"நோக்கியோன் நோக்கிய பொருளை நோக்கியவாறே நோக்கின் நோக்கிய பொருள் நோக்கியவாறே அமையும்."
நீண்டநாட்களாக எனது ஆதங்கங்களின் மூலைகளில் காத்துக்கிடந்த ஒரு பதிவு இது. எப்பொழுதெல்லாம் பதிவுகள் இட வரும் பொழுதும் இந்த பதிவை எப்பொழுது இடுவது என்கின்ற கேள்விக்கு ஒரு கமா போட்டுவிட்டு மற்றப் பதுவுகளை இட்டுவந்த காலம் இன்றோடு முற்றுப் பெறுகிறது. காரணம் இந்த பதிவு யாரையாவது நோகடிக்குமா அல்லது என் மேல் சிலருக்கு உள்ள கணக்கை கொஞ்சம் குறைத்துவிடுமா என்றெல்லாம் ஏங்கியதன் விளைவே இந்த பதிவு இடுவதற்கு நாட்கள் ஆகின. இருந்தும் நான் தொட்டதை சொல்பவன். பட்டதை எழுதுபவன். அதைத் தாண்டியும் எனது ஆதங்கத்தையும் பேனாவையும் இனியும் சமாளிக்க முடியாது. இந்த பதிவை ஒரு விமர்சனப் பதிவாகப் பார்க்காமல் ஒரு அனுபவப் பகிர்வாக மட்டும் பாருங்கள்.
இலக்கிய உலகம் என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. அதேபோல இலக்கியவாதிகள் என்போர் அனைவரும் ஒரே கொள்கைகளைக் கொண்டவர்களும் அல்ல. இந்த இலக்கிய உலகத்தில், இந்த இலக்கியவாதிகளுடன் இலக்கியவாழ்க்கை நடத்துவதென்பது அவ்வளவு இலகுவானதும் அல்ல. அந்தளவிற்கு கடினமானதும் அல்ல. சிறு வயதிலிருந்தே எனக்கு இந்த இலக்கியத்தின் மீதும் கவிதையின் மீதும் ஈடுபாடு இருந்துவந்தது. ஆனால் எனது கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்கின்ற கவிதை நூலை நான் வெளியிடும் வரை இந்த இலக்கிய உலகத்திற்குள் நான் எட்டிப் பார்த்தது கிடையாது. தெளிவாகச் சொல்லப்போனால் இலக்கிய உலகத்தில் யாரையும் எனக்கு தெரியாது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத்குள் வர ஆரம்பித்தவேளையில்தான் நிறைய விடயங்கள் எனக்கு வெளிச்சத்துக்கு வந்தது.
சகலதும் பிடித்திருந்தாலும் இந்த இலக்கிய சூழலில் ஒன்றுமட்டும் இன்றுவரை எனக்கு பிடிக்கவே இல்லை. அது கொஞ்சம் சீரியஸ் ஆன விசயமுங்க. அதனால் இன்றுவரை நான் இதை எனது மிக நெருங்கிய இலக்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருடனும் பகிர்ந்ததில்லை.
தலைமுறை இடைவெளி.
நன் இந்த கலையுலகிற்குள் வந்தது முதல் எனக்கு பல சந்தர்ப்பங்கள் இந்த தலைமுறை இடைவெளி என்கின்ற ஒரு பிரச்னையை ஞாபகமூட்டின. எனக்குத் தெரிந்தது வரை தமிழ் இலக்கிய உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்ற இலக்கிய ஜாம்பவான்கள் அனைவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். அவர்களின் இலக்கிய அனுபவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. இன்னுமொரு வகையில் சொல்வதேயானால் அவர்களது அந்த நீண்ட அனுபவம்தான் இலக்கிய உலகின் தமிழ் இலக்கிய எதிர்பார்ப்பை இன்னும் அந்த அளவிலேயே தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த இலக்கிய மகான்கள் இன்னும் எம் மத்தியில் எம்மோடு வாழ்ந்துகொண்டு வருகின்றமை இந்த இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல எமக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமே.. மல்லிகை ஜீவா, தெணியான், கே.எஸ்.சிவகுமாரன், திக்குவலைக் கமால், தெளிவத்தை ஜோசேப் போன்ற மூத்த இலக்கிய தலைமுறை தொடங்கி மேமன் கவி, வதிரி சி ரவீந்திரன், அஷ்ரப் சிஹப்தீன் போன்ற இரண்டாம் மூத்த தலைமுறையை கடந்து பொத்துவில் அஸ்மின், நாச்சியாதீவு பர்வீன், மன்னார் அமுதன் போன்ற நேரடி மூத்த தலைமுறையின் பின்னர் எங்களைப் போன்றவர்கள் என இந்த இலக்கிய தலைமுறை நீள்கிறது..
கிட்டத்தட்ட இந்த மூன்று இலக்கிய தலைமுறையினரை தன்னகத்தே கொண்ட இவ்வாறானதொரு பல்வகைமை கொண்ட இலக்கிய வட்டம் தலைமுறை இடைவெளி சிக்கல்கள் இல்லாமல் நகரும் என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதிலே இரண்டு விதமான தலைமுறை இடைவெளிகள் காணப்படுகின்றன. ஒன்று இலக்கிய தலைமுறை (நான் மேலே குறிப்பிட்டவை) இடைவெளி இன்னொன்று வயது ரீதியான தலைமுறை இடைவெளி.
இந்த மூத்த தலைமுறை இல்லக்கிய வாதிகள் என நாம் போற்றும், மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லோருமே எப்பொழுதுமே இந்த இளம் எழுத்தாளர்கள் மட்டிலான விடயங்களில் ஒரே கொள்கைப் போக்கைக் கொண்டவர்கள் அல்ல. அதிலும் காலம் கடந்து நிலைக்கும் இலக்கியத்தை கையில் வைத்துக்கொண்டு இளம் இலக்கிய படைப்பாளிகள் தொடர்பான விமர்சனங்களையும் நம்பிக்கையற்ற தன்மையையும் வெளிப்படுத்தும் சில மூத்த இலக்கியவாதிகள் இந்த இலக்கிய இஸ்திரத்தன்மையை எப்படி காலம் கடந்தும் அனுப்பிவைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
இளம் படைப்பாளிகள் பற்றி திருப்தியான கருத்தைக் கொண்டிராத பல மூத்த படைப்பாளிகளை பல மேடைப் பேச்சுகளிலும், தனிப்பட்ட சந்திப்புக்களிலும், விமர்சன கருத்துக்களிலும் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் இதுவரை சரியாகக் கூறியதாய் எனக்கு தெரியவில்லை. காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை உரிய குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மைக்கு சாட்சிகளாக இதுவரை காட்டப் பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனது கவிதை ஒன்றில் கூட பின்னூட்டம் இட்டிருந்த என் மரியாதைக்குரிய மேமன் கவி அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார். "நான் இந்த பகுதியில் உலாத்தி பார்த்த்தில் இளம் படைப்பாளிகள் காத்திரமாக எழுதுகிறார்கள் என்பதும், (நீங்கள் உட்பட) விமர்சனங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை, இளம் படைப்பாளி பற்றி திருப்தியான கருத்தை கொண்டிருராத எனக்கு மூத்த படைப்பாளிகள் சிலரிடம் சொல்லி கொண்டுதான் இருக்கிறேன்." இத்தகைய மூத்த படைப்பாளிகளின் கருத்துக்கள் இளம் படைப்பாளிகள் மேலான கருத்தியல் நோக்குகளை வெளிப்படுத்துவதுடன் இவர்களும் காத்திரமாக எழுதுகிறார்கள் என்பதையும் ஒருவகையில் உறுதிப் படுத்துகின்றன.
இந்த இளம் படைப்பாளிகள் பற்றிய திருப்தியான கருத்துக்களைக் கொண்டிராத எம் மூத்த படைப்பாளிகள் இவர்கள் மேல் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தான் எவை? இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தரமற்றவையா? அல்லது இலக்கிய சித்தார்ந்தங்களையும் விழுமியங்களையும் கடந்து அல்லது தமிழ் இலக்கிய போக்கிற்கு பொருந்தாத படைப்புக்களை படைக்கிறார்களா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்? யாரும் அறியாத இந்த வெளிப்படுத்தப்படாத காரணங்களே இந்த தலைமுறை இடைவெளிக்கு காரணம் என தோன்றுகிறது.
என்னை இந்த விடயத்தில் அதிகம் சிந்திக்க வைத்த விடயம் இறுதியாக நான் கலந்துகொண்ட வதிரி சி ரவீந்திரன் சார் உடைய 'மீண்டு வந்த நாட்கள்' நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடைய காத்திரமான உரை. இந்த உரை பிரதானமாக இரண்டு பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஒன்று ரவீந்திரன் மற்றும் அவரது இலக்கிய வாழ்க்கை, மற்றது இளம் எழுத்தாளர்கள் மீதான குற்றச்சாட்டு. 'இளம் எழுத்தாளர்கள் பல புத்தகங்களை போட்டதும் (எழுதி வெளியிட்டதும்) அவர்கள் தாங்கள் பெரிய எழுத்தாளர்கள் என கெறு (கர்வம்) கொண்டுவிடுகிறார்கள்'. இதுவே அவரது ஒட்டுமொத்த குற்றச்சாட்டின் சுருக்கம். இந்த கருத்தை அவர் வெளிப்படுத்திய விதம், பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் அவர் இளம் படைப்பாளிகள் மட்டில் கொண்டிருந்த அதிருப்தித் தன்மையை தெட்டத்தெளிவாக வெளிக்காட்டியது. இது எதற்காக என்பது அன்று அரங்கில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு புரிந்ததோ என்னவோ எனக்கு புரியவே இல்லை. இவ்வாறான கெறு யாரையும் பிடித்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. எனது ஒரு மரியாதைக்குரிய மூத்த படைப்பியலாளர் நேரடியாக இவ்வாறு சொன்னது ஒரு இளம் படைப்பாளி என்கின்ற விதத்தில் எனது முகத்திற்கு முன்னால் நையைப் புடைத்ததைப் போலானது. மூத்த படைப்பாளிகளே, நாங்கள் உங்களிற்கு பிள்ளைகள். எப்பொழுதாவது தந்தை பிள்ளைகளை திருத்துவதை அல்லது வழிநடத்துவதை விட்டு விட்டு அவர்களை விமர்சிப்பதிலும் குறை கூறுவதிலும் அக்கறை உள்ளவராக இருப்பாரா? இன்னுமொன்றையும் எனது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளிகள் சிந்திக்க வேண்டும். இந்த இலக்கியத்தை, ஏன் நீங்கள் இப்பொழுது கட்டிக் காக்கும் இலக்கியத்தைக்கூட அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச்செல்லும் பாரிய கடமையை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ என்றோ ஒரு நாள் இந்த இளம் தலைமுரையினரிடம்தானே ஒப்படைக்க வேண்டும். என்றுமே எங்களைப் போன்ற சிறியவர்களின் மனங்களில் இலக்கிய தெய்வங்கள் போல் அமர்ந்திருக்கின்ற மல்லிகை ஜீவா போன்ற மூத்த இலக்கியவாதிகள் எங்களை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் எங்களை வளர்த்துவிட வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது ஏன் மறந்து போகிறீர்கள். மல்லிகை என்கின்ற ஒரு இலக்கிய வாசிப்பு அனுபவத்தை இன்னுமொரு இளம் தலைமுறை ஜீவாதானே அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச்செல்ல வேண்டும்?
இன்னுமொரு விடயத்தையும் நான் நிச்சயம் இங்கு சொல்லியே ஆகவேண்டும். கவிதைகள் தரமானதாக இருந்தால் எத்தனை புத்தகம் போடுகிறோம் என்பது ஒரு பிரச்சனையா என எனக்கு தோன்றவில்லை. அதைவிட இந்த பிரதானமான இரண்டு தலைமுறையினருக்கும் இடையே உள்ள படைப்பிலக்கிய வேறுபாடுகளை ஜோசித்துப் பாருங்கள். சிலவேளைகளில் மூத்த ஒரு மரபுக் கவிஞனுடைய கவிதையை இன்றைய இளம் மரபுக் கவிஞனுடைய கவிதை முந்தி விடுகிறதே. இதனால் பெரியவர்கள் சிறியவர்களை வெறுப்பதற்கு இளையவர்களின் கவிதை தரமற்றது என எப்படி கூறமுடியும். இளையவர்கள் இந்த இலக்கிய தளத்தில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் முன்னேற்றம் உளவியல் போக்கில் பெரியவர்களை பாதிக்கின்றதா எனவும் உளவியல் நோக்கில் சிந்திக்கத் தோன்றுகிறது.
அடித்தாலும் பிடித்தாலும் தன் பிள்ளையை தான் தான் சுமக்கவேண்டும் என்பதைப் போல, என்னதான் கெறுப்பிடித்தாலும் இந்த இளம் படைப்பாளர்களை மூத்தவர்கள் நீங்கள்தானே கரைசேர்க்க வேண்டும். இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தரமற்றவை எனின் திருத்திக் கொடுங்கள். இலக்கிய பக்குவம் இல்லையெனில் அரவணைத்து பக்குவத்தை படிபியுங்கள். இதுவே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். என்னைப்பொறுத்தவரையில் இலக்கிய தரமான படைப்புக்களை யார் படைத்தாலும் அதை எவ்வித கசப்பு உணர்வுகள் இன்றி அதை ஏற்றுக்கொள்ள இந்த இலக்கிய உலகம் என்று தயாராகின்றதோ அன்றுதான் இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி நீங்கும். எழுதுபவனுக்கு எத்தனை வயசு என்பதை விட அவன் எழுதியது எப்படி இருக்கிறது, அதை எப்படியெல்லாம் இன்னும் இன்னும் முன்னேற்ற எப்படி அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என ஜோசித்தால் இந்த இடைவெளி இலகுவாக நீங்கிப் போகும். இளம் எழுத்தாளர்கள் எவருமே மூத்த எழுத்தாளர்களை மதியாதவர்கள், அல்லது வெறுப்பவர்கள் அல்லது போட்டியாய் நினைப் பவர்கள் என்று இல்லை. நாங்கள் படைக்கும் படைப்புக்கள் எல்லாம் நீங்கள் இருக்கும் இந்த காலங்களிலேயே பூப்பெய்திவிட வேண்டும் என யாசிப்பவர்கள். உங்கள் கை பிடித்து புதிய இலக்கிய உலகை நோக்கி நடைபோட ஆவலாய் இருப்பவர்கள். எங்கள் வேகம் புதிது, விவேகமும் புதிது, இலக்கிய அனுபவமும் புதிது.. எனவே நீங்கள் தானே எங்களுக்கு இவற்றை கற்பிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் நிறைய இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை வெளிக்கொண்டுவருகிறார்கள். அவர்களது ஏக்கம் ஒன்றுதான். அவர்களுக்கு தேவையான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது. அந்த சந்தர்ப்பங்களை தேடியே அவர்கள் பல மூத்த படைப்பாளிகளை நோக்கி கடிதம், மின் அஞ்சல், முகப் புத்தகம், ட்விட்டர் என ஓடி வருகிறார்கள்.
இறுதியாக தயவுசெய்து இளம் எழுத்தாளர்கள் மீதான உங்கள் கருத்துக்களை கொஞ்சம் மீள் பரிசீலனை செய்யுங்கள். அவர்கள் படைப்புக்களை வரவேற்று அதன் மூலம் அவர்கள் மீதான உங்கள் நம்பிக்கையை வளருங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள். நீங்கள் எங்கள் பெற்றோர். இதை எப்பொழுதும் (உங்கள் எல்லா மேடை பேச்சுக்களிலும்) ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். படைப்பிலக்கியத்தில் இந்த தலைமுறை இடைவெளி ஆரோக்கியமானதல்ல. இன்று வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் ஒரே மேசையில் அமர்ந்து ஒரே படத்திற்கு பாடல் எழுதுகிறார்கள். அது ஏன், கலாமணியும் அவர் மகன் பரணீதரனும் ஒரே வீட்டிலிருந்து ஒரே ஜீவநதிக்காய் உழைக்கிறார்கள். இதைவிட வேறு என்ன உதாரணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். என்ன, இளைய தலைமுறை படைப்பாளிகளிடம் உங்களைப் போன்ற அனுபவம் இல்லை. ஆனால் திறமை இருக்கிறது. முயற்சி இருக்கிறது. உங்கள் அனுபவத்திற்கு அருகில் இவர்கள் திறமைகளையும் கொஞ்சம் கொண்டு செல்லுங்கள். இவர்கள் உங்கள் அனுபவத்தை படிப்பார்கள். நீங்கள் இவர்கள் திறமையை மதிப்பிடுவீர்கள்.
பி.கு. தயவுசெய்து இப்பதிவை முறைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு அதிகம் தெரிந்த நபர்களின் பெயர்களை மட்டுமே இப்பதிவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்காக இவர்கள் மட்டும்தான் என்று அல்ல. மற்றவர்களை எனக்கு அதிகம் பரீட்சயம் இல்லை. இன்னுமொன்று உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். அப்பொழுதுதான் எனது எதிர்பார்ப்பு எந்தளவிற்கு சரி என்பது எனக்கு தெரியும்.
10 comments:
எனக்கு இதற்கு பெரியளவு விளக்கம் எல்லாம் சொல்ல தெரியவில்லை.அதற்கான அறிவும் இல்லை. காரணம் அடிப்படையில் நான் எழுத்தை ரசிப்பவள் மட்டுமே.. இலக்கிய உலகத்தை பற்றி எனக்கு தெரியாது.... இலக்கிய வல்லுனர்கள் பற்றி எனக்குத் தெரியாது..நீங்கள் சொன்ன விடயங்களை உள்வாங்கி ஓரளவிற்கு புரிந்து கொண்டேன்.. ஒரு விசயம் சொல்லலாம். என் கவனதிற்கு உட்பட்ட வகையில்.. இளைய .. அதாவது வளர்த்து வரும் படைப்பாளிகளினால் படைக்கப்படும்.. சம கால இலக்கியங்கள்.. படைப்புக்கள்.. எழுதுக்கள்..ரசிக்கத் தூண்டும் விடயங்களாகவும்.. வாழ்வியல் பாதிப்புக்களில் அசைவை ஏற்படுத்தும் ஒன்றாகவுந்தான் என்னால பார்க்க முடிகிறது.. பழைய புராணங்களை இன்னும் இன்னும் புரட்டி..அரைத்த மாவையே திருப்பி திருப்பி அரைப்பவர்களின் பக்கமாக எனக்கு உடன்பாடு இல்லை..
இது யாரையும் நோகடிப்பதற்காய் சொல்லவில்லை .. என்னோட கருத்து ம்டடுமே..
சகோதரர் அமல்ராஜ்.. அஸ்ரப் சேர் சொன்ன விடயங்களை உள்வாங்கி கொள்ளுங்கள்.. அது உங்களுக்கு மட்டும் இல்லை வளர்த்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு அருமையான அறிவுரை.. உங்களால் எது முடியுமோ அதை தாராளமா பண்ணுங்கள்.. பேனாவுக்கு வஞ்சனை செய்யாமல்.. எழுதுங்கள். .உங்கள் எழுத்துக்கள் பக்குவபடும் போது..உங்களுடன் சேர்ந்து உங்கள் பேனாவும் திருப்தி அடையும் போது, உங்கள் பின்னால கூட்டம் தன்னால் வரும்.. போன விடயங்கள திரும்பி பார்த்து நின்று யோசிக்க தேவை இல்லை.. உங்களில் உங்களுக்கு தன்னபிக்கை இருந்தால் திரும்பி பார்க்கலாமல் போய்க் கொண்டே இருங்கள்.. போகும் பாதையில் முள்ளும் வரலாம் கல்லும் வரலாம்... அதை தாண்டி கடந்து போவதில் தான் வெற்றி என்ற ஒன்று இருக்கிறது..அதை அடைவதற்காக முன்னால் வருபவைகளைத் தட்டி விட்டு வெற்றிக் கனியை எட்டிப்பிடியுங்கள்.. அமல்ராஜ்.. இந்த ஆக்கம் பற்றி என்னைக் கேட்டால் இது ஒரு மேட்டரே இல்லையென்று சொல்வேன்..நமக்கு நாம் தான் நீதிபதி.. (என் சின்ன மண்டைக்குள் தோன்றிய வற்றை எத்தி வைத்து விட்டேன்..)
வணக்கம் தோழரே உங்கள் கருத்தில் எனக்கு உடன்பட முடியாது. காரணம் எனக்கு தெரிந்து பல மூத்த தலைமுறையினர் எங்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இருக்கிறார்கள்.அப்படி அவர்கள் ஊக்குவிப்பதும் எனக்கு நேரடி அனுபவம். நீண்டகாலம் எழுத்துலகில் இருப்பதால் மட்டுமே அவர் மூத்தவர் என்று ஆகிவிடமுடியாது.
இன்னொரு கருத்து சில இளையவர்கள் ஒரு புத்தகம் போட்டதும் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று ஒருவித மிதப்பிலே தெரிவதும் உண்மை.
விமர்சனங்களை ஏற்கும் மனம் வேண்டும்.எல்லோரும் எழுதுவது ஒரு சமூக நோக்கிலேயே, இதில் எல்லோருக்கும் கற்க நிறையவே இருக்கிறது.
@ Reshzan,
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே. நிச்சயமாக அனைவரும் இதை ஏற்றக வேண்டும் என்பதல்ல இந்த பதிவின் நோக்கம். அதற்காக நான் ஒட்டுமொத்த எமது மூத்த எழுத்தாளர்களையும் குறிசொல்வதும் எனது இந்த பதிவின் நோக்கம் அல்ல.. இந்த இடைவெளி எதோ ஒரு சிறு அளவிலாவது இருக்கிறது என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறான அந்த சிறிய இடைவெளியையும் நாம் தாண்ட வேண்டும் என்பதுதான் எனது பதிவின் முழு முதல் நோக்கம்.
அத்தோடு இது எனது அனுபவ மற்றும் ஆதங்கப் பதிவே தவிர இது ஒரு குற்றம் சுமத்தும் அல்லது யாரையும் சாடும் பதிவு அல்ல. பிரச்சனைகளை பொதுமைப் படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. திரும்பவும் உங்கள் கருத்திற்கும் என்னை புரிந்துகொண்டமைக்கும் நன்றிகள். சரி பிழை என்கின்ற இருபக்க விமர்சனங்களையும் ஆளுமையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு கொஞ்சமேனும் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே..
ஜீவாவை முற்று முழுதாகக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் இன்று முன்னணியிலும், வளர்ந்து வருகின்ற பல படைப்பாளிகளை ஆதரித்து வளர்த்துவிட்டது மல்லிகையும் ஜீவாவும்தான்.
அவர் மட்டுமல்ல வேறு பல சஞ்சிகை ஆசிரியர்களும் இன்று வெளிவரும் படைப்புகள் பலவும் தரமற்றதாக இருப்பதை தனிப்படப் பேசும்போது சொல்கிறார்கள். அதில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை.
பல தரமான நல்ல இளம் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.வெறுமனே பெயர் பதிவதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார். வயதான அத்தகைய எழுத்தாளர்களும் இல்லையா என்று கேட்டால் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரே இப்பொழுது அதிகம் எழுதுவதால் அவர்களே கண்ணில் படுகிறார்கள். அதனால் விமர்சிக்கப்படுகிறார்கள்.
அதனைத் தனிப்படதாகவோ, இளைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதான கடுமையான பார்வையாகவோ எடுக்காமல் விமர்சனங்களை ஆக்கபூர்வமானதாக எடுத்து இலக்கிய உலகில் உச்சங்களை எட்ட முயல்வதுதான் நல்லது.
பல இளம் படைப்பாளிகள் எனது இனிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களைப் பாராட்ட நான் தயங்குவதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.
சரி பிழை என்பதை ஒரு புறம் விடுத்து யதார்த்தத்தை எழுதியுள்ளீர்கள் அமல்... இலக்கிய உலகில் எவரொருவரையும் தக்க வைப்பது அவர்களது எழுத்துகளேயன்றி வேறொன்றுமில்லை...
(எனது பெயரைக் கட்டுரையில் உள்ளீடு செய்திருப்பது எந்த அளவிற்குப் பொருந்தும் என்று தெரியவில்லை... )
சரியான விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவர், பலரால் ஒதுக்கித் தள்ளப்படும் நிலை இன்றுள்ளது...
இளம் எழுத்தாளர்கள் நன்றாக எழுதுகிறார்கள் என்று வெளிப்படையாக ஏர்றுக் கொண்டாலோ அல்லது கெளரவித்தாலோ அவர்களுக்கு தலைக்கனம் வந்துவிடும் என்ற எண்ணம் பலரிடம் இருப்பதை மறுக்கமுடியாது..
அதை ஒருபுறம் வைப்போம்... இன்று ஒரு மூத்த எழுத்தாளரின் பெயரைக்குறிப்பிட்டு அவரது எழுத்துக்கள் அற்புதமாக உள்ளது என்று (நூல் வெளியீடு தவிர்ந்த) ஏதாவது ஒரு இலக்கிய மேடையில் மற்றொரு மூத்த எழுத்தாளர் மனம் திறந்து பாராட்டுவாரா என்பதே கேள்விக்குறிதான்.
எத்தனை மேடைகளில் நம் எழுத்தாளர்கள் எழுதியதை மேற்கோள் காட்டி முன்னிலைப்படுத்தி நம் இலக்கியவாதிகள் பேசுகின்றார்கள். நம் இலக்கியவாதிகளின் இருளாட்சி செய்யும் ஒடுங்கிய மனங்களைக் காட்சிப்படுத்த இது ஒன்றே போதும் .
தோப்பில் முகம்மது மீரான் போன்ற ஒரு சில விதி விலக்கான இலக்கியவாதிகள், கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனின் என்னைத் தீயில் எறிந்தவளை உணர்ச்சி பொங்க பொதுமேடையில் பாராட்டியது போன்று பாராட்ட எந்தவொரு இலங்கை இலக்கியவாதிக்கும் பரந்த மனம் இருந்திருக்கவில்லையே. கடல் கடந்து ஒருவர் இலங்கை வந்து தான் ஒருவர் இதைக் கூற வேண்டுமா?
ஒவ்வொரு இலக்கியவாதியும், சாகும் வரை தன்னை இலக்கிய உலகில் நிலைநிறுத்தி கொள்ள எவ்வளளோ பாடுபடுகின்றான்... எழுத்து, மேடைப்பேச்சு, விருது என அனைத்தும் கிடைத்தாலும், அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கும், ஒவ்வொரு ஆண்டும் பெற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களை வெட்டிக் குத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகின்றான் என்று நாம் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வதைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
விருப்பு, வெறுப்பினால் உள்ளதை உள்ளவாறு கூறாமலும், இல்லாத ஒன்றை உயர்வாகக் கூறுவதுமாக உள்ளவர்களைக் காலம் கைவிட்டுவிடும்...
உண்மையான எழுத்துக்களை எவர் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும் காலம் ஏற்றுக் கொண்டு தன் பயணத்தில் இணைத்துக் கொள்கிறது..
பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” எனும் பாடலால் ஒரு போட்டியில் மூன்றாம் பரிசைத் தான் பெறமுடிந்திருக்கிறது.
முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற கவிதைகள் இன்று எங்கே போயின?... ஆகவே இது இன்று நேற்றல்ல... பாரதியின் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்ட ஒன்று.
சேக்ஸ்பியர் தன் Shall I Compare thee to a summer's day கவிதையில் கூறுகிறார்...
“So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.”
இதைப் போன்ற ஒன்றே நான் கூறும் உண்மையான எழுத்துக்களும்
கவலை கொள்ளாதே அமல்ராஜ் அண்ணா ! இவர் ஜீவா எப்போதும் இப்படித்தான். எங்கள் தலைமுறை வித்தியாசமானது. அவருக்கு எஸ். பொ. திருத்திக் கொடுத்தார். நாங்கள் ஏகலைவர்களாக வளர்கிறோம். அது எரிச்சல் என்றால் நாம் என செய்வது. எஸ். பொ. ஒருமுறை " நான் ஜீவா, டானியல் ஆட்களின் சிறுகதைகளை திருத்திக் கொடுப்பதுண்டு. ஒருமுறை டானியல் தந்த சிறுகதையை திருத்திவிட்டு தவறுதலாக ஜீவாவிடம் கொடுத்துவிட்டேன். அக்கதை ஜீவாவின் பெயரில் பின்பு பிரசுரமானதை பின்பு கண்டேன்" .இப்படியான தில்லுமுல்லுகளை இளந்தலைமுறைப் படைப்பாளிகள் யாரவது எப்போதாவது செய்ததுண்டா?
அன்பிற்குரிய உறவுகளுக்கு வணக்கம்,
இலங்கை இலக்கிய உலகம் கொஞ்சம் வித்தியாசமானது,
வன்னியில் நான் வாழ்ந்த காலப் பகுதியில் கட்டிக்காக்கப்பட்ட இலக்கிய உலகும் வித்தியாசமானது.
எமது இலக்கிய உலகினை, கலை உலகினைத் தமிழ் நாட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு தூரம் பின் தங்கி நிற்கின்றோம் எனும் உண்மை தெட்டத் தெளிவாகப் புலப்படும்,.
எமது இலக்கிய உலகில் தான் ஏற்றத் தாழ்வுகள், புதிதாக ஒரு படைப்பாளி ஒருவன் வந்து எழுகின்ற போது மனந் திறந்து அவனைப் பாராட்ட முனையாத உள் மனதில் ‘இவன் எங்கே இதுவரை காலமும் இலக்கிய உலகில் எனது இருப்பிற்கு இருந்த ஆதரவினைச் சீர் குலைத்து விடுவானோ என்கின்ற அச்சமானது மேலோங்கி நிற்க,
மூத்த எழுத்தாளர்கள், மூத்த கலைஞர்கள் என்று சொல்லப்படுகின்ற வட்டத்தினர்களால் புதியவர்களது படைப்புக்கள் தம்மால் இதுவரை கட்டிக்காக்கப்பட்ட இலக்கிய வரம்பினை விட்டு விலகிச் செல்கின்றது எனும் குற்றமானது முன் வைக்கப்பட்டு, அந்தப் படைப்பாளியை ஓரங்கட்டுவதில் தான் எம் இலக்கிய உலகம் இன்று வரை இருக்கின்றது,.
இதனால் தான் எங்களுள் புதைந்து போயுள்ள பல இளம் படைப்பாளிகள், புதியவர்கள் வெளித் தெரியாதவர்களாக இருக்க, மூத்த எழுத்தாளர்கள் இன்று வரையும் தாம் காலதி காலமாக அரைத்த அதே மாவினை சுவை மாறாது அரைத்து தாமும் படைப்பாளிகள் எனும் கொள்கையினை நிரூபித்து, தாம் சாகும் வரை வாழ் நாட் படைபாளிகள் எனும் கொள்கையிலிருந்தும் விலக மனமின்றி வாழ்கின்றார்கள்.
எமது கலை உலகிலும், சரி,
இலக்கிய உலகிலும் சரி ஈகோ, காழ்ப்புணர்ச்சி, வசைபாடுதல் முதலிய பண்புகள் இன்று வரை மேலோங்கி இருப்பதனால் தான் தலை முறை ரீதியான இடைவெளியானது மூத்த எழுத்தாளர்களால் வலிந்து இளைய எழுத்தாளர்கள் மீது திணிக்கப்படுகின்றது.
மூத்த எழுத்தாளர்கள் என்று கூறிக் கொள்வோருக்கு ஒருவன் வாழி வைக்கின்ற போது, அவர்களுக்கு ஏற்றாற் போல தன் எழுத்தாற்றலை மாற்றி இயைந்து கொடுக்கின்ற போது, அவனும் அதே மூத்த எழுத்தாளர்களால் காலதி காலமாக கட்டிக் காக்கப்பட்ட இலக்கிய மரபினைக் கொண்டு முன்னகரத் தலைப்படுகின்றான்,
இன்னோர் விடயம் புதிதாக ஒருவன் எம் நாட்டின் கலை இலக்கியப் பரப்பினுள் ஒரு விடயத்தினை அறிமுகப்படுத்தப்படுகின்ற போது,
சட்டம்பியார் கதிரையில் உட்கார்ந்திருக்கின்ற மூத்தவர்கள் அவனுடைய கருத்துக்களினுள் தம்மை வலிந்து உள் நுழைத்து,
படைப்பென்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் எனும் ஓர் வரைவிலக்கத்தினைக் கொடுத்து முப்பது நாற்பது வருடங்களாகத் தாம் கட்டிக் காத்த கீறல் விழுந்த கிரியேட்டிவிட்டியினைப் புதிய எழுத்தாளர்களிடமும் கொண்டு செல்லத் தலைப்படுகின்றார்கள்.
இதுவும் தலை முறை தழுவிய இடைவெளிக்கான ஒரு காரணமாகும்.
எமது நாட்டில் மூத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில படைப்பாளிகள் வலிந்து கருத்துத் திணிப்பினை மேற்கொண்டு, இளையவர்களின் படைப்புக்கள் இத்தகைய வரையறைக்குள் தான் வர வேண்டும் எனும் கொள்கையினை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை,
ஈழத்து இலக்கியப் பரப்பிலும் சரி,
கலை உலகிலும் சரி தலை முறை தழுவிய இடைவெளி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்னோர் விடயம்,
புதிதாக வந்த இளம் எழுத்தாளன் ஒருவன் ஒரு படைப்பினை எழுதுகின்ற போது,
அவனது படைப்பானது சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பினும், எம்மில் வாழும் மூத்தவர்களால்,
படைப்பில் சிறு தவறு என்ற கருத்தியல் தெளிக்கப்படும் போது,
அந்தச் செய்தியானது படைப்பாளியினை எட்டும் வேளையில்,
படைப்பாளி
‘ஓ...தான் பெரிய எழுத்தாளர்களால் உற்று நோக்கப்படுகின்றேன், நாளை நானும் இதே துறையில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு ஏற்றாற் போல மாற வேண்டும் எனும் முடிவினை எடுக்கத் தலைப்படுகின்றான்,
இப்படியான சூழ் நிலைகள் எம் இலக்கிய உலகில் இருக்கும் வரை, தலை முறை இடைவெளி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது,
முதலில் சமூகத்தில் வாழும் முந்திரிக் கொட்டை போன்று பேருக்கு எழுதுவோர்,
தம்மை விளம்பரஞ் செய்ய முன் நிற்போர், படைப்பாளிகளின் காத்திரத் தன்மையினை உணர்ந்து அடக்கி வாசிக்கத் தலைப்படுகின்ற போது காத்திரமான படைப்புக்கள் உருவாகும்,
இன்னொன்று ஒருவனது கருத்துத் திணிப்புத் தவிர்ந்த,
வரலாற்றுப் பிழைகளுடன் கூடிய படைப்புக்கள் தவிர்ந்த ஏனைய சுய படைப்புக்களில் மூத்தவர்கள் தலையிடுவதிலிருந்து ஒதுங்கியிருக்கும் போது தான், ஈழத்து இலக்கிய உலகில் தலை முறை இடைவெளி என்ற ஒன்று இல்லாத சூழல் உருவாகும்,
நீண்ட கட்டுரையில் தங்கள் ஆதங்கத்தைத் தெளிவாய்ச் சொல்லியுள்ளீர்கள் அமல்ராஜ். ஒரு மாடு வேலியுடைத்ததற்கு அன்றேல் ஓரிரு மாடுகள் வேலியை உடைத்ததற்கு எல்லா மாடுகளையும் குறைசொலித் தண்டிக்கலாமா? என் விடயத்தில் நான் மூத்த எழுத்தாளர்களை ஒருபோதும் குறைசொல மாட்டேன். (ஓரிருவர் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.) என்னோடு பல பிரபலங்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். காலத்தால் அவர்கள் என்னைவிட வயதுகள் பல தாண்டியவர்கள். ஒன்றுக்குப் பலதடவைகள் அவர்கள் என்னை அணுகி அவர்களின் ஆக்கங்களை காண்பித்திருக்கிறார்கள். நானும் சரவை பார்த்துத் திருத்தியும் கொடுத்துள்ளேன். சில் நூலாசிரியர்கள் என்னை அணுகி, அவர்களது நூல்களைப் பற்றிக் கருத்துக் கேட்டிருக்கிறார்கள். அவற்றை நூலில் இணைத்துமுள்ளார்கள். இன்னும் சிலர் என்றும் என்பங்களிப்பைப் பெற்று அவர்கள் வீறுநடைபோடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பெரிய எழுத்தாளனுமல்லன். பெரிதாக நிறைய நூல்கள் எழுதியவனுமல்லன். ஏதோ தமிழ் இலக்கண இலக்கியத்தில் நான் கொண்ட காதலை மெச்சி அவர்கள் தூக்கிவிடுகிறார்கள் என்றுதான் எண்ணுகிறேன்.
ஒருமுறை என் கவிதையொன்றை திரு. அஷ்ரப் ஷிஹாப்தீனுக்கு நான் மின்னஞ்சல் செய்திருந்தேன். அதனைப் படித்து அவர் 'நீங்கள் கவிதை எழுத முன்னர் கண்ணதாசனைப் படியுங்கள். அவர்கள் கவிதைகளில் உள்ள சந்தங்களை நுகருங்கள். உங்களை அறியாமலேயே நல்ல கவிதைகள் பிறக்கும்.' என்ற பதில் எழுதியிருந்தார். இக்கூற்றை வைத்து அவர், நான் கவிதை எழுதுவதை விரும்பவில்லை என்றோ, அவருக்கு என் கவிதைகளில் காழ்ப்புணர்ச்சியென்றோ நான் கருதவில்லை. எனவே நீங்கள் தப்பாக எண்ண வேண்டாம். முயற்சி தளரவும் வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள். அஷ்ரப் ஷிஹாப்தீனின், கவியக்கோ ஜின்னாஹ் சரீப்தீன் போன்றோரின் ஆக்கங்களைப் படிப்பதைப் போல உங்களையும் படிக்கிறேன்.
ஒன்றுமட்டும் உண்மை. 'எக்குடி பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியில் கற்றோரை மேல்வருகென்பர்.'
நன்றி!
Post a Comment