Monday, July 25, 2011

கடவுளும் கண்மூடிய கறுப்பு ஜூலை.


இலங்கையின் இரத்த வடுக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாட்கள் ஜூலை 24 தொடக்கம் ஜூலை 26 வரையான கறுப்பு நாட்கள். கொழுந்து விட்டு எரிந்த நெருப்புச் சுவாலைகளில் கருகிப்போன ஆத்மாக்களை மறக்க முடியாமல், இன்றும் மனங்களில் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். இலங்கை ராணுவத்தின் 13 வீரர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காய் அந்த மூன்றே மூன்று நாட்களில் தெருக்களில் வீசப்பட்ட வெற்றுடல்கள் 400 இலிருந்து 3000 வரை, நாசமாக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்துக்கும் மேல், காயப்பட்டவர்கள் 25000௦ இற்கும் அதிகம். ஆக 13 உயிர்களுக்கான பழிவாங்கல்கள் இவை.


இந்த கொடூரமான சம்பவம் 1983 இல் நடந்தேறியிருந்தாலும் இன்றும் அந்த சம்பவங்களையும் புகைப் படங்களையும் பார்க்கும் பொழுது கண்கள் வலிக்கின்றன. இது வெறுமனே ஒரு பழிவாங்கலா அல்லது தமிழ் இனத்திற்கான ஒரு திட்டமிட்ட சதியா என்பதற்கு அப்பால் இது ஒரு கொடூரமான மனித உரிமை மீறல் என்றே அன்றும் இன்றும் பேசப்பட்டன. எதற்காகவும் மனிதன் சட்டத்தையும் தீர்ப்பையும் கையில் எடுக்க கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகவே கொள்ளப்படுகிறது. இலங்கையின் இந்த கறை படிந்த சம்பவமே நீண்டகால தமிழ் சிங்கள ஆயுத போராட்டத்திற்கு வித்திட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஒரு தவறு இன்று 30 வருட கொடூர யுத்தத்திற்கும், இலட்சக் கணக்கான இறப்புக்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. சாதாரணமாக சிந்தித்துப் பார்த்தால், அவ்வாறானவொரு கலவரம் நடைபெற்றிருக்காவிடில் இத்தனை கால யுத்தம் இத்தனை கொடூரங்களை கொடுத்திருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இந்த ஜூலை கலவரம் என பேசப்படும் சம்பவம் வெறுமனே ஒரு சம்பவத்தோடு தொடர்பு பட்டவை அல்ல. யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாக்குதல் சம்பவம் (ஜூலை 23 1983) தொடங்கி 28 ஜூலை 1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் முறையாக 15 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி வரை பல வகையான கோர்ப்பு சம்பவங்களின் நிகழ்ச்சியே இந்த ஜூலை கலவரம். 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கர்த்தால் போலீசார் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டையும் மீறி (??) நடைமுறைக்கு சாத்தியமற்றதாக மாறியதே இத்தனை இறுதிக்கட்ட கலவரங்களுக்கும் மூல காரணமாய் மாறியதாக சொல்லப்படுகிறது. அந்த கணம் தொடக்கம் 'இன கலவரம்' தீப்பிழம்பாய் கொழுந்துவிட ஆரம்பித்ததன் விளைவு வீதிகளில் பயணித்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களுக்குள்ளும், வீடுகளிட்குள்ளும், தங்கள் வியாபார பணித் தளங்களினுள்ளும் அடைபட்ட தமிழர்கள் தீமூட்டப்பட்டனர். இதுவே ஜூலை கலவரத்தின் மிக முக்கியமான சம்பவமாக குறிப்பிடப்படுகிறது. இன கிளர்ச்சிக்காரருக்கு அன்று கூரான கத்திகளும், பொல்லுத் தடிகளும், நெருப்பும், ஆயுதங்களும் தமிழரை கொல்வதற்கு போதுமான ஆயுதங்களாக இருந்தன.


இந்த கறை படிந்த நிகழ்வு நடந்தேறி இன்றோடு 28 வருடங்கள் முடிகிறது. அன்று கொடூரமாக கொல்லப்பட்ட எம் சகோதரர்களின் ஓலமோ என்னவோ எங்களை இன்றும் நின்மதியின்றியே வாழ வழிவிட்டிருக்கிறது. இன்றும் அந்த சோக நிகழ்வை எண்ணி கண்ணீர்விடும் எங்கள் பெரியவர்களின் ஏக்கங்கள் இன்னும் துடைக்கப் பட்டதாய் தெரியவில்லை. வாள் எடுத்தவன் வாளாலே சாவான் என்பதும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதும் நமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க உதவியாக இருக்கின்ற இரு பெரும் நம்பிக்கை வாசகங்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது. அதைவிட இந்த கறுப்பு ஜூலை கலவரத்திற்கு முன்னையதான சில சம்பவங்கள் நாட்டின் அதிகமான சிங்கள சகோதரர்களுக்கு தமிழர் என்றால் புலிகள் என்கின்ற எண்ணத்தையும், தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற மனக் கணக்கையும், தமிழர்கள் பயங்கரமான, கொடூரமான இனத்தவர் என்கின்ற மாயையையும் தோற்றுவிக்க ஏதுவாக அமைந்தன. அதன் விளைவு தமிழர்களை விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யவேண்டும் என்கின்ற பௌத்த தர்மத்திற்கு எதிரான மனப் பக்குவத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றது.

இனியும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்பதே எமது மக்களின் மன்றாட்டம். எரிக்கப்பட்ட உயிர்கள் போதும். இனியும் இப்படியொரு கறுப்பு ஜூலை உருவதற்கான சூழலை யாரும் உருவாக்க வேண்டாம். எங்களது பிள்ளைகளுக்கு ஒரே ஒரு கறுப்பு ஜூலை போதும். அவர்கள் வரலாற்றுப் பாடத்தில் கறுப்பு ஜூலை 1, கருப்பு ஜூலை 2 என குழப்பம் விளைவிக்க வேண்டாம். இதுவே எனதும், எமது மக்களதும் இந்த கறுப்பு ஜூலை தின மன்றாட்டம் ஆகும்.

2 comments:

Anonymous said...

எரிப்போம் எதிரிகளை....

Anonymous said...

இது ஆண்களுக்கு தான் அவமானம்....

http://www.youtube.com/watch?v=nv8ImMXIFqE&feature=related

Popular Posts