இந்த வகையில் பி. அமல்ராஜ் இன் 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்னும் இக்கவிதைத்தொகுப்பு காதலோடு, சமகாலம், சமூகபிரச்சனை என்பனவற்றையும் கலந்ததாக அமைந்துள்ளதை பாராட்டலாம். மன்னார், நானாட்டான், வஞ்சியன்குளம், இளங்கவிஞர் அமல்ராஜ் திருமறைக்கலாமன்ற மன்னார் கிளையின் செயலாளராகப் பணியாற்றியவர். .......
இந்நூலிலுள்ள 18 தலைப்புக்களிலான கவிதைகளில் 'நீதான் அவள்', 'நீ-நட்பு-காதல்', 'கல்லறைக்கனவு', 'ஒரு ரயில் பயணம்', 'ஒரு காதல் காவியம்', 'அடங்காத காதல்', 'மொட்டைமாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்', 'கடற்கரைக் காதல்' ஆகிய எட்டுக்கவிதைகள் காதல் சம்மந்தமானவை. இவற்றில் 'கடற்கரைக் காதல்' இசைப்பாடலாக அமைந்துள்ளது.
'தியாகம் அவள் பெயர்', தாய்மை சிறப்புப்பாடல். 'எனது அட்டோக்ராப்', 'ஊர்பக்கம்' ஆகிய இரண்டும் பழைய நினைவுகளின் இரைமீட்டல்கள். 'முள்ளி வாய்கால் முடிவுரை', 'செத்தா போய்விட்டேன்', 'பயணங்கள் முடிவதில்லை', 'தமிழ் சுகந்திரம்' ஆகிய கவிதைகள் போர் அவலங்களைப் பற்றியவை.
'முதிர் கன்னி', 'கொன்று விடுங்கள்', 'புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும்' ஆகியவை சமூக அவலங்கள் பற்றிய புதிய சிந்தனைகள்.
அமல்ராஜ் பெருங் கவிஞனாக உருவாக தகுதி படைத்தவர் என்பதை அவரது சில கவி வரிகள் காட்டுகின்றன. ஒன்று பழைமையை புதிய வடிவில் வழங்கும் விதம்.
'தியாகம் அவள் பெயர்' என்ற கவிதையில் தாயைப்பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
கோவில் எனக்கு
மறந்தே போனது.
சாமி இங்கு
வீட்டிலிருக்க
கோவிலில் எதற்கு
கோபுரக்கலசம்?
உண்மையாகவே நீ கடவுளம்மா என்ற வரிகள் கடவுள் தன் வடிவாய் தாயைபடைத்தான் என்பதை வலியுறுத்துகிறது. 'ஒரு காதல் காவியம்' என்ற கவிதையில் இவரது கற்பனை அற்புதமாக அமைந்திருக்கிறது.
சோம்பல் முறிக்கும் மாலைபொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்..
மாலைபொழுதை தன காதல் உணர்வோடு கூடிய கற்பனையோடு இவர் பாடும் விதம் இவரை எதிர்கால நட்சத்திரமாக இனம் காட்டுகிறது. ......
'புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்' என்ற கவிதையில் முடிவுரையாக,
குட்டைப் பாவாடையில்
குதூகலமாய் போகிறாள்
அவள்.
கணவன் மட்டும்
முக்காட்டோடு முனங்கிக்கொண்டிருக்கிறான்
வெளியே வர முடியாமல்.
என்கிறார் கவிஞர். ...
இவரது காதல் சார்ந்த பாடல்கள் இவரது வயதிற்கும் உணர்விற்கும் ஏற்ற வடிகாலாக அமைகின்ற அதே வேளை சமூகம் சார்ந்த பாடல்கள் மிகவும் காத்திரம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. அரசியல் அல்லது போராட்ட அவலங்கள் என்ற வகையில் 'செத்தா போய்விட்டேன்?' என்ற கவிதை போரின் கொடுமையை எடுத்துக்காட்டுகிறது.
போரின் இலக்கணம்
என்னில் தெரியும்
போரின் இலக்கியம்
என்
வரலாற்றால் புரியும்.
என போரின் கொடுமையால் இரண்டு கால்களையும் இழந்த ஒரு தமிழ் இளைஞனின் ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது.
'முள்ளி வாய்கால் முடிவுரை' ஆவணப்படுத்தவேண்டிய அவலமாக கவிதையிலே வெளிவந்திருக்கிறது. சோக உணர்வையும், யுத்தக் கொடுமையையும் உள்ளத்தில் ஆழப்படுத்தி உதிரத்தோடு கலக்கச் செய்துள்ளது.
.........
அமல்ராஜ் எதுகை மோனை, இயைபு பொருந்திய ஓசை ஒழுங்கோடு இக்கவிதைகளை எழுதியுள்ளார். இவரது சமூக பார்வையும் வெளிப்படுத்தும் திறனும் பாராட்டுக்குரியன. பாடு பொருளுக்குரிய உணர்வு வெளிப்பாடு சிறப்பாக அமைந்துள்ளது. சொல்லாட்சி கற்பனை, சொல்லும் விதம், நடை என்பன இவரை எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்க வைக்கிறது.
....
அகளங்கன்
03 .11 .2010
No comments:
Post a Comment