Tuesday, August 30, 2011

தீ எரித்த தீ.


ஒரு
தீயை எப்படி
தீ எரித்தது...?
வியந்துபோனேன் செங்கொடி..

உடலுக்கு
நீ வைத்த
தீ - நீ
இறக்கையில் தீர்ந்தது,
எம் உணர்வுகளுக்குள்
நீ வைத்த
தீ - நீ
இறந்தபின்னும் எரிந்தது.

உன்னை
தட்டி எழுப்பி
ஒன்று சொல்லவேண்டும்.
உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..

உறவுகளை
மதிக்கத் தெரிந்த நீ - உன்
உடலையும்
மதித்திருக்க வேண்டும்.

அந்த
மூவரையும் காப்பாற்ற
நீ
மூச்சுவரை போராடியிருக்கலாம்.
பரவாயில்லை
மூச்சின்றியும் போராடலாம்
மூச்சின் பெறுமானம் தெரிந்தவர்களுடன்..

செங்கொடி,
நீ
வைத்த தீயில்
உன்னோடு சேர்த்து
நீ எரித்தவை
ஏராளம்.
பரவாயில்லை! - உன்
உன் உணர்வுகளையாவது
விட்டு விட்டு போயிருக்கிறாய்
எங்களிடம்..

உனது
ஒற்றைக்கனவு - ஒருவாறு
பலிக்கிறது.
இருந்தும்
நீலம் பாய்ந்த - எம்
குருதிகளும்,
உனது தீயால்
கருகிப்போன - எம்
இதயங்களும்
உன்
உயிர்மேல் ஆணையாய்
தொடர்ந்தும் போராடும் - அவர்கள்
உயிர் பிச்சைக்காய்.

ஆனாலும் - செங்கொடி,
ஒன்றை மட்டும் சொல்கிறோம்,
உனது
உணர்வுகளை வாசிக்கிறோம் - அனால்
உன்னை
உதாரணமாய் யாசிக்க முடியாது.
மன்னித்துக்கொள்.


Monday, August 29, 2011

வேண்டாம் ஐயா இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி..


"நோக்கியோன் நோக்கிய பொருளை நோக்கியவாறே நோக்கின் நோக்கிய பொருள் நோக்கியவாறே அமையும்."


நீண்டநாட்களாக எனது ஆதங்கங்களின் மூலைகளில் காத்துக்கிடந்த ஒரு பதிவு இது. எப்பொழுதெல்லாம் பதிவுகள் இட வரும் பொழுதும் இந்த பதிவை எப்பொழுது இடுவது என்கின்ற கேள்விக்கு ஒரு கமா போட்டுவிட்டு மற்றப் பதுவுகளை இட்டுவந்த காலம் இன்றோடு முற்றுப் பெறுகிறது. காரணம் இந்த பதிவு யாரையாவது நோகடிக்குமா அல்லது என் மேல் சிலருக்கு உள்ள கணக்கை கொஞ்சம் குறைத்துவிடுமா என்றெல்லாம் ஏங்கியதன் விளைவே இந்த பதிவு இடுவதற்கு நாட்கள் ஆகின. இருந்தும் நான் தொட்டதை சொல்பவன். பட்டதை எழுதுபவன். அதைத் தாண்டியும் எனது ஆதங்கத்தையும் பேனாவையும் இனியும் சமாளிக்க முடியாது. இந்த பதிவை ஒரு விமர்சனப் பதிவாகப் பார்க்காமல் ஒரு அனுபவப் பகிர்வாக மட்டும் பாருங்கள்.

இலக்கிய உலகம் என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. அதேபோல இலக்கியவாதிகள் என்போர் அனைவரும் ஒரே கொள்கைகளைக் கொண்டவர்களும் அல்ல. இந்த இலக்கிய உலகத்தில், இந்த இலக்கியவாதிகளுடன் இலக்கியவாழ்க்கை நடத்துவதென்பது அவ்வளவு இலகுவானதும் அல்ல. அந்தளவிற்கு கடினமானதும் அல்ல. சிறு வயதிலிருந்தே எனக்கு இந்த இலக்கியத்தின் மீதும் கவிதையின் மீதும் ஈடுபாடு இருந்துவந்தது. ஆனால் எனது கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்கின்ற கவிதை நூலை நான் வெளியிடும் வரை இந்த இலக்கிய உலகத்திற்குள் நான் எட்டிப் பார்த்தது கிடையாது. தெளிவாகச் சொல்லப்போனால் இலக்கிய உலகத்தில் யாரையும் எனக்கு தெரியாது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத்குள் வர ஆரம்பித்தவேளையில்தான் நிறைய விடயங்கள் எனக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

சகலதும் பிடித்திருந்தாலும் இந்த இலக்கிய சூழலில் ஒன்றுமட்டும் இன்றுவரை எனக்கு பிடிக்கவே இல்லை. அது கொஞ்சம் சீரியஸ் ஆன விசயமுங்க. அதனால் இன்றுவரை நான் இதை எனது மிக நெருங்கிய இலக்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருடனும் பகிர்ந்ததில்லை.

தலைமுறை இடைவெளி.

நன் இந்த கலையுலகிற்குள் வந்தது முதல் எனக்கு பல சந்தர்ப்பங்கள் இந்த தலைமுறை இடைவெளி என்கின்ற ஒரு பிரச்னையை ஞாபகமூட்டின. எனக்குத் தெரிந்தது வரை தமிழ் இலக்கிய உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்ற இலக்கிய ஜாம்பவான்கள் அனைவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். அவர்களின் இலக்கிய அனுபவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. இன்னுமொரு வகையில் சொல்வதேயானால் அவர்களது அந்த நீண்ட அனுபவம்தான் இலக்கிய உலகின் தமிழ் இலக்கிய எதிர்பார்ப்பை இன்னும் அந்த அளவிலேயே தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த இலக்கிய மகான்கள் இன்னும் எம் மத்தியில் எம்மோடு வாழ்ந்துகொண்டு வருகின்றமை இந்த இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல எமக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமே.. மல்லிகை ஜீவா, தெணியான், கே.எஸ்.சிவகுமாரன், திக்குவலைக் கமால், தெளிவத்தை ஜோசேப் போன்ற மூத்த இலக்கிய தலைமுறை தொடங்கி மேமன் கவி, வதிரி சி ரவீந்திரன், அஷ்ரப் சிஹப்தீன் போன்ற இரண்டாம் மூத்த தலைமுறையை கடந்து பொத்துவில் அஸ்மின், நாச்சியாதீவு பர்வீன், மன்னார் அமுதன் போன்ற நேரடி மூத்த தலைமுறையின் பின்னர் எங்களைப் போன்றவர்கள் என இந்த இலக்கிய தலைமுறை நீள்கிறது..

கிட்டத்தட்ட இந்த மூன்று இலக்கிய தலைமுறையினரை தன்னகத்தே கொண்ட இவ்வாறானதொரு பல்வகைமை கொண்ட இலக்கிய வட்டம் தலைமுறை இடைவெளி சிக்கல்கள் இல்லாமல் நகரும் என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதிலே இரண்டு விதமான தலைமுறை இடைவெளிகள் காணப்படுகின்றன. ஒன்று இலக்கிய தலைமுறை (நான் மேலே குறிப்பிட்டவை) இடைவெளி இன்னொன்று வயது ரீதியான தலைமுறை இடைவெளி.

இந்த மூத்த தலைமுறை இல்லக்கிய வாதிகள் என நாம் போற்றும், மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லோருமே எப்பொழுதுமே இந்த இளம் எழுத்தாளர்கள் மட்டிலான விடயங்களில் ஒரே கொள்கைப் போக்கைக் கொண்டவர்கள் அல்ல. அதிலும் காலம் கடந்து நிலைக்கும் இலக்கியத்தை கையில் வைத்துக்கொண்டு இளம் இலக்கிய படைப்பாளிகள் தொடர்பான விமர்சனங்களையும் நம்பிக்கையற்ற தன்மையையும் வெளிப்படுத்தும் சில மூத்த இலக்கியவாதிகள் இந்த இலக்கிய இஸ்திரத்தன்மையை எப்படி காலம் கடந்தும் அனுப்பிவைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

இளம் படைப்பாளிகள் பற்றி திருப்தியான கருத்தைக் கொண்டிராத பல மூத்த படைப்பாளிகளை பல மேடைப் பேச்சுகளிலும், தனிப்பட்ட சந்திப்புக்களிலும், விமர்சன கருத்துக்களிலும் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் இதுவரை சரியாகக் கூறியதாய் எனக்கு தெரியவில்லை. காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை உரிய குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மைக்கு சாட்சிகளாக இதுவரை காட்டப் பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனது கவிதை ஒன்றில் கூட பின்னூட்டம் இட்டிருந்த என் மரியாதைக்குரிய மேமன் கவி அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார். "நான் இந்த பகுதியில் உலாத்தி பார்த்த்தில் இளம் படைப்பாளிகள் காத்திரமாக எழுதுகிறார்கள் என்பதும், (நீங்கள் உட்பட) விமர்சனங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை, இளம் படைப்பாளி பற்றி திருப்தியான கருத்தை கொண்டிருராத எனக்கு மூத்த படைப்பாளிகள் சிலரிடம் சொல்லி கொண்டுதான் இருக்கிறேன்." இத்தகைய மூத்த படைப்பாளிகளின் கருத்துக்கள் இளம் படைப்பாளிகள் மேலான கருத்தியல் நோக்குகளை வெளிப்படுத்துவதுடன் இவர்களும் காத்திரமாக எழுதுகிறார்கள் என்பதையும் ஒருவகையில் உறுதிப் படுத்துகின்றன.

இந்த இளம் படைப்பாளிகள் பற்றிய திருப்தியான கருத்துக்களைக் கொண்டிராத எம் மூத்த படைப்பாளிகள் இவர்கள் மேல் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தான் எவை? இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தரமற்றவையா? அல்லது இலக்கிய சித்தார்ந்தங்களையும் விழுமியங்களையும் கடந்து அல்லது தமிழ் இலக்கிய போக்கிற்கு பொருந்தாத படைப்புக்களை படைக்கிறார்களா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்? யாரும் அறியாத இந்த வெளிப்படுத்தப்படாத காரணங்களே இந்த தலைமுறை இடைவெளிக்கு காரணம் என தோன்றுகிறது.

என்னை இந்த விடயத்தில் அதிகம் சிந்திக்க வைத்த விடயம் இறுதியாக நான் கலந்துகொண்ட வதிரி சி ரவீந்திரன் சார் உடைய 'மீண்டு வந்த நாட்கள்' நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடைய காத்திரமான உரை. இந்த உரை பிரதானமாக இரண்டு பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஒன்று ரவீந்திரன் மற்றும் அவரது இலக்கிய வாழ்க்கை, மற்றது இளம் எழுத்தாளர்கள் மீதான குற்றச்சாட்டு. 'இளம் எழுத்தாளர்கள் பல புத்தகங்களை போட்டதும் (எழுதி வெளியிட்டதும்) அவர்கள் தாங்கள் பெரிய எழுத்தாளர்கள் என கெறு (கர்வம்) கொண்டுவிடுகிறார்கள்'. இதுவே அவரது ஒட்டுமொத்த குற்றச்சாட்டின் சுருக்கம். இந்த கருத்தை அவர் வெளிப்படுத்திய விதம், பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் அவர் இளம் படைப்பாளிகள் மட்டில் கொண்டிருந்த அதிருப்தித் தன்மையை தெட்டத்தெளிவாக வெளிக்காட்டியது. இது எதற்காக என்பது அன்று அரங்கில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு புரிந்ததோ என்னவோ எனக்கு புரியவே இல்லை. இவ்வாறான கெறு யாரையும் பிடித்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. எனது ஒரு மரியாதைக்குரிய மூத்த படைப்பியலாளர் நேரடியாக இவ்வாறு சொன்னது ஒரு இளம் படைப்பாளி என்கின்ற விதத்தில் எனது முகத்திற்கு முன்னால் நையைப் புடைத்ததைப் போலானது. மூத்த படைப்பாளிகளே, நாங்கள் உங்களிற்கு பிள்ளைகள். எப்பொழுதாவது தந்தை பிள்ளைகளை திருத்துவதை அல்லது வழிநடத்துவதை விட்டு விட்டு அவர்களை விமர்சிப்பதிலும் குறை கூறுவதிலும் அக்கறை உள்ளவராக இருப்பாரா? இன்னுமொன்றையும் எனது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளிகள் சிந்திக்க வேண்டும். இந்த இலக்கியத்தை, ஏன் நீங்கள் இப்பொழுது கட்டிக் காக்கும் இலக்கியத்தைக்கூட அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச்செல்லும் பாரிய கடமையை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ என்றோ ஒரு நாள் இந்த இளம் தலைமுரையினரிடம்தானே ஒப்படைக்க வேண்டும். என்றுமே எங்களைப் போன்ற சிறியவர்களின் மனங்களில் இலக்கிய தெய்வங்கள் போல் அமர்ந்திருக்கின்ற மல்லிகை ஜீவா போன்ற மூத்த இலக்கியவாதிகள் எங்களை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் எங்களை வளர்த்துவிட வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது ஏன் மறந்து போகிறீர்கள். மல்லிகை என்கின்ற ஒரு இலக்கிய வாசிப்பு அனுபவத்தை இன்னுமொரு இளம் தலைமுறை ஜீவாதானே அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச்செல்ல வேண்டும்?

இன்னுமொரு விடயத்தையும் நான் நிச்சயம் இங்கு சொல்லியே ஆகவேண்டும். கவிதைகள் தரமானதாக இருந்தால் எத்தனை புத்தகம் போடுகிறோம் என்பது ஒரு பிரச்சனையா என எனக்கு தோன்றவில்லை. அதைவிட இந்த பிரதானமான இரண்டு தலைமுறையினருக்கும் இடையே உள்ள படைப்பிலக்கிய வேறுபாடுகளை ஜோசித்துப் பாருங்கள். சிலவேளைகளில் மூத்த ஒரு மரபுக் கவிஞனுடைய கவிதையை இன்றைய இளம் மரபுக் கவிஞனுடைய கவிதை முந்தி விடுகிறதே. இதனால் பெரியவர்கள் சிறியவர்களை வெறுப்பதற்கு இளையவர்களின் கவிதை தரமற்றது என எப்படி கூறமுடியும். இளையவர்கள் இந்த இலக்கிய தளத்தில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் முன்னேற்றம் உளவியல் போக்கில் பெரியவர்களை பாதிக்கின்றதா எனவும் உளவியல் நோக்கில் சிந்திக்கத் தோன்றுகிறது.

அடித்தாலும் பிடித்தாலும் தன் பிள்ளையை தான் தான் சுமக்கவேண்டும் என்பதைப் போல, என்னதான் கெறுப்பிடித்தாலும் இந்த இளம் படைப்பாளர்களை மூத்தவர்கள் நீங்கள்தானே கரைசேர்க்க வேண்டும். இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தரமற்றவை எனின் திருத்திக் கொடுங்கள். இலக்கிய பக்குவம் இல்லையெனில் அரவணைத்து பக்குவத்தை படிபியுங்கள். இதுவே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். என்னைப்பொறுத்தவரையில் இலக்கிய தரமான படைப்புக்களை யார் படைத்தாலும் அதை எவ்வித கசப்பு உணர்வுகள் இன்றி அதை ஏற்றுக்கொள்ள இந்த இலக்கிய உலகம் என்று தயாராகின்றதோ அன்றுதான் இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி நீங்கும். எழுதுபவனுக்கு எத்தனை வயசு என்பதை விட அவன் எழுதியது எப்படி இருக்கிறது, அதை எப்படியெல்லாம் இன்னும் இன்னும் முன்னேற்ற எப்படி அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என ஜோசித்தால் இந்த இடைவெளி இலகுவாக நீங்கிப் போகும். இளம் எழுத்தாளர்கள் எவருமே மூத்த எழுத்தாளர்களை மதியாதவர்கள், அல்லது வெறுப்பவர்கள் அல்லது போட்டியாய் நினைப் பவர்கள் என்று இல்லை. நாங்கள் படைக்கும் படைப்புக்கள் எல்லாம் நீங்கள் இருக்கும் இந்த காலங்களிலேயே பூப்பெய்திவிட வேண்டும் என யாசிப்பவர்கள். உங்கள் கை பிடித்து புதிய இலக்கிய உலகை நோக்கி நடைபோட ஆவலாய் இருப்பவர்கள். எங்கள் வேகம் புதிது, விவேகமும் புதிது, இலக்கிய அனுபவமும் புதிது.. எனவே நீங்கள் தானே எங்களுக்கு இவற்றை கற்பிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் நிறைய இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை வெளிக்கொண்டுவருகிறார்கள். அவர்களது ஏக்கம் ஒன்றுதான். அவர்களுக்கு தேவையான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது. அந்த சந்தர்ப்பங்களை தேடியே அவர்கள் பல மூத்த படைப்பாளிகளை நோக்கி கடிதம், மின் அஞ்சல், முகப் புத்தகம், ட்விட்டர் என ஓடி வருகிறார்கள்.

இறுதியாக தயவுசெய்து இளம் எழுத்தாளர்கள் மீதான உங்கள் கருத்துக்களை கொஞ்சம் மீள் பரிசீலனை செய்யுங்கள். அவர்கள் படைப்புக்களை வரவேற்று அதன் மூலம் அவர்கள் மீதான உங்கள் நம்பிக்கையை வளருங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள். நீங்கள் எங்கள் பெற்றோர். இதை எப்பொழுதும் (உங்கள் எல்லா மேடை பேச்சுக்களிலும்) ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். படைப்பிலக்கியத்தில் இந்த தலைமுறை இடைவெளி ஆரோக்கியமானதல்ல. இன்று வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் ஒரே மேசையில் அமர்ந்து ஒரே படத்திற்கு பாடல் எழுதுகிறார்கள். அது ஏன், கலாமணியும் அவர் மகன் பரணீதரனும் ஒரே வீட்டிலிருந்து ஒரே ஜீவநதிக்காய் உழைக்கிறார்கள். இதைவிட வேறு என்ன உதாரணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். என்ன, இளைய தலைமுறை படைப்பாளிகளிடம் உங்களைப் போன்ற அனுபவம் இல்லை. ஆனால் திறமை இருக்கிறது. முயற்சி இருக்கிறது. உங்கள் அனுபவத்திற்கு அருகில் இவர்கள் திறமைகளையும் கொஞ்சம் கொண்டு செல்லுங்கள். இவர்கள் உங்கள் அனுபவத்தை படிப்பார்கள். நீங்கள் இவர்கள் திறமையை மதிப்பிடுவீர்கள்.


பி.கு. தயவுசெய்து இப்பதிவை முறைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு அதிகம் தெரிந்த நபர்களின் பெயர்களை மட்டுமே இப்பதிவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்காக இவர்கள் மட்டும்தான் என்று அல்ல. மற்றவர்களை எனக்கு அதிகம் பரீட்சயம் இல்லை. இன்னுமொன்று உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். அப்பொழுதுதான் எனது எதிர்பார்ப்பு எந்தளவிற்கு சரி என்பது எனக்கு தெரியும்.Friday, August 26, 2011

நினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்.


நீ
உதிர்ந்தபோது,
மலராத பூக்கள் கூட
பகிஷ்கரிப்பு செய்ததே..

பொழுது சிரிக்க
பூமி வெளிக்க
சூரியன் கூட
சந்திரனை முந்திக் கொண்டுவர
நீ மட்டும் - நான் இட்ட
திருநீறாய் மறைந்தாய்...

நீ
என்னை வளைத்தாய்
நிலா
தானாய் வளைந்தது.
நான் உன்னை
வெறுக்கும் போதெல்லாம்
ஏனோ - அந்த சூரியன்
நெருப்பாய் சுட்டது..
இத்தனைக்குள்ளும் - என்
நினைவு வெளியெங்கும்
உன் ஞாபகங்கள்
மானம் விட்டு திரிந்தது..

கூடவே இருந்தாய்
குதூகல வெள்ளம் - நான்
கும்பிட்டும் பிரிந்தாய் - தினம்
ஞாபகங்கள் கொல்லும்.

வந்துபோகும் ஞாபகங்கள்
விடிந்தால் கூட
முடிந்து போவதில்லை.
என்
பொழுதுகளும்
விழுதுகளும்
கெஞ்சினாலும் - அவை
மரணிப்பதில்லை.

என் பக்கம்
நீ வந்தாய்
என்
தேகம் சிலிர்த்தது
வானம் சிரித்தது
இரவில் வந்த
தூக்கம் கூட
கவிதை சொன்னது..

தந்த மனதை
திருப்பி கேட்டவள்
தன்
ஞாபகங்களை மட்டும்
தானம் செய்து போனதன்
தர்மம் புரியவில்லை...

நல்லவளே,
நீ வேண்டும் என்று
என்
இரவுகளை விற்றேன்..
அதன் இலாபமோ என்னவோ
உன்
ஞாபகங்கள் மட்டும்
தாராளமாய் கிடக்கிறது
என்னிடம்.

என்
நினைவு வெளியில்
உன் ஞாபகங்கள்..
செத்துப்போன - என்
உணர்வுகளில்
அவற்றின்
சின்ன சின்ன சில்மிசங்கள்.
உன்
ஞாபகங்களோடு
வாழ்கிறவன் நான்.
மறந்துவிடாதே
அவை சாகும் வரை
நீயும் மரணிப்பதில்லை
என்னுள்.


யாழ் இலக்கிய குவியத்தின் சிறந்த கவிதைக்கான பாராட்டைப் பெற்ற கவிதை. நன்றி யாழ் இலக்கிய குவியம்.


Wednesday, August 24, 2011

புராதன இந்தியா!! 100 ஆண்டுகளுக்கு முன்..

இந்த பதிவு எனது சகல இந்திய நண்பர்களுக்குமானது. சில அரசியல், ஊழல், சாதியம், தீண்டாமை, மூடநம்பிக்கை, ஈழத்தமிழர் மீதான அக்கறை போன்ற விடயங்களை தவிர்த்து இந்தியாவை மற்றவர்கள் போல எனக்கும் அதிகம் பிடிக்கும். நிலப்பரப்பு (நிலப்பரப்பில் இந்தியா உலகத்தில் ஏழாம் இடத்தில் இருப்பது தெரிந்ததே), சனத்தொகை (உலகத்தில் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடு - 1.2 பில்லியன் இற்கும் அதிகம்), கலாச்சார, மொழி, இன பல்வகைமை போன்ற காரணிகளில் பரந்து விரிந்து நிற்கும் ஒரு தெற்காசிய நாடு நம்ம இந்தியா.

சாதாரணமாகவே எமது நாடு என்பது ஏதோ ஒருவகை தன்னிலை உணர்வை மனங்களில் அள்ளி வீசக்கூடிய ஒரு விடயம். அந்தவகையில் எங்கு சென்றாலும் எமது நாட்டிற்கு இணை, ஈடு எம் நாடுதான். அதிலும் எமது நாடுகளின் இயற்கை அழகு, புராதனம், கலாச்சாரம், மொழி போன்ற விடயங்கள் தனித்துவம் மிக்கவையாகவும் எமக்கு பெருமை சேர்ப்பனவாகவும் இருந்து விடுகின்றன. அந்த வகையில் இலங்கையைப் போலவே இந்தியாவும் ஒரு அழகிய நாடு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்கு சான்றாக பல பகுதிகளை குறிப்பிடலாம்.

விடயத்திற்கு வருவோம். (ரொம்ப அலட்டிடேனோ..?? சாரிங்க ..)

இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எமது மூதாதேயரை சந்திக்கின்ற பாக்கியம் எம்மைப் போன்றவர்களுக்கு கிடைக்கவே இல்லை. சிலவேளைகளில் கேள்விப் படக் கூட சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விடுகிறது. அப்படியிருக்க அவர்கள் காலத்தில் நம்ம இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவல் இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த உதவியை இன்று நான் செய்கிறேன்.. (தேங்க்ஸ் எல்லாம் வேணாமுங்க.. விடுங்க விடுங்க)

100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..? இந்த புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது நாமும் கொஞ்சம் அந்தநாட்களில் வாழ்ந்திருக்கலாமோ என்று தோணுவதோடு 100 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா என்று வாய் பிளக்கவும் வைக்கிறது. சரி படங்கள பாக்கலாம் வாங்க..

அடுத்து நம்ம புராதன இலங்கை பற்றிய படங்களும் வருகிறது... எல்லாம் அங்க இங்க சுட்டதுதான்...

Monday, August 22, 2011

வெள்ளி பூஜை - சிறுகதை.

அது மாலை கருகும் நேரம். வெண்கல சூரியன் வெட்கமின்றி கடலின் மறு கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் மந்திர ஜாலம். கிளுகிளுப்பைக் கூட்டம் போல் இந்த இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாய் மாலை நேர வகுப்புக்கள் முடித்து வீடு திருப்பும் ஜோரான நேரம். பகலை எரித்துக் களைத்த சூரியன் முக்காடு போர்க்க, சடங்கு வைத்த பிள்ளை போல் வான அறைக்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளியே வர தயாரானான் சந்திரன். இரவு முழந்தாலிட்டு பகலை வழியனுப்பிக் கொண்டிருந்தது. எட்டிய தூரம் வரை இவள் பார்வை. தன் கணவனும் இல்லை, கந்தன் என்கின்ற தன் மகனும் இல்லை.

"சீ வழமையா ஐந்து அரைக்கே வந்திடுவாங்களே.. இன்னைக்கின்னு ரெண்டு பேரையும் காணோம்.." இடைவிடாது மேலும் கீழும் அந்த நாவைப் போட்டு அசைத்துக்கொண்டே இருந்தாள் அந்த வான்மதி. "அப்பாவ போலதானே பிள்ளை.. வகுப்பு முடிஞ்சாலும் நேரத்துக்கு வரவா போறான் இவன்..." அலுத்துக் கொண்டதில் அடுப்பிலிருந்த வெந்நீரை மறந்தாள் வான்மதி.

"அப்பா... அப்பா.." இவள் வாசலில் நிற்கும் மட்டும் வராத அந்த எதிர்பார்ப்பு ஒலி அடுப்பங்கரைக்கு போனதும் இனிதே செவி புகுந்தது. ஒரு கை அடுப்பில் அவள் மறு கை இடுப்பில். வெடுக்கென திரும்பி வாசலில் மிடுக்காய் நின்ற தன் கணவனைப் பார்த்தாள் வான்மதி.

"என்னங்க இவ்வளவு நேரம்..?"

"..இப்பதானே வான்மதி ஆறு அரை.."

"எத்தனைக்கு வேலை முடிஞ்சது..?"

"ஐந்துக்கு!!"

"இப்ப என்ன நேரம்?"

"ஆறு அரை"

"அப்ப இவ்வளவு நேரம் எங்க போனீங்க..?"

"வரும் போது எண்ட நண்பன் ஒருத்தன பாத்தன்.."

"பாத்தா.. உங்களுக்கு வேற வேல வெட்டி குடும்பம் இதொண்ணும் இல்லையா.."

"இல்லடீ.. கன நாளைக்கு பிறகு கண்டது.."

"அப்ப என்னையும் வீட்டையும் விட கன நாளைக்கு பிறகு கண்ட அவன்தான் பெருசா.."

"கொஞ்சம் மரியாதையா பேசன் வான்மதி.."

"என்னங்க மரியாத.. என்னையும் கொஞ்சம் ஜோசிச்சு பாருங்க.. எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு நிக்கிறது.."

"என்னது காத்துக்கொண்டு நிக்கிறீயா? எதுக்கு?.."

"என்னங்க உங்களுக்கு தெரியாதா??.."

"சொன்னால் தானே தெரியும்.. சொல்லாமல்.."

"என்ன ஆளோ தெரியல நீங்க.. கொஞ்சம் கூட என்ன புருஞ்சுக்க மாடேனுங்றீங்க..?"

மணி ஏழு கடந்து முப்பதை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த கடிகாரத்தின் பெரிய முள். அந்த முள்ளின் வேகத்தை ஒத்தே ஜாம் என்று வந்து நின்றான் அவர்கள் மகன் கந்தன். வகுப்பிற்கு வெள்ளை நிற சட்டையுடன் போனவன் இப்பொழுது மண்ணிரத்திலே வந்து நிற்கிறான். விளையாடி முடிந்ததும் கையில் உள்ள மண் துணிக்கைகளை கூட தட்டி கீழே கொட்டிவிட நேரம் இல்லாமல் "முதல் அம்மாவ சமாளிப்பம், பேந்து மற்றதுகள பாப்பம்.." என்கின்ற ஒரு தோரணையிலே வந்து வாய்பொத்தி நின்றான் கந்தன். அப்பாவுக்கு கொஞ்சம் சந்தோசம் இப்பொழுது. காரணம் கஷ்டத்தில பங்குபோட இப்பொழுது ஒரு பங்காளி..

"எங்கட போனாய் இவ்வளவு நேரம்..?"

"விள யா டம்மா..." என அப்பாவைப் பார்த்தான் கந்தன். திடுக்கென முகட்டைப் பார்த்து கொட்டாவி விட்டார் தந்தை. மகன் மனதில் "இவன் எல்லாம் ஒரு அப்பாவா??" என்ற எண்ணம்.. "முடியிற நேரம் பாது இவன் வந்திட்டானே.. இனி திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்குமே.." என்கின்ற ஏக்கம் அப்பா மனதில்.

அப்பொழுதெல்லாம் அப்பாவிற்கும் மகனிற்கும் அம்மா ஒரு காளியாய் தரிசனம்.

"கேட்டது கேக்கலையா..?" இது அம்மா.

"என்னம்மா..?"

"உனக்கு கிளாஸ் முடிஞ்சு இவ்வளவு நேரமும் விளையாட்டு.. என்ன.."

"விளையாடதானே அம்மா போனான்.. ஏதோ களவெடுக்க போனமாதிரி பேசுறீங்க.."

"வாய மூடுடா..!! நீயும் அப்பாவ மாரியே வளரு..அப்பத்தான் இன்னொருத்தியிண்ட வாழ்க்க விளங்கும்.."

அமைதியாக நின்ற கணவன் ஒருமுறை மனைவியை பார்த்து முறைக்க, மனைவி மகனைப் பார்த்து கன்னத்தில் இரண்டு அடி போட்டு

"என்னடா முறைப்பு..??"

அப்படியே இடப்பக்கம் திரும்பிய கணவன் தனது கன்னத்தை பொத்திய படி நின்றிருக்க, அவர் கைகளை இழுத்து எடுத்து,

"கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பிருக்கா? என்ன பத்தி கொஞ்சம் எண்டாலும் ஜோசிக்கிறீங்களா? உங்கள கலியாணம் கட்டினதுக்கு ஒரு பனமரத்த கட்டியிருந்தா வடியிற கள்ள வித்தாவது பிளைச்சிருப்பன்.. சீ.. என்ன வாழ்கைதானோ தெரியல.. என்ட வாழ்க்கை இப்பிடியா போகணும்..."

புலம்பியபடி திரும்பவும் சமையலறை நோக்கி புறப்பட்டாள் மனைவி. கணவன் வாசலின் வலப்புறம். மகன் இடப்புறம். சத்தம் வெளியிலே போய்விடக்கூடாது என்கின்ற ஒரு சமுதாய நல்லெண்ணத்தில் உள்ளே வரும்போதே கதவை அடைத்து வைத்திருந்தார் கணவர். மகன் கையில் கிழிந்த பை. கணவன் கையில் விம்மிக் கொண்டிருக்கும் செத்த ரேகை. இருவருக்கும் இருக்கவும் முடியவில்லை. மனைவியை அடக்கவும் தெம்பு இல்லை. மகன் தன்னை இளக்காரமாய் யோசித்துவிடுவான் என்று எண்ணி மனைவியுடன் சண்டை செய்ய போகும் போதெல்லாம் உசார் மடையனாகியே போய்விடுவது அவன் அப்பாவுக்கு சகஜம். இருந்தும் வழமைபோலவே கணவன் அருகே போய்,

"என்னம்மா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் சத்தம்போட்டு ஊரை கூட்டிறா.. நான் ஆபீஸ் ல இருந்து ஒரு மணித்தியாலம் பிந்தி வந்தது தப்பா.."

"ப்ளீஸ்.. கதைகாதேங்கோ.. என்னக்கு எண்டும் சில ஆசா பாசங்கள் இருக்கு.. என்னை நீங்க முதல் புரிஞ்சுகொள்ள முயற்சி செய்ங்க.. எப்பவுமே என்னை எமத்துறதே உங்கட வேலையா போச்சு.. என்டைகாவது என்னபத்தி நினைச்சு ஏதாச்சும் செய்திருக்கிறீங்களா"

அழுதவளிடம், மெது மெதுவாய் இன்னும் அருகில் போய்,

"சரி, எங்க போகணும் எண்டு பிளான் பண்ணி எங்களுக்காய் காத்துக்கொண்டு இருந்தாய்..? சொல்லு.. இப்ப எண்டாலும் போய்ட்டு வருவம்.."

"இனி போக ஏலாது.. பூச முடிஞ்சிருக்கும்.."

"என்ன பூச...?"

"இண்டைக்கு வெள்ளிக்கிழமை... தெரியாதமாரி நடிக்கிறீங்க.."

கணவன் மலைத்து போய், என்ன உலகமடா சாமீ... என பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தார். இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே.. என மன ஆதங்கத்தோடு சிரிக்க ஆரம்பித்தார் கணவர். இவர் சிரிக்க அங்கு இன்னும் எரிந்தது.

மனைவிக்கு இன்னும் கோபம் தலை உச்சியில் நின்று தர்கிடதோம் ஆடியது.

"என்ன மனுசனையா நீ.. நான் இவ்வளவு பீல் பண்ணி அழுறன்.. உனக்கு சிரிப்பா..?"

ஆவேசமானாள் வான்மதி. அவள் புருவங்கள் வாழ் கூர்மையோடு போட்டிபோட்டு தோற்க வல்லன அந்த தருணங்களில். கண் இமைகள் கடு கடுக்க, விழிகள் இரத்தங்களை வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பீய்ச்சிக் கொள்ள, நடு மூக்கு நுனியில் இரண்டு வேர்வைத் துளிகள் துலங்க, இன்றோடு கணவன் கதையை முடித்துவிடுவதாய் நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி வெறியோடு..

தான் கற்ற தற்காப்புக் கலையை ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டு தனது மணிக்கூட்டை சரி செய்து மெது மெதுவாய் அந்த பயங்கரமான உருவத்திற்கு அருகில் போய் தனது மணிக்கூட்டை பார்க்கும் படி சைகையால் சொல்லிமுடித்தார் கணவர்.

வான்மதி வெறித்தனமான பார்வையோடு வேண்டாவெறுப்பாய் சட்டென்று குனித்து அந்த கடிகாரத்தை பார்க்க, அந்த கடிகாரத்திற்குள் இருந்த கிழமை காட்டி இன்று "Thu" என சொல்லியது.Sunday, August 21, 2011

The song close to my heart..


It was just an accident that I seen this heart breaking song when I crolled down my internet page where I was looking for some good english songs at the youtube.

It was a Japanese song if I am not wrong and the lyrics and the tune of the song are amazing. My heart was clearly admired by the song and this song has captured the place of first ever song I love so far.

This is that song;
//
You are the one no one could ever know me at all.
I just can’t stop loving you,dear.
Being with you is all I wanna do.
Don’t you know just how I feel.
Don’t you ever leave me alone.
All the things you do telling me to give up your love.
You said this could be your goodbye.
So please don’t ask for love no more.
Let you through out door.
Hey,can’t you seeing my eyes
Please don’t say goodbye.
I know I can’t leave my life alone without you near me.
I just can’t live without your love.
I need you here with me.
If I could change your mind now,anything at all.
Oh,please.Oh love please not leave me.
I just can’t live without your love
I need you here with me
If I could change your mind now,anything at all.
I know I’ll never love again cause you are in my heart
//

However, after few days I missed the link and trying to search it in youtube and I failed. If anyone who can help me on this, pls welcome..

Monday, August 15, 2011

விவாகரத்து.


என்னை
சிந்திக்க வைத்தவளும்
நிந்தித்து போனவளும்
அவள்தான்.

ஒரு இரவில்
ஒடிந்த பாசம்
விடிந்ததும் - ஒரு
மடிந்த வேசமாய்
இடிந்து போனகதை
என்னைத்தவிர
யாருக்குத் தெரியும்..

முதல் நாள்
பத்திரம் என்றவள்
மறுநாளே
பத்திரத்தோடு வந்தாள்.

என் காதலை
கட்டிப்போட - ஒரு
கையொப்பம் வேண்டுமாம்.

ஒரு கிறுக்கல் கிறுக்கியதில்
அவள் வடக்கே போனாள்
நான் கிழக்கே போனேன்
எங்கள்
பிடிவாதம் மட்டும்
மகன் தலையில்
மண்ணை சொரிந்தபடி..

முற்றுப் பெற்றது
எங்கள் விவாகம்.
காரணமோ - அந்த
மோசமான விவாதம்.

அவள் விடுவதாய் இல்லை
நானும் முடிப்பதாய் இல்லை.
அவளும் நானும் முட்டியதில்
முதல் பிறந்தது
பிள்ளை
இப்போ பிறந்தது
தொல்லை.

நேற்றுவரை
என்னை நம்பியவள்
இன்றுமுதல் - தன்
வக்கீலை நம்புகிறாள்.

பறவாயில்லை
எனது தெரிவில்
தவறிளைத்தவள்
இந்த வக்கீல் தெரிவில்
சரிசெய்திருக்கிறாள்.
காரணம்
குடும்பங்களை பிரிப்பதில்
கெட்டிக்கார வக்கீலாம்
அவர்.
ஊரார் பேசிக்கொள்கிறார்கள்.

Friday, August 12, 2011

வலி சுமந்த மனது.


என்
நெஞ்சுத் தசைகளில் தொங்கும்
பிஞ்ச இதய தொங்கல்களை
பிச்சு பிச்சு போகின்றன - அந்த
வலிமையான வலிகள்.

அடித்துப் போட்ட
இதய அறைகளில்
இரத்தம் இல்லை.
உறிஞ்சிப்போன
மனச் சுவர்களில்
உணர்ச்சியுமில்லை.

ஓடிக்கறுத்த ரத்தம் - மனதில்
ஒட்டாமல் நிக்குது நித்தம்.
ஒடிந்து போன சித்தம் - ஒய்யாரமாய்
வலிக்கு கொடுக்குது முத்தம்.

காற்று மட்டும் தான் கிடக்கிறது
அதனால்தான் மனசு கனக்கிறது.
உயிர் வேண்டாம் என்றால் கூட
வலி அதையும் தடுக்கிறது.

என்னை சாணியால் அடித்த 'திண்ணை'.


நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்சம் கவலை, கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் தாழ்வு மனப் பான்மை, கொஞ்சம் ஆவேசம், கொஞ்சம் ஆதங்கம் போன்ற உணர்வுகளோடு எழுதும் ஒரு பதிவு. இந்த சம்பவம் என்னை அதிகம் பாதித்தமைக்கு காரணம் இவ்வாறான சம்பவம் எனது வாழ்கையில் இப்பொழுதுதான் முதல் தடவையாக இடம்பெறுகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.

நான் சென்ற மாதம் 'திண்ணை' எனப்படுகின்ற இணைய இதழிற்கு ஒரு கவிதை அனுப்பியிருந்தேன். நீண்ட நாட்களாக அவர்கள் அதை பதிவேற்றம் செய்யவில்லை. கடைசியாக நேற்று அவர்களிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. அதாவது நான் கவிதை அனுப்பிய ஈமெயில் இற்கு பதில் அனுப்பியிருந்தார்கள். அதிலே இவ்வாறு மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Thanks
Not selected.

ஏதோ கவிதை எழுத தொடங்கிய காலங்களிலிருந்து இற்றை வரை எனது கவிதையை வாசித்தவர்கள் எல்லாம் அவற்றை கவிதையாக ஏற்றுக்கொண்ட காரணமோ என்னவோ நான் ஏதோ ஓரளவிற்கு நன்றாக கவிதை எழுதுபவன் என்கின்ற கூடிய மதிப்பீட்டில் (over estimation)வாழ்ந்து விட்டேனோ என்கின்ற ஒரு ஆதங்கம் அல்லது பயம் எனக்கு உருவாகியது.

ஆனால், நான் அவர்களை பிழை கூறவில்லை. திண்ணை தனக்கு பிடித்த தங்களுக்கு தரமான கவிதைகளை மட்டும் பதிவேற்றம் செய்வது அவர்களது உரிமை. அதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. இருந்தும் எனது கவிதை தெரிவு செய்யப்படாமைக்கு சரியான காரணம் ஒன்றை கூறியிருந்தால், குறைந்த பட்சம் கவிதைக்குரிய தரம் போதாது அல்லது தரம் இல்லை என்று கூறியிருந்தால் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் சிறிய சிறிய எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்களை திருத்திக் கொள்ள.

இத்தனை கவிதைகள் எழுதியவன், ஏன் கவிதை தொகுதி ஒன்றை வெளியிட்டவன் (அதற்காக கவிதை தொகுதி வெளியிடுபவர்கள் எல்லாம் நல்ல கவிஞர்கள் என்று சொல்ல வரவில்லை.), இத்தனை கவியரங்கங்களில் தனது கவிதையை வாசித்தவன் எழுதிய ஒரு கவிதை ஒரு பிரசுரிப்பாளரினால் நீக்கப் படுமாயின் அது அந்த எழுத்தாளனுக்கு வெட்கமே. அந்த உணர்வு அபாயகரமானது. இந்த உணர்வு அதிகமாக அழுத்தமடையுமாயின் கவிதை எழுதுவதில் ஒரு பின்னடைவு நிச்சயமாக தோன்றும்.

எதுவானாலும், இந்த தாக்கங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காகவே அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த பதிவை எழுதுகிறேன். உண்மையிலேயே இந்த கவிதை தரம் அற்றதாக இருக்கலாம். அவ்வாறு தரம் இல்லாத கவிதைகளை அவர்கள் பிரசுரிக்க வேண்டும் என்கின்ற அவசியம், தேவை இல்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிடலாம். அதைவிடுத்து உங்கள் கவிதை பிரசுரிப்பதற்கே பொருத்தமில்லைஎன்று திரும்பி அனுப்புதல் நிச்சயமாக எழுத்தாளர்களை நோகடிக்கும் என்றே நான் கருதுகிறேன்.
(அதுவும் நான் எந்த போட்டிக்கும் அதை அனுப்பவில்லை, சாதாரணமான பிரசுரிப்பிற்கே நான் அனுப்பியிருந்தேன்.. கொய்யாலே.. நம்ம கவிதை பிரசுரிப்பதற்கே தகுதி இல்லாத மொக்கை கவிதையா...ராமா..)

அப்படியிருந்தும் அந்த திண்ணையில் இதுவரை இருக்கும் கவிதைகளை ஒன்று விடாமல் அனைத்தையும் படித்தேன். அதன் பிறகு எனது கவிதை முழுமையாக தரமற்றது என்று சொல்வதை என்னால் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுசரி, அவர்கள் இணைய இதழ், அவர்கள் விரும்பியதை பிரசுரிப்பதும் விரும்பாததை பிரசுரிக்காமல் விடுவதும் அவர்கள் விருப்பம். அனாலும் அவர்கள் அணுகுமுறையை கொஞ்சம் திருத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.

இதுதான் அந்த திண்ணை பிரசுரிப்பதற்கு தகுதி அற்றது என திருப்பி அனுப்பிய எனது (மொக்கை) கவிதை..

அவள் விழிகளும் என் பார்வையும்


கடல் குளித்து வந்தவன்
இந்த முத்தை
என் வீதியில்
தவறி போயிருக்கவேண்டும்..

சந்தேகமே இல்லை.
இவள்தான்
படைத்திருக்க வேண்டும்
பிரமனை.

அவள்
விளித்ததில்
விழுந்தவன் - இன்னும்
முளித்ததாய் இல்லை.

என்
விழிகளில் கிடக்கும்
அவள்
விம்பங்களை விலக்கியபடி
எத்தனை நாள் - அவளை
கனவிலே முத்தமிட்டுக்கொள்வது..??

அவள்
வந்துபோகும் கனவுக்கும்
கற்பிருக்கவேண்டும் -
அதிகம் வெட்கப்படுகிறதே..

அவளைப்பார்த்ததில்
சுட்ட இரத்தம் - இன்னும்
சூடாறவில்லை.

வலிந்து இழுத்த
அவள் பார்வை
இன்னும் என்
வலது சோணை அறையில்
வற்றாத குருதியை
வடித்து குடித்து
விரதம் கிடக்கிறதே..

என்னமோ
அவள்
உருண்டை விழிகளுக்குள்
பிரண்ட பார்வை
அங்கேயே
உருள்கிறதே தவிர - அங்கிருந்து
விலகுவதாய் இல்லை.

திண்ணையிலுள்ள ஏனைய கவிதைகளை படிக்க: http://puthu.thinnai.com/?cat=6

Wednesday, August 10, 2011

மெய்ப்பட வேண்டும் - கவியரங்கக் கவிதை

ஜீவநதியின் நான்காம் ஆண்டு சிறப்பு கவியரங்கத்தில் மெய்ப்பட வேண்டும் என்கின்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதை. இச்சந்தர்ப்பத்தை வழங்கிய ஜீவநதியின் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றிகள்.என்ன சொல்ல?
மெய்பட வேண்டும்..
எம்
இறந்துபோன கனவுகளின் ஒட்டறைகளாவது
இன்னும் உயிர்வாழ்வது மிக்க மகிழ்ச்சி.

நாங்கள் இங்கு - எங்கள்
கனவுகளுக்காய் ஆர்ப்பாட்டம் நடத்த வரவில்லை.
எம் கனவுகள்
ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.

அன்று
தலைகள் அடைக்கப்பட்டன - பின்னர்
சிலைகள் உடைக்கப்பட்டன,
இறுதியில்
முலைகள் கூட சிதைக்கப்பட்டன.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள்தான் மொய்க்கிறது..

காற்றை தந்து
உயிரை எடுத்தான் கடவுள்,
கனவை தந்து
காவியத்தை கெடுத்தான் தமிழன்.
தடவிப்போகும் காற்றுக்கெல்லாம்
கனவு முளைக்க - நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..

நாம் கண்ட கனவெல்லாம்
தொடக்கத்தில் அரசு
கடைசியில் அரிசி.

என்னவோ ஏதோ
எட்டி நிறுத்தியும்
முட்டி வருத்தியும்
தட்டி நிமிரும் - நம்
சுகந்திர கனவு மட்டும்
இன்னும் - எங்கள்
குருதி கலந்து
நாடிகளில் அலைந்து
மயிரிளைகளில் நிலைத்து
உயிர் அணுக்களில்
ஆவேசமாய் அமர்ந்திருக்கிறது.

கிலுகிலுப்பைகளின் கனவுகளை கூட
சலசலப்பின்றி மதித்தவர்கள்
மாண்டுவந்த குலத்தின் கனவை
மண்டியிட்டும் மிதித்தார்கள்
நம் வாளேந்திய மகாத்மாக்கள்.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள் தான் மொய்க்கிறது..

அவர்களுக்கு - நம்
தொங்கிய நாக்குகள்
வசதியாய் போனது
நொடியில் அறுத்தெறிய,
மிஞ்சிய கைகளும்
எஞ்சிய கால்களும்
இலகுவாய் போனது
வினாடியில் தறித்தெறிய,
மயங்கி கிடந்த குற்றுயிரும்
மயக்கம் கெடுத்த மானமும்
அலாதியாய் போனது கற்பழிக்க,
செத்து மடிந்த தந்தையும்
சாகத்துடித்த தம்பியும்
சாபமாய் வழிவிட்டது - எம்மை
சாதகமாய் கொன்று குவிக்க.
இத்தனைக்குள்ளும்
பைகளில் இருந்த
கனவு சுகந்திரம்
பத்திரமாய் காப்பாற்றப்பட்டது.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்ப்பட்டது..
நமது கனவுகள் மட்டும்
ஆங்காங்கே பிய்க்கப்பட்டது..

நாங்கள் -
எட்டி நடந்த
படிகளில் இட்டனர் வெடி,
முட்டி கடக்க
முடிகையில் விட்டனர் அடி,
முடிந்தும் தடுக்க
முந்தானையில் முடிந்தனர் சதி,
புரண்டும் மிரண்டும் - நாம்
படுக்கையில் வைத்தனர் தீ.
இவற்றிட்குள்ளும் - நம்
சுகந்திர கனவு
கலைக்கப்படாமலே
காப்பாற்றப்பட்டது - எங்கள்
கிழிந்த பைகளுக்குள்.

எதுவரினும்
இதுவேனும் மெய்ப்படட்டும்.

கனவுகள் மெயக்கவேண்டி
நாங்கள்
கனகபுரம் தொடங்கி
கன்னியாகுமரி வரை
காவடி எடுத்தோம்.
நீங்கள்
பந்தல் போட்டு
பந்தி பரிமாறினீர்கள்.

முடக்கிய மூச்சு
அடங்கிய வீச்சில்
அத்லாந்திக் வரை அலறினோம்
நீங்கள்
சிம்பொனி கேட்டு
சிலிர்த்து தூங்கினீர்கள்.

இப்படி - எங்கள்
கனவுகள் மெயக்கவேண்டி
கண்களையே கடிந்துகொண்டோம்
நாம்.

இனியேனும்
கனவுகள் வேண்டாம்
எங்கள்
காலங்களாவது மெய்ப்படட்டும்.

கொடுக்கும்படி கேட்டோம் - அவர்கள்
கைகளில் இருந்தது எம் நேரம்.
கும்பிட்டும் கேட்டோம் - அப்போ எங்கள்
கைகளில் உயிரின் பாரம்.
இறுதியில் -
விட்டுவிடும்படி கெஞ்சினோம் - அவர்கள்
மனங்களில் இருக்கவேயில்லை ஈரம்.

அன்றெல்லாம்
காலமாகிப்போன கனவுகளுக்காய் - இன்று
கண்களை கசக்கி கனாக்காணுகின்றோம் - அவை
மெய்ப்படவேண்டும் என்பதற்காய்.

இறுதியாக,
கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..


Tuesday, August 9, 2011

ஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.

என்னிடம் கேட்கப் பட்டதோ கவியரங்கத்தில் ஒரு கவிதை. அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கை ஒன்றிற்காகவே இரவிரவாக கொழும்பிலிருந்து
பிரயாணம் செய்து யாழ்ப்பாணத்தை அடைந்தேன். என்னோடு கவியரங்கத்தில் பங்கெடுக்க என்று வர இருந்த அந்த பெரிய பெரிய கவிஞர்களை பற்றி எண்ணி, பயந்துகொண்டே எனது இரவுப் பயணம் முடிவிற்கு வந்தது. நீண்ட நாட்களுக்கு பின் யாழ் போவதால் கொஞ்சம் மனதளவில் பரவசம். வழிகளில் அனைத்தும் புதிதாகவே கண்களில் பட்டது. ஆக, அந்த ஓமந்தை சோதனைச் சாவடியும், ஆங்காங்கே வீற்றிருக்கும் புத்தனும், யாருடையதையோ யாரோ கண்காட்சிப்பொருளாக்கியிருக்கும் சில யுத்த நினைவு பொருட்கள் மற்றும் இடங்களையும் தவிர மிச்ச அனைத்தும் எனக்கு வித்தியாசமானதாகவே தெரிந்தது.

மக்களில் விழுந்த சாபம் அந்த வீதிகளிலும் விழுந்திருக்க வேண்டும். இன்னும் அவை திருத்தி முடிந்ததாய் இல்லை. மக்களின் அபிமான அரசாங்கம் நிறையவே அபிவிருத்திகளை செய்துவருகிறது. மன்னிக்கவும் செய்வதாய் தெரிகிறது. பல சர்ச்சைகளை முகம் கொடுத்து இடம் மாறிய புதிய சங்கிலியன் சிலை ஜொலிக்கிறது. அதிலும் வாளை பார்த்ததும் மனதிற்குள் ஒரு நின்மதி. அப்பாடா வச்சிடாங்கையா...


பறந்து பறந்து என்னை தயார்செய்து என் நண்பனின் உதவியோடு அல்வாய் கலையகம் நோக்கிய எனது பயணம் துஷியின் தொலைபேசி வழிகாட்டலில் இனிதே முடிந்தது. எல்லாமே புது முகங்கள். அனால் அவர்கள் பெயர்களை கேட்டவுடனே ஆஹா அவரா நீங்கள் என்று புருவம் உயர்ந்தது, மலர்ந்த எனது புன்னகையோடு. முதலில் என்னை வரவேற்றவர் ஜீவநதியின் துணை ஆசிரியர், கவிதை எழுதும் சிறு பிள்ளை துஷ்யந்தன். அடுத்து எனது கைகளை இடம்மாற்றினார் பிரதம ஆசிரியர் பரணீதரனிடம். அவரும் ரொம்ப சின்ன பையன். வயதில். அதனைத்தொடர்ந்து பிரபல நாடகக் கலைஞரும், கவிஞரும், மிக முக்கிய இலக்கிய மனிதரும், பரணீதரனை பெற்றதோடு அவரை இன்னும் பின்னால் நின்று இயக்கிவருபவருமான கலாமணி ஐயா அவர்கள்.

தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஆரம்பமாவதற்குள் அங்கு வந்திருக்கும் இன்னும் பல முகமறியா கவிஞர்களை நோக்கி பயணித்த எனது கண்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. முதலில் தெணியான். அவரது சிறுகதைகளும் ஏனைய படைப்புக்களும் எனது ரசனையை நீண்ட நாட்களாக ஒரு கை பார்த்துக்கொண்டே இருந்தன. அந்த மனிதரை சந்தித்ததில் அப்படியொரு மகிழ்ச்சி. மீண்டு வந்த சந்தோசத்தில் படிகளில் ஏறி மேலே சென்றதில் என்னை குதூகலப் படுத்த இரண்டு பேர் அங்கு. ஒன்று எனக்கு பிடித்த நல்ல கவிஞர்களில் ஒருவரும், நாசூக்காக கவிதை சொல்வதில் விண்ணருமான எனது அபிமான நாச்சியாதீவு பர்வீன். கண்டவுடனே ஏதோ நீண்ட நாட்கள் பழகியதுபோல் 'வாங்க அமல்ராஜ்..' என்ற அவரது வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் மிடுக்காக வெளியே வந்த இன்னுமொரு பிரபல, அழகிய கவிஞர் வாசிம் அக்ரம். இவரை 'படிகள்' இன் ஆசிரியர் என்று சொன்னால் உங்கள் அதிகமானவர்களுக்கு இலகுவாக புரியும். இவர்களுக்கு என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி மேலும் மேலும் அறிமுகம் செய்துகொண்டிருந்தார் எனது நல்ல நண்பர் கவிஞர் மன்நூரான் சிஹார். வழமை போலே சிஹார் தன்னை தாழ்த்தி என்னை அதிகம் புகழ்ந்தது பிடிக்கவே இல்லை. அவரது பெருந்தன்மையே அதுதான். என்ன செய்வது.

பேசிக்கொண்டிருக்கையில் எனது கவிதைகளை தான் படிப்பதாகவும் அவை தன்னை கவர்ந்ததாகவும் நல்ல கவிஞன் எனவும் என்னை புகழ்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களை ஒருமுறை ஆதங்கத்தோடு பார்த்தேன் (என்னய்யா சொல்லுறாரு இவரு?? உண்மையா இருக்குமோ??). ஒரு மலை இந்த சின்ன கல்லைப் பார்த்து இப்படி சொன்னால் நான் என்னதான் செய்வது?

அறிமுகங்கள் முடிந்து விழா ஆரம்பமானது. தெணியான் நிகழ்வை தலைமை தாங்கினார். அவரிடம் எனது அபிமானத்தை இன்னும் இன்னும் கூட்டிய விடயம், அவர் மனதில் பட்டதை அப்படியே சொல்பவர். யதார்த்த வாதி. அவரது பேச்சில் இவை மிக அழகாகவே வெளிப்பட்டன. அவரை அதிகம் புரிந்து கொள்ளாதவர்கள் இவர் ஒரு கடுமைப் போக்கான கவிஞர் என்றும் விமர்சிக்க வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. பல உரைகள் நிகழ்வை அலங்கரித்தன. அதில் என்னை அதிகம் கவர்ந்த மூன்று பேச்சாளர்கள். அவர்களைப் பற்றி குறிப்பிடாவிடில் இந்த பதிவு முற்றுப் பெறாது என்று நினைக்கிறேன்.

நாவலாசிரியர் டேவிட் அவர்களின் வெளியீட்டுரை


முதலில் பிரபல நாவலாசிரியர் டேவிட் அவர்களின் வெளியீட்டுரை. மிக துல்லியமான குரல் அதோடு வீரியமான கருத்துக்கள். அழகிய பேச்சு மொழி. நிதானமான உச்சரிப்பு. அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் என்னை அதிகம் கவர்ந்தது. அதாவது ஜீவநதியின் சிறப்புக்களில் ஒன்று 'இலக்கிய பணிகளை அல்லது இல்லக்கியத்தை இளைய தலைமுறையினரிடம் கையளித்தல் என்பதற்கு இந்த ஜீவநதி ஒரு நல்ல உதாரணம்'. இது மிகவும் அப்பட்டமான உண்மை. பல இலக்கிய ஜாம்பவான்கள் பின் நின்று இந்த ஜீவநிதியின் பொறுப்புக்களை இளைய தலைமுறை படைப்பாளிகளான பரணீதரனிடமும் துஷியந்தனிடமும் கையளித்திருக்கின்றமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயம் தான்.

அடுத்த சொற்பொழிவு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ராஜேஷ்கண்ணன் அவர்களுடையது. அவரது பேச்சுவன்மை பிரமாதம். அவர் வழங்கிய ஜீவநதியின் கவிதைகள் மீதான மதிப்பீடு உச்ச தரம். அடுத்ததாக ஆசிரியர் பௌனந்தி அவர்களின் உரை. அவரும் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது அன்றுதான் எனக்கு தெரியும். இவரது உச்சரிப்பின் வீரியத்தையும் அழகையும் பார்த்துக்கொண்டிருந்ததில் பல இடங்களில் அவர் சொன்ன முக்கிய விடயங்களை விட்டுவிட்டேன்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ராஜேஷ்கண்ணன்.

ஆசிரியர் பௌனந்தி அவர்களின் உரை

இவற்றைத்தாண்டியும் சகல பேச்சாளர்களும் எடுத்துக்கொண்ட ஒரு பொதுவான தலைப்பு 'பரணீதரன்'. அவரது வயதிற்கும் அவர் ஆற்றுகின்ற சேவை மிக அதிகமானது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம்தான். வாழ்த்துக்கள் பரணீ.

இறுதியாக பரணீதரனின் உரை என்னை கொஞ்சம் வியக்க வைத்தது என்னவோ உண்மைதான். அதிகம் பேசவில்லை. இந்த ஜீவனதிக்காய் அவர் படும் கஷ்டங்களை அழக்காக கூறினார். இருந்தும் பின்னணியில் தெணியான் மற்றும் அப்பா (கலாமணி) இருந்தாலும் ஜீவநதி எனது தனியாள் முயற்சியினாலேயே இன்றுவரை வெளிவருகிறது என்று அவர் கூறியபோது நான் உட்பட பல பார்வையாளர்களின் முகங்களும் கொஞ்சம் கோணியதை பார்க்க முடிந்தது. அதில் உண்மை இருந்தாலும் கொஞ்சம் அவையடக்கத்திற்காவது அந்த வசனத்தை கொஞ்சம் வேறு விதமாக கூறியிருக்கலாமோ என்று தோணியது எனக்கு. அதைவிட ஜீவநதியை பற்றி தவறாக விமர்சிக்கும் பல இலக்கியப் போலிகளிக்கு பரணீதரன் அளித்த பதில் மிக மிக பொருத்தமான அடி.

முதற் பிரதி.

அடுத்து நம்ம கவியரங்கம். பல பெயர்போன கவிஞர்களுக்கு மத்தியில் இந்த குண்டுமணி அமல்ராஜும் அமர்ந்திருந்தது ஆச்சரியம் கொடுத்த ஒன்றுதான். கவியரங்க தலைமை பிரபல கவிஞர் வதிரி சி ரவீந்திரன். அவரை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் முன் கவிதை சொல்வது எல்லாவற்றையும் விட படபடப்பு.

தலைவர் - கவிஞர் வதிரி சி ரவீந்திரன்.

நாச்சியாதீவு பர்வீன்.

சின்னப் பையன் துஷியந்தன் (சின்னபையன் - வயதில் மட்டும்).

மன்நூரான் சிஹார்

அல்வாயூர் கணேசன்

அடியேன்.

வட அல்வை க சின்னராஜன்.

ஒருவாறாக உங்கள் கவிதையும் நன்றாக இருந்தது என்கின்ற பார்வையாளர்களினதும் பிற கவிஞர்களினதும் வார்த்தைகளைக் கேட்கும் வரை அப்பப்பா என்றாகிவிட்டது. ஏதோ நம்மால முடிஞ்ச அளவு மற்ற கவிஞர்களும் இது கவிதைதான் என்று ஏற்றுகொள்ளும் விதத்தில் ஒரு கவிதைய பாடி முடித்த மன திருப்தி நிகழ்வின் முடிவில் ஒரு பெரும் மூச்சாகவே வெளிப்பட்டது.

இறுதியாக, ஜீவநதி ஒரு முழுமையான இலக்கிய சஞ்சிகை. அது மட்டுமல்லாது பல தலைமுறை படைப்பாளிகளை ஒன்றாக்கி ஒரே இடத்தில் சந்திக்க வைத்து இலக்கிய தலைமுறை இடைவெளியை ஓரளவேனும் குறைக்க முயற்சிக்கும் ஜீவநிதியின் பணி தலைக்கு நிகரானதே. மற்றும், இந்த அடியேனையும் கண்டுகொண்டு, அந்த பெருங் கவிஞர் மேடையில் ஒரு சிறு நாற்காலியை எனக்காகவும் தந்துதவிய ஜீவநதிக்கு விசேடமாக பரணீதரனுக்கும் துஷியந்தனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Friday, August 5, 2011

எனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...

"சென்ற மாதம் எமது கவிதை வெளிக்கு அனுப்பபட்ட உங்கள் கவிதை சிறந்த கவிதைக்கான பரிசினை பெறுகிறது வாழ்த்துக்கள் அமல்ராஜ்.விரைவில் அனுப்பி வைப்போம்."
- யாழ் இலக்கிய குவியம்.நினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள் என்கின்ற தலைப்பில் நான் எழுதிய எனது கவிதை ஒன்று யாழ் இலக்கிய குவியத்தின் சிறந்த கவிதைக்கான பரிசினை பெற்றிருக்கிறது. மிக்க நன்றி யாழ் இலக்கிய குவியம். இது போன்று தொடர்ந்தும் என்னைப் போன்ற பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எங்களுக்கெல்லாம் பருசு வேணாமுங்க... ஆகக் குறைந்தது 'நல்லா இருக்கு' எண்டு ஒரு வார்த்தை சொன்னாலே மனம் நிறைஞ்சு போய்டும். இதுக்குத்தானே இத்தனை அக்கப்போர்..அந்தக்கவிதை இதுதான்


நினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்


நீ
உதிர்ந்தபோது,
மலராத பூக்கள் கூட
பகிஷ்கரிப்பு செய்ததே..

பொழுது சிரிக்க
பூமி வெளிக்க
சூரியன் கூட
சந்திரனை முந்திக் கொண்டுவர
நீ மட்டும் - நான் இட்ட
திருநீறாய் மறைந்தாய்...

நீ
என்னை வளைத்தாய்
நிலா
தானாய் வளைந்தது.
நான் உன்னை
வெறுக்கும் போதெல்லாம்
ஏனோ - அந்த சூரியன்
நெருப்பாய் சுட்டது..
இத்தனைக்குள்ளும் - என்
நினைவு வெளியெங்கும்
உன் ஞாபகங்கள்
மானம் விட்டு திரிந்தது..

கூடவே இருந்தாய்
குதூகல வெள்ளம் - நான்
கும்பிட்டும் பிரிந்தாய் - தினம்
ஞாபகங்கள் கொல்லும்.

வந்துபோகும் ஞாபகங்கள்
விடிந்தால் கூட
முடிந்து போவதில்லை.
என்
பொழுதுகளும்
விழுதுகளும்
கெஞ்சினாலும் - அவை
மரணிப்பதில்லை.

என் பக்கம்
நீ வந்தாய்
என்
தேகம் சிலிர்த்தது
வானம் சிரித்தது
இரவில் வந்த
தூக்கம் கூட
கவிதை சொன்னது..

தந்த மனதை
திருப்பி கேட்டவள்
தன்
ஞாபகங்களை மட்டும்
தானம் செய்து போனதன்
தர்மம் புரியவில்லை...

நல்லவளே,
நீ வேண்டும் என்று
என்
இரவுகளை விற்றேன்..
அதன் இலாபமோ என்னவோ
உன்
ஞாபகங்கள் மட்டும்
தாராளமாய் கிடக்கிறது
என்னிடம்.

என்
நினைவு வெளியில்
உன் ஞாபகங்கள்..
செத்துப்போன - என்
உணர்வுகளில்
அவற்றின்
சின்ன சின்ன சில்மிசங்கள்.
உன்
ஞாபகங்களோடு
வாழ்கிறவன் நான்.
மறந்துவிடாதே
அவை சாகும் வரை
நீயும் மரணிப்பதில்லை
என்னுள்.

Thursday, August 4, 2011

காதலித்துப்பாருங்கள்.


காதல்,
கன்னத்தில் முத்தமிட்டு
காயுமுன்னே - அதை
தீமூட்டி எரிக்கும்
பாடை தீப்பந்தம்.

காதல்,
ரத்த நாடிகளுக்குள்
பெற்றோலை ஊற்றி
வலது சோணை அறைக்குள்
தீயை போடும்
கேவலமான தீக்குச்சு.

காதலித்துப்பாருங்கள்.

மூளை நோக்கி
ரத்தம் பாய்ச்சும்
மயிர் குழாய்களோ
பாதியில் மரிக்கும்.
மூளை இயங்கும்
மூளி கலங்கும்
முகூர்த்தம் கூட
சனியனாய் தெரியும்.

முதலில் வந்த
மூன்று வருட கணவன்
மூலையில் கிடப்பான்,
இறுதியாய் வந்த
வெளிநாட்டு கனவான்
அவள் கட்டிலில் புரள்வான்.

காதலில்,
கவலைக்கும் கண்ணீருக்கும்
கல்யாணம்,
சந்தோசம் சாகக்கிடக்கும்.
காதலி மேடையில்
காதலன் பாடையில்
அவளுக்கோ அது அர்ச்சனை
இவனுக்கோ அது பிச்சை.

வில்லேற்றியவள் - எப்படியோ
விலைபோவாள்,
வீணாய்போன அம்போ
சுவரில் குற்றியபடி
சுபம் சுபம்....

நீ
எல்லாமே
அவளுக்காய் செய்வாய்,
அவளோ
நீ லூசு என்பாள்
அவள் கடைசி பிரிவில்.

உனது காதலை
உறுதிப்படுத்த நினைப்பாய்,
சந்தர்ப்பம் வரும்
சந்தோசமும் வரும்
ஆனால்
அவளோ அதைப்பார்க்க
பிள்ளையோடு வருவாள்..

காதலித்துப்பாருங்கள்,

பலதடவை,
உண்மை
குப்பையில் இருக்கும்,
பொய்யோ அவள்
கைபை வரை போகும்,
நியாயம் சிலவேளை
நின்மதியற்றுப் புலம்பும்.
நம்
ஆசையோ தூக்கில்
அவள்
ஆணவம் மட்டும்
பேச்சில்..

காதலித்துப்பாருங்கள்,
காதலித்த உங்களை
காதுகிழிய பேசுவாள்,
உங்களை தீர்ப்பிட
ஆயிரம் குற்றவாளிகளை
வக்கீல்கள் ஆக்குவாள்,
அவள்
வாழ ஆசைபட்டு
வாழ்ந்த உங்களை சாகடிப்பாள்.

என்னவோ
இறுதியில்
அவள்
மாங்கல்யத்தோடு இருப்பாள்
நீங்களோ
மண்ணாய் போன
வருடக்கணக்கான காதலோடு
பந்தியில் இருப்பீர்கள்
அவள்
திருமண வீட்டில்
ஒரு பிடி சோற்றுக்காய்..

காப்பி இறுதியில் இனிக்கும்
காதலி இறுதியில் கசக்கும்.

நம்
காதல் பொய் என்றால்
கடவுளும் பொய்.
காரணம்
அன்பே சிவம்.

ஏழாம் அறிவும் புது சூரியா பிகரும்..

நீண்ட நாட்களாக விழி மேல் விழி வைத்து காத்திருந்த 'ஏழாம் அறிவு' சுவர் படங்கள் இன்றுதான் எனது கண்களில் பட்டது. நம்ம சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த 'ஏழாம் அறிவு' வருகிறது வருகிறது விரைவில் வருகிறது. இதுவரை பார்த்த சகல 'ஏழாம் அறிவு' சுவர் படங்களிலும் சூரியாவிற்கு நிகராய் கலக்கி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். உலக நாயகனின் பொண்ணு அல்லவா... சும்மாவா.. சும்மா சொல்லகூடாது சுரியாவிற்கு ஏற்ற பிகருதான்...

அத நான் அதிகமா சொல்லுறத விட நீங்க பாத்து தெரிஞ்சு கொள்ளுங்கோவன்...

போஸ்டரும் ஒரு மார்க்கமாதான் இருக்கு...


கலக்குங்க கலக்குங்க...


புது பாட்டு, புது பிகரு.. என்சாய்..


சட்டப்படி...


ம்ம்.. கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாமே வொர்க் அவுட் ஆகுது...


அம்மாடி..என்னா கண்ணு..என்னா பொண்ணு..


என்னா பணிவு..


யாருக்கு தெரியும்.. சூரியாக்குத்தான் புரியும்..


சரி சரி.. படத்த பாத்திட்டு இருக்கடீ..


யோவ்..என்னய்யா இது.. இருக்கிற பெண் ரசிகைகள் காணாதோ... சூப்பர் கட்டை.. என்னங்க?


எப்புடியெல்லாம் வழக்குராங்கையா இந்த பாடிய..

Popular Posts