Monday, August 15, 2011

விவாகரத்து.


என்னை
சிந்திக்க வைத்தவளும்
நிந்தித்து போனவளும்
அவள்தான்.

ஒரு இரவில்
ஒடிந்த பாசம்
விடிந்ததும் - ஒரு
மடிந்த வேசமாய்
இடிந்து போனகதை
என்னைத்தவிர
யாருக்குத் தெரியும்..

முதல் நாள்
பத்திரம் என்றவள்
மறுநாளே
பத்திரத்தோடு வந்தாள்.

என் காதலை
கட்டிப்போட - ஒரு
கையொப்பம் வேண்டுமாம்.

ஒரு கிறுக்கல் கிறுக்கியதில்
அவள் வடக்கே போனாள்
நான் கிழக்கே போனேன்
எங்கள்
பிடிவாதம் மட்டும்
மகன் தலையில்
மண்ணை சொரிந்தபடி..

முற்றுப் பெற்றது
எங்கள் விவாகம்.
காரணமோ - அந்த
மோசமான விவாதம்.

அவள் விடுவதாய் இல்லை
நானும் முடிப்பதாய் இல்லை.
அவளும் நானும் முட்டியதில்
முதல் பிறந்தது
பிள்ளை
இப்போ பிறந்தது
தொல்லை.

நேற்றுவரை
என்னை நம்பியவள்
இன்றுமுதல் - தன்
வக்கீலை நம்புகிறாள்.

பறவாயில்லை
எனது தெரிவில்
தவறிளைத்தவள்
இந்த வக்கீல் தெரிவில்
சரிசெய்திருக்கிறாள்.
காரணம்
குடும்பங்களை பிரிப்பதில்
கெட்டிக்கார வக்கீலாம்
அவர்.
ஊரார் பேசிக்கொள்கிறார்கள்.

4 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தலான கவிதை...

காந்தி பனங்கூர் said...

//அவள் விடுவதாய் இல்லை
நானும் முடிப்பதாய் இல்லை.
அவளும் நானும் முட்டியதில்
முதல் பிறந்தது
பிள்ளை
இப்போ பிறந்தது
தொல்லை.//

அருமையான வரிகள் நண்பா, தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

பி.அமல்ராஜ். said...

மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர் மற்றும் காந்தி பனங்கூர்.

nadaasiva said...

அழகான ஆழமான கவிதை ! விருது பெற்ற கவிதை,வாழ்த்துக்கள் !!

Popular Posts