Friday, August 12, 2011

என்னை சாணியால் அடித்த 'திண்ணை'.


நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்சம் கவலை, கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் தாழ்வு மனப் பான்மை, கொஞ்சம் ஆவேசம், கொஞ்சம் ஆதங்கம் போன்ற உணர்வுகளோடு எழுதும் ஒரு பதிவு. இந்த சம்பவம் என்னை அதிகம் பாதித்தமைக்கு காரணம் இவ்வாறான சம்பவம் எனது வாழ்கையில் இப்பொழுதுதான் முதல் தடவையாக இடம்பெறுகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.

நான் சென்ற மாதம் 'திண்ணை' எனப்படுகின்ற இணைய இதழிற்கு ஒரு கவிதை அனுப்பியிருந்தேன். நீண்ட நாட்களாக அவர்கள் அதை பதிவேற்றம் செய்யவில்லை. கடைசியாக நேற்று அவர்களிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. அதாவது நான் கவிதை அனுப்பிய ஈமெயில் இற்கு பதில் அனுப்பியிருந்தார்கள். அதிலே இவ்வாறு மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Thanks
Not selected.

ஏதோ கவிதை எழுத தொடங்கிய காலங்களிலிருந்து இற்றை வரை எனது கவிதையை வாசித்தவர்கள் எல்லாம் அவற்றை கவிதையாக ஏற்றுக்கொண்ட காரணமோ என்னவோ நான் ஏதோ ஓரளவிற்கு நன்றாக கவிதை எழுதுபவன் என்கின்ற கூடிய மதிப்பீட்டில் (over estimation)வாழ்ந்து விட்டேனோ என்கின்ற ஒரு ஆதங்கம் அல்லது பயம் எனக்கு உருவாகியது.

ஆனால், நான் அவர்களை பிழை கூறவில்லை. திண்ணை தனக்கு பிடித்த தங்களுக்கு தரமான கவிதைகளை மட்டும் பதிவேற்றம் செய்வது அவர்களது உரிமை. அதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. இருந்தும் எனது கவிதை தெரிவு செய்யப்படாமைக்கு சரியான காரணம் ஒன்றை கூறியிருந்தால், குறைந்த பட்சம் கவிதைக்குரிய தரம் போதாது அல்லது தரம் இல்லை என்று கூறியிருந்தால் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் சிறிய சிறிய எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்களை திருத்திக் கொள்ள.

இத்தனை கவிதைகள் எழுதியவன், ஏன் கவிதை தொகுதி ஒன்றை வெளியிட்டவன் (அதற்காக கவிதை தொகுதி வெளியிடுபவர்கள் எல்லாம் நல்ல கவிஞர்கள் என்று சொல்ல வரவில்லை.), இத்தனை கவியரங்கங்களில் தனது கவிதையை வாசித்தவன் எழுதிய ஒரு கவிதை ஒரு பிரசுரிப்பாளரினால் நீக்கப் படுமாயின் அது அந்த எழுத்தாளனுக்கு வெட்கமே. அந்த உணர்வு அபாயகரமானது. இந்த உணர்வு அதிகமாக அழுத்தமடையுமாயின் கவிதை எழுதுவதில் ஒரு பின்னடைவு நிச்சயமாக தோன்றும்.

எதுவானாலும், இந்த தாக்கங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காகவே அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த பதிவை எழுதுகிறேன். உண்மையிலேயே இந்த கவிதை தரம் அற்றதாக இருக்கலாம். அவ்வாறு தரம் இல்லாத கவிதைகளை அவர்கள் பிரசுரிக்க வேண்டும் என்கின்ற அவசியம், தேவை இல்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிடலாம். அதைவிடுத்து உங்கள் கவிதை பிரசுரிப்பதற்கே பொருத்தமில்லைஎன்று திரும்பி அனுப்புதல் நிச்சயமாக எழுத்தாளர்களை நோகடிக்கும் என்றே நான் கருதுகிறேன்.
(அதுவும் நான் எந்த போட்டிக்கும் அதை அனுப்பவில்லை, சாதாரணமான பிரசுரிப்பிற்கே நான் அனுப்பியிருந்தேன்.. கொய்யாலே.. நம்ம கவிதை பிரசுரிப்பதற்கே தகுதி இல்லாத மொக்கை கவிதையா...ராமா..)

அப்படியிருந்தும் அந்த திண்ணையில் இதுவரை இருக்கும் கவிதைகளை ஒன்று விடாமல் அனைத்தையும் படித்தேன். அதன் பிறகு எனது கவிதை முழுமையாக தரமற்றது என்று சொல்வதை என்னால் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுசரி, அவர்கள் இணைய இதழ், அவர்கள் விரும்பியதை பிரசுரிப்பதும் விரும்பாததை பிரசுரிக்காமல் விடுவதும் அவர்கள் விருப்பம். அனாலும் அவர்கள் அணுகுமுறையை கொஞ்சம் திருத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.

இதுதான் அந்த திண்ணை பிரசுரிப்பதற்கு தகுதி அற்றது என திருப்பி அனுப்பிய எனது (மொக்கை) கவிதை..

அவள் விழிகளும் என் பார்வையும்


கடல் குளித்து வந்தவன்
இந்த முத்தை
என் வீதியில்
தவறி போயிருக்கவேண்டும்..

சந்தேகமே இல்லை.
இவள்தான்
படைத்திருக்க வேண்டும்
பிரமனை.

அவள்
விளித்ததில்
விழுந்தவன் - இன்னும்
முளித்ததாய் இல்லை.

என்
விழிகளில் கிடக்கும்
அவள்
விம்பங்களை விலக்கியபடி
எத்தனை நாள் - அவளை
கனவிலே முத்தமிட்டுக்கொள்வது..??

அவள்
வந்துபோகும் கனவுக்கும்
கற்பிருக்கவேண்டும் -
அதிகம் வெட்கப்படுகிறதே..

அவளைப்பார்த்ததில்
சுட்ட இரத்தம் - இன்னும்
சூடாறவில்லை.

வலிந்து இழுத்த
அவள் பார்வை
இன்னும் என்
வலது சோணை அறையில்
வற்றாத குருதியை
வடித்து குடித்து
விரதம் கிடக்கிறதே..

என்னமோ
அவள்
உருண்டை விழிகளுக்குள்
பிரண்ட பார்வை
அங்கேயே
உருள்கிறதே தவிர - அங்கிருந்து
விலகுவதாய் இல்லை.

திண்ணையிலுள்ள ஏனைய கவிதைகளை படிக்க: http://puthu.thinnai.com/?cat=6

No comments:

Popular Posts