காட்டிக்கொடுத்த கனவானே,
இந்த கம்பிகள்
துருப்பிடிப்பதற்குள்ளாவது
இது
புலியல்ல
பூனை என்பதை
இவர்களுக்கு சொல்லிவிடு.
உன் தலையாட்டத்தில்
என் தலைவிதி
எப்படியானது
பார்த்தாயா?
ஒருமுறை
இங்கே வந்துபார்..
நீ
ஆங்காங்கே தலையாட்டியதில் - இங்கு
ஐம்பது தலை சேர்ந்திருக்கிறது - உனக்கு
ஐம்பது லட்சம் தேறியிருக்கும்.
நீ என்னை
காட்டிக்கொடுக்கையில்
என்கையிலிருந்த - என்
ஆறுமாத குழந்தை
அப்பா சொல்லி அலறியதை பார்த்தாயா?
இதற்கு முதல்
நான் - உன்னை
எங்கோ பார்த்து
ஒருமுறை சிரித்திருக்கிறேன்.
அவ்வளவுதான்.
உன்னோடு
ஒருவருடம் பழகியதாய்
ஒப்பமிட்டிருக்கிறாய்
எனது
குற்றப்பத்திரத்தில்.
நண்பனே,
உனக்கென்ன?
நஷ்டம் இல்லாத தொழில்.
தலையை ஆட்டியே
தாராளமாய் உழைக்கிறாய்..
ஒன்றை பார்த்தாயா?
என் பிள்ளை விடும்
கொட்டாவியில்தான்
உன் பிள்ளைவிடும் ஏப்பம்
குளிர்காய்கிறது
நமது ஊரில்.
நீ ஒரு
வித்தைக்காரன்தான்.
வன்னியில்,
பல்லிகள் கூட
உன் தலையாட்டத்தில்
புலிகள் ஆகிறதே..
உன்
மனைவியைவிட
இவர்கள் - உன்னை
அதிகம் நம்புகிறார்கள்.
நீ சொல்லும்
பொய்களிலெல்லாம் அவர்களுக்கு
கவலை இல்லை.
உண்மை பேசிவிடுவியோ
எனபது மட்டும்தான்
இப்போதைக்கு
அவர்களின் பயம்.
1 comment:
super...valikkirathu..vaalththukkal
Post a Comment