Tuesday, June 28, 2011

என்னை கொன்றுவிடுங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் தலைக்கு மேல் வேலைகள் இருந்தும் இந்த பதிவை இட்டே ஆகவேண்டும் என்கின்ற எனது ஆவலின் நிமித்தம் இந்த பதிவை அவசரம் அவசரமாக இடுகிறேன்.

இது எனது நண்பன் ஒருவனின் கதை. சாதாரண கதை அல்ல. சோகம், கவலை, கண்ணீர், வேதனை என அனைத்தும் கலந்த ஒரு பல்சுவை கதை. அவனது அந்த சொந்தக்கதையை பொதுமைப்படுத்தி இணையம் வரை கொண்டுவந்திருக்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. நான் யதார்த்தத்தை நம்பி பிழைப்பு நடத்துறவன். உண்மையை உண்மையாய் சொல்லவேண்டும் என ஆசைபடுகிறவன். ஆதங்கங்களை கொட்டி தீர்த்திட வேண்டும் என முயற்சிக்கிறவன். யாரும் கோவித்துக்கொள்வார்கள் என்பதற்காக எனது கருத்துக்களை வெளிப்படுத்த தயங்குபவன் நான் இல்லை. காரணம் எனக்கு எனது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு அவர்களது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. எனவே இந்த பதிவு எனது ஆதங்கம். அதைவிட இதில் நாம் கற்றுக்கொள்ளவும் நிறையவே இருக்கிறது.
சரி. விடயத்துக்கு வருவோம். நான் சிறு வயதில் இருந்தே சாதி எனப்படுகின்ற ஒரு அசாதாரண, எந்த வித பிரயோசனமும் அற்ற ஒரு விடயத்தை பார்த்து பார்த்தே பழகியவன். அப்பொழுதெல்லாம் இது தவறு இல்லையா என பேச எண்ணுவேன் இருந்தும் என்னை பைத்தியக்காரன் என்பார்கள் என்பதால் அதை வெளிப்படுத்தாமலே வாழ்ந்துவிட்டேன். இப்பொழுது நான் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதாலும் எனது கருத்தை கொஞ்சமேனும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்பதாலும் இப்போது வெளிபடுத்துகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது நண்பனின் வாழ்கையில் இந்த சாதியின் அடாவடித்தனம் அதிகம். அவனிடம் எல்லாம் இருக்கிறது (சராசரியாக சாதியை தவிர. அதை இப்பொழுது சில மனிதர்கள் இவனை திருமணம் என்கின்ற புனித விடயத்தை தடுப்பதற்கு சிறந்ததொரு தடைகல்லாக பயன்படுத்துகிறார்கள். அவன் நிறையவே படித்திருக்கிறான், நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக சம்பாதிக்கிறான், நேரிய போக்குடையவன், நிறைந்த மனித சிந்தனைபோக்காளன் (இவற்றை அவனாக சொல்லவில்லை, அவனை குறித்து மற்றவர்கள் சொன்னதை நான் சொல்லுகிறேன்;). இப்படி சகலதும் சராசரியாக உள்ள ஒருவன் சாதி குறைந்தவன் என்பதற்காக இந்த சில நல்ல மனிதர்கள் அவனை திருமணம் செய்ய அனுமதிக்கிறார்கள் இல்லை. என்ன கொடுமை சார்??? இன்றைய இந்த பிந்திய 21 அம் நூற்றாண்டு வாழ்கையில் இதை விட பெரிய கொடுமை எதாக இருக்க முடியும். இந்த மனிதர்கள் இன்னும் 10 அம் நூற்றாண்டில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி இந்த உலகம் இன்னும் சுமக்கிறது?? மனிதர்கள் எல்லாம் சமமானவர்கள், சாதி என்பது இல்லை என இவர்களது சமயம், புதிய நூற்றாண்டு, பல பிரபலங்கள், பாரதியார், மகாத்மா காந்தி போன்றோர் சொல்லிகொடுக்கவில்லையா? அல்லது இவர்களுக்கு அவற்றை படிக்க திராணி இல்லையா?? புரியவில்லை எனக்கு. சாதிகுறைந்தவன் உலகில் மனிதன் இல்லையா?? ஏனோ ஒரு மிருகத்திற்கு தங்களது பிள்ளையை, சகோதரியை திருமணம் செய்து வைப்பது போல அல்லவா இவனை பார்கிறார்கள். இவர்கள் எப்படி தங்களும் மனிதர்கள் என பேசிக்கொள்கிறார்கள். மனிதன் என்பதற்குரிய சாதாரண அடிப்படை இயல்பே இவர்களிடத்தில் இல்லையே.

இதைவிட இன்னுமொரு வேடிக்கையான விடயத்தை கூறுகிறேன். இந்த எனது நண்பனின் விடயத்தில் பெரியவர்கள் சாதி பற்றி பேசுவதை நான் சரி பிழை கூறுவதற்கு முன் சாதாரணமாக மதிக்கிறேன். காரணம், அவர்கள் வாழ்ந்த சூழல், காலம் அவர்களை அப்படிதான் வளர்த்திருக்கிறது. அது ஒருவகையில் அது அவர்கள் தவறும் கிடையாது. அனாலும் அவர்களை எம்மால் சிந்திக்கத்தூண்ட முடியும். சிந்திக்கவும் பல பெரியவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். மாறாக, இந்த தலைமுறையினர் சாதி பற்றி பேசும் பொழுது நீங்கள் என்ன நினைப்பீர்கள்??? நான் அசந்தே போனேன். இவர்களுக்கு சாதிபற்றி என்ன தெரியும். சாதி எப்படி தோன்றியது என்பது இவர்களுக்கு தெரியுமா? தாங்கள் படித்தவர்கள் என தம்பட்டம் அடித்துக்கொண்டு சாதிவெறி பற்றி பேசுவதில் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. இவர்கள் புத்தகங்களை மட்டும் படித்திருக்கிறார்கள் உலகத்தை அல்ல. இவர்கள் இந்த உலகத்துக்கு உகந்தவர்கள் அல்ல. 10 அம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். ஒன்று தெரியுமா இவர்களுக்கு, இந்தியா வந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து "The Miracle of India " எனப்படுகின்ற நூலை எழுதிய ஜோன் மிரல் என்கின்ற எழுத்தாளர் தனது நூலில் கூறுகிறார், "சாதி வெறி பேசுபவர்கள் மனித குலத்திலேயே கீழ் சாதியினர்தான், இவர்கள் உலகத்தில் இல்லாமல் இருப்பது பூமிக்கு நல்லம்." இதைவிட நான் என்னதான் கூறமுடியும். தயவுசெய்து, இந்த தலைமுறையினருக்கு ஒன்றை சொல்லுகிறேன். மனிதர்களை பாருங்கள். அவர்கள் பெறுமதியை பாருங்கள். அவர்கள் திறமைகளை பாருங்கள். அவர்கள் ஆளுமையை பாருங்கள். இன்னும் நீங்கள் சாதியையே பேசுவீர்களாக இருந்தால் உங்களை இந்த உலகம் எப்படி மதிக்கும்?

இறுதியாக எனது நண்பனுக்கு நான் சொன்ன வரிகள். இவர்கள் திருந்தமாட்டார்கள். திருத்தவும் முடியாது. காரணம், பாரதியார் சொல்லையே கேட்காதவர்கள் எனது உனது பேச்சையா கேட்கபோகிறார்கள். 'இவர்களை விட்டு வைப்பதை விட நட்டு வைக்கலாம்' (மேத்தா சொல்வதுபோல;). இவர்களை நினைக்கும் பொழுது எனக்கு தோன்றுவது ஒன்றே ஒன்றுதான், 'கடவுளே இவர்களை காப்பாற்றும்'. தேவையான அனைத்தையும் விட்டுவிட்டு தேவை இல்லாத ஒன்றை மட்டும் கையில் வைத்திருக்கிறார்கள். 'எத்தனை மூடர்கள் இவர்கள்?' (கவிகோ அப்துல் ரகுமான் சொல்வதைபோல;). தேவையான அனைத்தையும் மறைத்துவிட்டு தேவை அற்ற ஒன்றை மட்டும் (சாதி தங்கள் பிள்ளைகளுக்கு, சகோதரிக்கு (திருமணம் என்கின்ற பேரில் கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?????

எனது நண்பனின் பிரச்சனையை நான் சரியாக எனது ஆதங்கம் வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன் என நம்புகிறேன்.

இப்பதிவு கடந்த வருடம் எனது முன்னைய இணையப் பக்கத்தில் இடப்பட்டது.

1 comment:

A Jessie said...

Any changes in this real story??

Popular Posts