Thursday, September 22, 2011

பழகிப்போச்சு.


அவர்கள் எங்களை
அப்படித்தான்
பார்ப்பார்கள்.

ஆளைத் தடவித்தான்
அடையாள அட்டையே கேட்பார்கள்.

கீழே போட்டு
குனிந்து எடு
என்பார்கள்.

இதற்காகவே
எப்பொழுதும் - எங்கள்
கழுத்துக்களில் எல்லாம்
சால்வை அணிந்திருப்பவர்கள்
நாங்கள்.

அவர்கள் கண்கள்
எங்கள்
கண்களை மட்டும்
பார்த்ததே இல்லை.

தையல் அக்கா
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்.

இவர்கள் வார்த்தைகள் கூட
ஒரு கன்னியுடன்
கதைப்பதாய் இல்லை.
சொல்களில் கூட - ஒரு
கண்ணியம் இல்லை.

வீதிகளில் எல்லாம் - அவர்கள்
நிற்பார்கள் - நீ
கவனம் என்றாள் அம்மா.
எங்கள்
விதிகளில் கூட எல்லாம்
இவர்கள் தானே நிற்கிறார்கள்??

இவை எல்லாம்
உங்களுக்கு அங்கு
புதுப்பேச்சு,
எங்களுக்கோ இங்கு
பழகிப்போச்சு..

................

22.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் 'கவிதை நேரம்' நிகழ்ச்சியில் 'பழகிப்போச்சு' என்கின்ற தலைப்பில் இடம்பெற்ற எனது கவிதை. இந்தக் கவிதையோடு கவித்தோழன் முகம்மது பாஸ்லி மற்றும் நிந்தவூர் ஷிப்லி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

.

முல்லைத்தீவு சிறுவனும் ஊடகங்களின் சின்னப்புள்ளத்தனமும்..


நான் அதிகம் அரசியல் பக்கம் தலை காட்டுவது மிக குறைவு. காரணம் பயம் என்பது மட்டுமல்ல பயமேதான். என்னய்யா சும்மா வேலில போற ஓணான புடிச்சு நம்ம வேட்டிக்குள்ள போடா முடியுமா. அது மட்டுமல்ல அரசியலைப் பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடோ அல்லது அரசியல் நோக்கு அறிவோ இருத்தல் வேண்டும். நமக்கு இது இரண்டும் இல்லேங்க. சரி அதை விடுத்து இவற்றை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், உங்களுக்கே புரிந்திருக்கும் நான் ஒரு அரசியல் சமாச்சாரத்தைப் பற்றி பேச வரப் போகிறேன் என்பது. இதை நான் ஒரு அரசியல் பதிவாக இல்லாமல் முடிந்தளவு எனது உணர்வு ரீதியான வெளிப்பாட்டு பதிவாகவே உருவப் படுத்த முயல்கிறேன்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நமது தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் பேசித் தள்ளிய விடயம் அந்த முல்லைத்தீவு சிறுவன் பற்றிய கதை. ஊடகங்கள் தங்களுக்கு செய்தி கிடைத்துவிட்டால் போதும் என மட்டும் எண்ணி அதனால் வரும் எதிர்வினைகளை கொஞ்சம் கூட ஜோசிக்காமல் சுயநலமாக செயற்படுகின்றனவா என்பதையும் இந்த சம்பவம் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பல மாற்றுக்கருத்துக்கள் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன. எனக்குள்ளேயும் பலவகையான முரண்பாட்டு கருத்துக்கள் கூட வந்துதான் போயின. என்னதான் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால் இந்த செய்தி அந்த மாணவன் மற்றும் அவரது குடும்பம் போன்றோருக்கு பல சிக்கல்களை உருவாக்கக் கூடியன என்றே சொல்ல வேண்டும். அந்த சிக்கல்கள் நேரானதாகவோ அல்லது மறைமுகமானதாகவோ இருக்கலாம். இது எனது பயம்.

அந்த சிறுவன் குறித்த அந்த மிக முக்கிய அமைச்சரின் கால்களில் விழவில்லை என்பதே அந்த பரபரப்பான செய்தி. இந்த சம்பவம் இவ்வாறே இருந்துவிட்டுப் போனால் பரவாயில்லை. ஆனால் இந்த சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வெளிக்கிட்டாலேயே பல பாதகமான சிக்கல்கள் உருவாகும். இதை சிலர் ஏன் தங்கள் சொந்த லாபத்திற்காக அரசியல் ஆக்கமாட்டார்கள் என்கின்ற ஒரு சந்தேகமும் எனக்குள் இருக்கிறது? எவ்வாறு என்று ஜோசித்தால் பல வகையான கேள்விகளை இந்த சம்பவம் உருவாக்குகிறது. இந்த சிறுவன் அந்த இடத்திற்கு வருவதற்கு முதல் அந்த சிறுவன் யாரோ ஒரு தரப்பினரால் இவ்வாறு நீ நடந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டு அறிவுறுத்தப்பட்டானா? அப்படியாயின் அந்த அறிவுறுத்தல்களை அவனுடைய பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் அல்லது யாரோ ஒரு குழுவினர் தான் வழங்கினார்களா? இது குறித்த அமைச்சரையும் அவர் சார்ந்த அரசாங்கத்தையும் அவமானப் படுத்தவேண்டும் அல்லது கேவலப் படுத்த வேண்டும் என யாரும் போட்ட திட்டத்தில்தான் இந்த சிறுவன் மாட்டிக்கொண்டானா? அல்லது இந்த அளவிற்கு ஜோசித்து தானாகவே செய்வதற்கு அவனது சிந்தனை ஆளுமை அடைந்து விட்டதா? இந்த நிகழ்ச்சி அந்த குறித்த அமைச்சரை அல்லது அவர் சார்ந்த அரசாங்கத்தை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டதா? என பல வகையான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது இந்த சம்பவம்.


மறு புறத்தில், பல உணர்ச்சி மிக்க தமிழர்கள் சிறுவன் செய்தது 'சபாஷ்' என மார்பு தட்டி அந்த சிறுவனை வாழ்த்தவும் செய்கிறார்கள். அதற்குள் சில மாண்பு மிக்க தமிழர்கள் 'நீ எங்கள் இனமடா' என்று கொஞ்சம் கூட அறிவில்லாமல் பெருமைப் படுகிறார்கள். ஆகவே அந்த சிறுவன் செய்தது சரியா? அல்லது தவறா? நமது தமிழர்கள் இன்னொருவருடைய காலில் விழுவது என்பது காலா காலமாய் இரண்டு விடயங்களுக்காக நடைபெறுகிறது. ஒன்று அவர் மேலுள்ள மரியாதை, மதிப்பு காரணமாக அவர் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்பதற்காய். இரண்டாவது இன்னொருவரின் காலில் விழுந்து அவரை உசுப்பேத்தி விட்டு தங்கள் காரியங்களை சாதித்தல் (அதுதான் வாளி வைக்கிறது எண்டு சொல்லுவாங்களே).

அப்படியாயின் இந்த சிறுவன் மேலே சொன்ன இரண்டாவது காரணத்திற்காய் விழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. காரணம் அவன் இன்னும் சிறுவன். அப்படியென்றால் அவன் முதற்காரணத்திற்காகவே அவர் கால்களில் விழுந்திருக்க வேண்டும். அனால் அதை அவன் செய்யவில்லை. ஒருவர் கால்களில் விழுவதும் விழாமல் இருப்பதும் அவரவர் விருப்பம், கொள்கைகளைப் பொறுத்தது. (அந்த சிறுவனை காலில் விழும்படி சூழ இருந்தவர்கள் நிர்ப்பந்தித்ததும் என்னை கொஞ்சம் வேதனைப்பட வைத்தது.) ஒரு சிறுவனுக்கு தனக்கென்று சில கொள்கைகள் இருக்கக் கூடாதா? அப்படி இருப்பின் அது ஆரோக்கியமான வளர்ச்சிதானே. அவன் அவனாக இருக்கின்றான் என்று நாம் பெருமைப் பட வேண்டாமா? அதை விடுத்து ஏன் அந்த நிகழ்வை ஒரு சிங்கள தமிழ் முரண்பாடாக நாம் பார்க்க வேண்டும். சிலவேளை அந்த இடத்தில் அந்த அமைச்சர் இல்லாமல் யார் இருந்திருந்தாலும் அவ்வாறுதான் செய்திருப்பான் என ஏன் நாங்கள் ஜோசிக்கக் கூடாது?

அவன் இந்த சம்பவத்தை தானாகவே எண்ணி செய்த்திருப்பானாயின் அவனை நாங்கள் மதித்தே ஆகவேண்டும். எதற்காக? அவன் அமைச்சரை அவமானப் படுத்தினான் என்பதற்காகவா? இல்லை. இந்த வயதிலேயே தனக்கென்ற கொள்கைகளுடன், இப்படித்தான் வாழ வேண்டும் என்கின்ற உயரிய நோக்கோடு 'அவனாக' வாழ்கிறான் என்பதற்காய். அத்தோடு அவன் சொன்ன காரணங்களையும் நான் மதிக்கிறேன். ஏதோ அவனுடைய வயதிற்கு அவன் அதிகமாகவே ஜோசிக்கிறான். ஆக, அவன் தானாகவே இவ்வாறு ஜோசித்து நடந்திருப்பானாயின் அவன் அந்த அமைச்சரையோ அல்லது அரசாங்கத்தையோ அவமானப் படுத்தவேண்டும் என்கின்ற ஒரு நோக்கோடு செய்திருக்க முடியாது. அவ்வாறு அந்த நோக்கத்தோடு செய்யப்படாத ஒரு சிறுவனின் செயலை பெரியவர்கள் இன்னுமொரு மாற்று அர்த்தத்தோடு பார்ப்பது மிகவும் கேவலமான செயல் என்றே தோன்றுகிறது.

சரி, பிழை போன்றவற்றை விடுத்து, இந்த சம்பவத்தை ஊடகங்கள் சரியாக வெளிப்படுத்தினவா என்ற கேள்வியே எனக்கு மிக முக்கியமானது. அதிலும் அந்த காணொளியைக் கூட சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த செய்திகள் அந்த சிறுவனை, அல்லது அவனது பெற்றோர்களை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை இந்த ஊடகங்கள் சிந்தித்தனவா? இந்த நிகழ்ச்சியை கடும் சிங்களப் போக்காளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி எப்படியெல்லாம் அரசியல் மயப்படுத்தப்படப் போகிறது என்பதையும் இந்த ஊடகங்கள் கொஞ்சமேனும் சிந்தித்தனவா? அவ்வாறு இந்த நிகழ்ச்சி அரசியலாக்கப் பட்டால் அந்த சிறுவனின் எதிர்காலம், மற்றும் அந்த பெற்றோர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும் இவர்கள் ஏன் ஜோசிக்க வில்லை. அந்த சிறுவன் 'தமிழன்' என்றெல்லாம் சில ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மறைமுகமாக அந்த 'தமிழன்' என்ற வார்த்தையில் அந்த சிறுவனை யாருக்கு ஒப்பிட்டிருந்தார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல அந்த செய்தியை வாசித்த அனைவருக்கும் புரிந்திருக்கும். இது அந்த சிறுவன் மீதான இன வெறியாளர்களின் பார்வைக்கு இலகுவாக பெற்றோல் போடும் என்பதை ஏன் அந்த ஊடகம் நினைக்கவில்லை.

எனவே, எது எப்படி இருப்பினும் ஊடகங்கள் கொஞ்சமேனும் தங்கள் சமூக நல்லெண்ணக் கொள்கைகளை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் ஊடக சுதந்திரத்திற்காக மக்களின் சுதந்திரத்தை கெடுக்க முற்படக்கூடாது. அதுவும் இன்றைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தங்கள் ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக, சரியான ஆளுமையோடு நகர்த்த வேண்டும் இந்த ஊடகங்கள். அதுவே எனதும் எமது மக்களின் வேண்டுதலும் கூட.


.

Tuesday, September 20, 2011

வாசிப்பது தப்பா??


கடந்த இரண்டு வாரங்களாக கடும் வேலை. கொழும்பில் சில நாட்கள் வவுனியாவில் சில நாட்கள் மன்னாரில் சில நாட்கள். தொடர்ச்சியான வேலைப் பளு, அலைச்சல் இவற்றால் வந்த எரிச்சல் இவை அனைத்தையும் தாண்டி சரியாக இணையத்தை அலச முடியல என்கின்ற ஒரு எக்ஸ்ட்ரா எரிச்சலும் கூட. ஆனாலும் இந்த எரிச்சல்களுக்கு மத்தியில் பல நல்ல காரியங்களும் நடந்தேறியதை குறிப்பிடாமல் இருந்துவிட முடியாது. அதில் மிக முக்கியமான ஒன்று லண்டன் தமிழ் வானொலியில் நான் வழங்கிய செவ்வி, மற்றும் வசந்தம் தொலைக்காட்சியில் நான் வழங்கிய செவ்வி போன்ற இரண்டு விடயங்கள். சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன் என்றால் நான் பேசப்போகும் தலைப்பை சிந்திக்க வைத்தது இந்த செவ்விகளில் ஒன்றுதான். லண்டன் தமிழ் வானொலி என்னை பேட்டி கண்டதோடு சேர்த்து ஒரு நல்ல காரியத்தையும் செய்திருந்தார்கள். அதுதான் எனது செவ்வி தொடர்பான நேயர்களின் கருத்தை நேரடியாக வானலையில் இணைத்துக்கொண்டமையும் அவர்களோடு என்னை பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தமையும் ஆகும். வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் வானொலி.

இவ்வாறு இடம்பெற்ற அந்த நேயர்களுடனான உரையாடல்களில் அதிகமாக பேசப் பட்ட விடயம் இந்த வாசிப்பு. அதிலும் சிலர் வாசிப்பினால் ஏற்படும் தீன்மைகளை மிக சுதந்திரமாக எடுத்துக்கூறியமை என்னை இன்னும் சிந்திக்க வைத்தது. சரி விடயத்திற்கு வருவோம். எமது மூத்த அனுபவமிக்க எழுத்தாளர்களை நாம் சந்திக்கும் பொழுது காலம் காலமாய் எமக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரேயொரு அறிவுரை 'நிறைய வாசியுங்கள்' என்பதாகும். இது வெறுமனே கவிஞர்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல மாறாக எழுத்து உலகத்தில் இருக்கும் சகலருக்கும் அதிலும் மிகப் பிரதானமாக நம்ம பதிவர்களுக்கும் இது பொருந்தும். அவ்வாறு சொல்லப்படும் இந்த அறிவுரை சரியானதா அல்லது தவறானதா என்பதுதான் இந்த பதிவின் மிக முக்கியமான விடயம்.


ஒரு சாரார் சொல்கிறார்கள், அதிகம் வாசிக்கும் பொழுதுதான் எமது எழுத்துக்கள் தரமானதாக வரும் என்று. அதேபோல இன்னும் சிலர் சொல்கிறார்கள் இல்லை, மற்றவர்களை வாசிக்கும் பொழுது அவர்களுடைய அந்த பாணி அல்லது தழுவல் நமக்குள்ளும் வந்துவிடும் என்று. இதில் எது சரி எது தவறு என்று பார்த்தால், இவ் இரண்டு கருத்துக்களிலும் நியாயம் இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

முதலாவதாக, இந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். அதிகம் வாசிக்க வேண்டும் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வதற்கான காரணங்கள் நிறையவே உண்டு. அதில் நேர்மையான காரணங்களும் உண்டு. காழ்ப்புணர்ச்சியோடு கூறும் காரணங்களும் உண்டு. மிகவும் நாகரிகமான மூத்த எழுத்தாளர்கள் இந்த கருத்தை கூறுவதன் பொருள் என்னவெனில், முதலாவது அவர்கள் வாசியுங்கள் என்று கூறுவதன் பொருள் 'படித்தல்' என்பதையும் சேர்த்தே பொருள் படுகிறது. எந்தவொரு விடயத்தையும் நாங்கள் சரியாகப் படிக்காமல் அதாவது கற்றுக் கொள்ளாமல் அதில் கால் பதித்தல் அபாயமானதே. ஆகவே, இவர்கள் வாசியுங்கள் என்று கூறுவது இந்த 'கற்றுக்கொள்ளுங்கள்' என்ற மிக முக்கியமான பொருளை மறைமுகமாக விளக்குவதே ஆகும். என்னைப் பொறுத்த மட்டில் இதுவே மிக முக்கியமான காரணம் இந்த வாசியுங்கள் என்கின்ற அறிவுரைக்கு.

இதைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கிறது. ஆரம்பத்திலே எமக்கென்று ஒரு பாணி அல்லது போக்கு இருப்பதை நாம் இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ள முடியாது. ஆகவே இவ்வாறான பல வேறுபாடுகள் நிறைந்த மூத்தவர்களின் படைப்புக்களை (கட்டாயமாக மூத்தவர்களின் படைப்புக்களை மட்டும் தான் வாசிக்க வேண்டும் என்று இல்லை. தரமானதை வாசிக்கலாம்) வாசிக்கும் பொழுது எமக்கென்று இருக்கும் அந்த பாணியை நாம் இலகுவாக கண்டுகொள்ள வாய்ப்பாக அமையும். இதைத்தவிர சில பெரியவர்கள் தங்கள் சுய புராணம் பாடுவதட்காகவும் 'எங்கள் போன்றவர்களின்' அல்லது 'பொதுவாக பெரியவர்களின்' (தங்களையும் இதற்குள் சேர்த்துக்கொண்டு) புத்தகங்களை வாசியுங்கள் என கூறுவார்கள். எனக்கு அண்மையில் ஒரு பெரிய எழுத்தாளர் கூறினார் 'அமல்ராஜ், நீர் நிறைய வாசியும். உதாரணமாக எண்ட புத்தகங்களை வாசியும் நிறைய படித்துக் கொள்வீர்'. இதை நான் சரியாகத்தான் எடுத்துக்கொண்டேன் இருந்தும் தனது புத்தகங்கள் எனக்கு நல்ல பாடமாக அமையும் என அவர் முடிவெடுக்க முடியுமா? இவ்வாறான இடங்களில் இந்த வாசியுங்கள் என்கின்ற பெரியவர்களின் அறிவுரை பல்ப்பு வாங்குகிறது.

அடுத்து இதன் இரண்டாவது கருத்தை நோக்கினால், வாசிப்பு தழுவல் போன்ற இயற்கையான மாற்றத்திற்கு எங்களை கொண்டுபோகும் என்பதாகும். இதில் எனக்கு நிறையவே உடன்பாடு இருக்கிறது. அதாவது ஒருவருடைய கவிதைகளை அடிக்கடி வாசிக்கும் பொழுது அந்த கவிதைகளின் தழுவல் அல்லது பாணி நமது விரல்களுக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக மேத்தாவின் கவிதைகளை நான் ஆரம்பத்தில் அதிகம் வாசித்து எனது கவிதைகளை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது என்னை அறியாமலே அவரது பாடு பொருள், வசன அமைப்பு, வார்த்தை நடை போன்ற விடயங்கள் எனது விரல்களுக்குள் வந்து அதிகம் தொல்லை பண்ணியது. எனக்கென்று ஒரு தனிப் பாணியை நான் அடைந்த பிறகும் சில வேளைகளில் சிலரது படைப்புக்களை வாசிக்கும் பொழுது அது என்னை அறியாமலே அந்த தழுவல் வந்து விடுகிறது. இது எமக்கு மட்டுமல்ல பல மூத்த எழுத்தாளர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது. உதாரணமாக அண்மையில் ஒரு மூத்த கவிஞரின் கவிதை நூலை ஆற அமர இருந்து வாசித்தேன். அவரது அணிந்துரையை வாசிக்காமல் நேரடியாகவே கவிதைகளுக்குள் நுழைந்தேன். ஈழத்து இலக்கியத்திலே தனக்கென்று ஒரு கவிப் பாணியை அமைத்து வைத்தவர் காசி ஆனந்தன். இவரது கவிதைகளிலே அந்த நறுக்கு கவிதைகள் மிகப் பிரபலம். அந்த கவிதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன். எனவே இந்த மூத்த எழுத்தாளரின் சிறு சிறு கவிதைகளைப் படித்த பொழுது இவரின் கவிதைகளில் காசியானந்தனின் தழுவல் எனக்கு மிக இலகுவாகவே விளங்கியது. பின்னர் அவர் அணிந்துரையையும் வேறு ஒரு சந்தர்பத்திலே அவரது கருத்தையும் கேட்ட பொழுதுதான் தெரியும் இவருக்கு காசி ஆனந்தனின் கவிதைகள் மிக மிக பிடிக்கும் என்று. ஆகவே அந்த அது காசியானந்தனின் தழுவல்தான் என உறுதி செய்து கொண்டேன்.

இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இந்த தழுவல் என்பது வாசிப்பினால்தான் வந்து விடுகிறது. இதை நாம் தடுப்பது மிகக் கடினம். இது உளவியல் ரீதியான ஒரு விடயமும் கூட. அப்படியாயின் இதற்கு என்னதான் அறிவுரை. சிம்பிள். கற்றுக்கொள்வதற்காய் மட்டும் வாசியுங்கள். அத்தோடு தரமான படைப்புக்களை எப்பொழுதும் பொழுது போக்கிற்காய் வாசிப்பதை விடுத்து இதில் எத்தனை விடயங்கள் எனக்கு கற்றுக்கொள்வதற்கு இருக்கோ அத்தனை விடயங்களையும் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையோடு வாசியுங்கள். அதிலும் உங்களுக்கு மிக மிக பிடித்த ஒருவரின் படைப்பை வாசிக்கும் பொழுது இன்னும் கவனமாக இருத்தல் அவசியம். காரணம் அவர்களை எங்களுக்கு பிடிக்கும் என்பதால் அவர்களது தழுவல் இலகுவாகவே எமக்குள் வந்துவிடும். கவிதை நூல்களை வாசிக்கும் பொழுது அதில் எவ்வாறு வார்த்தைகள் போடப்படுகின்றன, எவ்வாறான பாடு பொருள்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன, எதுகை மோனை போன்ற நுட்பங்கள் எவ்வாறு பாவிக்கப் படுகின்றன, வார்த்தை ஜாலம், விளையாட்டு எப்படி இருக்கிறது, சந்தம் எப்படி ஒத்து போகிறது போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளும் நோக்கோடு வாசித்தால் நாங்கள் அதிகம் படிக்கிறோம் என்பதை உணரலாம். அத்தோடு இந்த தழுவலை குறைப்பதற்கு இன்னுமொரு வழி நமது வாசிப்பை மட்டுப் படுத்தக் கூடாது என நினைக்கிறேன். ஒருவருடைய எழுத்துக்களை மட்டும் வாசித்தல், ஒருவருடைய படைப்புக்களை மட்டும் தொடர்தல் என்பனவும் இந்த தழுவலுக்கு இன்னும் துணை போகும் காரணங்களாகும். எமது வாசிப்பை பரந்து படுத்திக் கொள்தல் வேண்டும் என்றே சொல்ல வருகிறேன். கண்டதையும் கண்டு வாசிக்க வேண்டும்.

எனவே, வாசிப்பு என்னுடைய எழுத்தை இன்னொருவருடைய சாயலுக்கு கொண்டு சென்றுவிடும் என்று பயப்படுகிறவர்களுக்கு ஒன்று சொல்லலாம். சாயல் ஒன்றாக இருக்கலாம். ஆனால் தமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் போதும். எமது தமிழ் இலக்கிய வரலாற்றில் கூட பாரதி, பாரதிதாசன் என பலரது கவிதைகளில் இன்னொருவருடைய சாயல் இருந்தது என்பது உண்மைதான். அனால் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டதன் விளைவே இன்றுவரை அவர்கள் படைப்புக்கள் நிலைத்து நிற்கின்றன.

எனவே, வாசித்தல் எப்பொழுதுமே நன்மையே. அது தீமையாய் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி.


பி.கு. இது முற்று முழுதாக எனது தனிப் பட்ட கருத்து. விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு தாராளமாய் உண்டு. எனவே, உங்கள் கருத்தை தாராளமாய் சொல்லலாம்.


.

Monday, September 12, 2011

தேஞ்சு போன செருப்பும் நன்றி கெட்ட மனிதரும்.


அன்பின் நண்பா,

நீ என்றும் நலமாகவே இருப்பாய் என்பது எனக்கு தெரியும். அதற்காக நான் நலம் இல்லை என்று உனது அனுதாபத்தை தேடுவதற்கும் நான் தயாரில்லை. உனது கால்களில் கிடக்கும் பொழுது எனக்கு புரியாத பல விடயங்கள் இப்பொழுது இந்த குப்பை மேட்டிற்கு வந்ததும் உதயமானது. இதைத்தான் எங்கள் முன்னோர்கள் குப்பை மெட்டு ஞானம் என்றார்களோ?? சரி விடயத்திற்கு வருகிறேன்.

நண்பா, உன்னை நான் வெறுக்கிறேன். காரணம் நீ என்னை எரிந்து விட்டாய் என்பதற்காய் அல்ல. நீ என்னை ஏமாற்றியதற்காய். நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என்பதற்கு எனது இந்த கீழ் பக்கமே சான்று. உனக்காக நான் எத்தனை வலிகளை தாங்கினேன் தெரியுமா? உனக்காக எத்தனை அழுக்குகளை தெரிந்தும் மிதித்தேன் தெரியுமா? உனக்காக எத்தனை வீட்டு வாசலில் உன்னை எதிர்பாத்து காத்திருந்தேன் தெரியுமா? இறுதியில் நன்றிமறந்து என்னை தூக்கி எறிந்து நீயும் ஒரு சராசரி மனிதன் என்பதை நிரூபித்து விட்டாய்.

என்னை முதல் முறை நீ பார்க்க வந்தபோது உன்னையும், பார்த்துவிட்டு போகும் ஒரு பைத்தியக் காரன் என்றுதான் நினைத்தேன். நீ என்னை தொட்டபோது நான் சிரித்தேன். அருகில் இருந்தவன் என்னை பொறாமையோடு பார்த்த போது ரொம்ப பெருமையாய் இருந்தது. இறுதியில் என் முதலாளி சொன்ன விலையே நீ கொடுத்தாய் எனக்கு. நான் உன் காலிலே கிடப்பவன் என்று தெரிந்தும் நீ என்னை விலை கொடுத்து வாங்கிய அந்த பெருந்தன்மையை நான் என்றும் மறவேன். நான் அழகாக இருந்ததே உன் கால் அழகானதற்கு காரணம். மறந்து விடாதே. நான் வலிகளை தாங்கிக்கொண்டதே உன் கால்கள் இன்னும் நின்மதியாய் இருக்க காரணம்.

செருப்பு கூட என்ன விலை பார்த்தாயா என்றெல்லாம் மனிதர்கள் எங்களை இளக்கமாக பேசிய போதெல்லாம் எனது பிறப்பை எண்ணி கவலைப் பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறப்பைப் பற்றி நான் என்றுமே கவலை கொண்டதில்லை. அந்த முட்களை நீ வெறுத்தாய். நானோ அவற்றை உனக்குத் தெரியாமல் நேசித்தேன். காரணம் எனக்கு உன்னை விட நன்றியறிதல் அதிகம். அவர்கள் இல்லையென்றால் நாங்கள் எது..?? உனது படுக்கையறைக்கு வராவிட்டாலும் உன்னுடன் நீ படுக்கும் வரை இருந்திருக்கிறேன். உன்னை விட உன் காதலி கூட என்னை அதிகம் விரும்பினாள். எத்தனை தடவை என்மேல் ஏறி உன்னை அனுபவித்திருப்பாள் தெரியுமா? எப்பொழுதும் என்னை வெளியிலேயே போட்டுவிடும் நீ உன் காதலி வீட்டிற்கு யாரும் இல்லாத நேரம் போகும்போது மட்டும் என்னை வீட்டிற்குள்ளே அந்த கதவுகளுக்கு பின்னால் கொண்டுபோய் கவனமாய் வைத்ததன் அர்த்தம் எனக்கு இன்னும் புரியவில்லை. அன்று கூட உன்னை நான் காட்டிக்கொடுத்துவிடுவேன் என நீ பயந்தாயோ என சிந்திக்க தோணுகிறது.

என் அன்பிற்கினிய நண்பனே, உன்னை நான் அதிகம் நேசித்ததை விட உனது பாதங்களை நான் வாசித்ததுதான் அதிகம். நீ என்னை மிதிக்கும் போதேல்லாம் நான் கவலையின்றி சிரித்ததற்கு இப்பொழுது நீ கொடுத்த பரிசுதான் 'பழசு'. ஏதோ ஆறு மாதங்கள் மட்டும் உன்கூட வாழ்ந்தாலும் ஒரு ஆத்ம திருப்தி நான் ஓய்வு பெறும் வரை உனக்கு நன்மையே செய்திருக்கிறேன் என்பதால். உன் கூடவே நான் சென்ற பாதைகள் அனைத்தும் எனக்கு பாடம். உன்னை விட நடை பயணத்தை அதிகம் வெறுத்தவன் நான் தான். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, நீ என்னை ஒருமுறை 'சனியன்' என பேசியது. உனக்கு அது ஞாபகம் இருக்கிறதா? அந்த வரம்பில் சறுக்கி நீ கீழே விழுந்த போது நீ கீழே விழுந்ததற்கு நான் தான் காரணம் என அனைவரிற்கும் அப்பட்டமாய் பொய் சொன்னாய். அதற்கு உண்மையான காரணம் நீ அந்த பரிமளா மாமியைப் பார்த்து வாய் பிளந்து நடக்கையில் அந்த வரம்பின் விளிம்பில் உனது காலையும் என்னையும் வைத்ததினால் தான் என்பதை இன்று வரை என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும். ஆனாலும் உன்னை அன்றே மன்னித்து விட்டேன் உங்கள் மனிதர்களைப் போல் அல்லாமல்.

எனது விலையைப் பற்றி அதிகம் சொல்லித்தந்த அந்த கடை முதலாளிகள் எனது நிலையை பற்றி சொல்ல மறந்து விட்டார்கள். தேய்ந்து விட்டதால் உன்னை எறிகிறேன் என்று எனக்கு சொன்னாய். அது நியாயம் தான். ஆனால் ஒன்றை யோசித்தாயா, நான் தேய்ந்ததெல்லாம் உனக்காய்தான். மனிதர்கள் எங்களை விட உயர்ந்தவர்கள் என எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியிருக்க ஆறு மாதங்கள் உன்னை காப்பாற்றியவனை புதிதாக வந்தவனைப் பார்த்ததும் எப்படி காய் வெட்டி தூக்கி எறிய முயன்றாய்? அதற்காக பழையதாய்ப் போன என்னை உனது நடு வீட்டில வைக்க வேண்டும் என்பது எனது ஆவல் அல்ல. ஆகக் குறைந்தது என்னை ஒரு ஏழைக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா. உன்னுடன் நான் இருந்ததை விட அவர்களுடன் சந்தோசமாக இருந்திருப்பேன். நீங்கள் மனிதர்கள். எங்களை விட உயர்ந்தவர்கள். அப்படியிருக்க நான் யோசிப்பதை கூட ஏன் உங்களால் ஜோசிக்க முடியவில்லை?

எனது நண்பனே, நான் மனிதர்களைப் போல அல்ல. மாறாக எனது உயிர் போகும் வரை என்னால் ஒருவர் பயனடைய வேண்டும் என ஆசைபடும் ஏங்கும் ஒருத்தன். புதியவனை நீ வீட்டிற்குள் எடுக்கும் பொழுது நான் வெளியே அனுப்பப் பட்டேன். அப்பொழுது அந்த புதியவன் என்னைப் பார்த்து ஏளனமாக பல் இளித்தது இன்னும் எனக்கு கடுப்பேத்துகிறது. அவனை எண்ணி நான் கொஞ்சம் சிரித்துவிட்டு வந்தேன். அவனுக்கும் இன்னொரு ஆறு மாதங்களில் எனது நிலைமைதான் என்பதை அந்த இளம் தோல் உணரவில்லை. காரணம் அவன் புதியவன் என்பதால் மனிதர்களைப் பற்றி அவனுக்கு இன்னமும் சரியாக தெரியவில்லை. புதியவை வர பழையவற்றை எறிந்து விடுவார்கள் என்பதை.

இறுதியாக உனக்கு ஒன்றை சொல்லுகிறேன். எங்களை உங்கள் கால்களில் மாட்டிக்கொள்ள நீ கொடுத்து வைத்தவன். ஏன் என்று கேட்கிறாயா? என்னை பார்த்து அதிக நாட்கள் ஆசைப்பட்டு அழுதுகொண்ட அந்த கால்கள் அற்ற உனது அயல் வீட்டுக்காரன் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறான். பழசு, அழகில்லை என்பதால் நான் உனக்கு தேவை இல்லை ஆனால் பலருக்கு கால்களே இல்லை. தேவை இல்லாமல் ஆடம்பரமாய் எங்களை வாங்கும் பொழுதெல்லாம் அந்த கால்கள் அற்ற உன் நண்பர்களை எண்ணிப் பார். நீ மனிதன் அல்லவா? நானே இவ்வளவு ஜோசிக்கிறேன். நீ எவ்வளவு ஜோசிக்க வேண்டும் என தயவு செய்து சிந்தித்து பார்.

அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயமாக நான் செருப்பாகவே பிறப்பேன். உங்களைப் போன்று நன்றி கெட்ட மனிதர்களாய் வாழ்வதை விட காலம் முழுவதும் உங்கள் கால்களில் கிடந்து உங்களை வலிகளிலிருந்து காப்பாற்றும் ஒரு செருப்பாக இருப்பதில் எனக்கு அதிகம் பெருமை.

என்றும் உன் அன்பின்
செருப்பு
குப்பைத் தொட்டியில் இருந்து.


.

Friday, September 9, 2011

அனைத்தும் உன்னாலே.


உன்னை -
பட்டுப் போகையில்
காற்று நிக்குது - நான்
தொட்டுப் பார்க்கையில்
வேர்த்துக் கொட்டுது..

விடிந்து போயும்
கனவு முளைக்குது - அதை
உடைத்துப் போட்டும்
விரைவில் தழைக்குது.

உன்னை நினைக்க
உயிரும் பத்துது - அதை
கொஞ்சம் அணைக்க
குருதியும் வத்துது.

வந்து மனதை
கொள்ளை இடு - இல்லை
நொந்த எனக்கு
கொள்ளி இடு.


.

Monday, September 5, 2011

காலையிலேயே காதலால் கடுப்பேத்தியவர்கள் - பேருந்தில் பிரளயம்.

தலைப்பைப் பார்த்து இதுதான் விடயம் என்று இலகுவாக புரிந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். புரிந்து கொள்ளாதவர்கள் கூட இது அதுவா இருக்குமோ அல்லது இதுவா இருக்குமோ என்றெல்லாம் அதிகம் ஜோசிக்கத் தேவை இல்லை. இந்த விடயத்தில் இது தான் எனது முதல் பதிவு ஆனால் அதிகமான பதிவர்கள் இந்த விடயத்தை தாராளமாக, பிய் பிய்யென்று பிய்யத்துத் தள்ளிவிட்டனர். அதுவும் இந்த விடயத்தைப் பற்றி பேசாத கொழும்புப் பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.


சரி விடயத்திற்கு வருவோம். முதல் அந்த உண்மைக் கதை. பின்னர் அது தொடர்பான எனது பார்வை. அதன் பின் உங்கள் பார்வை பின்னூட்டமாக. ஓகே..??..ஓகே!!

வழமை போலவே காலையில் எழுந்து பற பற என்று ஆடைகளை அயன் செய்து மாட்டி, அக்கா தயாரித்த பால் கோப்பியையும் அரைவாசியில் வைத்துவிட்டு எனது இறுக்கமான காலணிகளை மாட்டிக்கொண்டிருந்தேன் அந்த எனது கட்டிலின் மேல். 'பஸ்சுக்கு சில்லறை இருக்கா தம்பி..' என அக்கா கேட்ட போதுதான் அட இன்றும் எனது கார் இல்லை என்பது ஞாபகம் வந்தது. 'அட ராமா.. இண்டைக்கும் பஸ்சா..??' என அலுத்துக்கொண்டு சட்டைப் பைக்குள் அக்கா வைத்த அந்த இருபது ரூபா நோட்டை கையிலெடுத்துகொண்டு அந்த பேருந்து தரிப்பிடம் நோக்கி ஓடினேன்.

சில வேளைகளில் காரியாலயத்திற்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தால் நான் எனது இல்லத்திலிருந்து 154 என்கின்ற பாதையில் செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். (மிக அரிதான முடிவுதான்.. காரணம் கொஞ்சம் சோம்பேறி.. ஆதலால் காரில் ஏறி மிதிப்பதே இலகு என்பதால் பேருந்தை அதிகம் விரும்புவது இல்லை..) இது கிரிபத்கொடவில் இருந்து அங்குலான வரை போகும் பேருந்து. இன்றும் அதே பேருந்து வழமைபோலவே போதுமான அளவு சன நெரிசல் (இந்த பேருந்துகளில நொங்கு நொங்கு எண்டு நம்ம கால மிதிக்கேக்க வரும் பாருங்க ஒரு கோவம்...ம்ம்..)

கொழும்புவில் பேருந்துகளில் செய்யும் பயணங்களைப் பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. சில பாதைகளில் ஓடும் பேருந்துகளில் வெறும் இருக்கைகளை பார்ப்பதே அரிது.. அவ்வாறான ஒரு பேருந்து பாதையே இந்த 154 உம். இதற்கு இப் பேருந்து கொழும்புவின் மிக முக்கியமான பகுதிகளாகிய கொழும்பு 7,பொரளை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை போன்ற பகுதிகளினூடாக பயணிப்பதே முக்கியமான காரணம் எனலாம். சரி விடயத்திற்கு வரலாம். இவ்வாறான ஒரு சன நெரிசல் நிறைந்த, பொது பேருந்தில் இன்று காலை நடந்த ஒரு சம்பவமே இது.

ஒருவாறு வாசலில் ஐந்து நிமிடங்கள் வௌவால் போல் தொங்கிக் கொண்டு பயணித்த எனக்கு ஒரு வயதானவரின் இறக்கம் கொஞ்சம்
நின்மதியைத் தந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒருவாறு இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று ஒரு இருக்கைக்குப் பக்கத்தில் எனது நிலையை இஸ்திரப்படுத்திக்கொண்டேன். ஒரு கை பேருந்தின் மேல் பிடியில், இன்னொரு கை முன் இருக்கையின் பிடிமானத்தில். எனது ஒரு கால் நிலத்தில் இன்னொரு கால் அருகில் நின்ற ஒரு அக்காவின் கால்களின் மேல் (சாரி அது நிச்சயமா ஆன்டியாத்தான் இருக்கணும்). அவர் அப்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டவர் என்பதால் எனக்கு அதிகம் துன்பம் கொடுக்கவில்லை எனது கால்களை எடுக்கும் படி.

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு காதல் ஜோடி. (சொல்ல முன்னமே அந்த நிலைமையை கற்பனை செய்ய தொடங்கியிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்..) காலையிலேயே இடுப்பு வலிக்க வலிக்க இடிபட்டு ஆபீஸ் போற எனக்கு இந்த சீன் கலைப் பார்க்க எப்படி கடுப்பாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அவள் தோளில் இவன். இவன் கன்னத்தில் அவள் உதடு. இருவரின் கைகளும் ஒரே இடத்தில் (????). அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா.. நான் வேற வயசுப் பையன், பக்கத்தில வேற ஒரு ஆன்டி, வெறுப்பு, அருவருப்பு, (கொஞ்சம் பொறாமை), கடுப்பு இதுகள் எல்லாம் சேர்ந்தால் எனக்கு எப்பிடி இருந்திருக்கும் எண்டு கொஞ்சம் ஜோசித்து பாருங்க மக்கள்ஸ்... இவ்வாறான காலை வேளை பேருந்து, மக்கள் நெரிசல் ஒருபுறம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சுற்றும் முற்றும், இதற்குள் இவர்களின் இந்த கீழ்த்தரமான நடத்தை எவ்வாறான கோவத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

படுக்கையறையில் பண்ண வேண்டியவைகளை ஹால் இல் பண்ணினீர்கள் விட்டோம். அதையே பின்னர் பார்க் இல் பண்ண ஆரம்பித்தீர்கள் சரி கண்டுக்கல. அதையும் தாண்டி அதை பீச், ஹோட்டல் எண்டு செய்ய ஆரம்பிச்சீர்கள், சரி பிழைச்சு போகட்டும் எண்டு சய்லேன்ட் டா இருந்திட்டம், இப்ப இந்த பப்ளிக் பஸ் லேயும் அத செய்ய தொடங்கிட்டீர்களே... விடுவோமா..??? ப்ளீஸ் விட்டிடுங்க..

அப்படியே அந்த இரண்டையும் இழுத்து ஒரு துவையல் துவைச்சா என்ன என்று வேற தோணியது எனக்கு. என்னபண்ணுறது.. மற்றவர்கள் போல அத கண்டுக்காதடா அமல்ராஜ் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது (எங்க அத கண்டுக்காம இருக்கிறது... நம்ம கண்ணும் அங்கதானே போய் தொலையுது... கோவிக்காதேங்க.. வயசுங்க... இது வாலிப வயசுசுசு....) அந்த சத்தம் ஒரு கலக்கு கலக்கியது அந்த பேருந்தை.

'யோவ் நீங்க டொரிங்டன் குத்தானே டிக்கெட் எடுத்தனீ.. இன்னும் இறங்கலையா...?' என அந்த காதல் ஜோடியைப் பார்த்து சகோதர மொழியில் ஒரு விளாசல் விளாசினார் அந்த பேருந்து நடத்துனர். நடத்துனர் ஏற்கனவே அவர்கள் நடத்தைகளைப் பார்த்து கடுப்பாகியிருக்க வேண்டும்.. அவர் குரல் அதை உறுதிப் படுத்தியது. எனக்கு லைட் டா சிரிப்பு வர ஆரம்பித்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த சாஜஹான் மும்தாஜ் திறு திறு என்று முளிக்கத்தொடன்கினர்.

'யோவ்.. உங்களத்தான்யா கேக்கிறன், இறங்கு இறங்கு..' என திரும்பவும் கூச்சலிட அந்த மும்தாஜ் சிம்பிள் ஆ ஒன்னு சொல்லிச்சு பாருங்க.. பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு..

'அப்ப, எங்களுக்கு அங்குலானைக்கு ரெண்டு டிக்கெட் தாங்க..'

அங்குலான என்பது இந்த பேருந்தின் பயண முடிவிடம். இந்த மிருகங்களை ஒருவாறு இங்கயே இறக்கிவிட்டிடலாம் என கொஞ்சம் ஆருதாலை இருந்த அந்த பேருந்து நடத்துனருக்கு இவர்கள் டீலிங் கொஞ்சம் கடுப்பைத்தான் ஏற்படுத்தியது. இருந்தும் அது வியாபாரம் என்பதாலோ என்னவோ அதை ஒத்துக்கொண்ட நடத்துனர் பணத்தை வாங்கிக் கொண்டு இரண்டு சிட்டைகளை கிழித்துக் கொடுத்துவிட்டுப் போனார். நான் அந்த நடத்துனராக இருந்திருந்தால் சிட்டை என்ன அவர்கள் சட்டைகலையே கிளி கிளிஎண்டு கிழித்துக் கொடுத்திருப்பேன். ஆக, இவர்களுக்கு தேவை இந்த சில்மிசங்களே ஒழிய தாங்கள் எங்கு போகிறோம் எங்கு இறங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. முடிவாக சொல்வதென்றால் 'இத (காதல்/காமம்) தவிர வேற வேல வெட்டி ஒன்னும் இல்லை..


அரைவாசியில் இறங்க வேண்டிய இவர்கள் அந்த சில்மிச (காதல்/காம) லீலை சந்தோசத்திற்காய் எங்குவரை என்றாலும் போகலாம் என்கிறார்களே... ஐயோ.. யாரு பெத்த பிள்ளைகளோ... நல்ல வேளை அந்த பேருந்து காலி வரைக்கும் போறதாய் இல்லை. இவங்கள என்னதான் பண்றது.. இப்படிப் பட்டவங்களுக்கு கடப்பாறைய எடுத்து கபாலத்தில ஒரே போடா போடனுமுங்க... அப்பத்தான் சரி..

காதல் எவ்வளவு ஒரு புனிதமான விடயம். அதை வைத்திருக்க வேண்டிய இடத்தில் அளவில் வைத்திருக்கு பொழுதுதான் அதன் புனிதம் பாதுகாக்கப் படும். காதல் பகிரங்கமாக பகிரப்படலாம் ஆனால் காதலோடு கலந்திருக்கின்ற சில காம உணர்வுகளை பகிரங்கமாக பகிர்தல் என்பது காதலை 'சீ' என்று சொல்ல வைத்துவிடும். காதல் உணர்வுகள பகிரங்கமாக, வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் துணிவு என்னவோ இந்த கொழும்பு காதலர்களுக்கு மிக்க அதிகம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு தொந்தரவு இல்லையா, இது பொது இடமே, நிறைய மனிதர்கள் இருக்கிறார்களே என்கின்ற எந்த உணர்வும் அற்ற ஒரு படைப்புக்கள் இவர்கள். இவ்வாறான இழிவான விடயங்களுக்காகவே பேருந்துகளை விரும்பும் காதலர்கள் ஒருபுறம் இதை அடியோடு வெறுக்கும் பயணிகள் ஒருபுறம் இந்த கொழும்பில். இதில் அதிகமானவர்கள் மாணவர்கள் அல்லது படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்கள் என சொல்ல முடியும்.

நண்பர்களே, உங்கள் பாலியல் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதை உங்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு இடத்தில் வைத்து பரிமாறிக்கொள்ளுங்கள். அதேபோல எங்கள் பொது உணர்வுகளையும் நீங்கள் மதிக்க வேண்டும். இதுவே அவர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம்.

இந்த சிறுவனுக்கு இன்றைய நாள் எப்பிடி ஆரம்பிச்சிருக்கு எண்டு பாத்தீங்களா.. இந்த கறுமங்கள் எல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வு 'எண்ட கார் வந்திடுச்சு......'


....

Thursday, September 1, 2011

எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' பற்றி மனம் திறக்கும் ஓர் இலங்கை இளம் பெண் எழுத்தாளர் த.எலிசபெத்...


வணக்கம், இறுதியான பல சர்ச்சைகளை உருவாக்கிய அந்த இலக்கியப் பதிவைத் தொடர்ந்து இப்பொழுது எனது மனம் பூரிக்கும் ஒரு சுகமான பதிவை கொண்டுவருகிறேன். எனது கவிதைப் படைப்பான 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்கின்ற நூலை ரசித்து வாசித்த வளர்ந்துவரும் இளம் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ராஜ் சுகா (த.எலிசபெத்) எனக்கு மின்னஞ்சலிட்ட தனது ரசனைக் குறிப்பு இது. பல உண்மைகளை அப்படியே சொல்லியிருக்கிறார். பெண் என்கின்ற தளத்திலிருந்து பார்த்தபடியால் பல ஆண் வரிகள் அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் எதையும் தவாறாக சொல்லவில்லை. (என்று நினைக்கிறேன்). சரி அவருடைய அந்த மடலைப் படியுங்கள்.

உங்கள் கருத்திற்கும், ரசனைக்கும் மிக்க நன்றிகள் சுகா.. உங்கள் எழுத்துப் பயணமும் வெற்றிகராமனதாக தொடர வாழ்த்துக்கிறேன்.


கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுக்கு வணக்கம்!


தங்களின் எழுத்துக்களை முதன்முதலில் முகப்புத்தகத்தின் வாயிலாகவே தரிசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.புதுக்கவிதைகளிலும் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய உங்களது எழுத்துக்களே என்னை ரசிக்கத்தூண்டியது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் உங்களுடைய கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண்ர்ந்துகொண்டேன்.
"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
"தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,


" ஊர் உறங்கியும்
உறங்காத‌
உன் தாலாட்டும்
இன்னும் என்
காதுகளில் கேட்கும்
ரகுமானின் 'ஜெய் கோ'தான்"...

என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

"முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,


"கிழவனாக சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்"

என அவர் குறிப்பிட்டது இங்கு நிஜமாகியிருப்பதில் மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,


" ஒற்றைக்காலும்
ஒற்றைக்கையும்
ஒற்றையாய் நிற்க என்
இதயம் மட்டும்
இரட்டையாய் அடிக்கிறது
இறந்துவிடுவதா
இல்லை மறந்து
வாழ்ந்து விடுவதா?"

என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,


"மானத்திற்கும்
ஆடைக்கும்
சம்பந்தமேயில்லை இவள்
அகராதியில்
பாவம்,
வெளியில் தெரிபவை
அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!"

என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,


" என்
இளமையின் தாகம்
உன்னுடைய தேகம்
தீருமா என் சோகம்
இதுவா காதல் வேகம்?

என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.


இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் உங்களுக்கென ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நன்றி
த.எலிசபெத்
Popular Posts