Monday, September 12, 2011

தேஞ்சு போன செருப்பும் நன்றி கெட்ட மனிதரும்.


அன்பின் நண்பா,

நீ என்றும் நலமாகவே இருப்பாய் என்பது எனக்கு தெரியும். அதற்காக நான் நலம் இல்லை என்று உனது அனுதாபத்தை தேடுவதற்கும் நான் தயாரில்லை. உனது கால்களில் கிடக்கும் பொழுது எனக்கு புரியாத பல விடயங்கள் இப்பொழுது இந்த குப்பை மேட்டிற்கு வந்ததும் உதயமானது. இதைத்தான் எங்கள் முன்னோர்கள் குப்பை மெட்டு ஞானம் என்றார்களோ?? சரி விடயத்திற்கு வருகிறேன்.

நண்பா, உன்னை நான் வெறுக்கிறேன். காரணம் நீ என்னை எரிந்து விட்டாய் என்பதற்காய் அல்ல. நீ என்னை ஏமாற்றியதற்காய். நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என்பதற்கு எனது இந்த கீழ் பக்கமே சான்று. உனக்காக நான் எத்தனை வலிகளை தாங்கினேன் தெரியுமா? உனக்காக எத்தனை அழுக்குகளை தெரிந்தும் மிதித்தேன் தெரியுமா? உனக்காக எத்தனை வீட்டு வாசலில் உன்னை எதிர்பாத்து காத்திருந்தேன் தெரியுமா? இறுதியில் நன்றிமறந்து என்னை தூக்கி எறிந்து நீயும் ஒரு சராசரி மனிதன் என்பதை நிரூபித்து விட்டாய்.

என்னை முதல் முறை நீ பார்க்க வந்தபோது உன்னையும், பார்த்துவிட்டு போகும் ஒரு பைத்தியக் காரன் என்றுதான் நினைத்தேன். நீ என்னை தொட்டபோது நான் சிரித்தேன். அருகில் இருந்தவன் என்னை பொறாமையோடு பார்த்த போது ரொம்ப பெருமையாய் இருந்தது. இறுதியில் என் முதலாளி சொன்ன விலையே நீ கொடுத்தாய் எனக்கு. நான் உன் காலிலே கிடப்பவன் என்று தெரிந்தும் நீ என்னை விலை கொடுத்து வாங்கிய அந்த பெருந்தன்மையை நான் என்றும் மறவேன். நான் அழகாக இருந்ததே உன் கால் அழகானதற்கு காரணம். மறந்து விடாதே. நான் வலிகளை தாங்கிக்கொண்டதே உன் கால்கள் இன்னும் நின்மதியாய் இருக்க காரணம்.

செருப்பு கூட என்ன விலை பார்த்தாயா என்றெல்லாம் மனிதர்கள் எங்களை இளக்கமாக பேசிய போதெல்லாம் எனது பிறப்பை எண்ணி கவலைப் பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறப்பைப் பற்றி நான் என்றுமே கவலை கொண்டதில்லை. அந்த முட்களை நீ வெறுத்தாய். நானோ அவற்றை உனக்குத் தெரியாமல் நேசித்தேன். காரணம் எனக்கு உன்னை விட நன்றியறிதல் அதிகம். அவர்கள் இல்லையென்றால் நாங்கள் எது..?? உனது படுக்கையறைக்கு வராவிட்டாலும் உன்னுடன் நீ படுக்கும் வரை இருந்திருக்கிறேன். உன்னை விட உன் காதலி கூட என்னை அதிகம் விரும்பினாள். எத்தனை தடவை என்மேல் ஏறி உன்னை அனுபவித்திருப்பாள் தெரியுமா? எப்பொழுதும் என்னை வெளியிலேயே போட்டுவிடும் நீ உன் காதலி வீட்டிற்கு யாரும் இல்லாத நேரம் போகும்போது மட்டும் என்னை வீட்டிற்குள்ளே அந்த கதவுகளுக்கு பின்னால் கொண்டுபோய் கவனமாய் வைத்ததன் அர்த்தம் எனக்கு இன்னும் புரியவில்லை. அன்று கூட உன்னை நான் காட்டிக்கொடுத்துவிடுவேன் என நீ பயந்தாயோ என சிந்திக்க தோணுகிறது.

என் அன்பிற்கினிய நண்பனே, உன்னை நான் அதிகம் நேசித்ததை விட உனது பாதங்களை நான் வாசித்ததுதான் அதிகம். நீ என்னை மிதிக்கும் போதேல்லாம் நான் கவலையின்றி சிரித்ததற்கு இப்பொழுது நீ கொடுத்த பரிசுதான் 'பழசு'. ஏதோ ஆறு மாதங்கள் மட்டும் உன்கூட வாழ்ந்தாலும் ஒரு ஆத்ம திருப்தி நான் ஓய்வு பெறும் வரை உனக்கு நன்மையே செய்திருக்கிறேன் என்பதால். உன் கூடவே நான் சென்ற பாதைகள் அனைத்தும் எனக்கு பாடம். உன்னை விட நடை பயணத்தை அதிகம் வெறுத்தவன் நான் தான். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, நீ என்னை ஒருமுறை 'சனியன்' என பேசியது. உனக்கு அது ஞாபகம் இருக்கிறதா? அந்த வரம்பில் சறுக்கி நீ கீழே விழுந்த போது நீ கீழே விழுந்ததற்கு நான் தான் காரணம் என அனைவரிற்கும் அப்பட்டமாய் பொய் சொன்னாய். அதற்கு உண்மையான காரணம் நீ அந்த பரிமளா மாமியைப் பார்த்து வாய் பிளந்து நடக்கையில் அந்த வரம்பின் விளிம்பில் உனது காலையும் என்னையும் வைத்ததினால் தான் என்பதை இன்று வரை என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும். ஆனாலும் உன்னை அன்றே மன்னித்து விட்டேன் உங்கள் மனிதர்களைப் போல் அல்லாமல்.

எனது விலையைப் பற்றி அதிகம் சொல்லித்தந்த அந்த கடை முதலாளிகள் எனது நிலையை பற்றி சொல்ல மறந்து விட்டார்கள். தேய்ந்து விட்டதால் உன்னை எறிகிறேன் என்று எனக்கு சொன்னாய். அது நியாயம் தான். ஆனால் ஒன்றை யோசித்தாயா, நான் தேய்ந்ததெல்லாம் உனக்காய்தான். மனிதர்கள் எங்களை விட உயர்ந்தவர்கள் என எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியிருக்க ஆறு மாதங்கள் உன்னை காப்பாற்றியவனை புதிதாக வந்தவனைப் பார்த்ததும் எப்படி காய் வெட்டி தூக்கி எறிய முயன்றாய்? அதற்காக பழையதாய்ப் போன என்னை உனது நடு வீட்டில வைக்க வேண்டும் என்பது எனது ஆவல் அல்ல. ஆகக் குறைந்தது என்னை ஒரு ஏழைக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா. உன்னுடன் நான் இருந்ததை விட அவர்களுடன் சந்தோசமாக இருந்திருப்பேன். நீங்கள் மனிதர்கள். எங்களை விட உயர்ந்தவர்கள். அப்படியிருக்க நான் யோசிப்பதை கூட ஏன் உங்களால் ஜோசிக்க முடியவில்லை?

எனது நண்பனே, நான் மனிதர்களைப் போல அல்ல. மாறாக எனது உயிர் போகும் வரை என்னால் ஒருவர் பயனடைய வேண்டும் என ஆசைபடும் ஏங்கும் ஒருத்தன். புதியவனை நீ வீட்டிற்குள் எடுக்கும் பொழுது நான் வெளியே அனுப்பப் பட்டேன். அப்பொழுது அந்த புதியவன் என்னைப் பார்த்து ஏளனமாக பல் இளித்தது இன்னும் எனக்கு கடுப்பேத்துகிறது. அவனை எண்ணி நான் கொஞ்சம் சிரித்துவிட்டு வந்தேன். அவனுக்கும் இன்னொரு ஆறு மாதங்களில் எனது நிலைமைதான் என்பதை அந்த இளம் தோல் உணரவில்லை. காரணம் அவன் புதியவன் என்பதால் மனிதர்களைப் பற்றி அவனுக்கு இன்னமும் சரியாக தெரியவில்லை. புதியவை வர பழையவற்றை எறிந்து விடுவார்கள் என்பதை.

இறுதியாக உனக்கு ஒன்றை சொல்லுகிறேன். எங்களை உங்கள் கால்களில் மாட்டிக்கொள்ள நீ கொடுத்து வைத்தவன். ஏன் என்று கேட்கிறாயா? என்னை பார்த்து அதிக நாட்கள் ஆசைப்பட்டு அழுதுகொண்ட அந்த கால்கள் அற்ற உனது அயல் வீட்டுக்காரன் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறான். பழசு, அழகில்லை என்பதால் நான் உனக்கு தேவை இல்லை ஆனால் பலருக்கு கால்களே இல்லை. தேவை இல்லாமல் ஆடம்பரமாய் எங்களை வாங்கும் பொழுதெல்லாம் அந்த கால்கள் அற்ற உன் நண்பர்களை எண்ணிப் பார். நீ மனிதன் அல்லவா? நானே இவ்வளவு ஜோசிக்கிறேன். நீ எவ்வளவு ஜோசிக்க வேண்டும் என தயவு செய்து சிந்தித்து பார்.

அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயமாக நான் செருப்பாகவே பிறப்பேன். உங்களைப் போன்று நன்றி கெட்ட மனிதர்களாய் வாழ்வதை விட காலம் முழுவதும் உங்கள் கால்களில் கிடந்து உங்களை வலிகளிலிருந்து காப்பாற்றும் ஒரு செருப்பாக இருப்பதில் எனக்கு அதிகம் பெருமை.

என்றும் உன் அன்பின்
செருப்பு
குப்பைத் தொட்டியில் இருந்து.


.

4 comments:

அம்பாளடியாள் said...

அருமை அருமை அருமை .....வாழ்க்கையில் மனிதன்
செய்கின்ற தவறுகளை ஒரு புதிய கதாபாத்திரத்தின்மூலம் அதுவும் ஒரு செருப்பை கீரோ லெவலில் வைத்து மிகக் கச்சிதமாகச் சொல்லவந்த விடயத்தை சொல்லியிருக்கும்
தன்மை பாராட்டுதற்குரிய விடயம் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .... .......

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலம் தானா?

வாழ்வில் பாதங்களுக்கு ஓடாய்த் தேய்ந்து உழைத்த செருப்பின் மகத்துவத்தினைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

தமிழ்விருது said...

வணக்கம் அமல்ராஜ் எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
விவாகரத்து என்ற பதிவிற்கு(கவிதைக்கு) விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

மனதோடு மன்னூரான் said...

பாதரட்சைகளுக்கு புலன்களிருந்தால், இராமாயணத்திற்கு அடுத்ததாய் உங்களால்தான் அவற்றிற்கு உயர்வு கிடைத்திருக்கிறது என்று எண்ணி அவை மகிழ்ச்சி கொள்ளும். மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது அமல். வாழ்த்துக்கள்!

Popular Posts