Monday, June 27, 2011

காதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா?


காதலைப்பற்றி பேசுவதில் கடினம் இல்லை. ஆனால் கவனம் தேவை. ஏனெனில் இது ஒரு உறவுமுறையின் தொடக்கம். ஒரு சந்ததியின் தோன்றல். இரு மனங்களின் ஒருமைப்பாடு. ஆனாலும் ஒரு விரக்தியின் பிரசவம், வெறுப்பின் தொடக்கம், இல்லாமையின் கொடுமை எனவும் எதிர்மறையாகவும் சொல்ல இடமுண்டு. காதலை யார் யாரெல்லாம் ஒரு வாழ்க்கையாக பார்கிறார்களோ அது அவர்களுக்கு வாழ்கையை நிச்சயமாக கொடுத்துவிடுகிறது. யார் யார் எல்லாம் காதலை ஒரு பொழுதுபோக்காக பார்கிறார்களோ அது அவர்களுக்கு உண்மையிலேயே ஒரு நல்ல பொழுதுபோக்காக (entertainment) அமைந்துவிடுகிறது. காரணம் காதல் என்பது எதிர்பார்ப்புக்களின் சங்கிலியே தவிர அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய கானாவூர் கல்யாணம் அல்ல (கிறீஸ்தவர்களுக்கு புரியும்;). ஒட்டுமொத்தத்தில் காதலை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அது அப்படியே அமையும். இதுவே காதலின் மிக சுவாரஸ்யமான இயல்பு.

காதலை நாம் ஒவ்வொருவரும் நின்று பார்கின்ற தளங்கள் வித்தியாசமானவை. அவை எமது உளவியல் போக்குகள், வாழ்வியல் தாக்கங்கள், உணர்வியல் தேடல்கள், மனமார்ந்த எதிர்பார்ப்புக்கள் போன்ற காரணிகளாலே தீர்மானிக்கப்படலாம். இருந்தும் காதல் என்கின்ற உணர்வு அடிப்படையில் ஒரே மாதிரியான இயல்புகளை கொண்டிருந்தாலும் அவை வளர வளர, தான் உருவான தளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் அடைந்துகொள்வதற்கு முயற்சி எடுக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான் காதல் கொஞ்ச நாட்களின் பின் நிறைய மனிதர்களுக்கு கசக்க ஆரம்பிக்கிறது. காதலில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள் காதலில் நிச்சயமாக வென்றுவிடுகிறார்கள். புரியவில்லையா? காதலில் வென்றவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காதலிச்சவர்கள்தான். காதல் எதிர்பார்ப்புக்களோடு வருகின்ற பொழுது அவ் எதிர்பார்ப்புக்கள் நிறைவெய்தாமல் போகின்றபொழுது அந்த காதலின் இலட்சியம் தோற்றுவிடுகிறது. இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் அந்த காதலால் என்ன பயன்? என்று யோசிக்கிறபோழுது காதல் வேண்டாம் என்ற முடிவுகளுக்கு காதல்கள் தள்ளபடுகின்றன.

இந்த எதிர்பார்ப்புக்கள் யாரிடத்தில் அதிகம் காணப்படுகின்றன? ஆண்களிடத்திலா அல்லது பெண்களிடத்திலா? நான் எந்தப்பக்கமும் சாயவில்லை. நடுநிலையில் இருந்துதான் பேசபோகிறேன். அதுசரி நீங்கள் சொல்லுவது புரிகிறது. நான் ஒரு ஆண்தான். ஆனால் நான் ஒரு பகுத்தறிவாளன். பெண்ணை தாயென்றும், அக்காவென்றும் கூப்பிட்டு பழகியவன். நான் ஆண்களை மதிக்கிறேன் ஆனால் பெண்களை வணங்கிறவன். (உங்களை நம்பவைக்க நான் படும் பாடு இருக்கே... முடியல..) சரி. விடயத்துக்கு வருவோம்.

பொதுவாகவே எதிர்பார்ப்புக்கள் இரு பாலருக்கும் ஒரே விதமாகவே இருக்கின்றன. ஆனால் ஆசைகள் வித்தியாசப்படுகின்றன. எதிர்பார்ப்புக்களின் மேலுள்ள தேடல்தான் ஆசைகள். பொதுவாக பெண்களிடத்தில் இவ்வாசைகள் அதிகமாக இருப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அதைவிட வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்புக்களும் ஆசைகளும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கின்றன. பொதுவாக ஆண்களுக்கு வேலை, பணம், தொழில், குடும்ப பொருளாதாரம், எதிர்கால பொருளாதார அந்தஸ்து நிலை, சமூக அந்தஸ்து நிலை போன்ற துறைகளிலேயே அதிக எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை பற்றிய கனவுகள் எதிர்பார்ப்புக்கள் பெண்களிடதிலேயே அதிகம் காணப்படுகிறது. (இதை அடிச்சு சொல்வதற்கு ஆதாரமாக இருப்பது ஷேக்ஸ்பியர் இன் 'நானும் அவளும்' என்கின்ற நாவல் இந்த ஆசைகளின் வெளிப்பாடும் பெண்களுக்கு ஒரு விதமான காதல்மீதுள்ள தூண்டலுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு ஆணை முதல் முதல் பார்க்கிற பொழுது ஒரு பெண் இவன் தனது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவனாக இருப்பானா என்பதைத்தான் முதலில் ஜோசிக்கிறாள். அந்த விடை ஆம் என்றால் அவன் மேல் உடனடியாகவே காதல் வயப்படுகிறாள். இல்லையென்று அவளுக்கு தோன்றினால் சற்று ஜோசிக்கிறாள். இதுவே காதல் என்பதன் மறைமுக தளம். இதை நம்மில் அநேகமானோர் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்த விடயம். பரவாயில்லை. ஏற்றுக்கொண்டால் நீங்களும் ஒரு பகுத்தறிவாளன். அவ்வளவுதான். அதற்காக ஆண்கள் எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொண்டு காதலை தேடுபவர்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. அவர்களும் அப்படிதான். ஆனால் ஒப்பீடு என்று வரும் பொழுது அதை விட இது கொஞ்சம் குறைவு (என்ன அது இது..).

காதல் மலர்ந்து மெதுவாய் நகர்ந்து பல அனுபவங்களை கடந்து போகும்பொழுது முதல் முதலாக முறிவுகள் உருவாக ஆரம்பிக்கின்றன. காரணம் என்ன? அவள் எதிர்பார்ப்பதை ஆசைபடுவதை நம்ம அண்ணன்மாரால் நிறைவேற்ற முடிவதில்லை (நம்மாக்களிண்ட மிக முக்கியமான சொதப்பலே இதுதானே...). அல்லது நிறைவேற்ற முயட்சிப்பதில்லை. அவ்வளவுதான். உலகில் உள்ள அதிகமான காதல் தோல்விகள் எல்லாம் இந்த காரணத்தில் முடிச்சிடப்பட்டவைதான். பெண்களுக்கு தங்கள் எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் மிக மிக முக்கியமானவை. ஆண்களுக்கோ அவை இரண்டாம் தர முக்கியம் வாய்ந்தவை. இது பெரும்பாலும் பிழை என்றாலும். சிலவேளைகளில் சரி. (எப்பிடி நம்ம லாஜிக்???) காரணம் பெண்கள் தங்கள் அல்லது தங்கள் காதலரின் சொந்த எதிர்பார்ப்புக்களை மட்டும் முக்கியப் படுத்துபவர்கள். ஆனால் ஆண்கள் தங்கள், தங்கள் காதலி, தங்கள் குடும்பம் (எதிர்கால குடும்பம்;), தங்கள் வேலை, தொழில், என பல எதிர்பார்ப்புக்களுடன் வாழ்பவர்கள். (அதற்காக ஆண்கள் எல்லாம் பெரிய இலட்சியவாதிகள் என்று புகழ வரவில்லை..) எனவே சில சமயங்களில் பெண்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் அவர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளுக்குள் இரண்டாம்தர முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துவிடலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?? இதைவிட மிக முக்கியமான சர்ச்சை.. ஆண்களைவிட பெண்கள் கொஞ்சம் சுயநலம் கொண்டவர்கள் (kingstan என்கின்ற உளவியலாளரின் 1989 report இன் பிரகாரம்;). அவர்களின் சுயநலத்தை நான் ஒரு குறை சொல்லக்கூடிய சுயநலமாக பார்க்கவில்லை. அந்த சுயநலம் தன்னையும் தனது கணவனையும் தனது குடும்பத்தையும் பற்றியது.. அவ்வளவுதான். நமது குடும்பத்துக்குள்ளே இது பொதுநலம். வெளியில் இருந்து பார்த்தால் இது நிச்சயமாக சுயநலம்தான். இந்த சுயநல எதிர்பார்ப்புக்களும் ஆணிடத்தில் அதிகம் பிரச்சனைகளை உருவாக்க காரணமாக அமைந்துவிடுகின்றன. எதிர்பார்ப்புக்கள் போதுமைபட்டவையாக இருப்பின் காதலில் அவை சிக்கல்கள் அல்ல. எதிர்பார்ப்புக்களை தனிமைபடுத்தும் பொழுதுதான் அவை பிரச்சனைகளாக மாறுகின்றன.

மொத்தத்தில் காதலில் எதிர்பார்ப்புக்கள் வில்லங்கங்கள் தான். தனது காதலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதலியின் எதிர்பார்ப்பு. அது அவனால் முடிந்தால் அது அவனது பெருந்தன்மை. அவனால் அது முடியாமல் போனால் அது நிச்சயமாக அவனின் பலவீனம் அல்ல. காதலனை மாற்றியமைத்து அல்லது சீரமைத்து திருமணம் முடிக்க ஆசைபடுகிற பெண்கள் அவர்களை விட ஏற்கனவே அவர்கள் எதிர்பார்ப்புக்களின் பிரகாரம் வாழும் ஆண்களை காதலிப்பது உலகில் ஏராளமான காதல் தோல்விகளை நிகழாது தடுக்கும். அல்லது அவர்களை அவர்களாக காதலிப்பதும் ஒரு நல்ல ஐடியா. (தயவுசெய்து முறைக்க வேண்டாம்;). ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் சரியாக புரிந்துகொண்டால் இருவரின் பலம் பலவீனங்கள் நன்றாக தெரிந்துவிடும். பலத்தை பெருந்தன்மையோடு வாழ்த்துங்கள். அது இன்னும் இன்னும் வளரும். உங்கள் வாழ்கையை உயர்த்தும். பலவீனங்களை விமர்சிப்பதை தவிருங்கள். பலவீனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்பொழுது அதுவும் வளர ஆரம்பிகிறது. இந்த வளர்ச்சி நாகரீகமான ஆரோக்கிய வளர்ச்சியல்ல. இன்னும் இன்னும் சிக்கலாகும். ஆக ஒட்டுமொத்தத்தில் இவைகள்தான் அதிகம் காதலை சோதிக்கின்ற மறைமுக காரணிகள் என்று நினைக்கிறேன்.

பெண்களை புரிந்துகொள்தல் என்பது இலகுவானதல்ல (என்ன முறைப்பு.. உண்மையதான் சொல்றன்..). ஆண்களின் மிகப்பெரிய சவால் இதுதான். அவர்களின் ஆசைகளை எதிர்பார்ப்புக்களை மதியுங்கள். நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்கள் இயல்நிலையை மாற்றமுனைந்து சொந்த ஆளுமையை தொலைத்துவிடாதீர்கள். பிறகு செருப்பை காப்பாற்ற முனைந்து காலை பறிகொடுத்த கதையாகிவிடும். பெண்களும் ஆண்களின் சுய ஆளுமையை விரும்புங்கள். அவனிடத்திலுள்ள சொந்த இயல்புகளை பாருங்கள். இன்று நம்மத்தியில் உள்ள நிறைய பெண்களுக்கு எல்லா ஆண்களும் ஒரு இயேசுவாக இருக்கவேண்டுமென்று விரும்பிகிறார்களே தவிர ஒரு மனிதனாக இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. எதிர்பார்ப்புக்கள் இருபது அவசியம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் ஆண்களை முற்றுமுழுதாக மாற்றுவதாக இருக்ககூடாது. மனிதன் இயேசுவாக வாழமுடியாது. புதுமைகள் செய்ய இயேசுவால் மட்டும் தான் முடியும். மனிதனால் அல்ல.


இறுதியாக காதலை அதிகம் சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா என்கின்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டும். என்ன? இவ்வளவு சொல்லிவிட்டேன். இனியும் ஒருசொல் பதில் வேண்டுமா? சரி.. பாதகம் வராமல் முயற்சிகிறேன். ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல. அவர்களிடத்தில் காணப்படும் அற்ப எதிர்பார்ப்புக்களும், நடைமுறைக்கு சாத்தியமற்ற லூசுத்தனமான ஆசைகளும்தான் காதலை அதிகம் சோதிப்பதாக அமைகின்றன.

1 comment:

Anonymous said...

50% correct but 50% not correct, even boys also expecting lot than girls...... with one person's experience you cant arrive to the conclusion. but nice.............

Popular Posts