Tuesday, June 28, 2011

மன்னாரில் கலைபடும் பாடு..

வணக்கம். நீண்டநாட்களுக்கு பின் ஒரு பதிவு. எப்பொழுதெல்லாம் ஒரு விடயம் என்னை மனதளவில் பாதிக்கிறதோ அந்த விடயத்தை உடனடியாகவே எழுதி கொட்டிவிட வேண்டும் என்பது எனது ஆதங்கத்தின் ஒரு செயல் வடிவம். என்ன செய்வது.. எழுதுவதால் கிடைக்கும் ஒரு ஆத்மா திருப்பதியை வேறு எந்த விதத்தில் ஈடுசெய்ய முடியும். அதிகம் அலட்டாமல் விடயத்துக்கு வருகிறேன். அதற்கிடையில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடுகிறேன். இந்த பதிவில் நான் யாரையும் மறைமுகமாக சாடியிருப்பதாக யாராவது மனக்கணக்கு போட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல ஆனால் எனது பேனாவில் மையை விட ஆதங்கமே அதிகம் இருக்கிறது. அதற்கும் நான் பொறுப்பல்ல. எனது மனசாட்சியே.

பிறந்த மண்ணும், நாம் சார்ந்திருக்கும் சமூகமும் எமக்கே உரித்தான இரு வேறு அடிப்படை அடையாளங்கள். அதை நேசிக்கிற மனித சமூகம் அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதில்லை. அந்தவகையில் மன்னார் என்கின்ற பெயர் பல நல்ல விடயங்களுக்காக குறியீடு பெயராய் விளிக்கப்படும் ஒரு மாவட்டம். அதில் அநேக விடயங்கள் இருந்தாலும் நான் இங்கு பதிவிட வரும் விடயம் 'கலை'களும் கலை சார்ந்த இடமும் என்று சொல்லக்கூடிய ஒரு மாவட்டம் நம்முடையது. இந்த கலை என்கின்ற விடயம் மன்னாரை விட அதற்கு வெளியில் அதிகம் பேசுகிறதே தவிர எமது மாவட்டத்துக்குள் அதை அதிகம் பேசி அலட்டிக்கொள்பவர்கள் மிக குறைவு என்பது எனது ஆதங்கம். இந்த கலை வடிவங்களையும் கலை சார்ந்த விழுமியங்களையும் வளர்ப்பது என்பது எமக்கேயுரித்தான சமூகப்பொறுப்பு. இவ்சமூக அடையாளங்களை காப்பாற்றுதல் அல்லது வளர்த்து எமது அடுத்த சந்ததியினருக்கு சரியாக கையளித்தல் என்கின்ற பாரிய பொறுப்பை சரிவர செய்வதே நாம் நமது சமூகத்திற்கு செய்யும் மிகச்சிறந்த கடமை. அதை சரியாக செய்வதற்கு மன்னாரில் பல அமைப்புக்கள் அப்போ அப்போ தோன்றி அதே வேகத்தில் மறைந்து போவது கவலையளிக்கின்ற ஒரு விடயம். பல பல கலை மன்றங்கள், கலை சார் அமைப்புக்கள் இருந்தும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எப்பவுமே எமக்கு கேள்விக்குறிகள் தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இதை நான் எழுந்தமானமாக பேசவில்லை என்பது எனது எழுத்தின் மேல் சத்தியம். என்னைபொறுத்தவரை அவர்கள் தங்கள் குறுகிய வட்டத்திட்குள்ளும் சொந்த தீர்மானங்களுக்குள்ளும் மட்டுமே தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்களை நிர்வகித்துச் செல்கிறார்கள். அதைவிட இன்னுமொரு கவலை அளிக்கும் விடயம், திறமையான, இளம் நடத்துனர்களை இந்த அமைப்புக்கள் கண்டுகொள்வதே இல்லை. அதேபோல இளம் சமுதாயத்தை வளர்ப்பதாகவோ அவர்களிடம் இந்த பாரிய பொறுப்புக்களை கையளிப்பதாகவோ தெரியவில்லை. என்னைபொறுத்தவரையில் இளம் சமூகத்தை நமது மாவட்டத்தில் அதிகம் புறம் தள்ளியே வைத்திருக்கிறது நமது சமூகம். காரணம் நிச்சயமாக அவர்கள் திறமைசாலிகள் அல்ல என்பதல்ல. அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் கொடுக்கபடுவது இல்லை என்பதுதான்.

கலை சார்ந்த, கலைப்பணிக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் இலாப நோக்கமோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பணிகளை எடுத்துச்செல்லும் பாரம்பரியம் கலை மேற்பரப்பிற்கு ஒவ்வாதவை. மன்னாரில் எத்தனையோ கலை, இலக்கியவாதிகள் இருக்கின்ற சூழலில் கலைவாதிகள் என்று தாங்களாகவே தங்களை சாயம் பூசிக் காட்டிக்கொள்ளும் ஒரு சிலரை மட்டும் நம்பி இவ்வமைப்புக்கள் செயல்படுவது கவலையளிக்கிறது. மன்னாரின் அதிகமான மூத்த, இளம் படைப்பாளிகளை கண்டும் காணாமல் கலைப்பணி செய்யும் மன்றங்கள் அமைப்புக்கள் மன்னாரிற்கு எதற்காக என்பதுதான் எனது கேள்வி. இந்த கேள்வியில் யதார்த்தம் தவறி இருந்தால் சொல்லுங்கள். மன்னித்துக்கொள்ளுங்கள். கலையை மட்டும் வளர்ப்பது கலை சார் அமைப்புக்களின் நோக்கங்கள் அல்ல (mission & vision). மாறாக படைப்பாளிகளையும் சேர்த்து வளர்ப்பதுதான் சிறந்த நோக்கங்களாக அமையும். படைப்பாளிகளை வளர்க்க மறந்து கலைகளை மட்டும் வளர்க்க முயற்சிக்கும் இந்த அமைப்புக்களின் இலட்சியம் (aim or goal) கேலியானதே.

மன்னாரிலுள்ள சகல கலை சார்ந்த அமைப்புக்களிலும் தனிமயமாக்கல் (personalization) இருக்கத்தான் செய்கிறது. என்னதான் இதற்கு காரணம்? தனிப்பட்ட போட்டியா? அல்லது புகழும் பெயரும் தங்களுக்கு மட்டும் வரவேண்டும் (Ironic Praise)என்கின்ற அடிப்படைவாதமா (fundermentalism)? நான் எந்த தலைமையையும் குறை கூறவில்லை, மாறாக மன்னாரில் எந்தவொரு கலை இலக்கிய மன்றங்கள் அமைப்புக்களும் தனிமயமாக்கல் (personlaization), அடிப்படை வாதக்கொள்கைகள் (ethics of fundermentalism), குறுகிய சிந்தனை வட்டம் (Individualization of desires), தனிப்பட்ட இலாபநோக்கம் (individual corruption oriented) போன்ற விடயங்களை சற்றே ஒதுக்கிவைத்தல் எமது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் ஒரு புண்ணியம் என்றுதான் சொல்கிறேன். இதை எந்தவொரு சமூக பற்றாளர்களும் எதிர்ப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அறிந்தவரைக்கும் (நான் மன்னாரின் அதிகமான கலை சார் அமைப்புக்களில் இருந்திருக்கின்றேன் அல்லது அறிந்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன்;), அதிகமான கலை இலக்கிய படைப்பாளிகள், வளர்ந்துவரும் பல்துறை படைப்பாளிகளின் அங்கத்துவம் மனவிரக்தியால் இவ்வாறான அமைப்புகளை விட்டு விலக காரணமாக அமைந்திருக்கிறது. பல கலை சார் அமைப்புக்கள் மன்னாரின் பல அனுபவமிக்க மூத்த மற்றும் இளைய படைப்பிலக்கியவாதிகளை புறம் தள்ளி வைத்திருப்பது மிகுந்த மனவேதனை தரும் ஒரு விடயம் ஆகும்.

எனவே, அதிகம் சொல்வதற்கு நான் உங்களைபோல அறிவாளியோ அனுபவசாலியோ அல்ல. மாறாக எனது கருத்துக்கள் எனக்கு யதார்த்தத்தை சொல்லிநிற்கிறது. நான் சொன்னவற்றை எதிர்மாறாக விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள், எமது மாவட்டம், எமது மண், எமது கலை, எமது பாரம்பரியம். இவற்றிற்காக உங்களால் முடிந்த நன்மைகளை மட்டும் செய்யுங்கள். காரணம் நமது மண் அதிகம் அதிகம் வலிகொள்வது நாமே நமது சமூகத்திற்கு செய்யும் துரோகங்களால்தான்.

இறுதியாக, தற்பொழுது உருவாகியிருக்கும் மன்னார் எழுத்தாளர் பேரவை எமக்கு நல்லதொரு நம்பிக்கையை தந்திருக்கிறது. மன்னாரின் பிரபல்யம் மிக்க பல மூத்த அனுபவமிக்க படைப்பிலக்கியவாதிகளை ஒன்றுதிரடி சிறப்பாக கொண்டுசெல்லும் மன்னார் அமுதனின் தலைமைக்கு பாராட்டுக்கள். அதேபோல மன்னார் தமிழ் சங்கம் என்கின்ற அமைப்பையும் தொடர்ந்து தமிழ் நேசன் அடிகளாரின் தலைமை, பகைமைகளை கடந்து சிறப்பாக கொண்டுசெல்லும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

அனுபவித்தவற்றையும், புலன் தந்த அனுபவத்தையும் (பார்த்தல் கேட்டல் வைத்துக்கொண்டு இந்த பதிவை இட்டிருக்கிறேன். நல்ல விடயத்தைத்தான் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். உரியவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சமூகம் மேல் அக்கறை கொண்டோர் இதை வாழ்த்துங்கள்.

அன்புடன் அமல்ராஜ்.பி

No comments:

Popular Posts