Tuesday, August 2, 2011

ஜீவநதியின் நான்கு ஆண்டும், நம்ம பாடும் கவி அரங்கும்.


இன்றைய நவீன உலகமயமாக்கல் காலத்தில் ஒரு முழுமையான இலக்கிய சஞ்சிகை வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்வது
என்பதுஉண்மையிலேயே ஒரு சாதனையாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. இதை நிகழ்த்திகாட்டிய ஜீவநதி இன்று இலங்கையின் தமிழ் இலக்கிய ஆர்வலர்களை ஒரு ஆத்ம திருப்தியான மனநிறைவை உணர வழி செய்திருக்கிறது. ஒரு இலக்கிய சஞ்சிகையின் ஆயுள் எப்பொழுதுமே மிக சொர்ப்பமாவே இருந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்றையும் தற்பொழுது நமது பல இலக்கிய சஞ்சிகைகள் முறியடித்து தமிழ் இலக்கிய வாசனையை இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் பரப்பி வருதல் எம்மையும் எமது இலக்கிய பாதையையும் செம்மைப் படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே திகழ்கிறது. எமது தமிழ் இலக்கிய உலகில் இன்னும் தனித்துவமாக நிமிர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் மல்லிகை, கலை முகம், ஞானம் மற்றும் பல வரலாற்றுச் சஞ்சிகைகளின் வழியில் இப்பொழுது தனது வெற்றிகரமான நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து நிமிர்ந்து நிற்கிறது இந்த ஜீவநதி.

இலக்கிய படைப்புக்களை மட்டுமே தனது சஞ்சிகை மூலமாம் வெளிகொண்டுவராமல் அதையும் தாண்டி பிற படைப்பிலக்கியங்களையும் வெளியிட்டதன் மூலம் இந்த ஜீவநதி அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டது எனலாம்.

இந்த பாரிய இலக்கிய சமூகத் தொண்டை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக ஆற்றிவரும் ஜீவநதியின் பிரதம ஆசிரியர் பரணீக்கும் அதன் துணை ஆசிரியர் துசிக்கும் மற்றும் இதன் வெற்றிக்கு பின்னால் உழைத்துவரும் சகல படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். எமது சமூகத்தை இன்னும் தூக்கி நிமிர்த்தக்கூடிய ஆயுதம் உங்கள் கைகளில் அழகாக கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சேவை தொடரவும் இன்னும் இன்னும் பல ஆண்டு நிறைவை நாம் கொண்டாடவும் நீங்கள் வழிகோல வேண்டுமென்பதே எம்மைப்போன்ற இலக்கிய படைப்பாளிகளின் ஆவல், ஏக்கம், பிரார்த்தனை.

ஜீவநதியின் பிரதம ஆசிரியர் பரணீதரன் மல்லிகை ஜீவாவோடு.


ஜீவநதியின் துணை ஆசிரியர் துஷ்யந்தன் மல்லிகை ஜீவாவோடு.



மேற்படி ஜீவநதியின் நான்கு வெற்றி ஆண்டு கொண்டாட்டம் எதிர்வரும் 06.08.2011 அன்று மாலை 3 மணிக்கு அல்வாய் கலையகத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதில் பல முதுபெரும் கவிஞர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அட அதில நம்ம சிறப்பு கவியரங்கமும் இருக்குங்க. அதுக்கு பிரபல கவிஞர் வதிரி சி ரவீந்திரன் தலைமை தாங்குகிறார். அதோட பிரபல கவிஞர்களான நாச்சியாதீவு பர்வீன், எல். வசீம் அக்ரம், மன்னூரான் முகம்மது சிஹார், வட அல்வை க. சின்னராஜன், அல்வாயூர் சே. கணேசன், வே. துஷ்யந்தன் போன்றோரும் கலந்து சிறப்பிக்க போறாங்க. அதோட என்னையும் அழைத்திருக்கிறாங்க எண்டா பாருங்களேன். எப்புடீ...(என்ன எல்லாருடைய பெயரையும் சொல்ல ஆவெண்டு இருந்த நீங்க நானும் எண்டு சொல்ல சப் எண்டு வாய மூடிட்டியல்... சரி சரி.. நம்ம அரசியலில இதெல்லாம் சகஜமப்பா...)

எனவே வர வாய்ப்பு கிடைத்தவர்கள் தயவுசெய்து வாருங்கள். எங்கள் கவிதைகளை கேட்பதோடு நம்ம ஜீவநதியையும் மனதார வாழ்த்தி செல்லுங்கள். ஜீவநதிக்கு நீங்கள் அதிகபட்சம் கொடுக்கக் கூடிய உங்கள் பரிசு அதுவாகத்தான் இருக்க முடியும்.

1 comment:

sinnathambi raveendran said...

தங்களிடம் திறமை உண்டு
சந்தமுடன் கவிதை பாடி
சபையோரைகவர்ந்துசூடி
சிந்தனையைசெப்பிடுவீர்

வதிரி.சி.ரவீந்திரன்.

Popular Posts