Tuesday, June 28, 2011

ஒரு அபலையின் டைரி - பாகம் 02

ராஜன் அண்ணே, ராஜன் அண்ணே எண்டு ரெண்டு பேரு இல்லேங்க ஒராள்தான், அவர எனக்கு கொஞ்சநாளா தெரியுமுங்க. எப்பிடி எண்டு கேக்கிறது புரியுது. சொல்றன். அவர் ஒரு ஆட்டோ ஒட்டுறவருங்க. நான் பள்ளிக்கூடம் போற வளிலதான் நிப்பாரு.

அப்ப நான் உயர்தரம் படிச்சுக்கொண்டிருந்தன் எண்டு நினைக்கிறன். போறப்ப வாரப்ப நானும் ஒரு வஞ்சகம் இல்லாம சிரிப்பேனுங்க அவரும் ஒரு மார்க்கமா சிரிப்பாருங்க. என்னங்க ஒரு சிரிப்புக்குப் போய் கஞ்சல் பட ஏலுமாங்க. போயிட்டு போகட்டும் எண்ணு சிரிச்சிடுவன்.

ஒரு நாள் பயங்கர மழை. அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரேக்க. எண்ட குடைய எடுத்து விரிச்சன். மழைக்கு குடை விரிச்சும் நனைஞ்சுகொண்டே போற ஜாதிதானேங்க வறுமை ஜாதி. எண்ட குடைய இந்த கறையானுங்க எப்பிடி வளைச்சு வளைச்சு சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?. மத்தவன் சொத்தில ஆட்டைய போடுற பழக்கம் மனிதர்களுக்கு மட்டுமில்லேங்க இந்த கறையானுகளுக்கும் இருக்குங்க. என்னில பாதி நனைஞ்சும் பாதி நனையாமலும் குடைக்கு வெளிலையும் மழை எண்ட குடைக்குள்ளையும் மழை. என்ன பண்றது. எங்கட கஷ்டம் ஊருக்கே தெரியும் இந்த மழைக்கு தெரிஞ்சா என்னங்க.

அதே இடத்தில வழமைபோலவே அந்த ராஜன் அண்ணா நிண்டாரு. மழை அதிகமா இருந்த படியால எனக்கு உதவிறதாய் என்ன அவர்ட ஆட்டோக்குள்ள கூப்பிட்டாருங்க. நானும் மழைதானே எண்ணு போயிட்டன். மழைக்கு ஒதுங்கிறதுக்கு மனை என்னங்க பனை என்னங்க. இரண்டு பக்கமும் கறுப்பு துணியால மூடப்பட்டிருக்கும் ஆட்டோ. முன்னைய சீட்டில திரும்பியபடி அவர் பின்னைய சீட்டில நடுங்கியபடி நான்.

அவருடைய ஆரம்பம் எல்லாம் நன்றாகதானுங்க இருந்திச்சு. போக போக நாக்கு களைப்படைய வார்த்தைகள் இறட ஆரம்பிச்சிரிச்சு. 'நான் ரொம்ப அழகாம்.' யாரு கேட்டா? 'தன்ட மனுசியவிட என்னை தனக்கு பிடிக்குமாம்'. அடப்பாவி.. உன்ன நம்பி வந்த அவள செருப்பால அடிக்கணும். 'எண்ட உடம்பெல்லாம் மழையில நனைஞ்சு ரொம்ப ஈரமா இருக்காம்'. ஏனுங்க இதைதான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுவுது எண்டு சொல்றதா?.. 'எண்ட பிகரு ரொம்ப அழகாம்..' நான் எறும்ப மாரி இருக்கன் அவன் எரும மாரி இருக்கான், எண்ட பிகர அவன் வரிணிக்கிறான் பாருங்க. இதைக்காட்டிலும் அவர்ட வார்த்தைகள் அந்த டபிள் மீனிங் எண்டு சொல்லுவாங்களே அப்பிடி போக தொடங்கிடிச்சுங்க.

அப்பிடி கதைச்சுக் கொண்டு இருக்கும்போதே திடிரெண்டு கைய பிடிச்சிட்டாரு பாருங்க. அண்டைக்குதானுங்க எண்ட துலங்கல்கள் எல்லாம் அவ்வளவு வேகமா செயற்பட பார்த்தன். அவனது கன்னம் சிகந்து முகத்தை தொங்கவிடும் போதுதான் அம்மா சொல்லித்தந்த ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "வயசுக்கு மூத்த யாருக்கும் கை நீட்டக்கூடாது". என்ன பண்றது. ஒரு பொண்ணுக்கு ஒழுக்கத்த விட அவ கற்பு முக்கியம்தானேங்க.

வீட்ட வந்து அம்மாட்ட சொன்னபோது அம்மா சிரித்தாங்க. எனக்கு வந்துதுபாருங்க ஒரு கோவம். அதுக்கு அம்மா சொன்னா, "எண்ட பெட்ட குட்டிகள் எண்டாலும் சிங்கக் குட்டிகள்.." அன்னைக்கு மனசுக்குள்ள ஒன்னு பதிஞ்சுதுங்க, அம்மா என்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா எண்டு. இப்படி அந்த காலத்த என்னால மறக்க ஏலாதுங்க. சகோதரிகள் நாங்க எல்லாரும் வேகமா வளருறம் எண்டு எங்கட அம்மா அடிக்கடி சொல்லுவா.

சகோதரங்கள் எண்டு சொல்லேக்க எங்கட சின்னக்கா ஒருக்கா ரோட்டில ஒருத்தனோட சண்டைபோட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. சின்னக்காவும் நானும் கிட்டத்தட்ட ஒரே அளவுங்க அப்ப. அது எங்களுக்கு மிக மிக உதவியா இருந்திச்சு. ஏன் தெரியுமாங்க. ஒரே சட்டைய மாறி மாறி ரெண்டு பெரும் போட்டுக்கலாம். செலவு குறைவு. ஒரே செருப்ப மாதி மாதி போட்டுக்கலாம். இந்த உள்வீட்டு விவகாரம் ரோட்டில நிக்கிற ஒருத்தனுக்கு எப்பிடியோ தெரிஞ்சிட்டுங்க. நாங்க என்ன ஆசையிலையா அப்பிடி மாதி மாதி போட்டுக்கிரம்? ஒருநாள் நாங்க எல்லாரும் கோயிலுக்கு போகேக்க மூணு பொடியள் ரோடு ஓரம் நின்னுக்கிட்டு நாங்க அவங்கள நெருங்க ஒண்ணு சொன்னாங்க பாருங்க. " மச்சான் எண்ட டி சேட்டும் பிரீயாதான் இருக்கு மாதி மாதி போட்டு கொள்ளுவமா??"

பாருங்க நாங்க படுற கஷ்டம் இந்த பொடியளுக்கு பகிடியா கிடக்கு. அத கேட்ட சின்னக்கா அவங்களோட தர்க்கமிட நாங்க எல்லாம் அவர்களுக்கு மன்னிப்பு கூறி அவளை வீட்டிற்கு அழைத்துவந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கஷ்டத்தின் சில அனுபவங்களை சொல்லும் போது உங்களால் விளங்கிக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். அனுபவித்தால்தான் அது தெரியுமுங்க.

இப்படியெல்லாம் கடந்த எங்கள் காலங்கள் முதல் முறையாக ஒரு முதல் அனுபவத்திற்கு எங்கள கூட்டிச்சென்றதுங்க. எங்கட மூத்த அக்காக்கு அந்த வருடம் முப்பத்து மூன்று வயசு ஆரம்பிச்சதுங்க. அண்ணையில இருந்து எங்கட அக்காக்கு எங்கட ஊர்ல ரெண்டு பெயருங்க. ஒண்ணு கனவுக்கன்னி (ஆண்கள் மத்தியில) ரெண்டாவது முதிர்கன்னி. அவளுக்கு அப்பவே உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டதாய் தான் சொல்லுவாங்க. பாவம். அவட நண்பிகள் எல்லாம் திருமணமாகி குழந்தை குட்டிகளோட இருக்கேக்க இவள் மட்டும் அதே நான்கு சுவர்களுக்குள்ள ஒட்டறை போல. அன்றாடம் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கிற எங்களுக்கு சீதனம் கொடுத்து கலியாணம் செய்யவாங்க முடியும். வீட்டு மானத்தையே அப்ப எல்லாம் காப்பாத்துறது சின்னக்காட ஒத்தை வருமானம்தானுங்க. அமா. அவ ஒரு நிறுவனத்தில வேலைக்கு போனவ.

எங்கட பெரியக்காவப் பத்தி நான் ஜோசிக்கும் போதெல்லாம் எண்ட ஞாபகத்தில டக்கெண்டு வந்துபோறது எங்கட ஊரில இருந்த கனகசபாபதி மாமாதானுங்க. காரணமும் இருக்கு. எங்கட பெரிய அக்காவ பாத்து இவர் ஒண்ணு சொன்னது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. "வசதியும் இல்ல வயசும் போயிட்டு, இனியும் கரை சேருறது எண்டால் கஷ்டம்தான்..." இந்த மனுஷன் ஊருக்குள்ள ஒரு பெரிய ஆளுங்க. கதைகள பாத்திங்களா. எப்பிடிங்க இப்பிடி மற்றவங்கட மனச புரிஞ்சு கொள்ளாம நோகடிக்கிறாங்க. இதை இன்னைக்கு வரைக்கும் நான் பெரிய அக்காட சொன்னதில்லேங்க. சொன்னா எவ்வளவு கஷ்டப்படுவா தெரியும் தானேங்க? ஏன் இந்த மனுசர் எல்லாம் பெண்கள இப்படி துன்புறுத்துறாங்க. நம்மட சமூகம் ஏனோ பெண்களை கூர்ந்து கவனிப்பதில் இத்தனை அதிகம் ஆர்வம் கொண்டிருக்குங்க.

நிறைய பேர் வந்தாங்க. வசதிய கேட்டிடு போய்டாங்க. இன்னும் சில பேர் வந்தாங்க அக்காவ பாத்தாங்க கூடவே ரெண்டு தங்கசிகளையும் பாத்தாங்க, அப்பா வேற இல்ல, போய்டாங்க. இன்னும் சிலர் வந்தாங்க வயச கேட்டாங்க, கூட எண்டு போய்டாங்க. இப்படியே அக்கா வெறும் காட்சிப் பொருளாக இருந்தாவே தவிர விலை போகலைங்க. கஷ்டத்துக்கு முன்னுக்கு நிர்வாணமா நிண்ட அவட உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமா சாக தொடங்கிச்சு. அப்பதானுங்க கடவுளுக்கும் இவ மேல ஒரு இரக்கம் வந்திச்சு.

ஒருநாள் நாங்க கோவிலுக்கு போய் இருந்தப்ப எங்கள ஒரு ஆம்பிள நீண்ட நேரமா பார்த்துக்கொண்டு இருந்தாருங்க. ஒரு வாரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து அம்மாட்ட பேசினாருங்க. தனக்கு அக்காவ பிடிச்சிருப்பதாகவும் அவவ திருமண செய்துகொள்ள விரும்பிறதாவும். அவர் எதிர்பார்ப்பு எல்லாம் அக்கா மட்டும்தான் என்பதை தெளிவாக புரிஞ்சுகொண்டபிறகுதானுங்க அம்மாக்கு பேச்சே வந்தது. இந்த மாப்பிள்ளையும் செம்பு (அதுதான் சீதனமுங்க) கேட்டா நாங்க எங்க போறது? அம்மாட வார்த்தை இல்லாத சந்தேகத்துக்கு அவர் சிம்பிளா ஒரு பதில் சொன்னாருங்க. "எனக்கு தேவை உங்கட மகள் மட்டும்தான். அவள கண் கலங்காம வச்சிருக்க என்னட்ட வசதி இருக்கு, மனசிலயும் இருக்கு கையிலயும் இருக்கு. நம்பினால் குடுங்கள் நம்பாவிட்டாலும் குடுங்கள் நம்ப வைத்துவிடுறன்.." அவர்ட டீலிங் அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருந்திசுங்க. எல்லாத்தையும் நேரையா, தெளிவா, விவேகமா பேசிற தன்மை அம்மாவையும் சம்மதிக்க வச்சு அக்காவையும் காதலுக்குள் நகர்திடிச்சு.

இப்படிப்பட்ட ஆண்கள் ஊருக்குள்ள மிகக் குறைவுங்க. பிறகென்ன அவட திசை ஒருவாறு வெளிக்க ஆரம்பிச்சது. அவட முகத்தில மின்மினிகள் கூடியிருந்து கும்மியடித்தன. அந்த வீட்டாக்களும் நாங்களும் கதைச்சு பேசி கலியாணத்த ஒருவாறு நல்லபடியா நடத்தி முடிச்சமுங்க. எங்கட கஷ்டத்த சரியாய் புரிஞ்சுகொண்ட அவங்க எல்லா செலவையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க. அதுக்காக நாங்க அப்படியே விட ஏலாது தானேங்க. அம்மா வழமைபோலவே குமார் மாமாட்ட வட்டிக்கு கொஞ்சம் காசு வாங்கி எங்களுக்கு புது சட்டை மற்றும் கலியாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிச்சாங்க.

அன்று அக்காட கலியாண நாள், மேடையில கனவுகளோட அக்கா, வட்டி குமாரை ஜோசித்தவாறே அம்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு கழுத்திலும் கைகளிலும் இமிடேஷன் நகை அணிந்த சந்தோசத்தில் நான்...

தொடரும்............

No comments:

Popular Posts