அன்று, எனக்கும் அவனுக்கும் ஒரு ஒப்பந்தம். அது வேறு ஒன்றும் இல்லை,அவன் இற்றைவரை ஏதோவொரு உறவுமுறையுடன் பழகிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணை நான் பார்த்தாக வேண்டும் என்பதுதான். அந்த மணிக்கணக்கில் தொலைபேசியோடு குடும்பம் நடத்தும் அந்த அழகிய தமிழ் மகள் யார் என்று பார்த்தாகவேண்டும் என்பதில் நான் அதிகம் அக்கறையாகவே இருந்தேன். போய்சேரவேண்டிய இடம் வந்தது. அது வேற ஒரு இடமும் இல்லேங்க, நம்ம KFC தான். வலப்பக்கம் நான், இடப்பக்கம் அவன். பின்னர் எனது வலப்பக்க இருக்கையை பறித்து அவளுக்கு கொடுக்க நான் அவர்களுக்கு முன்னால் இடம்மாற்றப்பட்டேன்.
எனது முதல் வார்த்தை 'ஹாய்'. அவளிடமிருந்து 'ஹலோ'. இரண்டாவது வார்த்தை 'ஹொவ் ஆர் யு?' அதற்கு அவள் 'நான் நல்ல சுகம் அண்ணா'. அடகடவுளே, எனக்கு மொக்கைய போடவென்றே வந்தமாதிரி இருக்கே என நினைத்துக்கொண்டேன். 'சரி, 'உங்களுக்கும் இந்த சேருக்கும் என்னங்க உறவு?' இது நான். அதுக்கு அவள் 'அத அவரிடமே கேக்கவேண்டியதுதானே..' அதுதான் சரி. என்ன கொடும சார் இது. கேகிறத்துக்கு எல்லாம் ஒரு குதர்கமாவே பதில் சொன்னா நான் எப்பிடிங்க பிழைப்பு நடத்துறது?. 'சரி நீ சொல்லுடா, லவ்வா?'
அதுக்கு சிம்பிளா நண்பன் ஒரு பதில் சொன்னான் பாருங்க. 'ஆமாடா லவ்வுதான், ஆனா அவக்கு வாறமாசம் கலியாணம். இந்தெல்லாம் இன்னொரு ஒரு மாசத்துக்குத்தான்....'
'என்னது, உனக்கும் அவக்கும் லவ்வு, ஆனா அவக்கும் இன்னொருத்தனுக்கும் கல்யாணமா...???'.நான் முரட்டுத் தனமாய் கேட்க ௦'என்ன பண்றது மச்சான், கலியாணம் கட்டத்தான் முடியல, லவ்வாவது பண்ணுவமே... அதுக்காவது குடுத்து வைச்சிருக்கே..' சலித்துக்கொண்டான் நண்பன். (பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு..)எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடைய மண்டை கிறுகிறுக்க அவர்கள் இருவரும் ஒரே ஐஸ் கிரீமை ஒய்யாரமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
உடனே அந்த பெண்ணை திரும்பிப் பார்த்தேன். நான் கேட்காமலே 'இவர் சொல்லவதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேற ஒன்றும் இல்லை.' என்கிறமாரி அவ மண்டையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.
இதெல்லாம் ஒரு பிழைப்பு என எண்ணிக்கொண்டு அந்த 'சாஜஹான் மும்தாஜ்' காதலில் குழப்பம் விளைவிக்காமல் நான் சற்று வெளியேறி எனது காருக்குள் அமர்ந்துகொண்டேன். தனியே இருப்பதால் அவர்கள் வருவதற்குள் ஒரு பாட்டை கேட்டுவிடுவோம், அப்பொழுதாவது நம்ம கடுப்பு கொஞ்சம் குறையட்டும் என பாட்டுப் பெட்டியை ஒன் செய்தபோது 'ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே...' என பாடிக்கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியம்.
ஐயோ அக்காமாரே, அப்படி பார்காதேங்கோ... நான் சத்தியமா KFC குள் நடப்பதற்கும் இந்த பாடலுக்கும் முடிச்சுப் போட்டு பார்க்கேலேங்க.
காதல் என்பது இப்பொழுதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே போய்விட்டது. காதலை பற்றி புனிதம், அது, இது என்றெல்லாம் கதைகள் சொன்ன காலம் போய் இப்பொழுதெல்லாம், கலியாணம் கட்டும் வரை சந்தோசமாக இருப்பதற்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கக் கூடிய ஒரு நல்ல ஊடகம் என ஆகிப் போச்சு.அதுவும் இன்றைய நாளை காதலியுடனோ அல்லது காதலனுடனோ சந்தோசமாக செலவளித்திட வேண்டும் என்பதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர நீண்டு பரந்து விரிந்து கிடக்கும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பது மிகக் குறைவு. சரி விடுங்க. அவர் அவரது வாழ்க்கை அவர் அவரது கைகளில்.
இங்கே 80 வீதமான உண்மை சம்பவத்திற்கு 20 வீதம் சோடனை செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.
2 comments:
நையாண்டி கலந்த நடையில், நாகரிக காதல் எனும் நாமத்தின் கீழ் அல்லலாடும் எம் இளசுகளின் காதலைப் பதிவாக்கியிருக்கிறீங்க. ரசித்தேன் பாஸ்.
http://www.youtube.com/watch?v=nv8ImMXIFqE&feature=related
Post a Comment