கள் வவுனியாவில் சில நாட்கள் மன்னாரில் சில நாட்கள். தொடர்ச்சியான வேலைப் பளு, அலைச்சல் இவற்றால் வந்த எரிச்சல் இவை அனைத்தையும் தாண்டி சரியாக இணையத்தை அலச முடியல என்கின்ற ஒரு எக்ஸ்ட்ரா எரிச்சலும் கூட. ஆனாலும் இந்த எரிச்சல்களுக்கு மத்தியில் பல நல்ல காரியங்களும் நடந்தேறியதை குறிப்பிடாமல் இருந்துவிட முடியாது. அதில் மிக முக்கியமான ஒன்று லண்டன் தமிழ் வானொலியில் நான் வழங்கிய செவ்வி, மற்றும் வசந்தம் தொலைக்காட்சியில் நான் வழங்கிய செவ்வி போன்ற இரண்டு விடயங்கள். சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன் என்றால் நான் பேசப்போகும் தலைப்பை சிந்திக்க வைத்தது இந்த செவ்விகளில் ஒன்றுதான். லண்டன் தமிழ் வானொலி என்னை பேட்டி கண்டதோடு சேர்த்து ஒரு நல்ல காரியத்தையும் செய்திருந்தார்கள். அதுதான் எனது செவ்வி தொடர்பான நேயர்களின் கருத்தை நேரடியாக வானலையில் இணைத்துக்கொண்டமையும் அவர்களோடு என்னை பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தமையும் ஆகும். வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் வானொலி.

இவ்வாறு இடம்பெற்ற அந்த நேயர்களுடனான உரையாடல்களில் அதிகமாக பேசப் பட்ட விடயம் இந்த வாசிப்பு. அதிலும் சிலர் வாசிப்பினால் ஏற்படும் தீன்மைகளை மிக சுதந்திரமாக எடுத்துக்கூறியமை என்னை இன்னும் சிந்திக்க வைத்தது. சரி விடயத்திற்கு வருவோம். எமது மூத்த அனுபவமிக்க எழுத்தாளர்களை நாம் சந்திக்கும் பொழுது காலம் காலமாய் எமக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரேயொரு அறிவுரை 'நிறைய வாசியுங்கள்' என்பதாகும். இது வெறுமனே கவிஞர்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல மாறாக எழுத்து உலகத்தில் இருக்கும் சகலருக்கும் அதிலும் மிகப் பிரதானமாக நம்ம பதிவர்களுக்கும் இது பொருந்தும். அவ்வாறு சொல்லப்படும் இந்த அறிவுரை சரியானதா அல்லது தவறானதா என்பதுதான் இந்த பதிவின் மிக முக்கியமான விடயம்.


ஒரு சாரார் சொல்கிறார்கள், அதிகம் வாசிக்கும் பொழுதுதான் எமது எழுத்துக்கள் தரமானதாக வரும் என்று. அதேபோல இன்னும் சிலர் சொல்கிறார்கள் இல்லை, மற்றவர்களை வாசிக்கும் பொழுது அவர்களுடைய அந்த பாணி அல்லது தழுவல் நமக்குள்ளும் வந்துவிடும் என்று. இதில் எது சரி எது தவறு என்று பார்த்தால், இவ் இரண்டு கருத்துக்களிலும் நியாயம் இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

முதலாவதாக, இந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். அதிகம் வாசிக்க வேண்டும் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வதற்கான காரணங்கள் நிறையவே உண்டு. அதில் நேர்மையான காரணங்களும் உண்டு. காழ்ப்புணர்ச்சியோடு கூறும் காரணங்களும் உண்டு. மிகவும் நாகரிகமான மூத்த எழுத்தாளர்கள் இந்த கருத்தை கூறுவதன் பொருள் என்னவெனில், முதலாவது அவர்கள் வாசியுங்கள் என்று கூறுவதன் பொருள் 'படித்தல்' என்பதையும் சேர்த்தே பொருள் படுகிறது. எந்தவொரு விடயத்தையும் நாங்கள் சரியாகப் படிக்காமல் அதாவது கற்றுக் கொள்ளாமல் அதில் கால் பதித்தல் அபாயமானதே. ஆகவே, இவர்கள் வாசியுங்கள் என்று கூறுவது இந்த 'கற்றுக்கொள்ளுங்கள்' என்ற மிக முக்கியமான பொருளை மறைமுகமாக விளக்குவதே ஆகும். என்னைப் பொறுத்த மட்டில் இதுவே மிக முக்கியமான காரணம் இந்த வாசியுங்கள் என்கின்ற அறிவுரைக்கு.

இதைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கிறது. ஆரம்பத்திலே எமக்கென்று ஒரு பாணி அல்லது போக்கு இருப்பதை நாம் இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ள முடியாது. ஆகவே இவ்வாறான பல வேறுபாடுகள் நிறைந்த மூத்தவர்களின் படைப்புக்களை (கட்டாயமாக மூத்தவர்களின் படைப்புக்களை மட்டும் தான் வாசிக்க வேண்டும் என்று இல்லை. தரமானதை வாசிக்கலாம்) வாசிக்கும் பொழுது எமக்கென்று இருக்கும் அந்த பாணியை நாம் இலகுவாக கண்டுகொள்ள வாய்ப்பாக அமையும். இதைத்தவிர சில பெரியவர்கள் தங்கள் சுய புராணம் பாடுவதட்காகவும் 'எங்கள் போன்றவர்களின்' அல்லது 'பொதுவாக பெரியவர்களின்' (தங்களையும் இதற்குள் சேர்த்துக்கொண்டு) புத்தகங்களை வாசியுங்கள் என கூறுவார்கள். எனக்கு அண்மையில் ஒரு பெரிய எழுத்தாளர் கூறினார் 'அமல்ராஜ், நீர் நிறைய வாசியும். உதாரணமாக எண்ட புத்தகங்களை வாசியும் நிறைய படித்துக் கொள்வீர்'. இதை நான் சரியாகத்தான் எடுத்துக்கொண்டேன் இருந்தும் தனது புத்தகங்கள் எனக்கு நல்ல பாடமாக அமையும் என அவர் முடிவெடுக்க முடியுமா? இவ்வாறான இடங்களில் இந்த வாசியுங்கள் என்கின்ற பெரியவர்களின் அறிவுரை பல்ப்பு வாங்குகிறது.

அடுத்து இதன் இரண்டாவது கருத்தை நோக்கினால், வாசிப்பு தழுவல் போன்ற இயற்கையான மாற்றத்திற்கு எங்களை கொண்டுபோகும் என்பதாகும். இதில் எனக்கு நிறையவே உடன்பாடு இருக்கிறது. அதாவது ஒருவருடைய கவிதைகளை அடிக்கடி வாசிக்கும் பொழுது அந்த கவிதைகளின் தழுவல் அல்லது பாணி நமது விரல்களுக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக மேத்தாவின் கவிதைகளை நான் ஆரம்பத்தில் அதிகம் வாசித்து எனது கவிதைகளை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது என்னை அறியாமலே அவரது பாடு பொருள், வசன அமைப்பு, வார்த்தை நடை போன்ற விடயங்கள் எனது விரல்களுக்குள் வந்து அதிகம் தொல்லை பண்ணியது. எனக்கென்று ஒரு தனிப் பாணியை நான் அடைந்த பிறகும் சில வேளைகளில் சிலரது படைப்புக்களை வாசிக்கும் பொழுது அது என்னை அறியாமலே அந்த தழுவல் வந்து விடுகிறது. இது எமக்கு மட்டுமல்ல பல மூத்த எழுத்தாளர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது. உதாரணமாக அண்மையில் ஒரு மூத்த கவிஞரின் கவிதை நூலை ஆற அமர இருந்து வாசித்தேன். அவரது அணிந்துரையை வாசிக்காமல் நேரடியாகவே கவிதைகளுக்குள் நுழைந்தேன். ஈழத்து இலக்கியத்திலே தனக்கென்று ஒரு கவிப் பாணியை அமைத்து வைத்தவர் காசி ஆனந்தன். இவரது கவிதைகளிலே அந்த நறுக்கு கவிதைகள் மிகப் பிரபலம். அந்த கவிதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன். எனவே இந்த மூத்த எழுத்தாளரின் சிறு சிறு கவிதைகளைப் படித்த பொழுது இவரின் கவிதைகளில் காசியானந்தனின் தழுவல் எனக்கு மிக இலகுவாகவே விளங்கியது. பின்னர் அவர் அணிந்துரையையும் வேறு ஒரு சந்தர்பத்திலே அவரது கருத்தையும் கேட்ட பொழுதுதான் தெரியும் இவருக்கு காசி ஆனந்தனின் கவிதைகள் மிக மிக பிடிக்கும் என்று. ஆகவே அந்த அது காசியானந்தனின் தழுவல்தான் என உறுதி செய்து கொண்டேன்.

இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இந்த தழுவல் என்பது வாசிப்பினால்தான் வந்து விடுகிறது. இதை நாம் தடுப்பது மிகக் கடினம். இது உளவியல் ரீதியான ஒரு விடயமும் கூட. அப்படியாயின் இதற்கு என்னதான் அறிவுரை. சிம்பிள். கற்றுக்கொள்வதற்காய் மட்டும் வாசியுங்கள். அத்தோடு தரமான படைப்புக்களை எப்பொழுதும் பொழுது போக்கிற்காய் வாசிப்பதை விடுத்து இதில் எத்தனை விடயங்கள் எனக்கு கற்றுக்கொள்வதற்கு இருக்கோ அத்தனை விடயங்களையும் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையோடு வாசியுங்கள். அதிலும் உங்களுக்கு மிக மிக பிடித்த ஒருவரின் படைப்பை வாசிக்கும் பொழுது இன்னும் கவனமாக இருத்தல் அவசியம். காரணம் அவர்களை எங்களுக்கு பிடிக்கும் என்பதால் அவர்களது தழுவல் இலகுவாகவே எமக்குள் வந்துவிடும். கவிதை நூல்களை வாசிக்கும் பொழுது அதில் எவ்வாறு வார்த்தைகள் போடப்படுகின்றன, எவ்வாறான பாடு பொருள்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன, எதுகை மோனை போன்ற நுட்பங்கள் எவ்வாறு பாவிக்கப் படுகின்றன, வார்த்தை ஜாலம், விளையாட்டு எப்படி இருக்கிறது, சந்தம் எப்படி ஒத்து போகிறது போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளும் நோக்கோடு வாசித்தால் நாங்கள் அதிகம் படிக்கிறோம் என்பதை உணரலாம். அத்தோடு இந்த தழுவலை குறைப்பதற்கு இன்னுமொரு வழி நமது வாசிப்பை மட்டுப் படுத்தக் கூடாது என நினைக்கிறேன். ஒருவருடைய எழுத்துக்களை மட்டும் வாசித்தல், ஒருவருடைய படைப்புக்களை மட்டும் தொடர்தல் என்பனவும் இந்த தழுவலுக்கு இன்னும் துணை போகும் காரணங்களாகும். எமது வாசிப்பை பரந்து படுத்திக் கொள்தல் வேண்டும் என்றே சொல்ல வருகிறேன். கண்டதையும் கண்டு வாசிக்க வேண்டும்.

எனவே, வாசிப்பு என்னுடைய எழுத்தை இன்னொருவருடைய சாயலுக்கு கொண்டு சென்றுவிடும் என்று பயப்படுகிறவர்களுக்கு ஒன்று சொல்லலாம். சாயல் ஒன்றாக இருக்கலாம். ஆனால் தமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் போதும். எமது தமிழ் இலக்கிய வரலாற்றில் கூட பாரதி, பாரதிதாசன் என பலரது கவிதைகளில் இன்னொருவருடைய சாயல் இருந்தது என்பது உண்மைதான். அனால் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டதன் விளைவே இன்றுவரை அவர்கள் படைப்புக்கள் நிலைத்து நிற்கின்றன.

எனவே, வாசித்தல் எப்பொழுதுமே நன்மையே. அது தீமையாய் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி.


பி.கு. இது முற்று முழுதாக எனது தனிப் பட்ட கருத்து. விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு தாராளமாய் உண்டு. எனவே, உங்கள் கருத்தை தாராளமாய் சொல்லலாம்.


.

5 comments:

Rathnavel Natarajan said...

, மற்றவர்களை வாசிக்கும் பொழுது அவர்களுடைய அந்த பாணி அல்லது தழுவல் நமக்குள்ளும் வந்துவிடும் என்று. இதில் எது சரி எது தவறு என்று பார்த்தால், இவ் இரண்டு கருத்துக்களிலும் நியாயம் இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

அருமையான, விளக்கமான பதிவு.
நன்கு எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

முதலில்,வசந்தம் டீவி,
லண்டன் தமிழ் வானொலி ஆகிய ஊடகங்களில் உங்கள் பேட்டி வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப் போகின்றேன்.

வாசிப்பு என்பது எமது அறிவைப் பெருக்கி..எம் படைப்புக்களைப் பற்றிய எண்ணங்களை மேலும் விரிவடையச் செய்வதற்கான உந்துதல் ஆகும்.

ம.தி.சுதா said...

தங்கள் செவ்வி அமுதண்ணாவின் சுவரில் வைத்துக் கேட்டேன் ஆழமாக இருந்தது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அர்த்தமுள்ள அறிவார்ந்த பதிவு...
வாழ்த்துக்கள்...

Popular Posts