என்ன சொல்ல?
மெய்பட வேண்டும்..
எம்
இறந்துபோன கனவுகளின் ஒட்டறைகளாவது
இன்னும் உயிர்வாழ்வது மிக்க மகிழ்ச்சி.
நாங்கள் இங்கு - எங்கள்
கனவுகளுக்காய் ஆர்ப்பாட்டம் நடத்த வரவில்லை.
எம் கனவுகள்
ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.
அன்று
தலைகள் அடைக்கப்பட்டன - பின்னர்
சிலைகள் உடைக்கப்பட்டன,
இறுதியில்
முலைகள் கூட சிதைக்கப்பட்டன.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள்தான் மொய்க்கிறது..
காற்றை தந்து
உயிரை எடுத்தான் கடவுள்,
கனவை தந்து
காவியத்தை கெடுத்தான் தமிழன்.
தடவிப்போகும் காற்றுக்கெல்லாம்
கனவு முளைக்க - நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..
நாம் கண்ட கனவெல்லாம்
தொடக்கத்தில் அரசு
கடைசியில் அரிசி.
என்னவோ ஏதோ
எட்டி நிறுத்தியும்
முட்டி வருத்தியும்
தட்டி நிமிரும் - நம்
சுகந்திர கனவு மட்டும்
இன்னும் - எங்கள்
குருதி கலந்து
நாடிகளில் அலைந்து
மயிரிளைகளில் நிலைத்து
உயிர் அணுக்களில்
ஆவேசமாய் அமர்ந்திருக்கிறது.
கிலுகிலுப்பைகளின் கனவுகளை கூட
சலசலப்பின்றி மதித்தவர்கள்
மாண்டுவந்த குலத்தின் கனவை
மண்டியிட்டும் மிதித்தார்கள்
நம் வாளேந்திய மகாத்மாக்கள்.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள் தான் மொய்க்கிறது..
அவர்களுக்கு - நம்
தொங்கிய நாக்குகள்
வசதியாய் போனது
நொடியில் அறுத்தெறிய,
மிஞ்சிய கைகளும்
எஞ்சிய கால்களும்
இலகுவாய் போனது
வினாடியில் தறித்தெறிய,
மயங்கி கிடந்த குற்றுயிரும்
மயக்கம் கெடுத்த மானமும்
அலாதியாய் போனது கற்பழிக்க,
செத்து மடிந்த தந்தையும்
சாகத்துடித்த தம்பியும்
சாபமாய் வழிவிட்டது - எம்மை
சாதகமாய் கொன்று குவிக்க.
இத்தனைக்குள்ளும்
பைகளில் இருந்த
கனவு சுகந்திரம்
பத்திரமாய் காப்பாற்றப்பட்டது.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்ப்பட்டது..
நமது கனவுகள் மட்டும்
ஆங்காங்கே பிய்க்கப்பட்டது..
நாங்கள் -
எட்டி நடந்த
படிகளில் இட்டனர் வெடி,
முட்டி கடக்க
முடிகையில் விட்டனர் அடி,
முடிந்தும் தடுக்க
முந்தானையில் முடிந்தனர் சதி,
புரண்டும் மிரண்டும் - நாம்
படுக்கையில் வைத்தனர் தீ.
இவற்றிட்குள்ளும் - நம்
சுகந்திர கனவு
கலைக்கப்படாமலே
காப்பாற்றப்பட்டது - எங்கள்
கிழிந்த பைகளுக்குள்.
எதுவரினும்
இதுவேனும் மெய்ப்படட்டும்.
கனவுகள் மெயக்கவேண்டி
நாங்கள்
கனகபுரம் தொடங்கி
கன்னியாகுமரி வரை
காவடி எடுத்தோம்.
நீங்கள்
பந்தல் போட்டு
பந்தி பரிமாறினீர்கள்.
முடக்கிய மூச்சு
அடங்கிய வீச்சில்
அத்லாந்திக் வரை அலறினோம்
நீங்கள்
சிம்பொனி கேட்டு
சிலிர்த்து தூங்கினீர்கள்.
இப்படி - எங்கள்
கனவுகள் மெயக்கவேண்டி
கண்களையே கடிந்துகொண்டோம்
நாம்.
இனியேனும்
கனவுகள் வேண்டாம்
எங்கள்
காலங்களாவது மெய்ப்படட்டும்.
கொடுக்கும்படி கேட்டோம் - அவர்கள்
கைகளில் இருந்தது எம் நேரம்.
கும்பிட்டும் கேட்டோம் - அப்போ எங்கள்
கைகளில் உயிரின் பாரம்.
இறுதியில் -
விட்டுவிடும்படி கெஞ்சினோம் - அவர்கள்
மனங்களில் இருக்கவேயில்லை ஈரம்.
அன்றெல்லாம்
காலமாகிப்போன கனவுகளுக்காய் - இன்று
கண்களை கசக்கி கனாக்காணுகின்றோம் - அவை
மெய்ப்படவேண்டும் என்பதற்காய்.
இறுதியாக,
கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..
5 comments:
அற்புதமான கவிதை....
வாழ்த்துக்கள்...
கண்டிப்பாக ஒரு நாள் மெய்ப்படும்...
எங்கள் கனவுகள் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதனை வலிகளோடு வாழ்ந்த அனுபவத்தின் வார்த்தைப் பகிர்வாக இங்கே தொகுத்திருக்கிறீங்க.
மீண்டும் எம் கனவுகளை எப்படியெல்லாம் அறுத்தெறிந்தார்கள்/ சிதைத்தார்கள் எனும் சம்பவத்தினை உங்கள் கவிதையினூடாகப் படிக்கையில் மனம் விம்முகிறது.
கவிதை காலத்தின் பொக்கிஷம்,.
கனவு மெய்ப்பட ப்ரார்த்தனைகள்
அருமையான வரிகள்
சின்னவர்தான் வயதில்
செயலில் இவர் பெரியோன்
'கிறுக்கல்கள்சித்திரமாகின்றன'
கவித்தொகுப்பின் நூலாசான்
'வேர்கள்பூக்கட்டும்'
உளவியல்நூல்சொந்தக்காரனும்கூட....!
சிலுவையே இவர் தரிசனம்
சர்வதேசசெஞ்சிலுவை சங்கத்து சேவையாளன்
சாவடிகள பல கண்டசாதனையாளன்
வாக்குசாவடி,சோதனைச்சாவடி என்று;
இதனால் பா அடிகள் இவரைப் பற்றிக்கொண்டது
பா வடிக்க வாருங்கள் அமல்ராஜ்!
நா துடிக்க உங்கள் கவி தாருங்கள்.
நீங்கள்ஏறுங்கள் .
(இவருக்கு நான்பாடிய தலைமை வரவுக்கவிதை)
வதிரி.சி.ரவீந்திரன்.
மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர், நிரூபன், ஆமினா மற்றும் என் மரியாதைக்குரிய கவிஞர் வதிரி சி ரவீந்திரன்
Post a Comment