Monday, August 1, 2011

நண்பேண்டா...


இன்னைக்கு நம்ம முகப் புத்தகத்தில 'நண்பர்கள் தினம்' எண்டு சில நண்பர்களின் சுவர்கள பாத்தவுடனேதான் நம்ம மொக்க பிரண்ட்ஸ் பத்தியும் ஒரு பதிவை இட்டால் என்ன என்று தோணியது. கணவன் மனைவி போன்று இந்த நண்பர்களும் அமைவது கடவுளின்ட திருவிளையாடல்களில ஒன்றுதான். காரணம், நண்பனால சாதிச்சவனையும் பார்த்திருக்கிறோம், நண்பனால சாகடிச்சவனையும் பார்த்திருக்கிறோம். ஒருத்தன் நல்லா வருவதற்கும் கெட்டு சீரழிஞ்சு போறதுக்கும் நண்பனே காரணமா இருக்கிற பல சந்தர்ப்பங்கள பார்த்திருக்கிறம். 'இவன நாசமாக்கிறது அவன்தான்' எண்டு சில அம்மாமார் தங்கள் மகன்மாரை நல்லவனாக்க அவனுடைய நண்பனை கெட்டவனாக்குவது நமது சமுதாயத்தில் சகஜம். அது கேட்டு நம்ம ஆளும், தண்ட நண்பனாலதான் தான் இவ்வளவு கெட்டவனா இருக்கிறேனோ என்றும் சிலவேளை மொக்குத்தனமா ஜோசிப்பதுண்டு. இதெல்லாம் சுத்த வேலைக்காகாத பேச்சுங்க. நம்ம நண்பனை தெரிவு செய்ற பொறுப்பு நம்ம ஒவ்வொருத்தருக்கும் இருக்கு. இத சரியா செய்யாம அவன இவன தப்பு சொல்றதில எந்தவிதமான பிரயோசனமும் இல்லையே.

எனக்கும் இண்டைக்கு வரைக்கும் நிறைய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு சந்தர்பத்திலும் ஒவ்வொரு நண்பர்கள் கூட இருப்பார்கள். அவர்கள் என்னோடு படித்தவர்களாக இருக்கலாம், என்னோடு ரோட்டு சுத்தினவங்களாக இருக்கலாம், என்னோடு சைட் அடிச்சவங்களாக இருக்கலாம், என்னோடு க்ளாஸ் சொறிங்க கிளாஸ் வந்தவங்களா இருக்கலாம், இல்லை என்னோடு வேலை பார்ப்பவர்களாக இருக்கலாம், ஒன்றாக தங்கியிருந்து குழி பறிச்ச மாமா மனிதர்களாக இருக்கலாம். இப்படி ஒவ்வொரு சந்தர்பத்திலும் ஒவ்வொரு நண்பர்கள் நம்மோடு கூட வருவார்கள். இந்த பலவகையான நண்பர்களை நம்மோடு இணைத்துக்கொள்வதும் அவர்களுக்கு ஏற்றாற்போல் நாம் வாழ (நடிக்க) பழகுவதும் ரொம்ப சிரமம். அது சிலவேளைகளில் சுவாரசியமானதாகவும் இருக்கும்.


எனது நண்பர்களின் தீர விளையாட்டுக்களை நான் தீவிரமாக ரசிப்பவன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமுங்க. ஒருத்தனுக்கு பொண்ணுகள பிடிக்கும். இன்னொருத்தனுக்கு பொண்ணுகள பாத்தாலே வெடிக்கும். ஒருத்தனுக்கு தண்ணியடிக்க பிடிக்கும். ஒருத்தனுக்கு தண்ணிய பார்த்தாலே தலை சுத்தும். ஒருத்தனுக்கு தியடருக்கு போக பிடிக்கும், ஒருத்தனுக்கு பீச்கு போக பிடிக்கும். அம்மம்மா இவங்களுக்கு மத்தியில் ஒத்தையா நாம நிக்கிறது என்றது லேசுப்பட்ட காரியமாங்க? சரி அத விடுங்க. கொஞ்சம் சீரிஸ் ஆ பேசுவம்.

நமது குண, வாழ்வியல் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டே நமது நண்பர்கள் நமக்கு அமைகிறார்கள் என்கிறார் ஒரு உளவியலாளர். ஒரு ஆன்மாவினுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு துணை போகக்கூடிய அல்லது ஒத்துப்போகக் கூடிய இன்னுமொரு ஆன்மாவே அந்த ஆன்மாவோடு ஐக்கியம் கொள்வதாக சொல்லப்படுகிறது. அதாவது எதிர்மறை தர்க்க குணங்கள் நண்பர்களாக மாறும் சந்தர்பங்களுக்கு தடையாக இருக்கும் மிகப் பிரதானமான காரணியாகும். இதைத்தானே உன்னைப்பற்றி தெரிந்துகொண்டால் உன் நண்பனைப்பற்றி தெரிந்துகொள்ள தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே இந்த மன, குண ஒருமைப்பாடுகளே இந்த நட்புக்கு அடித்தளமாக அமைகிறது.

இன்னுமொரு விடயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். இந்த ஆண்களுக்கு ஏற்படும் பெண் நட்பைப் பற்றி தவறாக பேசும் நமது சமுதாயம் இன்னமும் கொஞ்சமாவது சிந்திக்க முயற்சிப்பதாய் தெரியவில்லை. இந்த சமுதாயம் இதை ஏன் தவறாக பார்க்கிறது என்கின்ற கேள்விக்கு இலகுவான பதில் இருக்கிறது. வீரியமான நட்பு சகலதையும் மறைத்துப் போடும் இயல்பு கொண்டது. வீரியமான நட்பு சில தவறுகளை கூட அன்பு, நட்பு என்பதற்காய் கண்டுகொள்வது இல்லை. ஆகவே, எவ்வாறாக இருப்பினும் ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாகின்ற போது அவர்களுக்கிடையே உடலுறவு ஆசைகள் தோன்றினும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்பதுதான் இந்த சமுதாயத்தின் பயம். இந்த ஒரே காரணத்திற்காகவே இந்த ஆண் பெண் நட்பை கொஞ்சம் பயத்தோடு நோக்குகிறது நமது சமூகம். இதைவிட இந்த ஆண் பெண் தங்கள் நட்பை நிரந்தரமாக்கிக் கொள்வதற்காய் சிலவேளைகளில் காதலில் முடித்துக்கொள்வார்கள் எனபதும் ஒரு சமுதாயத்தின் பயம். ஆனால் இவற்றை அந்த ஆண் பெண் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில்தான் இந்த சமூகத்தின் சந்தேகம் தீர்க்கப்படுகிறது. மற்றும்படி இந்த ஆண் பெண் நட்பில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. இந்தக்காலத்தில இதெல்லாம் ஒரு விசயமே இல்லேங்க. ஆனாலும் இன்னும் நாம் நமது சமூக வட்டத்திற்குள் வாழ வேண்டியிருக்கிறது. ஆண் பெண் நட்பு, ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் நட்பை விட வீரியமானது. ஆழமானது. பொதுவாக ஐக்கியமானது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு உயிர்வாழ்வதில்லை. காரணம் நமது சமூக கலாச்சார இறைமைகள். இருந்தும் ஆண் பெண் நட்பு மற்ற நட்புக்களை விட ரசிக்கக் கூடியது.

நம்ம நண்பர் ஒருத்தர் இருக்கிறார் பாருங்க. அவருக்கு ஏகப்பட்ட நண்பிகள். இதனாலோ என்னவோ அவன் தண்ணி அடிக்கிறதுக்கு பணத்துக்கு கஷ்டப்பட்டதே இல்லேங்க. எப்படி இது சாத்தியம்? சிம்பிளுங்க, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நண்பிட்ட ஆட்டைதான்.. நண்பிமாரே உங்க நண்பன்ட கொஞ்சம் யாக்கிரதையா இருங்கோ..

அதேபோல நம்ம நண்பர் ஒருத்தர் தண்ட நண்பிய வச்சு அந்த நண்பிட நண்பிக்கு ரூட்டு போட்டு இப்ப செட் ஆக்கி கலியாணம் வரை போய் இருக்கிற சந்தர்ப்பமும் இருக்குங்க. (தண்ட நண்பியை விட நண்பியின் நண்பி அழகானவள் என்றது நம்ம ஆளுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு)

நமக்குதான் எதுவும் இல்ல.. ஐயோ ஐயோ.. அதுசரி, நாமதான் அதுக்கு சரிவரமாட்டோமே... எதுக்குங்க?? அதமட்டும் தயவுசெய்து கேக்காதீங்கோ........

No comments:

Popular Posts