Monday, August 22, 2011

வெள்ளி பூஜை - சிறுகதை.

அது மாலை கருகும் நேரம். வெண்கல சூரியன் வெட்கமின்றி கடலின் மறு கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் மந்திர ஜாலம். கிளுகிளுப்பைக் கூட்டம் போல் இந்த இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாய் மாலை நேர வகுப்புக்கள் முடித்து வீடு திருப்பும் ஜோரான நேரம். பகலை எரித்துக் களைத்த சூரியன் முக்காடு போர்க்க, சடங்கு வைத்த பிள்ளை போல் வான அறைக்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளியே வர தயாரானான் சந்திரன். இரவு முழந்தாலிட்டு பகலை வழியனுப்பிக் கொண்டிருந்தது. எட்டிய தூரம் வரை இவள் பார்வை. தன் கணவனும் இல்லை, கந்தன் என்கின்ற தன் மகனும் இல்லை.

"சீ வழமையா ஐந்து அரைக்கே வந்திடுவாங்களே.. இன்னைக்கின்னு ரெண்டு பேரையும் காணோம்.." இடைவிடாது மேலும் கீழும் அந்த நாவைப் போட்டு அசைத்துக்கொண்டே இருந்தாள் அந்த வான்மதி. "அப்பாவ போலதானே பிள்ளை.. வகுப்பு முடிஞ்சாலும் நேரத்துக்கு வரவா போறான் இவன்..." அலுத்துக் கொண்டதில் அடுப்பிலிருந்த வெந்நீரை மறந்தாள் வான்மதி.

"அப்பா... அப்பா.." இவள் வாசலில் நிற்கும் மட்டும் வராத அந்த எதிர்பார்ப்பு ஒலி அடுப்பங்கரைக்கு போனதும் இனிதே செவி புகுந்தது. ஒரு கை அடுப்பில் அவள் மறு கை இடுப்பில். வெடுக்கென திரும்பி வாசலில் மிடுக்காய் நின்ற தன் கணவனைப் பார்த்தாள் வான்மதி.

"என்னங்க இவ்வளவு நேரம்..?"

"..இப்பதானே வான்மதி ஆறு அரை.."

"எத்தனைக்கு வேலை முடிஞ்சது..?"

"ஐந்துக்கு!!"

"இப்ப என்ன நேரம்?"

"ஆறு அரை"

"அப்ப இவ்வளவு நேரம் எங்க போனீங்க..?"

"வரும் போது எண்ட நண்பன் ஒருத்தன பாத்தன்.."

"பாத்தா.. உங்களுக்கு வேற வேல வெட்டி குடும்பம் இதொண்ணும் இல்லையா.."

"இல்லடீ.. கன நாளைக்கு பிறகு கண்டது.."

"அப்ப என்னையும் வீட்டையும் விட கன நாளைக்கு பிறகு கண்ட அவன்தான் பெருசா.."

"கொஞ்சம் மரியாதையா பேசன் வான்மதி.."

"என்னங்க மரியாத.. என்னையும் கொஞ்சம் ஜோசிச்சு பாருங்க.. எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு நிக்கிறது.."

"என்னது காத்துக்கொண்டு நிக்கிறீயா? எதுக்கு?.."

"என்னங்க உங்களுக்கு தெரியாதா??.."

"சொன்னால் தானே தெரியும்.. சொல்லாமல்.."

"என்ன ஆளோ தெரியல நீங்க.. கொஞ்சம் கூட என்ன புருஞ்சுக்க மாடேனுங்றீங்க..?"

மணி ஏழு கடந்து முப்பதை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த கடிகாரத்தின் பெரிய முள். அந்த முள்ளின் வேகத்தை ஒத்தே ஜாம் என்று வந்து நின்றான் அவர்கள் மகன் கந்தன். வகுப்பிற்கு வெள்ளை நிற சட்டையுடன் போனவன் இப்பொழுது மண்ணிரத்திலே வந்து நிற்கிறான். விளையாடி முடிந்ததும் கையில் உள்ள மண் துணிக்கைகளை கூட தட்டி கீழே கொட்டிவிட நேரம் இல்லாமல் "முதல் அம்மாவ சமாளிப்பம், பேந்து மற்றதுகள பாப்பம்.." என்கின்ற ஒரு தோரணையிலே வந்து வாய்பொத்தி நின்றான் கந்தன். அப்பாவுக்கு கொஞ்சம் சந்தோசம் இப்பொழுது. காரணம் கஷ்டத்தில பங்குபோட இப்பொழுது ஒரு பங்காளி..

"எங்கட போனாய் இவ்வளவு நேரம்..?"

"விள யா டம்மா..." என அப்பாவைப் பார்த்தான் கந்தன். திடுக்கென முகட்டைப் பார்த்து கொட்டாவி விட்டார் தந்தை. மகன் மனதில் "இவன் எல்லாம் ஒரு அப்பாவா??" என்ற எண்ணம்.. "முடியிற நேரம் பாது இவன் வந்திட்டானே.. இனி திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்குமே.." என்கின்ற ஏக்கம் அப்பா மனதில்.

அப்பொழுதெல்லாம் அப்பாவிற்கும் மகனிற்கும் அம்மா ஒரு காளியாய் தரிசனம்.

"கேட்டது கேக்கலையா..?" இது அம்மா.

"என்னம்மா..?"

"உனக்கு கிளாஸ் முடிஞ்சு இவ்வளவு நேரமும் விளையாட்டு.. என்ன.."

"விளையாடதானே அம்மா போனான்.. ஏதோ களவெடுக்க போனமாதிரி பேசுறீங்க.."

"வாய மூடுடா..!! நீயும் அப்பாவ மாரியே வளரு..அப்பத்தான் இன்னொருத்தியிண்ட வாழ்க்க விளங்கும்.."

அமைதியாக நின்ற கணவன் ஒருமுறை மனைவியை பார்த்து முறைக்க, மனைவி மகனைப் பார்த்து கன்னத்தில் இரண்டு அடி போட்டு

"என்னடா முறைப்பு..??"

அப்படியே இடப்பக்கம் திரும்பிய கணவன் தனது கன்னத்தை பொத்திய படி நின்றிருக்க, அவர் கைகளை இழுத்து எடுத்து,

"கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பிருக்கா? என்ன பத்தி கொஞ்சம் எண்டாலும் ஜோசிக்கிறீங்களா? உங்கள கலியாணம் கட்டினதுக்கு ஒரு பனமரத்த கட்டியிருந்தா வடியிற கள்ள வித்தாவது பிளைச்சிருப்பன்.. சீ.. என்ன வாழ்கைதானோ தெரியல.. என்ட வாழ்க்கை இப்பிடியா போகணும்..."

புலம்பியபடி திரும்பவும் சமையலறை நோக்கி புறப்பட்டாள் மனைவி. கணவன் வாசலின் வலப்புறம். மகன் இடப்புறம். சத்தம் வெளியிலே போய்விடக்கூடாது என்கின்ற ஒரு சமுதாய நல்லெண்ணத்தில் உள்ளே வரும்போதே கதவை அடைத்து வைத்திருந்தார் கணவர். மகன் கையில் கிழிந்த பை. கணவன் கையில் விம்மிக் கொண்டிருக்கும் செத்த ரேகை. இருவருக்கும் இருக்கவும் முடியவில்லை. மனைவியை அடக்கவும் தெம்பு இல்லை. மகன் தன்னை இளக்காரமாய் யோசித்துவிடுவான் என்று எண்ணி மனைவியுடன் சண்டை செய்ய போகும் போதெல்லாம் உசார் மடையனாகியே போய்விடுவது அவன் அப்பாவுக்கு சகஜம். இருந்தும் வழமைபோலவே கணவன் அருகே போய்,

"என்னம்மா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் சத்தம்போட்டு ஊரை கூட்டிறா.. நான் ஆபீஸ் ல இருந்து ஒரு மணித்தியாலம் பிந்தி வந்தது தப்பா.."

"ப்ளீஸ்.. கதைகாதேங்கோ.. என்னக்கு எண்டும் சில ஆசா பாசங்கள் இருக்கு.. என்னை நீங்க முதல் புரிஞ்சுகொள்ள முயற்சி செய்ங்க.. எப்பவுமே என்னை எமத்துறதே உங்கட வேலையா போச்சு.. என்டைகாவது என்னபத்தி நினைச்சு ஏதாச்சும் செய்திருக்கிறீங்களா"

அழுதவளிடம், மெது மெதுவாய் இன்னும் அருகில் போய்,

"சரி, எங்க போகணும் எண்டு பிளான் பண்ணி எங்களுக்காய் காத்துக்கொண்டு இருந்தாய்..? சொல்லு.. இப்ப எண்டாலும் போய்ட்டு வருவம்.."

"இனி போக ஏலாது.. பூச முடிஞ்சிருக்கும்.."

"என்ன பூச...?"

"இண்டைக்கு வெள்ளிக்கிழமை... தெரியாதமாரி நடிக்கிறீங்க.."

கணவன் மலைத்து போய், என்ன உலகமடா சாமீ... என பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தார். இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே.. என மன ஆதங்கத்தோடு சிரிக்க ஆரம்பித்தார் கணவர். இவர் சிரிக்க அங்கு இன்னும் எரிந்தது.

மனைவிக்கு இன்னும் கோபம் தலை உச்சியில் நின்று தர்கிடதோம் ஆடியது.

"என்ன மனுசனையா நீ.. நான் இவ்வளவு பீல் பண்ணி அழுறன்.. உனக்கு சிரிப்பா..?"

ஆவேசமானாள் வான்மதி. அவள் புருவங்கள் வாழ் கூர்மையோடு போட்டிபோட்டு தோற்க வல்லன அந்த தருணங்களில். கண் இமைகள் கடு கடுக்க, விழிகள் இரத்தங்களை வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பீய்ச்சிக் கொள்ள, நடு மூக்கு நுனியில் இரண்டு வேர்வைத் துளிகள் துலங்க, இன்றோடு கணவன் கதையை முடித்துவிடுவதாய் நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி வெறியோடு..

தான் கற்ற தற்காப்புக் கலையை ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டு தனது மணிக்கூட்டை சரி செய்து மெது மெதுவாய் அந்த பயங்கரமான உருவத்திற்கு அருகில் போய் தனது மணிக்கூட்டை பார்க்கும் படி சைகையால் சொல்லிமுடித்தார் கணவர்.

வான்மதி வெறித்தனமான பார்வையோடு வேண்டாவெறுப்பாய் சட்டென்று குனித்து அந்த கடிகாரத்தை பார்க்க, அந்த கடிகாரத்திற்குள் இருந்த கிழமை காட்டி இன்று "Thu" என சொல்லியது.8 comments:

alex paranthaman said...

நகைச்சுவை உணர்வு மிளிர எழுதியுள்ளீர்கள் அமல்...

ஒன்னுமில்லாததுக்கே இப்டின்னா, ஏதாவது தப்பு செஞ்சா....

பி.அமல்ராஜ் said...

நன்றி அமுதன்..

ம்ம். ஆளே காலி..

Thenammai Lakshmanan said...

ஹா ஹா ஹாஅருமையான கதை..அமல்ராஜ்..:))

பி. அமல்ராஜ் said...

மிக்க நன்றி அக்கா... ஒரு தமாசுக்குத்தான்..

மனதோடு மன்னூரான் said...

ரொம்ப ராட்சசியா இருக்காளே உங்க ஹீரோயின், இல்லையில்ல வில்லி. எனக்கு மட்டும் இப்பிடி ஒரு பொண்டாட்டி வாய்க்கணும்..... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. படக்குன்னு அவ கால்ல விழுந்திடுவேன். எப்புடீ?

Muruganandan M.K. said...

மனந்திறந்து சிரித்து ரசிக்க வைத்த படைப்பு.

பி.அமல்ராஜ் said...

@ சிஹார்,

யோவ்... நானும் என்னவோ ஏதோ என்னு நினைச்சன்.. shame shame puppy shame...

பி.அமல்ராஜ் said...

@ Dr.எம்.கே.முருகானந்தன்,

மிக்க நன்றி சார்..

Popular Posts