Monday, June 27, 2011

கடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொலைக்களம்'

இப்பொழுதெல்லாம் ஒட்டுமொத்த இதயம் கொண்டவர்களையும் வலிகொண்டு நோகடித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயம் இந்த "இலங்கையின் கொலைக் களம்" என்கின்ற சனல் 4 காணொளிப்படம். ஒரு இதயம் உள்ள மனிதனாக அந்த படத்தை பார்ப்பதற்கு இன்றுதான் நேரம் கிடைத்தது. 48.40 நேர அளவுகொண்ட அந்த படத்தொகுப்பை முழுமையாக பார்வையிட்டு முடிக்க எனக்கு எடுத்த நேரம் 01 மணித்தியாலம் 44 நிமிடம். 6 தடவைகள் நிறுத்தி 2 தடவைகள் சில காட்சிகளை rewind செய்து பார்த்ததில் இறுதியாக கிடைத்தது இன்னும் வெளியே வர முடியாத மன அழுத்தமும், வெளியே கொட்டிவிட வேண்டும் என்கின்ற மன ஆதங்கமும் தான்.காணொளி உண்மையானதா அல்லது பொய்யானதா என்கின்ற விவாதங்களுக்கு அப்பால் இவ்வாறான ஒரு நிலைமை எமக்கு ஏன் வந்தது அல்லது திணிக்கப் பட்டது என்பதுதான் எமது இப்போதைய ஆதங்கம். IHL எனப்படுகின்ற சர்வதேச மனிதாபிமான சட்டம், HR எனப்படுகின்ற மனித உரிமைச்சட்டம், ஜெனிவா பிரகடனம், protocols எனப்படுகின்ற வரைமுறைச் சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன? இதெல்லாம் வெறும் கேள்விகள்தான் என்றாலும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருக்கின்ற உலக அமைப்புக்கள் இன்னும் வேடிக்கைதான் பார்க்கின்றனவா என்பது இன்னுமொரு கேள்வி.

யுத்த நேரங்களில் இரண்டு வகையான சட்டபூர்வ விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்கிறது நான் மேலே கூறிய முக்கியமான சர்வதேச சட்டங்கள். ஒன்று யுத்தம் புரிபவர்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதோடு போர்க் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடாத்துதல். இன்னொன்று பொதுமக்களையும் பொது இடங்களையும் பாதுக்காத்தல். இவை இரண்டும் பாரபட்சமின்றி மீறப்பட்டதாக இந்த காணொளி கூறுகிறது, காண்பிக்கிறது.

சரி, அந்த "பெரிய" விடயங்களை விட்டு எமது உணர்வுகளுக்குள் வந்தால் மனிதர்களை மிகக்கேவலமாக எவ்வாறெல்லாம் நடத்தலாம் என்பதை இந்த காணொளி உதாரணமிட்டிருக்கிறது. ஒருபுறம் மரணம், மரண அவஸ்தை, மரண பயம், மரண வேதனை இன்னொருபுறம் சித்திரவதை, கொடூரம். ஆக இந்த சம்பவங்கள் எல்லாம் உலகத்திற்கு பல பாடங்களை புகுத்தியிருக்கிறது. உலகம் பாடம் படிப்பது சரிதான் அதில் கவலைக்குரிய விடயம் அந்த பாடத்திற்கு எங்களை பலியாக்கியது. எங்களை தயவுசெய்து விட்டு விட்டு போய்விடாதீர்கள் என்று சர்வதேச சமூகத்தை மன்றாடி வேண்டிக்கொள்வது, எங்களது இனத்தின் மேல் யார் இட்ட சாபம் என கேட்கத்தோணுகிறது. முடிவு இறுதிவரை, ஏன் இப்பொழுது வரை கூட எங்கள் இந்த ஓலங்கள், கெஞ்சல்கள் யாரையுமே திரும்பிப் பார்க்க வைக்கவில்லை என்பதுதான்.

அதிலும் சிறுவர்களையும் இளம் பெண்களையும் கொடுமையின் உச்சத்திற்கே கொண்டுபோய் இருக்கிறது. கற்பை எடுத்தீர்கள். எங்கள் கேவலம் கேட்ட உயிரையாவது பிச்சையாய் விட்டிருக்கலாம். ஒரு பெண்ணை கற்பளித்துத்தான் ஒரு யுத்தம் வெற்றிபெற வேண்டுமா? ஒரு பெண்ணின் பாலுறுப்புக்களை சிதைத்து, பின்னர் உடைகள் இன்றி கைகளை கட்டி தலையில் சுட்டு, குப்பை வீசுவதுபோல் பள்ளத்தில் எறிந்துதான் ஒரு நாடு பயங்கரவாத்தத்தை வெற்றிகொள்ளவேண்டுமா?

படத்தை பார்த்துமுடிக்கும்வரை அழுகைக்கு நான் இடம் கொடுக்கவே இல்லை. காரணம் அழுது அழுது நாம் சாதித்ததெல்லாம் இந்த 48.40 நேர காணொளி மட்டும்தான். ஒரே ஒரு காட்சியை மாத்திரம் எனது சகோதரி பார்ப்பதற்கு அனுமதித்தேன். இன்னும் அவள் கண் கலங்கிய படியே வீட்டில் அமர்ந்திருக்கிறாள். என்ன செய்வது "கடவுளால் மட்டுமே தமிழனை காப்பாற்ற முடியும்" என்று கூறிப்போன தந்தை செல்வாவின் வார்த்தைகள் பலித்திடுமோ என பயப்பட வேண்டியிருக்கிறது. ஐநா பாதுகாப்புச்சபையில் இந்த படத்தை பார்க்க முடியாமல் கண்ணை மூடிக்கொண்டவர்களையும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களையும் கண்ணீர் விட்டவர்களையும் கேவலமாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. காலைப் பிடித்து கெஞ்சியபோது முகத்தைத் திருப்பிக்கொண்டவர்கள் எங்கள் சாவுகளைப் பார்த்து கண்ணீர் வடிப்பதன் நியாயம் புரியவில்லை.

உலக வரலாற்றில் இதுஒரு மிகப்பெரிய தடமாக பதியப்பட்டிருக்கிறது. எங்கள் இரத்தங்களையும், உடல்களையும், கற்புக்களையும், மானத்தையும் நாங்கள் இழந்த விதத்தை படம் போட்டு காட்டியிருக்கிறோம். வரலாற்றில் எமது இனம் பல விடயங்களில் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த காணொளி உட்டபட. எங்கள் கேவலமான மரணங்கள் உலகத்திற்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்.

பெரியபிள்ளை ஆனவுடனே தங்கள் பெண் பிள்ளைகளை இனத்தின் மானத்தைக் காப்பாற்ற களம் அனுப்பிய தாய்களுக்கு இறுதியில் காலம் கொடுத்த பரிசு தங்கள் பிள்ளைகளின் ஆடையற்ற வெற்றுடலை இந்த உலகம் பார்க்கும் படி செய்ததுதான்.

இந்த காணொளி இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. சிலவேளைகளில் 'சப் எண்டு போய்டும் பாருங்க' என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சிலவேளைகளில் சரிதான். எங்களுக்கா அனுபவம் இல்லை.

நாம் படித்த படித்துக்கொண்டிருக்கிற உலக வரலாற்றில் ஒரு விடயம் மட்டும் உண்மை. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்". வெள்ளைக்கார மாமாமாரே நீங்கள் பைபிள் வாசிக்கவில்லையா? "குற்றம் புரிந்தவன் தண்டனைக்கு உரித்துடையவன்" - இஜேசு.

No comments:

Popular Posts