Tuesday, June 28, 2011

இந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...

அன்னையர் தின பதிவு

அன்னையர் தினம்.. காலம் காலாமாய் அன்னையர்களை நினைவுகூரும் இந்த அன்னையர் தினத்தில் நாம் அனைவரும் நமது அன்னையர்களை அன்போடு நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். நல்ல விடயம். காலங்கள் கடந்து போக போக மனித வாழ்வியல் முறைமைகளும் மாற்றங்களை எதிர்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது. அதுவும் நூற்றாண்டுகளை கடந்து இன்று புதிய நூற்றாண்டில் வாழும் நமக்கு பல புதிய புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களும் எமது வாழ்வை ஒரு கை பார்க்கத்தான் செய்கின்றன. காலத்திற்கு ஏற்றாற்போல் வாழப்பளகிறவன் வாழ்கையை வெற்றி கொள்கிறான். முடியாதவன் வாழ்கையில் தோற்றுப்போகிறான். விடயத்துக்கு வருகிறேன்.
கடந்த வாரம் எனது வழமையான நிகழ்ச்சி நிரலின்படி ஒரு முதியோர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தது எனது நண்பருடன். ஒரு சிறு அனுபவம் என் நெஞ்சை உருக்கியது. அதை அன்னையர் தினத்தை கோடிட்டு உங்களுக்கும் சொல்வதில் அதிகம் பிரியம். பல அன்னையர்களை அங்கு சந்தித்தேன். அதில் என்னை மிகவும் நெகிழ வைத்தவள் ஒரு தாய். இவர் வடக்கை சேர்ந்தவள். கணவன் இறந்து எட்டு வருடங்கள். மூன்று ஆண் பிள்ளைகள். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருவர் இலங்கையில் இருப்பதாக அந்த தாய் கூறுகிறார். அனால் அவர் இப்பொழுது எங்கு இருக்கின்றார் என்பது தெரியாது.

இவரும் இவர் கணவரும் முதியோர் இல்லத்திற்கு வந்து இன்று 9 வருடங்கள் முடிகிறது. இவர் கணவர் இறுதிச்சடங்கை கூட இந்த முதியோர் இல்லமும் சக முதியோர்களும் தான் செய்து முடித்தார்கள். பிள்ளைகள் இவர்களை மறந்துபோனார்கள் ஆனால் இன்னும் அவர்கள் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்கிறார் இந்த தாய். இவரது பிள்ளைகள் மீதான அக்கறை தியாகம் கரிசனை சகலதும் இப்பொழுது வீணாய் போய்விட்டதாய் புலம்புகிறாள். கூலி வேலைக்கு போய் தான் சாப்பிடாமல் தனது பிள்ளைகளுக்கு இறைச்சிக் கொத்து ரொட்டி வாங்கிக்கொடுத்ததையும் அவர்கள் அந்த அம்மா இப்பொழுது உயிரோடு இருக்கின்றாளா என்று கூட கவலை படமால் தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதையும் நினைத்து அழுதுகொண்டாள். பிள்ளைகளை பெற்றபொழுது அவள் கொண்ட வலிகளுக்கும், அவர்களை ஆளாக்குவதில் அவள் பட்ட துன்பங்களுக்கும் பயன் இல்லாமல் போய்விட்டதாய் புலம்புகிறாள். "இவர்களை பெறாமல் நான் மலடியாய் இருந்திருக்கலாம் தம்பி." என்னை அதிகம் யோசிக்கவைத்த அவரின் கடைசி வரிகள் இவை.

அன்னையை பற்றி எவ்வளவோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம் எமது சிறு வயது முதல். ஏன் அதை அனுபவித்தும் இருக்கிறோம். அப்படியிருந்தும் இன்னும் சிலருக்கு இந்த அன்னையின் தாற்பரியம் ஏன் புரியாமல் இருக்கிறது? தாயை கண்டுகொள்ளாத பிள்ளைகள் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாக தந்தையாக இருக்க முடிகிறது? தாயை மறந்து கடவுளுக்கு விரதமிருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்? தாயை மதிக்காமல் கோவிலுக்கு போகும் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? இதெல்லாம் சொல்லிகொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா?? தாயை மதிக்காதவனின் சாபக்கேடு அவன் தலையிலேயே குடிகொண்டு விடுகிறது. எங்கு போனாலும் அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தேயாகவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் வருடத்தில் ஒருமுறை இந்த அன்னையர் தினத்திலாவது தங்கள் அன்னையைப் பற்றி ஜோசிக்கவேண்டாமா?. இம்முறை அன்னையர் தினத்தில் எனது வேண்டுதல்கள் எல்லாம் எனது அன்னைக்காக அல்ல. இப்படிப்பட்ட மிருகத்தனமுள்ள மனிதர்களுக்காகதான். இவர்கள் கொஞ்சமாவது மாறி தங்கள் பெற்றோர்களை கண்டுகொள்ள கடவுள் இவர்களுக்கு ஆசீர் வழங்கட்டும். நமது அன்னையர் நலமாக இருக்கிறார்கள். நிறைய அன்னையர் நலம் கெட்டு எவராலும் கவனித்துக்கொள்ளப் படாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம். அப்பொழுது நமது அன்னையர் இன்னும் சுகம் பெறுவர்.

No comments:

Popular Posts