Tuesday, June 28, 2011

ஒரு அபலையின் டைரி - பாகம் 01

வணக்கமுங்க. என்னை தெரிகிறதா என்று கேட்பதற்கு நான் ஒன்றும் பட்டத்து ராணியல்ல. வீட்டின் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண ரமணி. நானும் எண்ட கதைகளும் முழுக்க முழுக்க கற்பனை எண்டாலும் இந்த சமூகத்தில நடக்கிற சீர்கேடுகள ஓரளவேனும் சொல்லகூடிய கதாபாத்திரம். அதுக்காக என்னப்போல பெண்கள் இந்த நாட்டில அதுவும் நம்மட தமிழ் பிரதேசங்களில இல்லை எண்டு சொல்ல வரலேங்க. நிச்சயமா இருப்பாங்க. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, குடும்பத்திலையே மிக சந்தோசமா இருக்கிறது பெண்கள் தான் எண்டு நீங்க எல்லாம் நெனைச்சுக்கொண்டு இருகிறீங்க. ஒருவகையில ஆமாங்க. நாங்க எல்லாம் குளத்தில இருக்கிற அழகான தாமரைய போன்றவங்க. குளத்துக்குள்ள என்னதான் பிரச்சனைகள் துன்பங்கள் வந்தாலும் அது வெளில தெரியாம நாங்கள் அழகிய அந்த தாமரை இல்லைகள் போல எங்கட முகத்த சந்தோசமா அழகா வச்சுக்கிண்டு எல்லாத்தையும் மறைச்சிடுவோமுங்க. எங்களுக்குள்ளயும் நிறைய வேதனைகள் வலிகள் இருக்குங்க. அதுகள என்னால முடிஞ்ச அளவு சொல்லுறதுதான் இந்த தொடர் பதிவின்ட நோக்கம்.

ஐந்து வயசில ஆடம்பரமா வாழ்ந்த வாழ்கையிண்ட பதிவுகள் இன்னும் எண்ட மனச் சுவர்ல அப்பிடியே ஆணி அறைந்சாப் போல இருக்குங்க. அம்மாக்கு ஐந்தும் பொம்பிள பிள்ளைங்க. அப்பாக்கு ஐந்து நேரம் மாத்திரைங்க. ஏதோ அது இது எண்டு, எக்கச்சக்க வருத்தமுங்க அவருக்கு பாவம். ரொம்ப வேதனைபட்டு வருத்தம் என்றதுக்கும் அப்பால எங்கட எதிர்காலத்த யோசிச்சு யோசிச்சே நேரத்துக்கு எங்கள விட்டு போய்ட்டாருங்க. அதால அம்மதானுங்க அப்பாட பாரத்தையும் சேத்து சுமந்து சுமந்து நாங்க வளர வளர அவ தேஞ்சு தேஞ்சு போய்டாங்க. அவக்கு நாங்க கஷ்டப்பட்ட காலத்தில இருந்தே உதவி செய்தவங்க ரெண்டு பெருதானுங்க. ஒண்ணு நம்பிக்கை, ரெண்டு மன உறுதி. எங்கள படிக்க வைக்க அவ துடிச்ச போதெல்லாம் கஷ்டம் பல்லு இழிச்சுதுங்க. நீங்க எல்லாம் போர்வையால போத்துகுவிங்க நாங்க எல்லாம் மற்றவங்கட கேலி பார்வையாலதான் போத்திக்கிட்டம். என்ன பண்றது ஒரு படத்தில அந்த விஜய் பயல் சொல்லுறதபோல வாழ்க்கை ஒரு வட்டம் என்றத நான் ரொம்பவே தெரிஞ்சுகிட்டன். ஆனா ஒண்ணுங்க, பெரியளவு காசு இல்லைங்க எங்கட்ட ஆனா மனசு இருந்திச்சு. வீட்டில வசதி இல்லைங்க ஆனா சந்தோசம் நிறைஞ்சு இருந்திச்சு. அம்மா எங்கட வயித்த நிரப்ப சோத்துக்கு கஷ்டப்பட்டாங்க ஆனா எப்பவுமே சிரிக்க கஷ்டப்படலேங்க.

அவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க ஒருமாரி வளந்தமுங்க. நாங்க வளர்றதுக்கு துணையா இருந்தது எண்டால் ஒண்ணு எங்கட அம்மா, இன்னொண்ணு கடனுக்கும் அரிசி தர சம்மதிக்கும் முன்வீட்டு பலசரக்கு கடை மாமா. அந்த மாமா மட்டும் இல்லாட்டி நானெல்லாம் செத்தே போயிருபனுங்க. பள்ளிக்கூடத்தில எப்பவுமே நான் பின் வரிலதானுங்க இருப்பன். ஏன் தெரியுமா? அப்பதானே வாத்தியாருக்கு நான் தேஞ்சுபோன செருப்போட வந்திருக்கிறது தெரியாது. சப்பாத்து போட சொல்லி அடி அடியெண்டு அடிப்பாங்க பள்ளிக்கூடத்தில. அடிக்க தெரிஞ்சவங்களுக்கு எங்கள சரியா படிக்க தெரியலைங்க. எங்களுக்கும் சப்பாத்து போட ஆசை இல்லையா என்ன? காசு வேணுமே. ஒரு சப்பாத்து வாங்கினா நாங்க ஒருமாசம் பட்டினியா இருகோணுமுங்க. இப்ப நீங்களே சொல்லுங்க எனக்கு சோறு வேணுமா சப்பாத்து வேணுமா? இதெல்லாம் எங்க அந்த வாத்திக்கு புரிஞ்சுது. வகுப்பில நான் சோத்தப் பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கேக்க அவங்க எல்லாரும் அவங்க அவங்கட சொத்தப்பற்றி கதைப்பாங்க. எனக்கு சிரிப்புதானுங்க வரும். ஒரு பிடி சோத்துக்கு படுற கஷ்டம், வீட்டு நாய்க்கு மட்டுமே பத்து பிடி சோறு வைக்கும் அவங்களுக்கு எல்லாம் எப்பிடிங்க விளங்கும்? ஒண்ணு தெரியுமா உங்களுக்கு இந்த 'fair & lovely' எண்டு மூஞ்சிக்கு பூசிக்கொள்ளுராங்களே அந்த பாணி, அத எனக்கு தொட்டுப்பார்க்க ரொம்ப ஆசைங்க அப்ப எல்லாம். எங்கட வகுப்பில படிக்கிறதுகள் பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டுவருவாங்க. பள்ளிக்கூடம் விட்டதும் அத பூசிக்கொண்டுதாங்க வீட்ட வெளிகிடுவாங்க. பள்ளிக்கூடம் முடிய மணி அடிச்சதும் நான் எண்ட செருப்ப தயார் படுத்திக்கொள்ளுவனுங்க. காரணம் அது கொஞ்சம் தேஞ்ச செருப்புங்க தப்பி தவறி போற வழில அறுந்திட்டா?? அசிங்கம்தானேங்க ரோட்ல. அவங்க அந்த பாணிய பூசிக்குவாங்க. ஒருக்கா எண்ட நண்பிக்கு தெரியாம எடுத்து பாப்பமா எண்டு தோனிச்சுதான் அப்புறம் அத செய்யலீங்க. அம்மாக்கு தெரிஞ்சா என்ன கொண்ணே போடுவா. அம்மா கஷ்டப்பட கத்துத் தந்தவ ஆசைப்பட கத்துத் தரலேங்க.

இப்பிடி எண்ட பள்ளிக்கூட வாழ்க்கைய மறக்க ஏலாதுங்க. அதுக்குள்ளே இந்த யுத்தம் வேற. நான் சந்தோசமா இருந்ததெல்லாம் எங்கட அந்த வீட்டுக்குள்ளதாங்க. வெளில இறங்கினா மற்றவங்கள பாக்க ரொம்ப பொறாமையா இருக்கும். பிறகென்ன நாம மட்டும் ஏன் இப்பிடி இருக்கம் எண்டு கவலை வந்திடும்.. செல் விழுற நேரம் எல்லாம் அது எண்ட தலையில விழாத எண்டு நிறைய தடவை ஜோசிச்சிருக்கனுங்க. கடவுள் காசு உள்ளவன் மேல எல்லாம் செல்ல போட்டு சாகடிக்கிறான். சாப்பாட்டுக்கே வழியில்லாத எங்கள எல்லாம் ஏனுங்க விட்டிவைக்கிறான் எண்டு எல்லாம் ஜோசிச்சு அழுதிருகிரனுங்க. என்ன பண்றது.. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விதமா வாழ்க்கைய கொடுத்திருக்காரு இந்த கடவுள். உண்மைய சொல்லுறேனுங்க கஷ்டப்பட்டு போய்டா நம்மட சமூகத்தில வாழுறது சரியான கஷ்டமுங்க. எங்கள எல்லாம் ரொம்ப அளவைகிறது எங்கட வறுமைகள் இல்லேங்க மற்றவங்கட வார்த்தைகள் தான். எப்பிடி எல்லாம் கதைப்பாங்க தெரியுமா உங்களுக்கு. அப்பப்பா.. நினைச்சு பாக்கவே பயங்கரமுங்க. அதிலையும் எங்கட கஷ்டத்த பயன்படுத்தி சில ஆம்பிள மிருகங்கள் எங்கட உடம்பிலையும் ஆசைபடுவாங்க. ஏனுங்க பொம்பிள எண்டா அவங்களுக்கு எல்லாம் உடல் சுகம் கொடுக்கிற ஒண்ணாதான் முதல் ஞாபகம் வருமா. என்ன எங்கட அம்மா கொஞ்சம் அழகா பெத்ததும் தப்புதானுங்க. எங்கட கஷ்டமும் வீட்டில எல்லாம் பொம்பிளைகள் எண்டதாலையும் எங்கட கஷ்டத்தில இருந்து எங்கள காப்பாத்திக் கொள்ளுறதவிட இப்படிப்பட்ட ஆண்களிடத்தில இருந்து எங்கட உடலையும் கற்பையும் காப்பாத்திக் கொள்ளுரதானுங்க மிகப்பெரிய சவாலாக இருந்திச்சு. கிண்டல் என்ற பேர்ல எங்கட உடம்பையும் கற்பையும் விமர்சிக்கிற இந்த ஒருசில கொடூர ஆண்கள என்னதான் செய்றதுங்க.

இப்பிடியான ஒரு கசப்பான அனுபவத்த சொல்லுறன் கேளுங்க... தொடரும்..

No comments:

Popular Posts