Tuesday, August 9, 2011

ஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.

என்னிடம் கேட்கப் பட்டதோ கவியரங்கத்தில் ஒரு கவிதை. அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கை ஒன்றிற்காகவே இரவிரவாக கொழும்பிலிருந்து
பிரயாணம் செய்து யாழ்ப்பாணத்தை அடைந்தேன். என்னோடு கவியரங்கத்தில் பங்கெடுக்க என்று வர இருந்த அந்த பெரிய பெரிய கவிஞர்களை பற்றி எண்ணி, பயந்துகொண்டே எனது இரவுப் பயணம் முடிவிற்கு வந்தது. நீண்ட நாட்களுக்கு பின் யாழ் போவதால் கொஞ்சம் மனதளவில் பரவசம். வழிகளில் அனைத்தும் புதிதாகவே கண்களில் பட்டது. ஆக, அந்த ஓமந்தை சோதனைச் சாவடியும், ஆங்காங்கே வீற்றிருக்கும் புத்தனும், யாருடையதையோ யாரோ கண்காட்சிப்பொருளாக்கியிருக்கும் சில யுத்த நினைவு பொருட்கள் மற்றும் இடங்களையும் தவிர மிச்ச அனைத்தும் எனக்கு வித்தியாசமானதாகவே தெரிந்தது.

மக்களில் விழுந்த சாபம் அந்த வீதிகளிலும் விழுந்திருக்க வேண்டும். இன்னும் அவை திருத்தி முடிந்ததாய் இல்லை. மக்களின் அபிமான அரசாங்கம் நிறையவே அபிவிருத்திகளை செய்துவருகிறது. மன்னிக்கவும் செய்வதாய் தெரிகிறது. பல சர்ச்சைகளை முகம் கொடுத்து இடம் மாறிய புதிய சங்கிலியன் சிலை ஜொலிக்கிறது. அதிலும் வாளை பார்த்ததும் மனதிற்குள் ஒரு நின்மதி. அப்பாடா வச்சிடாங்கையா...


பறந்து பறந்து என்னை தயார்செய்து என் நண்பனின் உதவியோடு அல்வாய் கலையகம் நோக்கிய எனது பயணம் துஷியின் தொலைபேசி வழிகாட்டலில் இனிதே முடிந்தது. எல்லாமே புது முகங்கள். அனால் அவர்கள் பெயர்களை கேட்டவுடனே ஆஹா அவரா நீங்கள் என்று புருவம் உயர்ந்தது, மலர்ந்த எனது புன்னகையோடு. முதலில் என்னை வரவேற்றவர் ஜீவநதியின் துணை ஆசிரியர், கவிதை எழுதும் சிறு பிள்ளை துஷ்யந்தன். அடுத்து எனது கைகளை இடம்மாற்றினார் பிரதம ஆசிரியர் பரணீதரனிடம். அவரும் ரொம்ப சின்ன பையன். வயதில். அதனைத்தொடர்ந்து பிரபல நாடகக் கலைஞரும், கவிஞரும், மிக முக்கிய இலக்கிய மனிதரும், பரணீதரனை பெற்றதோடு அவரை இன்னும் பின்னால் நின்று இயக்கிவருபவருமான கலாமணி ஐயா அவர்கள்.

தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஆரம்பமாவதற்குள் அங்கு வந்திருக்கும் இன்னும் பல முகமறியா கவிஞர்களை நோக்கி பயணித்த எனது கண்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. முதலில் தெணியான். அவரது சிறுகதைகளும் ஏனைய படைப்புக்களும் எனது ரசனையை நீண்ட நாட்களாக ஒரு கை பார்த்துக்கொண்டே இருந்தன. அந்த மனிதரை சந்தித்ததில் அப்படியொரு மகிழ்ச்சி. மீண்டு வந்த சந்தோசத்தில் படிகளில் ஏறி மேலே சென்றதில் என்னை குதூகலப் படுத்த இரண்டு பேர் அங்கு. ஒன்று எனக்கு பிடித்த நல்ல கவிஞர்களில் ஒருவரும், நாசூக்காக கவிதை சொல்வதில் விண்ணருமான எனது அபிமான நாச்சியாதீவு பர்வீன். கண்டவுடனே ஏதோ நீண்ட நாட்கள் பழகியதுபோல் 'வாங்க அமல்ராஜ்..' என்ற அவரது வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் மிடுக்காக வெளியே வந்த இன்னுமொரு பிரபல, அழகிய கவிஞர் வாசிம் அக்ரம். இவரை 'படிகள்' இன் ஆசிரியர் என்று சொன்னால் உங்கள் அதிகமானவர்களுக்கு இலகுவாக புரியும். இவர்களுக்கு என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி மேலும் மேலும் அறிமுகம் செய்துகொண்டிருந்தார் எனது நல்ல நண்பர் கவிஞர் மன்நூரான் சிஹார். வழமை போலே சிஹார் தன்னை தாழ்த்தி என்னை அதிகம் புகழ்ந்தது பிடிக்கவே இல்லை. அவரது பெருந்தன்மையே அதுதான். என்ன செய்வது.

பேசிக்கொண்டிருக்கையில் எனது கவிதைகளை தான் படிப்பதாகவும் அவை தன்னை கவர்ந்ததாகவும் நல்ல கவிஞன் எனவும் என்னை புகழ்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களை ஒருமுறை ஆதங்கத்தோடு பார்த்தேன் (என்னய்யா சொல்லுறாரு இவரு?? உண்மையா இருக்குமோ??). ஒரு மலை இந்த சின்ன கல்லைப் பார்த்து இப்படி சொன்னால் நான் என்னதான் செய்வது?

அறிமுகங்கள் முடிந்து விழா ஆரம்பமானது. தெணியான் நிகழ்வை தலைமை தாங்கினார். அவரிடம் எனது அபிமானத்தை இன்னும் இன்னும் கூட்டிய விடயம், அவர் மனதில் பட்டதை அப்படியே சொல்பவர். யதார்த்த வாதி. அவரது பேச்சில் இவை மிக அழகாகவே வெளிப்பட்டன. அவரை அதிகம் புரிந்து கொள்ளாதவர்கள் இவர் ஒரு கடுமைப் போக்கான கவிஞர் என்றும் விமர்சிக்க வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. பல உரைகள் நிகழ்வை அலங்கரித்தன. அதில் என்னை அதிகம் கவர்ந்த மூன்று பேச்சாளர்கள். அவர்களைப் பற்றி குறிப்பிடாவிடில் இந்த பதிவு முற்றுப் பெறாது என்று நினைக்கிறேன்.

நாவலாசிரியர் டேவிட் அவர்களின் வெளியீட்டுரை


முதலில் பிரபல நாவலாசிரியர் டேவிட் அவர்களின் வெளியீட்டுரை. மிக துல்லியமான குரல் அதோடு வீரியமான கருத்துக்கள். அழகிய பேச்சு மொழி. நிதானமான உச்சரிப்பு. அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் என்னை அதிகம் கவர்ந்தது. அதாவது ஜீவநதியின் சிறப்புக்களில் ஒன்று 'இலக்கிய பணிகளை அல்லது இல்லக்கியத்தை இளைய தலைமுறையினரிடம் கையளித்தல் என்பதற்கு இந்த ஜீவநதி ஒரு நல்ல உதாரணம்'. இது மிகவும் அப்பட்டமான உண்மை. பல இலக்கிய ஜாம்பவான்கள் பின் நின்று இந்த ஜீவநிதியின் பொறுப்புக்களை இளைய தலைமுறை படைப்பாளிகளான பரணீதரனிடமும் துஷியந்தனிடமும் கையளித்திருக்கின்றமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயம் தான்.

அடுத்த சொற்பொழிவு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ராஜேஷ்கண்ணன் அவர்களுடையது. அவரது பேச்சுவன்மை பிரமாதம். அவர் வழங்கிய ஜீவநதியின் கவிதைகள் மீதான மதிப்பீடு உச்ச தரம். அடுத்ததாக ஆசிரியர் பௌனந்தி அவர்களின் உரை. அவரும் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது அன்றுதான் எனக்கு தெரியும். இவரது உச்சரிப்பின் வீரியத்தையும் அழகையும் பார்த்துக்கொண்டிருந்ததில் பல இடங்களில் அவர் சொன்ன முக்கிய விடயங்களை விட்டுவிட்டேன்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ராஜேஷ்கண்ணன்.

ஆசிரியர் பௌனந்தி அவர்களின் உரை

இவற்றைத்தாண்டியும் சகல பேச்சாளர்களும் எடுத்துக்கொண்ட ஒரு பொதுவான தலைப்பு 'பரணீதரன்'. அவரது வயதிற்கும் அவர் ஆற்றுகின்ற சேவை மிக அதிகமானது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம்தான். வாழ்த்துக்கள் பரணீ.

இறுதியாக பரணீதரனின் உரை என்னை கொஞ்சம் வியக்க வைத்தது என்னவோ உண்மைதான். அதிகம் பேசவில்லை. இந்த ஜீவனதிக்காய் அவர் படும் கஷ்டங்களை அழக்காக கூறினார். இருந்தும் பின்னணியில் தெணியான் மற்றும் அப்பா (கலாமணி) இருந்தாலும் ஜீவநதி எனது தனியாள் முயற்சியினாலேயே இன்றுவரை வெளிவருகிறது என்று அவர் கூறியபோது நான் உட்பட பல பார்வையாளர்களின் முகங்களும் கொஞ்சம் கோணியதை பார்க்க முடிந்தது. அதில் உண்மை இருந்தாலும் கொஞ்சம் அவையடக்கத்திற்காவது அந்த வசனத்தை கொஞ்சம் வேறு விதமாக கூறியிருக்கலாமோ என்று தோணியது எனக்கு. அதைவிட ஜீவநதியை பற்றி தவறாக விமர்சிக்கும் பல இலக்கியப் போலிகளிக்கு பரணீதரன் அளித்த பதில் மிக மிக பொருத்தமான அடி.

முதற் பிரதி.

அடுத்து நம்ம கவியரங்கம். பல பெயர்போன கவிஞர்களுக்கு மத்தியில் இந்த குண்டுமணி அமல்ராஜும் அமர்ந்திருந்தது ஆச்சரியம் கொடுத்த ஒன்றுதான். கவியரங்க தலைமை பிரபல கவிஞர் வதிரி சி ரவீந்திரன். அவரை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் முன் கவிதை சொல்வது எல்லாவற்றையும் விட படபடப்பு.

தலைவர் - கவிஞர் வதிரி சி ரவீந்திரன்.

நாச்சியாதீவு பர்வீன்.

சின்னப் பையன் துஷியந்தன் (சின்னபையன் - வயதில் மட்டும்).

மன்நூரான் சிஹார்

அல்வாயூர் கணேசன்

அடியேன்.

வட அல்வை க சின்னராஜன்.

ஒருவாறாக உங்கள் கவிதையும் நன்றாக இருந்தது என்கின்ற பார்வையாளர்களினதும் பிற கவிஞர்களினதும் வார்த்தைகளைக் கேட்கும் வரை அப்பப்பா என்றாகிவிட்டது. ஏதோ நம்மால முடிஞ்ச அளவு மற்ற கவிஞர்களும் இது கவிதைதான் என்று ஏற்றுகொள்ளும் விதத்தில் ஒரு கவிதைய பாடி முடித்த மன திருப்தி நிகழ்வின் முடிவில் ஒரு பெரும் மூச்சாகவே வெளிப்பட்டது.

இறுதியாக, ஜீவநதி ஒரு முழுமையான இலக்கிய சஞ்சிகை. அது மட்டுமல்லாது பல தலைமுறை படைப்பாளிகளை ஒன்றாக்கி ஒரே இடத்தில் சந்திக்க வைத்து இலக்கிய தலைமுறை இடைவெளியை ஓரளவேனும் குறைக்க முயற்சிக்கும் ஜீவநிதியின் பணி தலைக்கு நிகரானதே. மற்றும், இந்த அடியேனையும் கண்டுகொண்டு, அந்த பெருங் கவிஞர் மேடையில் ஒரு சிறு நாற்காலியை எனக்காகவும் தந்துதவிய ஜீவநதிக்கு விசேடமாக பரணீதரனுக்கும் துஷியந்தனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
1 comment:

PANITH THEE said...

தங்களது கவிதையை பேஸ் புக்கில் வாசித்தேன். மிக உணர்வுப்பூர்வமான வரிகள். பாராட்டுகள். - என். நஜ்முல் ஹுசைன்

Popular Posts