இந்த கவிதை ஞானி 1953 இல் பிறந்தது வடுகப்பட்டி என்னும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில். இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு அதிகம் அலட்டிக்கொள்வதை விட ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிவிட்டால் போதும் என்கிறார்கள் பலர். அதாவது 6 தடவைகள் தேசிய விருதை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கும் விடயம்தானுங்க. இந்தியாவில் ஒரு கவிஞர் இத்தனை தடவைகள் தேசிய விருதுகளை பெற்றது இதுதான் முதல் தடவை என்பது முக்கியமான விடயம்.
வைரமுத்துவின் புத்தகங்களில் அநேகமான புத்தகங்கள் எனது புத்தக அடுக்குகளில் அலாதியாக அமர்ந்திருக்கின்றன. அதற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது மூத்த சகோதரரும் வைரமுத்துவின் பித்தன். என்னை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் என்று 'திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்', 'கல்வெட்டுக்கள்' போன்றவற்றை என்னால் சொல்லமுடியும். என்னை ரொம்ப பாதித்த கவிதைகள் என்றால் அது நிச்சயமாக 'ரத்ததானம்' கொண்டுவந்த கவிதைகள்தான். கவிதைகளை விட வைரமுத்துவின் நாவல்களும் மிகப் பிரபல்யம். என்னை அதிகம் கவர்ந்த நாவல் 'வில்லோடு வா நிலாவே'. அருமையான கதை, புல்லரிக்கும் வார்த்தையாலங்கள். இன்னும் என்னால் வாசித்து முடிக்க முடியாமல் என் மேசையில் கவிழ்ந்த படி தூங்கும் வைரமுத்து புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.
கவித்துவம், ரசனை, சொல்விளையாடல், வார்த்தை ஜாலங்கள், எதுகை மோனை அசைவுகள், ஒலி ஒத்துகை, சொல் பொருந்துகை, பொருள் பிறழாமை என கவிதைக்களுக்குரிய அனைத்து இயல்புகளும் வெளிப்படையாகவே இவர் கவிதைகளில் ஏறி அமர்ந்திருக்கும். இதுவே இவரை கவிப்பேரரசு என அழைக்க பிள்ளையார் சுழி போட்டவை.
ஏனைய இந்திய கவிஞர்களில் நின்று வைரமுத்து வேறுபட்டு தனித்துவத்தோடு நிற்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. மிகமுக்கியமான ஒன்று, பிராதன கவிதையை நவீன விஞ்ஞான, ஆராட்சி தளத்திற்கு கொண்டுசென்றமை. பல விஞ்ஞான நவீனத்துவ விடயங்களை கவிதைக்குள் மிக இலாவகரமாக கொண்டுவந்து சிந்திக்க வைப்பது இவர் யுக்திகளில் ஒன்று. இதற்காக அவர் எவ்வளவு விடயங்களை இன்னும் படிக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒரு கவிதையில் வைரமுத்து சொல்லவதை போல 'என்னை புத்தகம் இல்லாத அறைக்குள் பூட்டிவிடுங்கள், நானாகவே மரித்துவிடுவேன்..' வைரமுத்துவின் பலம் எழுதுவதை விட அதிகம் வாசிப்பது.
என் மனது இறங்கி, கவிதையோடு காதல் புரிந்து என்னையும் எழுதத்தூண்டிய சில வைரமுத்துவின் (என்) மானசீக கவிதைகள்.
---------------------------
கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!
இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!
போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!
---------------------
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
----------------------
மௌன பூகம்பம்
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.
நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?
மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
------------
இப்படி எத்தனை கவிதைகளைதானுங்க இதில பதிய முடியும்.. இது போதும் இம்முறை.
வைரமுத்துவின் ஒரு தீவிர ரசிகன் என்கின்ற வகையில் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment