Tuesday, June 28, 2011

நம் சுடுகாட்டுப் பக்கம்.


ஒரே பாதை.
ஒற்றையாய் நான்
துணையாய் - என்
நம்பிக்கை.

அந்த மரங்களோடு - எனக்கு
பழக்கம் இல்லை.
அந்த காற்றும் கூட
பழக்கப்பட்டதாய் இல்லை.
மூக்கு வரை வந்துபோகும்
அந்த மணம் கூட - முன்பு
அனுபவித்ததாய் இல்லை.

அந்த
காற்று முறைக்கிறது
மரம் செடி கொடி
காற்றை கலைக்கிறது
ரீங்காரம் இடும் வண்டுகூட
காதடைக்க அலறுகிறது..

என்முன்னே
யாரோ செல்வதாய்
என்பின்னே
யாரோ வருவதாய்
என் பிரமை மட்டும்
பித்தலாட்டம் ஆடுகிறது..

அந்த
முந்திய இரவின்
பிந்திய கீறல்கள்
என்
சிகையில் விழ - என்
விழிக்குள் விழும்
விம்பங்கள் எல்லாம்
தலைகீழாவே தொங்குகிறது..

பயத்திடம் மாட்டிக்கொண்ட
என்
பிரயத்தனம் - அந்த
முதியவர் சொன்னதில்
மொத்தமாய் செத்தது..

"தம்பி,
இந்தபக்கம்
ஏன் வந்தாய்?
இது - நம்
துரோகிகளும் தியாகிகளும்
புதைந்து தூங்கும்
புண்ணிய சுடுகாடு..
சிலவேளை உன்னைக்கண்டால்
தியாகிப் பேய்கள் கட்டிப்பிடிக்கலாம்
இல்லை மீண்டும் உன்னை
துரோகிப் பேய்கள் காட்டிக்கொடுக்கலாம்..

கடுப்பேத்திய சுறா.

எவ்வளவு சொல்லியும் கேட்காத நண்பனின் பிடிவாதம். விஜயின் சுறா பார்த்தேயாகவேண்டும் என்கிற வெறி அவனுக்கு. எத்தனை தடவை நான் சொல்லியும் பலன் இல்லை. பின்னர் ஒருவாறு என்னுடைய நண்பர்களுடன் புதிதாய் வெளியான "சுறா" என்கின்ற ஒரு சினிமா படத்துக்கு சென்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு விஜய் தனது 50 வது படத்தில் அப்படி என்னதான் செய்யப்போகிறார் என்ற ஒரு சிறு தவிப்பு ஒருபுறம். எத்தனையாவது படம் என்றாலும் விஜய் எப்படி வித்தியாசமான படம் நடிக்க யோசித்திருப்பார் என்கின்ற ஒரு விரகத்தி இன்னுமொருபுறம். படம் ஆரம்பமானது, முடிந்தது. வெளியேறினோம் கடுப்போடு.

படத்தின் highlights என மூன்றை சொல்லலாம். ஒன்று அழகோ அழகு தமனா, இரண்டு, ஒப்பிட்டுப்பாற்கும் பொழுது ஓரளவு சிரிக்க வைத்திருக்கும் வடிவேலு. மூன்று, நடிக்க முயற்சி செய்திருக்கும் அழகிய அந்த வில்லன் நடிகர். இதை தவிர சுறாவில் எதுவும் இல்லை. படம் பார்த்து வெளியில் வந்து இத்தனை நேரமாகியும் கண்ணுக்குள்ளேயே நிக்கிறார் தமனா அக்கா. என்ன அழகு (?? முடியல).

ஒருவேளை இப்படி அழகான நாயகிகளை விஜயின் படங்களில் நடிக்கவைப்பதன் அவசியம் கொஞ்சம் புரிந்தது. விஜயின் படத்தை பார்க்க போவதை விட அநேகம் பேர் தமனாவைதான் பார்க்க போவார்கள். தமனாவின் நடிப்பில் பெரிதும் முன்னேற்றங்கள் இல்லை என்றுதான் தெரிகிறது. நடன இயக்குனர்கள் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் தமனாவை. ஒரு கோடீஸ்வரன் மகள் ஒரு குப்பத்து பையனை பார்த்தவுடன் காதலிப்பது படத்தின் தொடக்கத்திலையே போர் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. பின்னர் வழமைபோலவே நாயகி கேட்டவுடனே இரண்டு சீரியஸ் வசனங்களை வீராப்பாய் பேசிவிட்டு உடனே லவ் பண்ண தொடங்குவது விஜய் படம்தான் என்பதை ஞாபகப்படுத்தியது. தமனாவை திரையில் காட்ட ரொம்ப கஞ்சல்தனம் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒருதடவை வந்து அடுத்ததடவை வருவதற்குள் இந்த படத்தின் நாயகி தமனாதானா என்பது மறந்தே போகிறது.
நமது சினிமா எத்தனையோ கட்டங்களை தாண்டி சாதனைகளோடு எங்கையோ போய்கொண்டிருக்கிற வேளையில் விஜய் படங்களில் மட்டும் சின்னபுள்ளை தனமான காட்சிகள் வைப்பதை எப்போ நிறுத்தபோகிறார்கள். படத்தில் விஜய் சொல்ல்வதைபோல இயக்குனர் விஜயை வைத்து காமடிகீமடிதான் பண்ணியிருக்கிறார் சுறாவில்.

வடிவேலுவின் கட்டங்கள் சிரிப்பை உண்டுபண்ணியபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக கொடுக்க முடியவில்லை அவரால். வடிவேலு சார் நாங்க உங்கட்ட நிறையவே எதிர்பார்த்தோம். கொஞ்சம் ஏமாற்றம்????? சில இடங்களில் வடிவேலுவுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்கின்ற நியதியில் அவரை காமெடி பண்ண கூப்பிட்டதுபோல் இருந்தது.

வில்லன் நடிகர் தனது கடமையை கொடுத்ததைபோல் நன்றாகவே செய்திருக்கிறார் (ஆகக்குறைந்தது இந்த படத்தில் ஒருவரையாவது நடித்திருக்கிறார் என்று சொல்லத்தானே வேண்டும்) அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்யலாம் போல் இருக்கிறது.

இந்த சுறா இன்னொரு குருவி, இன்னொரு வில்லு, இன்னொரு வேட்டைக்காரன். இப்படி சொல்லுவதைவிட இன்னொரு விஜய் படம். இருந்தும் நடனம் வழமைபோலவே கலக்கியிருக்கிறார் விஜய். புதிய புதிய நடன உக்திகள். தமனாவின் கீழ் சட்டையை தூக்கி தூக்கி ஆடுவது இன்னும் கலக்கல். வழமைபோலவே மணிசர்மாவின் சுமாரான இசை. இன்னுமொரு மெலடி பாடலை கொடுத்திருக்கலாம். ஆமா விஜயின் அடிதடி படங்களுக்கு இது ஒன்றுதான் குறைச்சல்???
கனல்கண்ணனின் சண்டை காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. வில்லன் கூட்டத்தை விஜய் திரத்தும் காட்சி திரையில் வந்த பொழுது ஏதோ எனக்கு அயன் படம் ஞாபகம் வந்தது. கொஞ்சம் கொப்பிதான் கனல் கண்ணா. இருந்தும் விஜய் நன்றாகவே பாய்ந்து பாய்ந்து ஓடுகிறார் (வழமை போலவே). இருந்தும் இடையில் ஒரு மூன்று சக்கரவண்டியை நிறுத்தி அதற்குள்ளாக பறக்க சொல்லியிருக்கலாம்.....

ஒட்டுமொத்தத்தில் நல்லதொரு சினிமா பார்க்க அசைபடுகிறவர்கள் தயவுசெய்து சுறா பக்கம் போகவே வேண்டாம். சுறா படத்தின் ஒரிஜினல் CD வராவிட்டால்கூட கவலை படத்தேவையில்லை. நம்மிடம்தான் ஏற்கனவே வில்லு, குருவி, வேட்டைக்காரன் என்று ஏராளம் இருக்கிறதே.... சுராமேல் விஜய் ரசிகர்கள் கோவப்படுவார்களா என்பது தெரியாது அனால் தமிழ் சினிமா விரும்பிகள் நிச்சயம் ஆத்திரப்படுவார்கள். ஆயிரத்தில் ஒருவன், அங்காடிதெரு இப்படியெல்லாம் படங்கள் வந்துகொண்டிருக்கும் காலத்தில் இப்படியும் ஒரு படமா என்கிறார்கள் படம் பார்த்து வெளியில் வந்த அநேகர். விஜய் கொஞ்சம் கூட வித்தியாசமாய் நடிக்கமாட்டாரா என்கின்ற ரசிகர்களின் ஆவலை எப்பொழுதாவது நிறைவேற்றுவாரா? குருவி, சுறா என்று சும்மா கதைவிடுறதை விட்டு கொஞ்சமாவது ரசிகர்கள் தமிழர்கள் எதிர்பார்க்கிற வகையில் ஒரு படத்தை கொடுக்க முடியுமா விஜையால்?

சுறா ஒரு விஜய் படம். அதே கதை. அதே காதல், அதே நடிப்பு, அதே வீராப்பு, அதே மிரட்டல், அதே அடிதடி, அதே சாதனை (பட முடிவில்). இந்த சுறாவை நிச்சயமாக மக்கள் உயிரோடு விடமாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....

எப்பொழுது வாசிக்கும் பொழுதும் எனக்குள் ஒரு பேரானந்தத்தை தருவிக்கும் எனது பழைய பதிவுகளில் இதுவும் ஒன்று. அந்த நாள் வரப்போகும் திருமண நாளைவிட சந்தோசமான நாள்.

கால ஓட்டம் மிக மிக சுவாரசியமான விடயங்களை எமக்கு காட்டி போகும். எதிர்பார்ப்புக்களின் பெறுமதியை காலமே தீர்மானிக்கிறது. என்னை நீண்ட காலமாக, (நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை மாறாக வருடங்களாக) எதிர்பார்த்த ஒன்றிற்காய் இழந்த சந்தோசங்கள் ஏராளம். சந்தோசங்களை இழந்த அந்த எதிர்பார்ப்பு எனது கனவு. எனக்கு சந்தோசங்களை விட கனவுதான் முக்கியம்.


காலம் சொல்லிவைத்த திகதி 23 .01 .2011 . இந்த நாள் வரை காத்திருந்த எனது எழுத்துகள் கூட சோர்ந்து போகவில்லை என்னை போல. காலம் மலர்ந்தது. கனவு பலித்தது. லட்சியம் மேடையேறி சிரித்தது. என்னை சார்ந்தவர்களை நான் என்னை எண்ணி புன்னகைக்க, பெருமை படவைக்க காலம் கொடுத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் இந்த நாள்.

முதல் முறையாக எனது கிறுக்கல்கள் எனது லாச்சியையும், மட்டை கோவையையும், கணனியையும் விட்டு வெளியில் வந்த நாள் இது. எனது எழுத்துக்கள் பூபெய்திய நாள், பெற்றவன் நான் பெருமைபட்டு புன்னகைத்தேன். என்னை பெற்றவள் என்னை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். இதைவிட ஒருத்தனுக்கு என்ன வேண்டும். நான் அதிகம் ஆசைபடுபவன். திருப்தியடைதல் என்பது மிக நலிந்த இயல்பு எனக்குள். இப்படியிருக்க முதல் தடவையாக நான் திருப்திப்பட்ட ஒரு தருணம். எனது நூலுக்கல்ல இந்த வெள்யீடு மாறாக எனது எழுத்துகளுக்கு. நூல் வெளியீடு என்ற பெயரில் எனது எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள் அங்கு வந்த பெரியோர்களும் எழுத்தாளர்களும், கவிஞர்களும்.

ஒரு பெண்ணின் பிரசவ வலியை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஆணின் பிரசவ வலியை நான் உணர்ந்திருக்கிறேன். விபரமாக சொல்லுவேன். வலிகளெல்லாம் மேடையேறிய போது புன்னகையாகவும், சந்தோசமாகவும் தான் மாற்றம் பெற்றன.

இரண்டு நூல்களையும் நன்றாக வாசியுங்கள். ஒன்று கவிதை. இன்னொன்று இளைஞர்களுக்கான உளவியல் சார் நூல். சமூகம் என்னால் பயன்பெறுகிறதோ இல்லையோ எனது எழுத்துக்களால் நிச்சயமாக பயன்பெறவேண்டும் என்பது எனது ஆவல். உங்கள் கருத்துகளை தாராளமாக எழுதுங்கள். உங்கள் விமர்சனங்கள் என்னை பாதிப்பவை அல்ல. புடமிடுபவை. விமர்சனங்களுக்கு பயந்தவன் ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியாது. நான் ஒரு நல்ல இலக்கியவாதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.

எனது நூல்களை வாழவிடுங்கள். என்னை இன்னும் இன்னும் எழுத விடுங்கள். உங்கள் கைகளில் இன்னும் நிறையவே பயன்மிக்க நூல்களை கொண்டு வந்து சேர்க்கிறேன்.
எனது நூல் பற்றி 'தமிழ் மணி' அகளங்கன்....

சில புதுக்கவிதை தொகுப்புக்கள் வெறும் 'நாட்குறிப்புப்புத்தகம்' போல அல்லது காதலிக்கு அனுப்பவேண்டிய காதலனின் கடிதம் போல இருக்கின்றன. சில தொகுப்புக்கள் காதலையும் சமூகத்தையும் சம காலத்தையும் பாடுவனவாக அமைந்துள்ளன.

இந்த வகையில் பி. அமல்ராஜ் இன் 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்னும் இக்கவிதைத்தொகுப்பு காதலோடு, சமகாலம், சமூகபிரச்சனை என்பனவற்றையும் கலந்ததாக அமைந்துள்ளதை பாராட்டலாம். மன்னார், நானாட்டான், வஞ்சியன்குளம், இளங்கவிஞர் அமல்ராஜ் திருமறைக்கலாமன்ற மன்னார் கிளையின் செயலாளராகப் பணியாற்றியவர். .......

இந்நூலிலுள்ள 18 தலைப்புக்களிலான கவிதைகளில் 'நீதான் அவள்', 'நீ-நட்பு-காதல்', 'கல்லறைக்கனவு', 'ஒரு ரயில் பயணம்', 'ஒரு காதல் காவியம்', 'அடங்காத காதல்', 'மொட்டைமாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்', 'கடற்கரைக் காதல்' ஆகிய எட்டுக்கவிதைகள் காதல் சம்மந்தமானவை. இவற்றில் 'கடற்கரைக் காதல்' இசைப்பாடலாக அமைந்துள்ளது.

'தியாகம் அவள் பெயர்', தாய்மை சிறப்புப்பாடல். 'எனது அட்டோக்ராப்', 'ஊர்பக்கம்' ஆகிய இரண்டும் பழைய நினைவுகளின் இரைமீட்டல்கள். 'முள்ளி வாய்கால் முடிவுரை', 'செத்தா போய்விட்டேன்', 'பயணங்கள் முடிவதில்லை', 'தமிழ் சுகந்திரம்' ஆகிய கவிதைகள் போர் அவலங்களைப் பற்றியவை.

'முதிர் கன்னி', 'கொன்று விடுங்கள்', 'புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும்' ஆகியவை சமூக அவலங்கள் பற்றிய புதிய சிந்தனைகள்.

அமல்ராஜ் பெருங் கவிஞனாக உருவாக தகுதி படைத்தவர் என்பதை அவரது சில கவி வரிகள் காட்டுகின்றன. ஒன்று பழைமையை புதிய வடிவில் வழங்கும் விதம்.

'தியாகம் அவள் பெயர்' என்ற கவிதையில் தாயைப்பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

கோவில் எனக்கு
மறந்தே போனது.
சாமி இங்கு
வீட்டிலிருக்க
கோவிலில் எதற்கு
கோபுரக்கலசம்?

உண்மையாகவே நீ கடவுளம்மா என்ற வரிகள் கடவுள் தன் வடிவாய் தாயைபடைத்தான் என்பதை வலியுறுத்துகிறது. 'ஒரு காதல் காவியம்' என்ற கவிதையில் இவரது கற்பனை அற்புதமாக அமைந்திருக்கிறது.

சோம்பல் முறிக்கும் மாலைபொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்..

மாலைபொழுதை தன காதல் உணர்வோடு கூடிய கற்பனையோடு இவர் பாடும் விதம் இவரை எதிர்கால நட்சத்திரமாக இனம் காட்டுகிறது. ......

'புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்' என்ற கவிதையில் முடிவுரையாக,

குட்டைப் பாவாடையில்
குதூகலமாய் போகிறாள்
அவள்.
கணவன் மட்டும்
முக்காட்டோடு முனங்கிக்கொண்டிருக்கிறான்
வெளியே வர முடியாமல்.

என்கிறார் கவிஞர். ...

இவரது காதல் சார்ந்த பாடல்கள் இவரது வயதிற்கும் உணர்விற்கும் ஏற்ற வடிகாலாக அமைகின்ற அதே வேளை சமூகம் சார்ந்த பாடல்கள் மிகவும் காத்திரம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. அரசியல் அல்லது போராட்ட அவலங்கள் என்ற வகையில் 'செத்தா போய்விட்டேன்?' என்ற கவிதை போரின் கொடுமையை எடுத்துக்காட்டுகிறது.

போரின் இலக்கணம்
என்னில் தெரியும்
போரின் இலக்கியம்
என்
வரலாற்றால் புரியும்.

என போரின் கொடுமையால் இரண்டு கால்களையும் இழந்த ஒரு தமிழ் இளைஞனின் ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது.

'முள்ளி வாய்கால் முடிவுரை' ஆவணப்படுத்தவேண்டிய அவலமாக கவிதையிலே வெளிவந்திருக்கிறது. சோக உணர்வையும், யுத்தக் கொடுமையையும் உள்ளத்தில் ஆழப்படுத்தி உதிரத்தோடு கலக்கச் செய்துள்ளது.

.........

அமல்ராஜ் எதுகை மோனை, இயைபு பொருந்திய ஓசை ஒழுங்கோடு இக்கவிதைகளை எழுதியுள்ளார். இவரது சமூக பார்வையும் வெளிப்படுத்தும் திறனும் பாராட்டுக்குரியன. பாடு பொருளுக்குரிய உணர்வு வெளிப்பாடு சிறப்பாக அமைந்துள்ளது. சொல்லாட்சி கற்பனை, சொல்லும் விதம், நடை என்பன இவரை எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்க வைக்கிறது.

....


அகளங்கன்
03 .11 .2010

என்னை கொன்றுவிடுங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் தலைக்கு மேல் வேலைகள் இருந்தும் இந்த பதிவை இட்டே ஆகவேண்டும் என்கின்ற எனது ஆவலின் நிமித்தம் இந்த பதிவை அவசரம் அவசரமாக இடுகிறேன்.

இது எனது நண்பன் ஒருவனின் கதை. சாதாரண கதை அல்ல. சோகம், கவலை, கண்ணீர், வேதனை என அனைத்தும் கலந்த ஒரு பல்சுவை கதை. அவனது அந்த சொந்தக்கதையை பொதுமைப்படுத்தி இணையம் வரை கொண்டுவந்திருக்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. நான் யதார்த்தத்தை நம்பி பிழைப்பு நடத்துறவன். உண்மையை உண்மையாய் சொல்லவேண்டும் என ஆசைபடுகிறவன். ஆதங்கங்களை கொட்டி தீர்த்திட வேண்டும் என முயற்சிக்கிறவன். யாரும் கோவித்துக்கொள்வார்கள் என்பதற்காக எனது கருத்துக்களை வெளிப்படுத்த தயங்குபவன் நான் இல்லை. காரணம் எனக்கு எனது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு அவர்களது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. எனவே இந்த பதிவு எனது ஆதங்கம். அதைவிட இதில் நாம் கற்றுக்கொள்ளவும் நிறையவே இருக்கிறது.
சரி. விடயத்துக்கு வருவோம். நான் சிறு வயதில் இருந்தே சாதி எனப்படுகின்ற ஒரு அசாதாரண, எந்த வித பிரயோசனமும் அற்ற ஒரு விடயத்தை பார்த்து பார்த்தே பழகியவன். அப்பொழுதெல்லாம் இது தவறு இல்லையா என பேச எண்ணுவேன் இருந்தும் என்னை பைத்தியக்காரன் என்பார்கள் என்பதால் அதை வெளிப்படுத்தாமலே வாழ்ந்துவிட்டேன். இப்பொழுது நான் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதாலும் எனது கருத்தை கொஞ்சமேனும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்பதாலும் இப்போது வெளிபடுத்துகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது நண்பனின் வாழ்கையில் இந்த சாதியின் அடாவடித்தனம் அதிகம். அவனிடம் எல்லாம் இருக்கிறது (சராசரியாக சாதியை தவிர. அதை இப்பொழுது சில மனிதர்கள் இவனை திருமணம் என்கின்ற புனித விடயத்தை தடுப்பதற்கு சிறந்ததொரு தடைகல்லாக பயன்படுத்துகிறார்கள். அவன் நிறையவே படித்திருக்கிறான், நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக சம்பாதிக்கிறான், நேரிய போக்குடையவன், நிறைந்த மனித சிந்தனைபோக்காளன் (இவற்றை அவனாக சொல்லவில்லை, அவனை குறித்து மற்றவர்கள் சொன்னதை நான் சொல்லுகிறேன்;). இப்படி சகலதும் சராசரியாக உள்ள ஒருவன் சாதி குறைந்தவன் என்பதற்காக இந்த சில நல்ல மனிதர்கள் அவனை திருமணம் செய்ய அனுமதிக்கிறார்கள் இல்லை. என்ன கொடுமை சார்??? இன்றைய இந்த பிந்திய 21 அம் நூற்றாண்டு வாழ்கையில் இதை விட பெரிய கொடுமை எதாக இருக்க முடியும். இந்த மனிதர்கள் இன்னும் 10 அம் நூற்றாண்டில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி இந்த உலகம் இன்னும் சுமக்கிறது?? மனிதர்கள் எல்லாம் சமமானவர்கள், சாதி என்பது இல்லை என இவர்களது சமயம், புதிய நூற்றாண்டு, பல பிரபலங்கள், பாரதியார், மகாத்மா காந்தி போன்றோர் சொல்லிகொடுக்கவில்லையா? அல்லது இவர்களுக்கு அவற்றை படிக்க திராணி இல்லையா?? புரியவில்லை எனக்கு. சாதிகுறைந்தவன் உலகில் மனிதன் இல்லையா?? ஏனோ ஒரு மிருகத்திற்கு தங்களது பிள்ளையை, சகோதரியை திருமணம் செய்து வைப்பது போல அல்லவா இவனை பார்கிறார்கள். இவர்கள் எப்படி தங்களும் மனிதர்கள் என பேசிக்கொள்கிறார்கள். மனிதன் என்பதற்குரிய சாதாரண அடிப்படை இயல்பே இவர்களிடத்தில் இல்லையே.

இதைவிட இன்னுமொரு வேடிக்கையான விடயத்தை கூறுகிறேன். இந்த எனது நண்பனின் விடயத்தில் பெரியவர்கள் சாதி பற்றி பேசுவதை நான் சரி பிழை கூறுவதற்கு முன் சாதாரணமாக மதிக்கிறேன். காரணம், அவர்கள் வாழ்ந்த சூழல், காலம் அவர்களை அப்படிதான் வளர்த்திருக்கிறது. அது ஒருவகையில் அது அவர்கள் தவறும் கிடையாது. அனாலும் அவர்களை எம்மால் சிந்திக்கத்தூண்ட முடியும். சிந்திக்கவும் பல பெரியவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். மாறாக, இந்த தலைமுறையினர் சாதி பற்றி பேசும் பொழுது நீங்கள் என்ன நினைப்பீர்கள்??? நான் அசந்தே போனேன். இவர்களுக்கு சாதிபற்றி என்ன தெரியும். சாதி எப்படி தோன்றியது என்பது இவர்களுக்கு தெரியுமா? தாங்கள் படித்தவர்கள் என தம்பட்டம் அடித்துக்கொண்டு சாதிவெறி பற்றி பேசுவதில் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. இவர்கள் புத்தகங்களை மட்டும் படித்திருக்கிறார்கள் உலகத்தை அல்ல. இவர்கள் இந்த உலகத்துக்கு உகந்தவர்கள் அல்ல. 10 அம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். ஒன்று தெரியுமா இவர்களுக்கு, இந்தியா வந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து "The Miracle of India " எனப்படுகின்ற நூலை எழுதிய ஜோன் மிரல் என்கின்ற எழுத்தாளர் தனது நூலில் கூறுகிறார், "சாதி வெறி பேசுபவர்கள் மனித குலத்திலேயே கீழ் சாதியினர்தான், இவர்கள் உலகத்தில் இல்லாமல் இருப்பது பூமிக்கு நல்லம்." இதைவிட நான் என்னதான் கூறமுடியும். தயவுசெய்து, இந்த தலைமுறையினருக்கு ஒன்றை சொல்லுகிறேன். மனிதர்களை பாருங்கள். அவர்கள் பெறுமதியை பாருங்கள். அவர்கள் திறமைகளை பாருங்கள். அவர்கள் ஆளுமையை பாருங்கள். இன்னும் நீங்கள் சாதியையே பேசுவீர்களாக இருந்தால் உங்களை இந்த உலகம் எப்படி மதிக்கும்?

இறுதியாக எனது நண்பனுக்கு நான் சொன்ன வரிகள். இவர்கள் திருந்தமாட்டார்கள். திருத்தவும் முடியாது. காரணம், பாரதியார் சொல்லையே கேட்காதவர்கள் எனது உனது பேச்சையா கேட்கபோகிறார்கள். 'இவர்களை விட்டு வைப்பதை விட நட்டு வைக்கலாம்' (மேத்தா சொல்வதுபோல;). இவர்களை நினைக்கும் பொழுது எனக்கு தோன்றுவது ஒன்றே ஒன்றுதான், 'கடவுளே இவர்களை காப்பாற்றும்'. தேவையான அனைத்தையும் விட்டுவிட்டு தேவை இல்லாத ஒன்றை மட்டும் கையில் வைத்திருக்கிறார்கள். 'எத்தனை மூடர்கள் இவர்கள்?' (கவிகோ அப்துல் ரகுமான் சொல்வதைபோல;). தேவையான அனைத்தையும் மறைத்துவிட்டு தேவை அற்ற ஒன்றை மட்டும் (சாதி தங்கள் பிள்ளைகளுக்கு, சகோதரிக்கு (திருமணம் என்கின்ற பேரில் கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?????

எனது நண்பனின் பிரச்சனையை நான் சரியாக எனது ஆதங்கம் வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன் என நம்புகிறேன்.

இப்பதிவு கடந்த வருடம் எனது முன்னைய இணையப் பக்கத்தில் இடப்பட்டது.

மன்னாரில் கலைபடும் பாடு..

வணக்கம். நீண்டநாட்களுக்கு பின் ஒரு பதிவு. எப்பொழுதெல்லாம் ஒரு விடயம் என்னை மனதளவில் பாதிக்கிறதோ அந்த விடயத்தை உடனடியாகவே எழுதி கொட்டிவிட வேண்டும் என்பது எனது ஆதங்கத்தின் ஒரு செயல் வடிவம். என்ன செய்வது.. எழுதுவதால் கிடைக்கும் ஒரு ஆத்மா திருப்பதியை வேறு எந்த விதத்தில் ஈடுசெய்ய முடியும். அதிகம் அலட்டாமல் விடயத்துக்கு வருகிறேன். அதற்கிடையில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடுகிறேன். இந்த பதிவில் நான் யாரையும் மறைமுகமாக சாடியிருப்பதாக யாராவது மனக்கணக்கு போட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல ஆனால் எனது பேனாவில் மையை விட ஆதங்கமே அதிகம் இருக்கிறது. அதற்கும் நான் பொறுப்பல்ல. எனது மனசாட்சியே.

பிறந்த மண்ணும், நாம் சார்ந்திருக்கும் சமூகமும் எமக்கே உரித்தான இரு வேறு அடிப்படை அடையாளங்கள். அதை நேசிக்கிற மனித சமூகம் அதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதில்லை. அந்தவகையில் மன்னார் என்கின்ற பெயர் பல நல்ல விடயங்களுக்காக குறியீடு பெயராய் விளிக்கப்படும் ஒரு மாவட்டம். அதில் அநேக விடயங்கள் இருந்தாலும் நான் இங்கு பதிவிட வரும் விடயம் 'கலை'களும் கலை சார்ந்த இடமும் என்று சொல்லக்கூடிய ஒரு மாவட்டம் நம்முடையது. இந்த கலை என்கின்ற விடயம் மன்னாரை விட அதற்கு வெளியில் அதிகம் பேசுகிறதே தவிர எமது மாவட்டத்துக்குள் அதை அதிகம் பேசி அலட்டிக்கொள்பவர்கள் மிக குறைவு என்பது எனது ஆதங்கம். இந்த கலை வடிவங்களையும் கலை சார்ந்த விழுமியங்களையும் வளர்ப்பது என்பது எமக்கேயுரித்தான சமூகப்பொறுப்பு. இவ்சமூக அடையாளங்களை காப்பாற்றுதல் அல்லது வளர்த்து எமது அடுத்த சந்ததியினருக்கு சரியாக கையளித்தல் என்கின்ற பாரிய பொறுப்பை சரிவர செய்வதே நாம் நமது சமூகத்திற்கு செய்யும் மிகச்சிறந்த கடமை. அதை சரியாக செய்வதற்கு மன்னாரில் பல அமைப்புக்கள் அப்போ அப்போ தோன்றி அதே வேகத்தில் மறைந்து போவது கவலையளிக்கின்ற ஒரு விடயம். பல பல கலை மன்றங்கள், கலை சார் அமைப்புக்கள் இருந்தும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எப்பவுமே எமக்கு கேள்விக்குறிகள் தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இதை நான் எழுந்தமானமாக பேசவில்லை என்பது எனது எழுத்தின் மேல் சத்தியம். என்னைபொறுத்தவரை அவர்கள் தங்கள் குறுகிய வட்டத்திட்குள்ளும் சொந்த தீர்மானங்களுக்குள்ளும் மட்டுமே தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்களை நிர்வகித்துச் செல்கிறார்கள். அதைவிட இன்னுமொரு கவலை அளிக்கும் விடயம், திறமையான, இளம் நடத்துனர்களை இந்த அமைப்புக்கள் கண்டுகொள்வதே இல்லை. அதேபோல இளம் சமுதாயத்தை வளர்ப்பதாகவோ அவர்களிடம் இந்த பாரிய பொறுப்புக்களை கையளிப்பதாகவோ தெரியவில்லை. என்னைபொறுத்தவரையில் இளம் சமூகத்தை நமது மாவட்டத்தில் அதிகம் புறம் தள்ளியே வைத்திருக்கிறது நமது சமூகம். காரணம் நிச்சயமாக அவர்கள் திறமைசாலிகள் அல்ல என்பதல்ல. அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் கொடுக்கபடுவது இல்லை என்பதுதான்.

கலை சார்ந்த, கலைப்பணிக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் இலாப நோக்கமோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பணிகளை எடுத்துச்செல்லும் பாரம்பரியம் கலை மேற்பரப்பிற்கு ஒவ்வாதவை. மன்னாரில் எத்தனையோ கலை, இலக்கியவாதிகள் இருக்கின்ற சூழலில் கலைவாதிகள் என்று தாங்களாகவே தங்களை சாயம் பூசிக் காட்டிக்கொள்ளும் ஒரு சிலரை மட்டும் நம்பி இவ்வமைப்புக்கள் செயல்படுவது கவலையளிக்கிறது. மன்னாரின் அதிகமான மூத்த, இளம் படைப்பாளிகளை கண்டும் காணாமல் கலைப்பணி செய்யும் மன்றங்கள் அமைப்புக்கள் மன்னாரிற்கு எதற்காக என்பதுதான் எனது கேள்வி. இந்த கேள்வியில் யதார்த்தம் தவறி இருந்தால் சொல்லுங்கள். மன்னித்துக்கொள்ளுங்கள். கலையை மட்டும் வளர்ப்பது கலை சார் அமைப்புக்களின் நோக்கங்கள் அல்ல (mission & vision). மாறாக படைப்பாளிகளையும் சேர்த்து வளர்ப்பதுதான் சிறந்த நோக்கங்களாக அமையும். படைப்பாளிகளை வளர்க்க மறந்து கலைகளை மட்டும் வளர்க்க முயற்சிக்கும் இந்த அமைப்புக்களின் இலட்சியம் (aim or goal) கேலியானதே.

மன்னாரிலுள்ள சகல கலை சார்ந்த அமைப்புக்களிலும் தனிமயமாக்கல் (personalization) இருக்கத்தான் செய்கிறது. என்னதான் இதற்கு காரணம்? தனிப்பட்ட போட்டியா? அல்லது புகழும் பெயரும் தங்களுக்கு மட்டும் வரவேண்டும் (Ironic Praise)என்கின்ற அடிப்படைவாதமா (fundermentalism)? நான் எந்த தலைமையையும் குறை கூறவில்லை, மாறாக மன்னாரில் எந்தவொரு கலை இலக்கிய மன்றங்கள் அமைப்புக்களும் தனிமயமாக்கல் (personlaization), அடிப்படை வாதக்கொள்கைகள் (ethics of fundermentalism), குறுகிய சிந்தனை வட்டம் (Individualization of desires), தனிப்பட்ட இலாபநோக்கம் (individual corruption oriented) போன்ற விடயங்களை சற்றே ஒதுக்கிவைத்தல் எமது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் ஒரு புண்ணியம் என்றுதான் சொல்கிறேன். இதை எந்தவொரு சமூக பற்றாளர்களும் எதிர்ப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அறிந்தவரைக்கும் (நான் மன்னாரின் அதிகமான கலை சார் அமைப்புக்களில் இருந்திருக்கின்றேன் அல்லது அறிந்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன்;), அதிகமான கலை இலக்கிய படைப்பாளிகள், வளர்ந்துவரும் பல்துறை படைப்பாளிகளின் அங்கத்துவம் மனவிரக்தியால் இவ்வாறான அமைப்புகளை விட்டு விலக காரணமாக அமைந்திருக்கிறது. பல கலை சார் அமைப்புக்கள் மன்னாரின் பல அனுபவமிக்க மூத்த மற்றும் இளைய படைப்பிலக்கியவாதிகளை புறம் தள்ளி வைத்திருப்பது மிகுந்த மனவேதனை தரும் ஒரு விடயம் ஆகும்.

எனவே, அதிகம் சொல்வதற்கு நான் உங்களைபோல அறிவாளியோ அனுபவசாலியோ அல்ல. மாறாக எனது கருத்துக்கள் எனக்கு யதார்த்தத்தை சொல்லிநிற்கிறது. நான் சொன்னவற்றை எதிர்மாறாக விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள், எமது மாவட்டம், எமது மண், எமது கலை, எமது பாரம்பரியம். இவற்றிற்காக உங்களால் முடிந்த நன்மைகளை மட்டும் செய்யுங்கள். காரணம் நமது மண் அதிகம் அதிகம் வலிகொள்வது நாமே நமது சமூகத்திற்கு செய்யும் துரோகங்களால்தான்.

இறுதியாக, தற்பொழுது உருவாகியிருக்கும் மன்னார் எழுத்தாளர் பேரவை எமக்கு நல்லதொரு நம்பிக்கையை தந்திருக்கிறது. மன்னாரின் பிரபல்யம் மிக்க பல மூத்த அனுபவமிக்க படைப்பிலக்கியவாதிகளை ஒன்றுதிரடி சிறப்பாக கொண்டுசெல்லும் மன்னார் அமுதனின் தலைமைக்கு பாராட்டுக்கள். அதேபோல மன்னார் தமிழ் சங்கம் என்கின்ற அமைப்பையும் தொடர்ந்து தமிழ் நேசன் அடிகளாரின் தலைமை, பகைமைகளை கடந்து சிறப்பாக கொண்டுசெல்லும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

அனுபவித்தவற்றையும், புலன் தந்த அனுபவத்தையும் (பார்த்தல் கேட்டல் வைத்துக்கொண்டு இந்த பதிவை இட்டிருக்கிறேன். நல்ல விடயத்தைத்தான் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். உரியவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சமூகம் மேல் அக்கறை கொண்டோர் இதை வாழ்த்துங்கள்.

அன்புடன் அமல்ராஜ்.பி

இந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...

அன்னையர் தின பதிவு

அன்னையர் தினம்.. காலம் காலாமாய் அன்னையர்களை நினைவுகூரும் இந்த அன்னையர் தினத்தில் நாம் அனைவரும் நமது அன்னையர்களை அன்போடு நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். நல்ல விடயம். காலங்கள் கடந்து போக போக மனித வாழ்வியல் முறைமைகளும் மாற்றங்களை எதிர்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது. அதுவும் நூற்றாண்டுகளை கடந்து இன்று புதிய நூற்றாண்டில் வாழும் நமக்கு பல புதிய புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களும் எமது வாழ்வை ஒரு கை பார்க்கத்தான் செய்கின்றன. காலத்திற்கு ஏற்றாற்போல் வாழப்பளகிறவன் வாழ்கையை வெற்றி கொள்கிறான். முடியாதவன் வாழ்கையில் தோற்றுப்போகிறான். விடயத்துக்கு வருகிறேன்.
கடந்த வாரம் எனது வழமையான நிகழ்ச்சி நிரலின்படி ஒரு முதியோர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தது எனது நண்பருடன். ஒரு சிறு அனுபவம் என் நெஞ்சை உருக்கியது. அதை அன்னையர் தினத்தை கோடிட்டு உங்களுக்கும் சொல்வதில் அதிகம் பிரியம். பல அன்னையர்களை அங்கு சந்தித்தேன். அதில் என்னை மிகவும் நெகிழ வைத்தவள் ஒரு தாய். இவர் வடக்கை சேர்ந்தவள். கணவன் இறந்து எட்டு வருடங்கள். மூன்று ஆண் பிள்ளைகள். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருவர் இலங்கையில் இருப்பதாக அந்த தாய் கூறுகிறார். அனால் அவர் இப்பொழுது எங்கு இருக்கின்றார் என்பது தெரியாது.

இவரும் இவர் கணவரும் முதியோர் இல்லத்திற்கு வந்து இன்று 9 வருடங்கள் முடிகிறது. இவர் கணவர் இறுதிச்சடங்கை கூட இந்த முதியோர் இல்லமும் சக முதியோர்களும் தான் செய்து முடித்தார்கள். பிள்ளைகள் இவர்களை மறந்துபோனார்கள் ஆனால் இன்னும் அவர்கள் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்கிறார் இந்த தாய். இவரது பிள்ளைகள் மீதான அக்கறை தியாகம் கரிசனை சகலதும் இப்பொழுது வீணாய் போய்விட்டதாய் புலம்புகிறாள். கூலி வேலைக்கு போய் தான் சாப்பிடாமல் தனது பிள்ளைகளுக்கு இறைச்சிக் கொத்து ரொட்டி வாங்கிக்கொடுத்ததையும் அவர்கள் அந்த அம்மா இப்பொழுது உயிரோடு இருக்கின்றாளா என்று கூட கவலை படமால் தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதையும் நினைத்து அழுதுகொண்டாள். பிள்ளைகளை பெற்றபொழுது அவள் கொண்ட வலிகளுக்கும், அவர்களை ஆளாக்குவதில் அவள் பட்ட துன்பங்களுக்கும் பயன் இல்லாமல் போய்விட்டதாய் புலம்புகிறாள். "இவர்களை பெறாமல் நான் மலடியாய் இருந்திருக்கலாம் தம்பி." என்னை அதிகம் யோசிக்கவைத்த அவரின் கடைசி வரிகள் இவை.

அன்னையை பற்றி எவ்வளவோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம் எமது சிறு வயது முதல். ஏன் அதை அனுபவித்தும் இருக்கிறோம். அப்படியிருந்தும் இன்னும் சிலருக்கு இந்த அன்னையின் தாற்பரியம் ஏன் புரியாமல் இருக்கிறது? தாயை கண்டுகொள்ளாத பிள்ளைகள் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாக தந்தையாக இருக்க முடிகிறது? தாயை மறந்து கடவுளுக்கு விரதமிருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்? தாயை மதிக்காமல் கோவிலுக்கு போகும் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? இதெல்லாம் சொல்லிகொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா?? தாயை மதிக்காதவனின் சாபக்கேடு அவன் தலையிலேயே குடிகொண்டு விடுகிறது. எங்கு போனாலும் அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தேயாகவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் வருடத்தில் ஒருமுறை இந்த அன்னையர் தினத்திலாவது தங்கள் அன்னையைப் பற்றி ஜோசிக்கவேண்டாமா?. இம்முறை அன்னையர் தினத்தில் எனது வேண்டுதல்கள் எல்லாம் எனது அன்னைக்காக அல்ல. இப்படிப்பட்ட மிருகத்தனமுள்ள மனிதர்களுக்காகதான். இவர்கள் கொஞ்சமாவது மாறி தங்கள் பெற்றோர்களை கண்டுகொள்ள கடவுள் இவர்களுக்கு ஆசீர் வழங்கட்டும். நமது அன்னையர் நலமாக இருக்கிறார்கள். நிறைய அன்னையர் நலம் கெட்டு எவராலும் கவனித்துக்கொள்ளப் படாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம். அப்பொழுது நமது அன்னையர் இன்னும் சுகம் பெறுவர்.

கடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வாழ்க்கை பற்றிய கனவுகள் அதிகம் இருப்பதுண்டு. இது மனவியல் சார்ந்த ஒரு இயல்பு என்று கூட சொல்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த கனவுகள் குடும்ப வாழ்கையில் அதிகமான இன்ப துன்ப நிலைமைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பெண்களின் சில கனவுகள் யதார்த்தமானவை. குடும்பத்திற்கு சந்தோசத்தை கொடுக்கக்கூடியன. இன்னும் சில கனவுகள் கொஞ்சம் யதார்த்தமானவை. இவ்வாறான கனவுகள், கணவன் மனைவி இவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் சந்தோசமும் தற்செயலாக துன்பமும் வெளிப்படுகின்றன. மூன்றாவது வகை முழுமையாக யதார்த்தத்திற்கு முரணான கனவுகள். சிலவேளைகளில் இவை முரட்டுத்தனமான கனவுகளாக கூட இருந்து விடுகின்றன. இவ்வாறான கனவுகள் தான் குடும்ப சந்தோசத்தில் அதிகமாக கும்மியடிக்கின்றன.
நம்ம ஆண்கள் இருக்காங்களே, சில நேரங்களில ரொம்ப சமத்தா இருந்திடுறாங்க. பல நேரங்களில சொதப்பிடுறாங்க. என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுறார், ஆம்பிளைங்க பொம்பிளைங்கள சரியா புரிஞ்சுகொண்டாலே எல்லாம் சரியாகிடும் எண்டு. எங்க புரிஞ்சுகொள்றது?? நாம ஒண்ணு நினைச்சா அவங்க வேறொண்டு சொல்றாங்க என்கிறார் பக்கத்தில இருந்த புது மாப்பிள்ளை நண்பர். சரி, என்னதான் நடக்குது இந்த கனவுகள் ஆசைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்தும்பொளுதும் எண்டு ஜோசிக்கிற போது எனக்கு தோணிச்சு என்கிட்ட இருக்கிற "The true love" என்கிற புத்தகத்தை ஒருக்கா எடுத்து புரட்டி பார்ப்போமா எண்டு. அதையும் வாசிச்சு பார்த்ததில சில வசனங்கள் என் கண்ணா துறந்திச்சு பாருங்க..

கனவு என்பது ஆசைகளின் வெளிப்பாடு என்ற ஓசோட கருத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பல ஆசைகள் நிறைவேறாமல் போகிற போது அல்லது நிறைவேற காலம் எடுக்கிற போது கனவு உருவாகிறது. ஆக ஆசைக்கும் கனவுக்கும் இலட்சியம் ஒன்றுதான். பெண்களுக்கு அதிகம் பிடிச்ச விடயங்கள் தன் கணவனிடத்தில் அல்லது காதலனிடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது பெண்கள் தங்களை கவர்ந்த விடயங்கள் தங்கள் ஆணிடம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது சாத்தியம் என்றால் எதிர்பார்ப்பு வளர ஆரம்பிச்சுவிடுகிறது. பெண்களின் இந்த ஆசை, பின்னர் கனவு, இறுதியில் எதிர்பார்ப்பு இந்த மூன்றுமே அநேக ஆண்களுக்கு ஆப்பாகதத்தான் அமைந்துவிடுகிறது. ஒரு விடயம் தங்களுக்கு சந்தோசத்தை தரும் என்று பெண்கள் நினைத்துவிட்டால் அதை கணவனிடத்தில் எதிர்பார்ப்பது யதார்த்தமானது. ஆனால், அது அந்த ஆணினால் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்த முடியும் என்பதை சிந்திக்க அதிகமான பெண்கள் மறந்துவிடுகிறார்கள். எதற்கும் மண்டையை ஆட்டும் ஜாதி இந்த ஆண் காதல் ஜாதி. (கொஞ்சம் ஓவரா இருக்கோ..) கொஞ்சம் கூட ஜோசிக்காமல் நம்ம ஆண்களும் "ஆமா செய்றன், உனக்கு இல்லாததா" எண்டு அறிக்கை விட்டுடுவினம். பின்னர் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் பொழுது கோட்டை விட்டுடுவினம். இங்கதான் நம்ம பொண்ணுங்க ரொம்ப உசார். "சொன்னால் செய்யனும்" என்ற வரிகளை அனல் பறக்க, மூச்சுத்தெறிக்க உச்சரிப்பினம். அவர்கள் கடுப்பிலும் நியாயம் இருக்குத்தானே பாருங்கோ. ரஜினி மாதிரி செய்றதைத்தான் சொல்லுவன், சொல்லுறததான் செய்வன் எண்டு பஞ்சு டயலாக் பேசுறது நடைமுறை வாழ்க்கைக்கு சரிவருமுங்களா? ஆண்களும் கொஞ்சம் ஜோசிக்கணுமுங்க.. பெண்கள் மிருதுவானவர்கள் தானே.. (பாராட்டுக்கு நன்றி..)

ஒன்று செய்ய முடிஞ்சால் செய்யணும். இல்லையெண்டால் பெண்ணின் கனவு ஆசையாகும் போதே முடியாது எண்டு சொல்லிடனும். (ஆமா முடியாது எண்ணு சொல்லிடாமட்டும் விடவா போறாளுகள்.. எண்டு ஆண்கள் முணுமுணுக்கிறது புரியுது சார்...) இவ்வாறான நேர் பேச்சு அல்லது straight forward reaction குடும்பத்தில அல்லது காதலர்களுக்கு மத்தியில அதிகமான ஏமாற்றங்களையும் நீண்ட கால விரிசல்களையும் தடுக்கும் என்கிறது அந்த புத்தகம். உண்மைதானே?? ஆசை என்பது சிலவேளைகளில் கற்பனை மட்டும் கலந்த ஒரு தேடலாக கூட இருக்கலாம் இல்லையா. இவ்வாறான ஆசைகள் நிச்சயமாக பிணக்குகளைதான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இந்த ஆசைகள் மட்டில் பெண்கள் மிக கவனமாக இருத்தல் அவசியம். தேவையானவற்றுக்கு மட்டும் எதிர்பார்ப்புக்களை வளர்த்தல் ஆண்களை கொஞ்சம் நின்மதியாக மூச்சுவிட அனுமதிக்கும். ஆண்களும் பெண்கள் குறைந்த பட்சம் ஆசைப்படும் சிறு சிறு விடயங்களில் நம்பிக்கை தன்மையை வளர்த்தல் உறவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதிகமான ஆசைகளை தங்கள் கணவனிடத்திலோ அல்லது காதலனிடத்திலோ திணிப்பது உறவு ஆரோக்கியமின்மையை தோற்றுவிக்கும் முதல் காரணி. அதையும் தாண்டி நம்மல்ல சில விறைச்ச அண்ணன்மார் இருக்கத்தான் செய்யுறாங்க. பொம்பிளைங்க எத ஜோசித்தாலும் அசைபட்டாலும் கடைசிவரை இவங்க கண்டே பிடிச்சுக்க மாட்டாங்க. சுத்த வேஸ்டுங்க. முக்கியமான விஷயம், தாங்கள் நினைப்பதை ஆண்கள் சரியாக புருஞ்சுகணும் எண்டு பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பாங்க. சிலநேரம் நாம சாத்திர காரனாவும் இருக்கோணுமுங்க. இது உண்மையான விடயம்.

சரி அத விடுங்க. எண்ட நண்பர் ஒருத்தர் கேக்கிறார், பொண்ணுங்க எத ஆக குறைஞ்ச பட்சம் எதிர்பாகிறாங்க நம்மட்ட?? இது நாம் இருக்கிற நிலையை பொறுத்தது. அடிப்படையில் அவர்களுடன் கணவனோ காதலனோ அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுடன் உணர்வு பூர்வமாக நடந்துகொண்டாலே அவர்களின் அரைவாசி எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற போதுமானதாக முடியும்.. என்னங்க நான் சொல்லுறது சரிதானே.. எதாச்சும் சொல்லுங்களேன்.. இரண்டாவது பெண்கள் அதிகம் தங்கள் துணையுடன் பேசவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மனம் விட்டு பேசுறீங்களோ இல்லையோ வாய் விட்டு பேசினாலே அரைவாசி பிரச்சனை முடிஞ்சுடும்க. ஒண்ணு தெரியுமா, பெண்கள் ரொம்ப கூர்மையானவர்கள் (and sensitive). ஆண்கள் பொய் பேசும் பொழுது அவர்கள் 80% புரிந்துகொள்கிறார்கள் ஐயா டூப்புதான் விடுறார் எண்டு. இதை ஒரு ஆராச்சியும் சொல்லியிருக்குங்க. ஆண்கள் சொல்லும் பொய்களை பெண்கள் இலகுவாக கண்டுகொள்கிறார்கள் என்று. இதுதான் நம்மள்ள அதிகம் பேர் அவங்கட்ட பொய் சொல்லி முடியிரதுக்குள்ளவே மாட்டிக்கிறது.. பெண்களுக்கு தங்கள் ஆண்கள் நேர்மையாக இருக்க வேண்டும் அத்தோடு சகல விடயங்களையும் (100%) வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை கொண்டவர்கள். ஆக இந்த சிறிய அடிப்படை விசயங்களில ஆண்கள் சரியாக இருந்தாலே போதும், அவங்க அவங்க பெண்களின் கனவையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயமாக வெற்றிகொள்ளலாம்.

கவிஞர் அஷ்ரப் ஐயா சொல்லுவதபோல, வாசிசுபோட்டு சும்மா போகாதேங்கோ, ஒரு கருத்தையாவது பதிவு செய்திட்டு போங்க...

இன்னுமொரு தலைப்போடு தொடர்வேன் சீக்கிரத்தில்.

ஒரு அபலையின் டைரி - பாகம் 02

ராஜன் அண்ணே, ராஜன் அண்ணே எண்டு ரெண்டு பேரு இல்லேங்க ஒராள்தான், அவர எனக்கு கொஞ்சநாளா தெரியுமுங்க. எப்பிடி எண்டு கேக்கிறது புரியுது. சொல்றன். அவர் ஒரு ஆட்டோ ஒட்டுறவருங்க. நான் பள்ளிக்கூடம் போற வளிலதான் நிப்பாரு.

அப்ப நான் உயர்தரம் படிச்சுக்கொண்டிருந்தன் எண்டு நினைக்கிறன். போறப்ப வாரப்ப நானும் ஒரு வஞ்சகம் இல்லாம சிரிப்பேனுங்க அவரும் ஒரு மார்க்கமா சிரிப்பாருங்க. என்னங்க ஒரு சிரிப்புக்குப் போய் கஞ்சல் பட ஏலுமாங்க. போயிட்டு போகட்டும் எண்ணு சிரிச்சிடுவன்.

ஒரு நாள் பயங்கர மழை. அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரேக்க. எண்ட குடைய எடுத்து விரிச்சன். மழைக்கு குடை விரிச்சும் நனைஞ்சுகொண்டே போற ஜாதிதானேங்க வறுமை ஜாதி. எண்ட குடைய இந்த கறையானுங்க எப்பிடி வளைச்சு வளைச்சு சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?. மத்தவன் சொத்தில ஆட்டைய போடுற பழக்கம் மனிதர்களுக்கு மட்டுமில்லேங்க இந்த கறையானுகளுக்கும் இருக்குங்க. என்னில பாதி நனைஞ்சும் பாதி நனையாமலும் குடைக்கு வெளிலையும் மழை எண்ட குடைக்குள்ளையும் மழை. என்ன பண்றது. எங்கட கஷ்டம் ஊருக்கே தெரியும் இந்த மழைக்கு தெரிஞ்சா என்னங்க.

அதே இடத்தில வழமைபோலவே அந்த ராஜன் அண்ணா நிண்டாரு. மழை அதிகமா இருந்த படியால எனக்கு உதவிறதாய் என்ன அவர்ட ஆட்டோக்குள்ள கூப்பிட்டாருங்க. நானும் மழைதானே எண்ணு போயிட்டன். மழைக்கு ஒதுங்கிறதுக்கு மனை என்னங்க பனை என்னங்க. இரண்டு பக்கமும் கறுப்பு துணியால மூடப்பட்டிருக்கும் ஆட்டோ. முன்னைய சீட்டில திரும்பியபடி அவர் பின்னைய சீட்டில நடுங்கியபடி நான்.

அவருடைய ஆரம்பம் எல்லாம் நன்றாகதானுங்க இருந்திச்சு. போக போக நாக்கு களைப்படைய வார்த்தைகள் இறட ஆரம்பிச்சிரிச்சு. 'நான் ரொம்ப அழகாம்.' யாரு கேட்டா? 'தன்ட மனுசியவிட என்னை தனக்கு பிடிக்குமாம்'. அடப்பாவி.. உன்ன நம்பி வந்த அவள செருப்பால அடிக்கணும். 'எண்ட உடம்பெல்லாம் மழையில நனைஞ்சு ரொம்ப ஈரமா இருக்காம்'. ஏனுங்க இதைதான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுவுது எண்டு சொல்றதா?.. 'எண்ட பிகரு ரொம்ப அழகாம்..' நான் எறும்ப மாரி இருக்கன் அவன் எரும மாரி இருக்கான், எண்ட பிகர அவன் வரிணிக்கிறான் பாருங்க. இதைக்காட்டிலும் அவர்ட வார்த்தைகள் அந்த டபிள் மீனிங் எண்டு சொல்லுவாங்களே அப்பிடி போக தொடங்கிடிச்சுங்க.

அப்பிடி கதைச்சுக் கொண்டு இருக்கும்போதே திடிரெண்டு கைய பிடிச்சிட்டாரு பாருங்க. அண்டைக்குதானுங்க எண்ட துலங்கல்கள் எல்லாம் அவ்வளவு வேகமா செயற்பட பார்த்தன். அவனது கன்னம் சிகந்து முகத்தை தொங்கவிடும் போதுதான் அம்மா சொல்லித்தந்த ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "வயசுக்கு மூத்த யாருக்கும் கை நீட்டக்கூடாது". என்ன பண்றது. ஒரு பொண்ணுக்கு ஒழுக்கத்த விட அவ கற்பு முக்கியம்தானேங்க.

வீட்ட வந்து அம்மாட்ட சொன்னபோது அம்மா சிரித்தாங்க. எனக்கு வந்துதுபாருங்க ஒரு கோவம். அதுக்கு அம்மா சொன்னா, "எண்ட பெட்ட குட்டிகள் எண்டாலும் சிங்கக் குட்டிகள்.." அன்னைக்கு மனசுக்குள்ள ஒன்னு பதிஞ்சுதுங்க, அம்மா என்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா எண்டு. இப்படி அந்த காலத்த என்னால மறக்க ஏலாதுங்க. சகோதரிகள் நாங்க எல்லாரும் வேகமா வளருறம் எண்டு எங்கட அம்மா அடிக்கடி சொல்லுவா.

சகோதரங்கள் எண்டு சொல்லேக்க எங்கட சின்னக்கா ஒருக்கா ரோட்டில ஒருத்தனோட சண்டைபோட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. சின்னக்காவும் நானும் கிட்டத்தட்ட ஒரே அளவுங்க அப்ப. அது எங்களுக்கு மிக மிக உதவியா இருந்திச்சு. ஏன் தெரியுமாங்க. ஒரே சட்டைய மாறி மாறி ரெண்டு பெரும் போட்டுக்கலாம். செலவு குறைவு. ஒரே செருப்ப மாதி மாதி போட்டுக்கலாம். இந்த உள்வீட்டு விவகாரம் ரோட்டில நிக்கிற ஒருத்தனுக்கு எப்பிடியோ தெரிஞ்சிட்டுங்க. நாங்க என்ன ஆசையிலையா அப்பிடி மாதி மாதி போட்டுக்கிரம்? ஒருநாள் நாங்க எல்லாரும் கோயிலுக்கு போகேக்க மூணு பொடியள் ரோடு ஓரம் நின்னுக்கிட்டு நாங்க அவங்கள நெருங்க ஒண்ணு சொன்னாங்க பாருங்க. " மச்சான் எண்ட டி சேட்டும் பிரீயாதான் இருக்கு மாதி மாதி போட்டு கொள்ளுவமா??"

பாருங்க நாங்க படுற கஷ்டம் இந்த பொடியளுக்கு பகிடியா கிடக்கு. அத கேட்ட சின்னக்கா அவங்களோட தர்க்கமிட நாங்க எல்லாம் அவர்களுக்கு மன்னிப்பு கூறி அவளை வீட்டிற்கு அழைத்துவந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கஷ்டத்தின் சில அனுபவங்களை சொல்லும் போது உங்களால் விளங்கிக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். அனுபவித்தால்தான் அது தெரியுமுங்க.

இப்படியெல்லாம் கடந்த எங்கள் காலங்கள் முதல் முறையாக ஒரு முதல் அனுபவத்திற்கு எங்கள கூட்டிச்சென்றதுங்க. எங்கட மூத்த அக்காக்கு அந்த வருடம் முப்பத்து மூன்று வயசு ஆரம்பிச்சதுங்க. அண்ணையில இருந்து எங்கட அக்காக்கு எங்கட ஊர்ல ரெண்டு பெயருங்க. ஒண்ணு கனவுக்கன்னி (ஆண்கள் மத்தியில) ரெண்டாவது முதிர்கன்னி. அவளுக்கு அப்பவே உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டதாய் தான் சொல்லுவாங்க. பாவம். அவட நண்பிகள் எல்லாம் திருமணமாகி குழந்தை குட்டிகளோட இருக்கேக்க இவள் மட்டும் அதே நான்கு சுவர்களுக்குள்ள ஒட்டறை போல. அன்றாடம் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கிற எங்களுக்கு சீதனம் கொடுத்து கலியாணம் செய்யவாங்க முடியும். வீட்டு மானத்தையே அப்ப எல்லாம் காப்பாத்துறது சின்னக்காட ஒத்தை வருமானம்தானுங்க. அமா. அவ ஒரு நிறுவனத்தில வேலைக்கு போனவ.

எங்கட பெரியக்காவப் பத்தி நான் ஜோசிக்கும் போதெல்லாம் எண்ட ஞாபகத்தில டக்கெண்டு வந்துபோறது எங்கட ஊரில இருந்த கனகசபாபதி மாமாதானுங்க. காரணமும் இருக்கு. எங்கட பெரிய அக்காவ பாத்து இவர் ஒண்ணு சொன்னது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. "வசதியும் இல்ல வயசும் போயிட்டு, இனியும் கரை சேருறது எண்டால் கஷ்டம்தான்..." இந்த மனுஷன் ஊருக்குள்ள ஒரு பெரிய ஆளுங்க. கதைகள பாத்திங்களா. எப்பிடிங்க இப்பிடி மற்றவங்கட மனச புரிஞ்சு கொள்ளாம நோகடிக்கிறாங்க. இதை இன்னைக்கு வரைக்கும் நான் பெரிய அக்காட சொன்னதில்லேங்க. சொன்னா எவ்வளவு கஷ்டப்படுவா தெரியும் தானேங்க? ஏன் இந்த மனுசர் எல்லாம் பெண்கள இப்படி துன்புறுத்துறாங்க. நம்மட சமூகம் ஏனோ பெண்களை கூர்ந்து கவனிப்பதில் இத்தனை அதிகம் ஆர்வம் கொண்டிருக்குங்க.

நிறைய பேர் வந்தாங்க. வசதிய கேட்டிடு போய்டாங்க. இன்னும் சில பேர் வந்தாங்க அக்காவ பாத்தாங்க கூடவே ரெண்டு தங்கசிகளையும் பாத்தாங்க, அப்பா வேற இல்ல, போய்டாங்க. இன்னும் சிலர் வந்தாங்க வயச கேட்டாங்க, கூட எண்டு போய்டாங்க. இப்படியே அக்கா வெறும் காட்சிப் பொருளாக இருந்தாவே தவிர விலை போகலைங்க. கஷ்டத்துக்கு முன்னுக்கு நிர்வாணமா நிண்ட அவட உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமா சாக தொடங்கிச்சு. அப்பதானுங்க கடவுளுக்கும் இவ மேல ஒரு இரக்கம் வந்திச்சு.

ஒருநாள் நாங்க கோவிலுக்கு போய் இருந்தப்ப எங்கள ஒரு ஆம்பிள நீண்ட நேரமா பார்த்துக்கொண்டு இருந்தாருங்க. ஒரு வாரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து அம்மாட்ட பேசினாருங்க. தனக்கு அக்காவ பிடிச்சிருப்பதாகவும் அவவ திருமண செய்துகொள்ள விரும்பிறதாவும். அவர் எதிர்பார்ப்பு எல்லாம் அக்கா மட்டும்தான் என்பதை தெளிவாக புரிஞ்சுகொண்டபிறகுதானுங்க அம்மாக்கு பேச்சே வந்தது. இந்த மாப்பிள்ளையும் செம்பு (அதுதான் சீதனமுங்க) கேட்டா நாங்க எங்க போறது? அம்மாட வார்த்தை இல்லாத சந்தேகத்துக்கு அவர் சிம்பிளா ஒரு பதில் சொன்னாருங்க. "எனக்கு தேவை உங்கட மகள் மட்டும்தான். அவள கண் கலங்காம வச்சிருக்க என்னட்ட வசதி இருக்கு, மனசிலயும் இருக்கு கையிலயும் இருக்கு. நம்பினால் குடுங்கள் நம்பாவிட்டாலும் குடுங்கள் நம்ப வைத்துவிடுறன்.." அவர்ட டீலிங் அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருந்திசுங்க. எல்லாத்தையும் நேரையா, தெளிவா, விவேகமா பேசிற தன்மை அம்மாவையும் சம்மதிக்க வச்சு அக்காவையும் காதலுக்குள் நகர்திடிச்சு.

இப்படிப்பட்ட ஆண்கள் ஊருக்குள்ள மிகக் குறைவுங்க. பிறகென்ன அவட திசை ஒருவாறு வெளிக்க ஆரம்பிச்சது. அவட முகத்தில மின்மினிகள் கூடியிருந்து கும்மியடித்தன. அந்த வீட்டாக்களும் நாங்களும் கதைச்சு பேசி கலியாணத்த ஒருவாறு நல்லபடியா நடத்தி முடிச்சமுங்க. எங்கட கஷ்டத்த சரியாய் புரிஞ்சுகொண்ட அவங்க எல்லா செலவையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க. அதுக்காக நாங்க அப்படியே விட ஏலாது தானேங்க. அம்மா வழமைபோலவே குமார் மாமாட்ட வட்டிக்கு கொஞ்சம் காசு வாங்கி எங்களுக்கு புது சட்டை மற்றும் கலியாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிச்சாங்க.

அன்று அக்காட கலியாண நாள், மேடையில கனவுகளோட அக்கா, வட்டி குமாரை ஜோசித்தவாறே அம்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு கழுத்திலும் கைகளிலும் இமிடேஷன் நகை அணிந்த சந்தோசத்தில் நான்...

தொடரும்............

ஒரு அபலையின் டைரி - பாகம் 01

வணக்கமுங்க. என்னை தெரிகிறதா என்று கேட்பதற்கு நான் ஒன்றும் பட்டத்து ராணியல்ல. வீட்டின் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண ரமணி. நானும் எண்ட கதைகளும் முழுக்க முழுக்க கற்பனை எண்டாலும் இந்த சமூகத்தில நடக்கிற சீர்கேடுகள ஓரளவேனும் சொல்லகூடிய கதாபாத்திரம். அதுக்காக என்னப்போல பெண்கள் இந்த நாட்டில அதுவும் நம்மட தமிழ் பிரதேசங்களில இல்லை எண்டு சொல்ல வரலேங்க. நிச்சயமா இருப்பாங்க. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, குடும்பத்திலையே மிக சந்தோசமா இருக்கிறது பெண்கள் தான் எண்டு நீங்க எல்லாம் நெனைச்சுக்கொண்டு இருகிறீங்க. ஒருவகையில ஆமாங்க. நாங்க எல்லாம் குளத்தில இருக்கிற அழகான தாமரைய போன்றவங்க. குளத்துக்குள்ள என்னதான் பிரச்சனைகள் துன்பங்கள் வந்தாலும் அது வெளில தெரியாம நாங்கள் அழகிய அந்த தாமரை இல்லைகள் போல எங்கட முகத்த சந்தோசமா அழகா வச்சுக்கிண்டு எல்லாத்தையும் மறைச்சிடுவோமுங்க. எங்களுக்குள்ளயும் நிறைய வேதனைகள் வலிகள் இருக்குங்க. அதுகள என்னால முடிஞ்ச அளவு சொல்லுறதுதான் இந்த தொடர் பதிவின்ட நோக்கம்.

ஐந்து வயசில ஆடம்பரமா வாழ்ந்த வாழ்கையிண்ட பதிவுகள் இன்னும் எண்ட மனச் சுவர்ல அப்பிடியே ஆணி அறைந்சாப் போல இருக்குங்க. அம்மாக்கு ஐந்தும் பொம்பிள பிள்ளைங்க. அப்பாக்கு ஐந்து நேரம் மாத்திரைங்க. ஏதோ அது இது எண்டு, எக்கச்சக்க வருத்தமுங்க அவருக்கு பாவம். ரொம்ப வேதனைபட்டு வருத்தம் என்றதுக்கும் அப்பால எங்கட எதிர்காலத்த யோசிச்சு யோசிச்சே நேரத்துக்கு எங்கள விட்டு போய்ட்டாருங்க. அதால அம்மதானுங்க அப்பாட பாரத்தையும் சேத்து சுமந்து சுமந்து நாங்க வளர வளர அவ தேஞ்சு தேஞ்சு போய்டாங்க. அவக்கு நாங்க கஷ்டப்பட்ட காலத்தில இருந்தே உதவி செய்தவங்க ரெண்டு பெருதானுங்க. ஒண்ணு நம்பிக்கை, ரெண்டு மன உறுதி. எங்கள படிக்க வைக்க அவ துடிச்ச போதெல்லாம் கஷ்டம் பல்லு இழிச்சுதுங்க. நீங்க எல்லாம் போர்வையால போத்துகுவிங்க நாங்க எல்லாம் மற்றவங்கட கேலி பார்வையாலதான் போத்திக்கிட்டம். என்ன பண்றது ஒரு படத்தில அந்த விஜய் பயல் சொல்லுறதபோல வாழ்க்கை ஒரு வட்டம் என்றத நான் ரொம்பவே தெரிஞ்சுகிட்டன். ஆனா ஒண்ணுங்க, பெரியளவு காசு இல்லைங்க எங்கட்ட ஆனா மனசு இருந்திச்சு. வீட்டில வசதி இல்லைங்க ஆனா சந்தோசம் நிறைஞ்சு இருந்திச்சு. அம்மா எங்கட வயித்த நிரப்ப சோத்துக்கு கஷ்டப்பட்டாங்க ஆனா எப்பவுமே சிரிக்க கஷ்டப்படலேங்க.

அவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க ஒருமாரி வளந்தமுங்க. நாங்க வளர்றதுக்கு துணையா இருந்தது எண்டால் ஒண்ணு எங்கட அம்மா, இன்னொண்ணு கடனுக்கும் அரிசி தர சம்மதிக்கும் முன்வீட்டு பலசரக்கு கடை மாமா. அந்த மாமா மட்டும் இல்லாட்டி நானெல்லாம் செத்தே போயிருபனுங்க. பள்ளிக்கூடத்தில எப்பவுமே நான் பின் வரிலதானுங்க இருப்பன். ஏன் தெரியுமா? அப்பதானே வாத்தியாருக்கு நான் தேஞ்சுபோன செருப்போட வந்திருக்கிறது தெரியாது. சப்பாத்து போட சொல்லி அடி அடியெண்டு அடிப்பாங்க பள்ளிக்கூடத்தில. அடிக்க தெரிஞ்சவங்களுக்கு எங்கள சரியா படிக்க தெரியலைங்க. எங்களுக்கும் சப்பாத்து போட ஆசை இல்லையா என்ன? காசு வேணுமே. ஒரு சப்பாத்து வாங்கினா நாங்க ஒருமாசம் பட்டினியா இருகோணுமுங்க. இப்ப நீங்களே சொல்லுங்க எனக்கு சோறு வேணுமா சப்பாத்து வேணுமா? இதெல்லாம் எங்க அந்த வாத்திக்கு புரிஞ்சுது. வகுப்பில நான் சோத்தப் பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கேக்க அவங்க எல்லாரும் அவங்க அவங்கட சொத்தப்பற்றி கதைப்பாங்க. எனக்கு சிரிப்புதானுங்க வரும். ஒரு பிடி சோத்துக்கு படுற கஷ்டம், வீட்டு நாய்க்கு மட்டுமே பத்து பிடி சோறு வைக்கும் அவங்களுக்கு எல்லாம் எப்பிடிங்க விளங்கும்? ஒண்ணு தெரியுமா உங்களுக்கு இந்த 'fair & lovely' எண்டு மூஞ்சிக்கு பூசிக்கொள்ளுராங்களே அந்த பாணி, அத எனக்கு தொட்டுப்பார்க்க ரொம்ப ஆசைங்க அப்ப எல்லாம். எங்கட வகுப்பில படிக்கிறதுகள் பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டுவருவாங்க. பள்ளிக்கூடம் விட்டதும் அத பூசிக்கொண்டுதாங்க வீட்ட வெளிகிடுவாங்க. பள்ளிக்கூடம் முடிய மணி அடிச்சதும் நான் எண்ட செருப்ப தயார் படுத்திக்கொள்ளுவனுங்க. காரணம் அது கொஞ்சம் தேஞ்ச செருப்புங்க தப்பி தவறி போற வழில அறுந்திட்டா?? அசிங்கம்தானேங்க ரோட்ல. அவங்க அந்த பாணிய பூசிக்குவாங்க. ஒருக்கா எண்ட நண்பிக்கு தெரியாம எடுத்து பாப்பமா எண்டு தோனிச்சுதான் அப்புறம் அத செய்யலீங்க. அம்மாக்கு தெரிஞ்சா என்ன கொண்ணே போடுவா. அம்மா கஷ்டப்பட கத்துத் தந்தவ ஆசைப்பட கத்துத் தரலேங்க.

இப்பிடி எண்ட பள்ளிக்கூட வாழ்க்கைய மறக்க ஏலாதுங்க. அதுக்குள்ளே இந்த யுத்தம் வேற. நான் சந்தோசமா இருந்ததெல்லாம் எங்கட அந்த வீட்டுக்குள்ளதாங்க. வெளில இறங்கினா மற்றவங்கள பாக்க ரொம்ப பொறாமையா இருக்கும். பிறகென்ன நாம மட்டும் ஏன் இப்பிடி இருக்கம் எண்டு கவலை வந்திடும்.. செல் விழுற நேரம் எல்லாம் அது எண்ட தலையில விழாத எண்டு நிறைய தடவை ஜோசிச்சிருக்கனுங்க. கடவுள் காசு உள்ளவன் மேல எல்லாம் செல்ல போட்டு சாகடிக்கிறான். சாப்பாட்டுக்கே வழியில்லாத எங்கள எல்லாம் ஏனுங்க விட்டிவைக்கிறான் எண்டு எல்லாம் ஜோசிச்சு அழுதிருகிரனுங்க. என்ன பண்றது.. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விதமா வாழ்க்கைய கொடுத்திருக்காரு இந்த கடவுள். உண்மைய சொல்லுறேனுங்க கஷ்டப்பட்டு போய்டா நம்மட சமூகத்தில வாழுறது சரியான கஷ்டமுங்க. எங்கள எல்லாம் ரொம்ப அளவைகிறது எங்கட வறுமைகள் இல்லேங்க மற்றவங்கட வார்த்தைகள் தான். எப்பிடி எல்லாம் கதைப்பாங்க தெரியுமா உங்களுக்கு. அப்பப்பா.. நினைச்சு பாக்கவே பயங்கரமுங்க. அதிலையும் எங்கட கஷ்டத்த பயன்படுத்தி சில ஆம்பிள மிருகங்கள் எங்கட உடம்பிலையும் ஆசைபடுவாங்க. ஏனுங்க பொம்பிள எண்டா அவங்களுக்கு எல்லாம் உடல் சுகம் கொடுக்கிற ஒண்ணாதான் முதல் ஞாபகம் வருமா. என்ன எங்கட அம்மா கொஞ்சம் அழகா பெத்ததும் தப்புதானுங்க. எங்கட கஷ்டமும் வீட்டில எல்லாம் பொம்பிளைகள் எண்டதாலையும் எங்கட கஷ்டத்தில இருந்து எங்கள காப்பாத்திக் கொள்ளுறதவிட இப்படிப்பட்ட ஆண்களிடத்தில இருந்து எங்கட உடலையும் கற்பையும் காப்பாத்திக் கொள்ளுரதானுங்க மிகப்பெரிய சவாலாக இருந்திச்சு. கிண்டல் என்ற பேர்ல எங்கட உடம்பையும் கற்பையும் விமர்சிக்கிற இந்த ஒருசில கொடூர ஆண்கள என்னதான் செய்றதுங்க.

இப்பிடியான ஒரு கசப்பான அனுபவத்த சொல்லுறன் கேளுங்க... தொடரும்..

எது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை?

அண்மையில் எனது கைகளில் சிக்கியது பிரபல உளவியல் சார் ஆராட்சிகளுக்கும் உளவியல் நூல்களுக்கும் பெயர் போன கிளான் ஒ கப்பார்ட் எழுதிய "With the eyes of the mind " என்கின்ற ஒரு அழகிய ஆங்கில உளவியல் நூல். சுவாரஷ்யம் நிறைந்த தகவல்கள் மூளையை கசக்கி பிழிந்து என் சிந்தனையை தூண்டின. அவற்றிலிருந்து ஆங்காங்கே பொறுக்கி எடுத்ததில் கிடைத்த சில விடயங்களை நண்பர்களுக்காக இங்கே தருகின்றேன். இவற்றுக்குள் அதிகமான கருத்துக்கள் இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டாலும் இன்னும் பல விடயங்கள் இதர உளவியல் நூல்கள் மற்றும் எனது "வேர்களும் பூக்கட்டும்" என்கின்ற உளவியல் நூலிலிருந்தும் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.

எது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை? இதை பற்றி அதிகம் பேச விளையவில்லை காரணம் இது ஒரு மிகப்பெரிய விடயம். எனக்குமா அதில் இன்னும் அனுபவம் இல்லை. இருந்தும் இதற்கு கணவனும் மனைவியும் குறைந்த பட்சம் என்ன என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மட்டும் எளிமையாக கூறலாம் என நினைக்கிறேன். பின்வரும் காரியங்கள் அழகிய சந்தோசமான நீண்ட திருமண வாழ்கையை அல்லது நிரந்தர காதல் வாழ்கையை கொடுக்கவல்லன.

ஒருபோதும் எதையும் அனுமானம் செய்யாதீர்கள்.
விமர்சனம் செய்வதைக்காட்டிலும் அதிகம் பாராட்டுங்கள்.
எப்பொழுதும் உங்கள் நண்பர்களிடத்தில் உங்கள் கணவன் மனைவியைப் பற்றி பேசும் பொழுது அவர்களுடைய ஆகக்குறைந்த 3 நல்ல விடயங்களையாவது கூறுங்கள்.
ஒரு வழமையான விடயத்தை இன்னும் பல முறைகளில் செய்யலாம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக ஒரு உருளைக்கிழங்கை வெட்டுவதற்கு ஒன்றிற்கு மேலான மாற்று வழிகள் உண்டு)
உங்கள் நேர அட்டவணையில் ஒவ்வொருநாளும் உங்கள் இருவருக்கும் என ஒரு நிரந்தரமான நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்.
உங்களில் ஒருவர் பேசும்போழுதோ அல்லது பொதுவாகவோ நீங்கள் பேசுவதை விட மற்றவருக்கு செவி மடுப்பதில் அதிகம் அக்கறை செலுத்துங்கள்.
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், திருமணம் என்பது சிலவேளைகளில் கட்டிலில் கிடக்கும் ரோஜா போன்று சுவாரஷ்யம் ஆனது. சிலவேளைகளில் முட்கள் போன்று குத்தக்கூடியது.
வீட்டிலுள்ள சகல விடயங்களிலும் நீங்கள் இருவரும் பங்கெடுத்துக்கொள்ளுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே சகல விடயங்களையும் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.
ஒருபோதும் கோவத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர்கள்.
எப்பொழுதும் விவாதத்திற்கு செல்லுமுன் உங்கள் வாதம் தேவையானதும் பெறுமதியானதும் பிரயோசனம் மிக்கதுமானதா என கவனித்துக்கொள்ளுங்கள்.
சிலவேளைகளில் மற்றவரின் ஏற்றுக்கொள்ளாமையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு போதும், எச்சந்தர்ப்பத்திலும் "D" இல் ஆரம்பிக்கும் சொல்லை மட்டும் உச்சரித்துவிடாதீர்கள். (Divorse )
பல வாக்குவாதங்களில் நீங்கள்தான் 'சரி' என்று வாதிட நினைக்கிறீர்களா அல்லது உங்கள் குடும்பம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?மற்றவருடைய அந்தரங்கங்களை மதியுங்கள்.
காதல் ஒரு சிறுபிள்ளை பராயத்தைப்போன்றது என்பதை மறந்துவிடாதீர்கள். அதை சரியாக பகிர்ந்துகொள்ள அதிகம் அதை படிக்கவேண்டி இருக்கும்.
ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு ஒருநேரமாவது (பெரும்பாலும் இரவில்) ஒன்றாக இருந்து உணவருந்துங்கள்.
"I LOVE YOU" என்னும் வார்த்தையை சொல்ல கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவற விடாதீர்கள்.
எப்பொழுதும் வெளியில் செல்லும்பொழுது (சந்தர்ப்பத்தைப் பொறுத்தது) உங்கள் கணவரின் மனைவியின் கைகளை பற்றிக்கொள்ள முயற்சியுங்கள்.
ஒவ்வொருநாளும் ஒருவரை ஒருவர் ஆகக்குறைந்தது ஒருமுறையாவது கட்டி அணைத்துக்கொள்ளவோ முத்தமிடவோ மறக்காதீர்கள்.
எதையும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட கிடைத்தது மிக நல்லம் என நம்புங்கள்.
எப்பொழுதும் வேகமாக "I am Sorry" என்ற வார்த்தையை சொல்ல முயற்சியுங்கள்.
எப்பொழுதும் நீங்கள் விரும்புபவரை தெரிவுசெய்யுங்கள் அல்லது தெரிவு செய்தவரை முழுமையாக விரும்புங்கள்.
காதல் என்பது எப்பொழுதுமே ஒரு உணர்வு மட்டும் அல்ல மாறாக அது உங்கள் வாழ்க்கை சம்மந்தமான ஒரு முடிவும் கூட. முடிவு எடுத்தபின் அதை அனுபவித்தே ஆகவேண்டும்.
சிறு சிறு ஊடல் விளையாட்டுகளிலும் சிறு சிறு கேலிச் சண்டைகளிலும் ஆர்வம் செலுத்துங்கள். கட்டில் ஊடல் சண்டைகளின் பொது கணவனும் மனைவியும் ஆடைகளின்றி சண்டை போடுதல் மிக மிக ஊடலை வலுக்கொள்ள செய்து கணவனில் மனைவியில் அதிகம் ஆர்வத்தை உருவாக்கும் என்கிறது ஒரு உளவியல் நூல். (சத்தியமா எனக்கு தெரியாது, நான் தப்பா ஒன்றும் சொல்லவில்லையே???)
இருவருக்கும் இடையில் எந்த ரகசியங்களையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
சரியோ தவறோ எப்பொழுதும் உங்கள் கணவன் மனைவி பக்கமே சார்ந்திருங்கள்.
இருவரும் போதுமான அளவு பேசிக்கொள்ளுதல், உரையாடுதல் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.
எப்பொழுதும் மற்றவரை மதியுங்கள். அவர்கள் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளியுங்கள்.
ஒருபோதும் உங்கள் கணவனையோ மனைவியையோ எச்சந்தர்பத்திலும் மட்டம் தட்ட எத்தனிக்காதீர்கள். குறைத்து மதிப்பிடாதீர்கள்.
சிறிய விடயமாக இருந்தாலும் உங்களுக்குள்ளே பேசி முடிவுகளை எடுக்க முயற்சியுங்கள்.
உங்கள் சண்டைகளில் அல்லது கருத்து வேறுபாடுகள் என்று வரும்பொழுது ஒருபோதும் 'எப்பொழுதும்' (always), 'ஒருபோதும்' (Never) என்கின்ற சொற்பிரயோகங்களை பாவிக்காதீர்கள்.
வாதிடுதல் தேவையானதுதான் ஆனால் ஒருபோதும் அத்தருணங்களில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த சபித்தல், சாபம் இடுதல் தொடர்பான வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள்.
உங்கள் கணவனையோ மனைவியையோ வேறு யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள். உங்கள் திருமணத்தையும் கூட.
கணவன் மனைவி சார்ந்த சிறு சிறு விடயங்களையும் ஊக்குவியுங்கள், பாராட்டுங்கள்.
கணவன் மனைவியின் விருப்பங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவது போல அவர்கள் வெறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் அதிகம் பேசுவதை விட மற்றவர் பேசுவதை கவனமாக செவிமடுத்தல் நல்லதொரு தொடர்பாடலையும் நம்பிக்கைத் தன்மையையும் ஏற்படுத்தும்.
கணவன் மனைவி ஆடைத்தெரிவுகளில் நீங்களும் கணிசமான ஈடுபாட்டை காட்டுங்கள்.
கணவன் மனைவி சார்ந்த குடும்பங்களை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை இழிவாக பேசாதீர்கள்.
கணவனும் மனைவியும் குடும்பம் என்கின்ற அமைப்பில் சமமானவர்கள் என்பதை மறக்காதீர்கள்.
கணவன் மனைவி சார்ந்த நல்ல விடயங்களை எப்பொழுதும் ஞாபகம் வைத்திருக்க முயற்சியுங்கள். கெட்ட விடயங்களை மறக்க முயட்சியாது செய்தல் நன்று.
கணவன் மனைவியை மனைவி கணவனை சிரிக்க வைப்பதற்கு என்ன யுக்தியை கையாள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
மற்றவரின் குறைபாடுகளை எச்சந்தர்பத்திலும் கூற எத்தனிக்காதீர்கள்.
காரியாலைய நினைவுகளையும் கடமைகளையும் வீட்டிற்குள்ளோ அல்லது கட்டிலறைகுள்ளோ கொண்டு செல்லாதீர்கள்.
எல்லாவற்றிலும் உங்கள் முன்னுரிமை உங்கள் கணவன் அல்லது மனைவியாகவே இருக்கட்டும்.

Monday, June 27, 2011

அவள் இறுதி ஆசை.

என்னை
எறிந்து போன காதலனே,
எனது இறுதி ஆசையை கேட்டாயா?
பார்த்து பார்த்து தேய்ந்து போன கண்கள்,
பேசி பேசி மரத்து போன நாக்கு,
எண்ணி எண்ணி சுயமிழந்த மனசு,
அழுது அழுது வற்றிப்போன கண்ணீர்,
வருந்தி வருந்தி வாயிழந்த வயிறு,
இவை எல்லாம் நீ கொடுத்தாய் எனக்கு.
இவற்றை தவிர
உனக்கு கொடுக்க
என்ன இருக்கிறது என்னிடம்??
மரத்துப்போன என் காதலையும்
மானமிழந்த என் உடலையும் தவிர...

நாசமாய் போன
சதி காரனே..
உன்னை எப்படி
எந்த மூஞ்சியோடு
எனது
முந்தைய காதலன் என்று சொல்வேன்??
நீ
மூசி மூசி காதலிச்சது எல்லாம்
என் உயிரை அல்ல
உடலைதானே !!
அன்பு பாசம் என்றெல்லாம்
வேஷத்தை மட்டும் தானே காட்டி போனாய்.
அதற்குள் நீ கொடுத்த
பழைய பரிசுகள் வேறு...

தினம் தினம்
அவற்றை பார்க்கும் போதெல்லாம்
கடுப்பல்லவா வருகிறது
உன் மொக்கையாய் போன காதல் மேல்..

போனைய காதலர் தினத்தில்
என்னை கேட்ட நீ
இந்த காதலர் தினத்தில்
என் நண்பியை கேட்டது
ஆச்சரியம் இல்லை எனக்கு
காரணம்
நீ ஒரு புறம்போக்கு என்பதும்
நீ ஒரு முடிச்செருக்கி என்பதும்
எனக்கு நன்றாகவே தெரியும்.
நீ எல்லாம்
உருப்படுவதற்கு சந்தர்பம் உண்டோ
என்னை கேடுத்துப்போன காதலனே?
என்னிடம் காதலிக்க பழகி
அவளிடம் புலமை காட்டுகிறாயோ
காதல் லீலைகளில்..

ஒன்றை பார்.


காதலர் தினத்தில்
பிறந்தது நம் காதல்.
அதனாலோ என்னவோ
ஒவ்வொரு வருடமும்
நம் காதலை மறக்க முடியவில்லை
நாசமாய் போன கலண்டர்
ஞாபகப் படுத்திக்கொல்கிறது.

வில்லிடையாள் வீம்பு

ஆறடிப் புரவி அவள்


அலுங்கி குலுங்கி வருகையிலே
ஆறடி அடித்துப் பின் - இதயம்
அடியொற்றி மாண்டதேனோ..

என் நா அவள் நாமம் நயந்து
நாண்டு தீர்ந்தன வார்த்தைகள்
அவள் அருகில் மட்டும் வந்தபோது
நடுங்கி தீர்ந்தன பார்வைகள்.

அவள் பேச்சின் உஷ்ணம்
கொதிக்கும் பார்வையின் தட்பம்
இரண்டும் எனக்குள் பரவி
எறும்பாய் போனதே இந்த பிறவி.

அவள் கண்மடல் கனிந்து
புருவம் மட்டும் உயர்ந்து
விழிப்பார்வை விடியலில் குழைந்து
நோக்கையில் நொந்தேன்.

எங்கள் குலத்தில் மொட்டானேன்
இவள் பிடித்ததில் நான் மலரானேன்
வாசனை பேசி அவள் வருகையிலே
தேன் கொடுத்து அவள் தேவையானேன்.

வருவாள் என்று மனதில் நடுக்கம்
வந்தபின்னோ அது மாரடைப்பு கொடுக்கும்
பார்த்தால் அவள் அல்லிராணி
படிக்க நினைத்தால் விசப்பல்லிராணி.

உதட்டுப் பக்கம் ஓரங்குல மடிப்பு
சிவந்தே கிடப்பதால் மன ஓரமெல்லாம் அடிப்பு
கண்வைக்கவோ காமப்பயம்
என் கண்ணெடுத்தபின் காதல் பயம்.

இருவிளிக்குள் கருமை நிலா
வெட்டிப் பார்ப்பாள் விடியல் நடுங்கும்
வெடித்து சிதறும் என் இதயம்
வெகுளி உடம்பில் மீண்டும்போய் ஓட்டும்.

வலது சோணையில் மெல்ல
வசதியாய் வந்தமர்ந்தாள்
நாடியில் ரத்தமில்லை
நாள ஓட்டத்திலும் சத்தமில்லை.

வந்தவள் போய்விடுவாளா?
இல்லை வந்தபடி அமர்ந்துவிடுவாளா?
வாய்மலர்ந்து நான் பேசையிலே
என் வாயடைத்துப் போவாளா?

நிலாவின் நிழல் நீ.


என்னால்.
ஓர் ராத்திரியில்
ரசிக்கப்பட்டவள் நீ.

மேகம் மெல்ல
துணி விலக்க - உன்
தேகம் தொட்டு
கோலம் போட்டது - அந்த
நிலாக்கீற்று.

மெல்லிய வெண் சுடர்
மேனியில் கீறலாய்
மெதுவான தூறலாய்
உன் மிருதுத் தசைமேல்
மினுங்கலாய் தடவிப் பின்
முழுமையாய் படர்ந்துபோயின
நட்சத்திர பகல்கள்.

மின்மினி உன்னை
ஒருமுறை உரச
விண்வெளியில் வெண்ணிலா
ஒருமுறை நூர்ந்தது.

உன் -
முகம் பார்த்து
வான் நிலா
மிடுக்கென்று மறைகயிலே
நிலா மறைத்து
உனைப்பார்க்கும் மேகம்
ஒருமுறை - உன்
முடிதனிலேனும்
முட்டிப்போக முயற்ச்சிக்கும்.

உன் முகத்துள்
புதைக்கப்பட்ட
இரு பெரும்
வெள்ளிகள்
எறிந்தன மின்னொளிகள்
எரிந்தன மின்மினிகள்.

அன்று
நிலா ஒளியில்
நிழல் தூங்கியது
உன் ஒளிபட்டு
நிலாவே மங்கியது.

இரவின் மடியில்

இருட்டுப்போர்வையில்
சின்ன ஓட்டை
திருட்டுப்பார்வையில் - அந்த
வண்ண நிலா..

வாய் பிளந்த வானம்
வருடிப்போகும் மேகம்
ஏன் இந்த வேகம்
வானோடு இல்லையா மோகம்?

மேலே கறுப்பாய் வானம்
கீழே வெறுப்பாய் நான்
போர்த்திய முன்னிருட்டில்
சாத்தியபடி என் மனசு..

சிரிப்பதற்கு மனமில்லை
மரிப்பதற்கும் விதியில்லை
என்னிலை புரிந்ததோ என்னவோ
மூச்சுக்காற்றிலும் சூடில்லை.

விண்மீன்கள் பல் இழிக்க
விண் நிலவும் பகல் தெழிக்க
முன்னிரவு விடிந்து விழிக்க
என்னிரவு முடிந்துபோகிறது
வெறுமையாய்...

நிலவே நீ
சுட்டவில்லை.
உன் பகலிலும்
சுத்தமில்லை.
அசை ஆசையாய் பார்க்கும்வரை - உன்
அழகில்கூட ஒரு
அர்த்தமில்லை.

என் தனிமைக்கு நீ காவல். - எனக்கோ
இருட்டில் காதல்.
முட்டி போகும் காற்றுக்கெல்லாம்
முடிந்துபோகும் - என்
கற்பனையோடு மோதல்.

ஒற்றை இரவு
இரட்டை நிலா
ஒன்று நீ - வானில்
மற்றொன்று அவள் - மனதில்.

.

நீயும் நானும்...

நீயும் நானும்...
உன்னை பார்த்தபோது,
அரை வயதாகிய
எனது உடலும்
முழு வயதாகிய
எனது வாழ்கையும்
இப்பதான் பிறந்ததாய்


பிரமிப்பு..
அழகாய் பார்த்திருந்தாலும்
அழகிய அழகை
இப்பதான் பார்க்கிறேன்.
சூம்பிப்போன - என்
உணர்வுகளுக்கு
உரமிட்டு
உசுப்பேத்திய நிமிடங்கள்
அவை....
வேகம் தணிந்து
விவேகம் கெட்டு
வற்றும் நிலை வந்தும்
தடுமாறி ஓடும்
ரத்தம் கூட
பரபரத்த நொடிகள்...
பிறந்தது முதல்
இல்லை என்றே
பேசிக்கொண்ட ரசனை
சிலிர்த்து உருவெடுத்து
சிரித்த நேரம்...
வலப்பக்க விழியும்
இடப்பக்க விழியும்
பார்த்த காட்சியை
நம்பமறுத்த தடுமாற்றம்...
அது அவளின் முகம்
இவ்வளவு அழகு - அந்த
ஒருமை முகத்தில்
பன்மை அழகு..
தடுமாற்றம் ஒருபுறம்
தடமாற்றம் இன்னொருபுறம்
பார்க்க பார்க்க மயக்கம்,
விட்டு விலகவோ தயக்கம்.
நான் பார்த்த சித்திரங்களில்
ரோஜாவையும் சரோஜாவையும் விட
இவளுக்கே முதலிடம்...
அவள் பேசிய போது....
சிலைக்குள் பேச்சையும்,
மலருக்குள் பாஷையையும்,
நிலவுக்குள் வார்த்தைகளையும்
இங்குதான் பார்த்தேன்...
அவள் பேசும்போது
ஒட்டிப்பிரிந்த சொப்பன உதடுகள்
சூம்பிப்போன - என்
இதய கூட்டிற்குள்
ஒய்யாரமாய் போய் அமர்ந்தன.
அழகிய வார்த்தைகள் - எனக்கோ
மது அருந்தா மயக்கம்.
பேசுகிறாள் - நான்
கேட்கிறேன்.
கடைசிவரை புரியவேயில்லை..
அவள் பேசும் போது
கேட்டதைவிட - அவளை
பார்த்ததுதான் அதிகம்.
என்னை
மயக்கமாக்கி
மந்திரம் சொன்னகதை
அது.
பேசி பேசி
அழகியசுந்தரி
பெருமை சேர்த்து சென்றாள்
மொழிக்கு..
நானோ
அரவம் தீண்டியவன் போல்
ஆரவாரம் இன்றியே
மருந்திட்டுக்கொண்டேன் வலிக்கு.
காதல் சொன்ன போது...
மாதக்கணக்கில்
ஏக்கம்,
மறந்துபோனது - என்
தூக்கம்,
வருடக்கணக்கில்
சேர்த்துவைத்த காயங்கள்
கணக்கிட மறந்த வலிகள்..
இறுதியில்
ஒரே வார்த்தையில்
மருந்திட்டுப்போனாள்
என்
மர்ம ஏவாள்.
மன அறையில்
அறைந்த ஆணியில்
ஏற்றப்பட்ட அவளுருவம்
மறந்தேபோனது - காதலால்
எரிக்கப்பட்ட இவனுருவம்..
சுற்றும் பூமி நின்றுபோக
உச்ச நிலா உரசிபேச
அலையில் மிதந்து
கரையில் கரையும்
கடல் நுரையாய்
உறைந்தேபோனேன்..
வானத்தில் பறந்தேன்,
மேகத்தையும் பார்த்தேன்,
உச்ச வெயிலிலும்
ஒய்யாரமாய் நனைந்தேன்,
ஓடி வரும் நதிக்கும்,
ஒட்ட நிற்கும் - இந்த
கடலுக்கும்
டும் டும் டும் எப்போ..
கொண்டாட்டம் தான் அப்போ....

காதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா?


காதலைப்பற்றி பேசுவதில் கடினம் இல்லை. ஆனால் கவனம் தேவை. ஏனெனில் இது ஒரு உறவுமுறையின் தொடக்கம். ஒரு சந்ததியின் தோன்றல். இரு மனங்களின் ஒருமைப்பாடு. ஆனாலும் ஒரு விரக்தியின் பிரசவம், வெறுப்பின் தொடக்கம், இல்லாமையின் கொடுமை எனவும் எதிர்மறையாகவும் சொல்ல இடமுண்டு. காதலை யார் யாரெல்லாம் ஒரு வாழ்க்கையாக பார்கிறார்களோ அது அவர்களுக்கு வாழ்கையை நிச்சயமாக கொடுத்துவிடுகிறது. யார் யார் எல்லாம் காதலை ஒரு பொழுதுபோக்காக பார்கிறார்களோ அது அவர்களுக்கு உண்மையிலேயே ஒரு நல்ல பொழுதுபோக்காக (entertainment) அமைந்துவிடுகிறது. காரணம் காதல் என்பது எதிர்பார்ப்புக்களின் சங்கிலியே தவிர அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய கானாவூர் கல்யாணம் அல்ல (கிறீஸ்தவர்களுக்கு புரியும்;). ஒட்டுமொத்தத்தில் காதலை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அது அப்படியே அமையும். இதுவே காதலின் மிக சுவாரஸ்யமான இயல்பு.

காதலை நாம் ஒவ்வொருவரும் நின்று பார்கின்ற தளங்கள் வித்தியாசமானவை. அவை எமது உளவியல் போக்குகள், வாழ்வியல் தாக்கங்கள், உணர்வியல் தேடல்கள், மனமார்ந்த எதிர்பார்ப்புக்கள் போன்ற காரணிகளாலே தீர்மானிக்கப்படலாம். இருந்தும் காதல் என்கின்ற உணர்வு அடிப்படையில் ஒரே மாதிரியான இயல்புகளை கொண்டிருந்தாலும் அவை வளர வளர, தான் உருவான தளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் அடைந்துகொள்வதற்கு முயற்சி எடுக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான் காதல் கொஞ்ச நாட்களின் பின் நிறைய மனிதர்களுக்கு கசக்க ஆரம்பிக்கிறது. காதலில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள் காதலில் நிச்சயமாக வென்றுவிடுகிறார்கள். புரியவில்லையா? காதலில் வென்றவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காதலிச்சவர்கள்தான். காதல் எதிர்பார்ப்புக்களோடு வருகின்ற பொழுது அவ் எதிர்பார்ப்புக்கள் நிறைவெய்தாமல் போகின்றபொழுது அந்த காதலின் இலட்சியம் தோற்றுவிடுகிறது. இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் அந்த காதலால் என்ன பயன்? என்று யோசிக்கிறபோழுது காதல் வேண்டாம் என்ற முடிவுகளுக்கு காதல்கள் தள்ளபடுகின்றன.

இந்த எதிர்பார்ப்புக்கள் யாரிடத்தில் அதிகம் காணப்படுகின்றன? ஆண்களிடத்திலா அல்லது பெண்களிடத்திலா? நான் எந்தப்பக்கமும் சாயவில்லை. நடுநிலையில் இருந்துதான் பேசபோகிறேன். அதுசரி நீங்கள் சொல்லுவது புரிகிறது. நான் ஒரு ஆண்தான். ஆனால் நான் ஒரு பகுத்தறிவாளன். பெண்ணை தாயென்றும், அக்காவென்றும் கூப்பிட்டு பழகியவன். நான் ஆண்களை மதிக்கிறேன் ஆனால் பெண்களை வணங்கிறவன். (உங்களை நம்பவைக்க நான் படும் பாடு இருக்கே... முடியல..) சரி. விடயத்துக்கு வருவோம்.

பொதுவாகவே எதிர்பார்ப்புக்கள் இரு பாலருக்கும் ஒரே விதமாகவே இருக்கின்றன. ஆனால் ஆசைகள் வித்தியாசப்படுகின்றன. எதிர்பார்ப்புக்களின் மேலுள்ள தேடல்தான் ஆசைகள். பொதுவாக பெண்களிடத்தில் இவ்வாசைகள் அதிகமாக இருப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அதைவிட வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்புக்களும் ஆசைகளும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கின்றன. பொதுவாக ஆண்களுக்கு வேலை, பணம், தொழில், குடும்ப பொருளாதாரம், எதிர்கால பொருளாதார அந்தஸ்து நிலை, சமூக அந்தஸ்து நிலை போன்ற துறைகளிலேயே அதிக எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை பற்றிய கனவுகள் எதிர்பார்ப்புக்கள் பெண்களிடதிலேயே அதிகம் காணப்படுகிறது. (இதை அடிச்சு சொல்வதற்கு ஆதாரமாக இருப்பது ஷேக்ஸ்பியர் இன் 'நானும் அவளும்' என்கின்ற நாவல் இந்த ஆசைகளின் வெளிப்பாடும் பெண்களுக்கு ஒரு விதமான காதல்மீதுள்ள தூண்டலுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு ஆணை முதல் முதல் பார்க்கிற பொழுது ஒரு பெண் இவன் தனது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவனாக இருப்பானா என்பதைத்தான் முதலில் ஜோசிக்கிறாள். அந்த விடை ஆம் என்றால் அவன் மேல் உடனடியாகவே காதல் வயப்படுகிறாள். இல்லையென்று அவளுக்கு தோன்றினால் சற்று ஜோசிக்கிறாள். இதுவே காதல் என்பதன் மறைமுக தளம். இதை நம்மில் அநேகமானோர் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்த விடயம். பரவாயில்லை. ஏற்றுக்கொண்டால் நீங்களும் ஒரு பகுத்தறிவாளன். அவ்வளவுதான். அதற்காக ஆண்கள் எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொண்டு காதலை தேடுபவர்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. அவர்களும் அப்படிதான். ஆனால் ஒப்பீடு என்று வரும் பொழுது அதை விட இது கொஞ்சம் குறைவு (என்ன அது இது..).

காதல் மலர்ந்து மெதுவாய் நகர்ந்து பல அனுபவங்களை கடந்து போகும்பொழுது முதல் முதலாக முறிவுகள் உருவாக ஆரம்பிக்கின்றன. காரணம் என்ன? அவள் எதிர்பார்ப்பதை ஆசைபடுவதை நம்ம அண்ணன்மாரால் நிறைவேற்ற முடிவதில்லை (நம்மாக்களிண்ட மிக முக்கியமான சொதப்பலே இதுதானே...). அல்லது நிறைவேற்ற முயட்சிப்பதில்லை. அவ்வளவுதான். உலகில் உள்ள அதிகமான காதல் தோல்விகள் எல்லாம் இந்த காரணத்தில் முடிச்சிடப்பட்டவைதான். பெண்களுக்கு தங்கள் எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் மிக மிக முக்கியமானவை. ஆண்களுக்கோ அவை இரண்டாம் தர முக்கியம் வாய்ந்தவை. இது பெரும்பாலும் பிழை என்றாலும். சிலவேளைகளில் சரி. (எப்பிடி நம்ம லாஜிக்???) காரணம் பெண்கள் தங்கள் அல்லது தங்கள் காதலரின் சொந்த எதிர்பார்ப்புக்களை மட்டும் முக்கியப் படுத்துபவர்கள். ஆனால் ஆண்கள் தங்கள், தங்கள் காதலி, தங்கள் குடும்பம் (எதிர்கால குடும்பம்;), தங்கள் வேலை, தொழில், என பல எதிர்பார்ப்புக்களுடன் வாழ்பவர்கள். (அதற்காக ஆண்கள் எல்லாம் பெரிய இலட்சியவாதிகள் என்று புகழ வரவில்லை..) எனவே சில சமயங்களில் பெண்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் அவர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளுக்குள் இரண்டாம்தர முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துவிடலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?? இதைவிட மிக முக்கியமான சர்ச்சை.. ஆண்களைவிட பெண்கள் கொஞ்சம் சுயநலம் கொண்டவர்கள் (kingstan என்கின்ற உளவியலாளரின் 1989 report இன் பிரகாரம்;). அவர்களின் சுயநலத்தை நான் ஒரு குறை சொல்லக்கூடிய சுயநலமாக பார்க்கவில்லை. அந்த சுயநலம் தன்னையும் தனது கணவனையும் தனது குடும்பத்தையும் பற்றியது.. அவ்வளவுதான். நமது குடும்பத்துக்குள்ளே இது பொதுநலம். வெளியில் இருந்து பார்த்தால் இது நிச்சயமாக சுயநலம்தான். இந்த சுயநல எதிர்பார்ப்புக்களும் ஆணிடத்தில் அதிகம் பிரச்சனைகளை உருவாக்க காரணமாக அமைந்துவிடுகின்றன. எதிர்பார்ப்புக்கள் போதுமைபட்டவையாக இருப்பின் காதலில் அவை சிக்கல்கள் அல்ல. எதிர்பார்ப்புக்களை தனிமைபடுத்தும் பொழுதுதான் அவை பிரச்சனைகளாக மாறுகின்றன.

மொத்தத்தில் காதலில் எதிர்பார்ப்புக்கள் வில்லங்கங்கள் தான். தனது காதலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதலியின் எதிர்பார்ப்பு. அது அவனால் முடிந்தால் அது அவனது பெருந்தன்மை. அவனால் அது முடியாமல் போனால் அது நிச்சயமாக அவனின் பலவீனம் அல்ல. காதலனை மாற்றியமைத்து அல்லது சீரமைத்து திருமணம் முடிக்க ஆசைபடுகிற பெண்கள் அவர்களை விட ஏற்கனவே அவர்கள் எதிர்பார்ப்புக்களின் பிரகாரம் வாழும் ஆண்களை காதலிப்பது உலகில் ஏராளமான காதல் தோல்விகளை நிகழாது தடுக்கும். அல்லது அவர்களை அவர்களாக காதலிப்பதும் ஒரு நல்ல ஐடியா. (தயவுசெய்து முறைக்க வேண்டாம்;). ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் சரியாக புரிந்துகொண்டால் இருவரின் பலம் பலவீனங்கள் நன்றாக தெரிந்துவிடும். பலத்தை பெருந்தன்மையோடு வாழ்த்துங்கள். அது இன்னும் இன்னும் வளரும். உங்கள் வாழ்கையை உயர்த்தும். பலவீனங்களை விமர்சிப்பதை தவிருங்கள். பலவீனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்பொழுது அதுவும் வளர ஆரம்பிகிறது. இந்த வளர்ச்சி நாகரீகமான ஆரோக்கிய வளர்ச்சியல்ல. இன்னும் இன்னும் சிக்கலாகும். ஆக ஒட்டுமொத்தத்தில் இவைகள்தான் அதிகம் காதலை சோதிக்கின்ற மறைமுக காரணிகள் என்று நினைக்கிறேன்.

பெண்களை புரிந்துகொள்தல் என்பது இலகுவானதல்ல (என்ன முறைப்பு.. உண்மையதான் சொல்றன்..). ஆண்களின் மிகப்பெரிய சவால் இதுதான். அவர்களின் ஆசைகளை எதிர்பார்ப்புக்களை மதியுங்கள். நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்கள் இயல்நிலையை மாற்றமுனைந்து சொந்த ஆளுமையை தொலைத்துவிடாதீர்கள். பிறகு செருப்பை காப்பாற்ற முனைந்து காலை பறிகொடுத்த கதையாகிவிடும். பெண்களும் ஆண்களின் சுய ஆளுமையை விரும்புங்கள். அவனிடத்திலுள்ள சொந்த இயல்புகளை பாருங்கள். இன்று நம்மத்தியில் உள்ள நிறைய பெண்களுக்கு எல்லா ஆண்களும் ஒரு இயேசுவாக இருக்கவேண்டுமென்று விரும்பிகிறார்களே தவிர ஒரு மனிதனாக இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. எதிர்பார்ப்புக்கள் இருபது அவசியம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் ஆண்களை முற்றுமுழுதாக மாற்றுவதாக இருக்ககூடாது. மனிதன் இயேசுவாக வாழமுடியாது. புதுமைகள் செய்ய இயேசுவால் மட்டும் தான் முடியும். மனிதனால் அல்ல.


இறுதியாக காதலை அதிகம் சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா என்கின்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டும். என்ன? இவ்வளவு சொல்லிவிட்டேன். இனியும் ஒருசொல் பதில் வேண்டுமா? சரி.. பாதகம் வராமல் முயற்சிகிறேன். ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல. அவர்களிடத்தில் காணப்படும் அற்ப எதிர்பார்ப்புக்களும், நடைமுறைக்கு சாத்தியமற்ற லூசுத்தனமான ஆசைகளும்தான் காதலை அதிகம் சோதிப்பதாக அமைகின்றன.

நினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்

நீ
உதிர்ந்தபோது,
மலராத பூக்கள் கூட
பகிஷ்கரிப்பு செய்ததே..பொழுது சிரிக்க
பூமி வெளிக்க
சூரியன் கூட
சந்திரனை முந்திக் கொண்டுவர
நீ மட்டும் - நான் இட்ட
திருநீறாய் மறைந்தாய்...

நீ
என்னை வளைத்தாய்
நிலா
தானாய் வளைந்தது.
நான் உன்னை
வெறுக்கும் போதெல்லாம்
ஏனோ - அந்த சூரியன்
நெருப்பாய் சுட்டது..
இத்தனைக்குள்ளும் - என்
நினைவு வெளியெங்கும்
உன் ஞாபகங்கள்
மானம் விட்டு திரிந்தது..

கூடவே இருந்தாய்
குதூகல வெள்ளம் - நான்
கும்பிட்டும் பிரிந்தாய் - தினம்
ஞாபகங்கள் கொல்லும்.

வந்துபோகும் ஞாபகங்கள்
விடிந்தால் கூட
முடிந்து போவதில்லை.
என்
பொழுதுகளும்
விழுதுகளும்
கெஞ்சினாலும் - அவை
மரணிப்பதில்லை.

என் பக்கம்
நீ வந்தாய்
என்
தேகம் சிலிர்த்தது
வானம் சிரித்தது
இரவில் வந்த
தூக்கம் கூட
கவிதை சொன்னது..

தந்த மனதை
திருப்பி கேட்டவள்
தன்
ஞாபகங்களை மட்டும்
தானம் செய்து போனதன்
தர்மம் புரியவில்லை...

நல்லவளே,
நீ வேண்டும் என்று
என்
இரவுகளை விற்றேன்..
அதன் இலாபமோ என்னவோ
உன்
ஞாபகங்கள் மட்டும்
தாராளமாய் கிடக்கிறது
என்னிடம்.

என்
நினைவு வெளியில்
உன் ஞாபகங்கள்..
செத்துப்போன - என்
உணர்வுகளில்
அவற்றின்
சின்ன சின்ன சில்மிசங்கள்.
உன்
ஞாபகங்களோடு
வாழ்கிறவன் நான்.
மறந்துவிடாதே
அவை சாகும் வரை
நீயும் மரணிப்பதில்லை
என்னுள்.

சோதனை(சாவடி)!!

என்னிடத்தில்
என்ன இருக்கிறது
என்பதில்
என்னைவிட
அவர்களுக்குத்தான்
அக்கறை அதிகம்.

இதுவரை
பைகளை மட்டும் பார்த்தவர்கள்
இப்பொழுது - என்
தொப்பையையும் சந்தேகிக்கிறார்கள்..

பெண்களின் சோதனையில்
தப்பியது
அவர்கள் கருப்பை மாத்திரமே..

அவர்கள்
தடவி தடவியே
மரத்துப் போயின - எங்கள்
தேகம்.

எங்கள்
இடுப்பு சரையும்
மடிப்பு வரையும்
சகலதும் தெரியும்
அவர்களுக்கு..

எங்கள்
சட்டைகளில் பலவும் - தோள்
பட்டைகளின் அளவும்
பாரபட்சமின்றி தெரியும்
அவர்களுக்கு..

அவர்கள் தடவுவதற்காகவே
நாங்கள் - நித்தம்
யாத்திரை செய்கிறோம்
எங்கள் மானம்விக்கும்
வீதிகளில்.

இவர்கள் - தமிழர்களை
தட்டிக்கொடுக்கிறார்களாம்
சாவடிகளில் - தாராளமாய்
தடவியும் கொடுக்கிறார்கள்.

மனதை திருடிய வெண்பனியே..


திரும்ப திரும்ப கேக்கணும் போல இருக்குங்க. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்குங்க.

அண்மையில் வெளிவந்த கோ படத்தில் இடம் பெற்றிருக்கின்ற பாடல்களில் என்னை ரசனையின் உச்சக்கட்டத்தை உரசிப் பார்க்க வைத்த பாடல் அது.

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா

இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

பாடல் வரிகளும், பாடல் இசையும், பாடல் குரல்களும், காட்ச்சியமைப்பும், நடனமும் சரியாய் அமைந்த பாடல்கள் எப்பொழுது வந்தாலும் அதை மக்கள் நிச்சயமாக வெற்றிபெற செய்வார்கள். காரணம் இவை ஐந்தும் சரியாய் பொருந்துகிறபொழுது அந்த பாடல் பூரணம் அடைகிறது. அது மக்கள் மத்தியில் நிரந்தரமாகவே சென்று அமர்ந்துவிடுகிறது. அந்தவகையில் இந்த பாடலும் ஒரு பூரண ரசனையை கொட்டித் தள்ளியிருக்கிற ஒரு பாடல்.

ஹரிஸ் ஜெயராஜ் இன் இசை வழமை போலவே தூக்கல். இருந்தும் கொங்கோ நாட்டின் "mercy mercy" என்கின்ற பிரெஞ்சு பாடல் மெட்டின் ஒரு சாயல் இருந்தாலும் மனதளவில் ஒரு முழுமையான ரசனைகொண்ட பாடலாக ஒட்டிக்கொள்கிறது.

கடந்த காலங்களில் ஹரிஸ் சில உலக பிற மொழி பாடல்களின் மெட்டுக்களை திருடி தமிழில் கொண்டுவருகிறார் என்ற சர்ச்சை நிலவியிருந்தாலும் இசையின் அவரின் தனித்துவம் இப்படிப்பட்ட பாடல்களில் தெளிவாகவே தெரிகிறது.

பாடிய குரல்களை பற்றி சொல்லவே வேணாம்..பாம்பை ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி. சினிமாவின் சிலேடை சில்மிசக்குரல்கள் இவை இரண்டும். ஹரிசின் குரல் தெரிவு பிரமாதமாகவே இருக்கிறது.

வரிகள். வித்தகக் கவிஞன் பா.விஜய். கவிதை மனசுக்குள்ளே ஊடறுத்துப் பாய்கிறது.


இமைகளில் வளைந்தும் இரு விழு நுழைந்தும்

இறங்கினாய் மனதுள்ளே

முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்

என்னக்குள்ளே எனக்குள்ளே ...


பிரமிக்க வைக்கிறது. இதிலே மிக முக்கியமான விடயம் இசையோடு இனிய வரிகள் இசைந்துகொடுத்து போகிறது. இதை கொஞ்சம் பாருங்கள்,எவ்வனம் அதிலொரு சூழ்வனம்

சோலைதம் அதில் அலைந்திட வா தினம்

கனம் கனமே..


ஒருமுறை கேளுங்க. வெண்பனியில் உறைந்து போவீர்கள். ஒட்டுமொத்தத்தில் இந்த பாடல் என்னை உரசிப்போனதட்கு முதல் காரணம் இசை, இரண்டு வரிகள், மூன்று மயக்கும் குரல்கள்.
பாடலை பார்க்க கேட்க:

http://www.youtube.com/watch?v=A8qOk7hXIzE&NR=1

விண்ணை தாண்டி வருவாயா


நீண்டநாள் ஆசை, நீண்டுகொண்டே போன தேடல், எங்கும் கிடைக்காத மூல பிரதி, அடக்கி அடக்கி வைத்துகொண்ட அவா வெடிக்கும் முன் கிடைத்தது அந்த மூல பிரதி. அது வேறொன்றுமில்லை, "விண்ணை தாண்டி வருவாயா original DVD " பற்றிதான். திரையரங்கில் திரையிட்டபோது பார்க்க தவறிய படம் அது. அது என்னவோ புரியவில்லை நான் எந்த படத்தை பார்க்காமல் விடுகிறேனோ அந்த படம் அனைவராலும் பெரிதாக பேசப்படும் (உதாரணம். விண்ணை தாண்டி வருவாயா). எதை ஓடோடி பொய் பார்கிறேனோ அது அனைவராலும் கிளி கிளியோ என்று கிழிக்கப்படும் படம். (உதாரணம் சுறா). விடயத்துக்கு வருகிறேன் (நான் அலட்டுவது எனக்கே பிடிக்கவில்லை). இன்றுதான் எனக்கு என்னுடைய ஒரு சகோதரி மூலம் அந்த பாக்கியம் கிடைத்தது. தன்னந்தனியாக காலைநேரத்தில் குளுகுளு என குளிரூட்டிய அறையில் இருந்து எனது கணனியில் பார்க்க ஆரம்பித்தேன் (உனது காரியாலயத்தில் தானே பார்த்தாய் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். அதை நான் சொல்லவதாய் இல்லை.) எழுத்தோட்டம் போகும் போதே எனக்குள் ஒரு அமோக எதிர்பார்ப்பு அந்த படத்தை பற்றி. கெளதம், ரகுமான், சிம்பு கூட்டணி. இந்த கூட்டணி நன்றாகவே உழைத்திருக்கும் என்றது எனது மனம். படம் முடியும்பொழுது இந்த கூற்றை நானாகவே நிரூபித்துக்கொண்டேன்.

உண்மையிலேயே கெளதம் மேனனுக்கு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும். எப்படியெல்லாம் யோசிக்க தோன்றுகிறது அவருக்கு.

சிம்புவையும் த்ரிஷாவையும் முதல் முதல் ஒரு இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது. வழமையான சிம்புவை முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் கெளதம். சில சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த சிம்புவை பிடித்திருக்கிறதோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சாறிகட்டிய த்ரிஷா மனங்களுக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்திருக்கிறார். என்ன அழகு. உண்மையிலேயே நான் முதல் தடவை த்ரிஷாவை ரசித்திருக்கிறேன் இந்த படத்தில்.

பெரிதாக ஒன்றும் புதிய கதை கரு அல்ல. வழமையான காதல். ஆனால் இந்தகாதல் அனைவரையும் தொட்டு பார்க்கிறது. காதலை எத்தனையோ விதமாய் பார்த்திருக்கிறது இந்த சினிமா. ஒரு பொழுதுபோக்காய், ஒரு உணர்வாய், ஒரு காமமாய், ஒரு பிரச்சனையாய், ஒரு புரட்சியாய். இப்படி பல. அனால் இந்த கெளதம் மேனனின் காதல் ஒரு உணர்வு, மூச்சு, வாழ்க்கை. ஒரு காதலை இவ்வளவு அழகாக சொல்லமுடியுமா என்ற எனது கேள்வி ஆச்சரியமான ஒன்று அல்ல இந்த படத்தை பார்த்த பின்பு. உதட்டு முத்தத்தில் காமத்தை மட்டும் காட்டிய சினிமாவில் முதல் தடவையாய் ஒரு அன்பை காதலை பாசத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். நிஜ வாழ்கையில் ஒரு காதல் சந்திக்கும் அனைத்து சாதாரண நடைமுறை பிரச்சனைகளை சர்வ சாதாரணமாகவே சொல்லியிருக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா வை பார்த்தவர்கள் நிச்சயமாக தங்கள் சொந்த காதல் அனுபவங்களை உரசிப்போவதாகவே நிட்சயமாக உணர்ந்திருப்பார்கள். படம் தொடங்கி முடியும் வரை காதல் கவிதையொன்றை வாசித்து, பார்த்தது போலவே தோன்றியது எனக்கு. ஒவ்வொரு வசனங்களும் கவிதைகள். அந்த வார்த்தைகள் தான் அநேகரை ரொம்பவே ஈர்த்திருக்கிறது. இடையிடையே வாரணம் ஆயிரத்தை ஞாபகப்படுத்தினாலும் இந்த இரண்டும் தனி தனி காதல் கவிதைகள்தான். தேவைப்படும் இடங்களில் சண்டை, தேவையான இடங்களில் பாடல், பொருத்தமான இடங்களில் நகைச்சுவை, இடையிடையே கொஞ்சம் ஆபாசம் என ஒரு மறக்க முடியாத கவிதை அனுபவம் இந்த விண்ணை தாண்டி வருவாயா.

நான் இன்னும் ரசித்து ரசித்து பார்த்த சில விடயங்கள். அழகையும் ஆபாசத்தையும் கலந்து கட்டிய சாரிக்குள் தேவதை போல வந்துபோகும் த்ரிஷா, ரயில்வண்டி உரசல், முத்தம், காதலுக்காய் அலுப்பு தட்டாத சிம்புவின் அலைச்சல், கேரளா அழகு, காக்க காக்க கமராமன் இன் சாதுவான நகைச்சுவை, சாதாரண பிரச்சனைக்கே பிரிந்து போகும் அழகான காதலர்கள், அமெரிக்காவில் நடு தெருவிலையே த்ரிஷாவின் அனுமதியோடு பரிமாறப்படும் சிம்புவின் முத்தம் இப்படி பல.இந்தப்படத்தை பார்க்கும் பொழுதே மனதிற்குள் காதல் மேல் நம்மை அறியாமலேயே ஒரு பிரியம், மரியாதை வருகிறது. காதல் என்றால் வாழ்க்கை என்பதையும் அது ஒரு உயிர் வலி என்பதையும் தத்துருவமாய் திரையில் மிக நேர்த்தியாக தெளிவாக சொல்லியிருக்கிறார் நம்ம கெளதம் மேனன்.

அடுத்து இன்னுமொரு முக்கியமான விடயம் நம்ம ரஹ்மானின் இசை. இவருக்குதானே அந்த ஆஸ்கார் ரொம்ப பொருத்தம். என்னா இசை. இசைக்குள் புகுந்து விளையாடியிருக்கும் ரஹ்மானின் சாம்ராட்சியம் ரொம்ப தெளிவாகவே படத்தில் தெரிகிறது. ஒவ்வொரு பாடலும் ரொம்ப கிட். கொசானா பாடலில் இருந்து மன்னிப்பாயா பாடல் வரைக்கும் அப்படியொரு வருடல். கௌதமின் படங்களில் இசையின் ஆதிக்கம் எப்பொழுதுமே அதிகம் தான். அதையே இங்கும் மறக்காமல் செய்திருக்கிறார் இயக்குனர். நடனம் என்ற பெயரில் பல வித்தைகளை காட்டி அலுப்புத்தட்டுமளவுக்கு ஆடி ஆடி பழக்கப்பட்ட சிம்புவிற்கு இங்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கபட்டிருக்கிறது என்றே சொல்ல தோணுகிறது. நடன அமைப்பு படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் அளவாக அழகாக அமைகபட்டிருந்தது மிக முக்கியமான ஒரு விடயம். அமைதியாக அழகாக ஆடும் சிம்புவை பார்த்தபொழுது ரொம்ப புதுமையாக இருந்தது. சபாஷ்.

நீண்ட நாட்களுக்கு பின் ரசித்து ரசித்து பார்த்த ஒரு அழகிய தமிழ் படம் இது. திரையில் விரிந்து பரந்து கிடக்கும் திரிஷா, சிம்பு காதல் ரொம்ப அழகு. பட முடிவில் என்னையையும் காதல் பற்றி ரொம்பவே பீல் பண்ண வைத்த ஒரு அழகிய, புதிய காதல் கவிதை இந்த விண்ணை தாண்டி வருவாயா.

கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.

ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்?இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள்ளையர்கள் என்கின்ற ஓர் தற்புகழ்ச்சி. எனது வாழ்கையில் எனது நிறத்தை நினைத்து சந்தோசப்பட்ட தருணங்கள் அங்குதான். கறுப்பு என்றாலே கொஞ்சம் முகம் சுளித்துக்கொண்ட நமக்கு அங்கு போய் பார்த்த பொழுதுதான் கறுப்பிலும் இவ்வளவு அழகு இருக்கிறதா என்பது புரிந்தது. எமது பெண்கள் கொஞ்சம் கலராக கழையின்றி இருப்பதை அங்கு கறுப்புப்பெண்கள் அழகாக இருப்பதை பார்த்தபோதுதான் உணர்ந்துகொண்டோம். ஏதோ என்னை விட என்னோடு இலங்கையிலிருந்து வந்த ரோஷானுக்குத்தான் அந்த கறுப்பு அழகு தேவதைகளை ரொம்பப்பிடித்திருந்தது. சரி அது வேற கதை.

5 நாட்கள் அயராத படிப்பு. அடிக்கடி 5 நிமிடங்கள் வகுப்புக்கு பிந்திப்போனதும் உண்டு. நாங்கள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டல் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அது ஒரு "இன்டர்நேஷனல் பீச் ஹோட்டல்". 5 நட்சத்திர தரம். எல்லாமே உயர்தரம் அங்கு வேலை செய்யும் பெண்கள் உட்பட. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஒரு கென்யா நாட்டவர் அல்ல. ஒரு இந்தியர். நீண்ட வருடங்களுக்கு முன் அங்கு வந்து கறுப்பில் மயங்கி செட்டில் ஆனவர் அவர். படிப்புக்கள் எல்லாம் சூப்பர் தான் அனாலும் கொஞ்சம் எங்களை enjoy பண்ண விட்டிருக்கலாம் என்பது எமது ஒரு ஆதங்கம். அதற்கு நேரம் கடைசிவரைக்கும் இடம்கொடுக்கவேயில்லை. அந்த ஹோட்டலின் விசேடங்கள் என்று சொல்லக்கூடியவை அதிகம். 9 அடி வரை நீண்டு பரந்த நீச்சல் தடாகம். நீலமயமாக அழகாக இருந்தாலும் அருகில் போனால் கொஞ்சம் நடுங்கும். யாரையும் உடைகளோடு பார்க்கமுடியாத அழகிய பீச், பீச்சுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ஆரவார அழகிய பார் (எம்மை அதிக நேரம் பார்க்க முடிந்தது இங்குதான்;), பாபிகியூப் எனப்படும் சுட்ட இறைச்சி, Agrobats எனப்படும் Gymnastic ஷோ, ஒவ்வொரு இராவுணவுக்கும் இலவசமாக வழங்கப்படும் விசேட இசை நிகழ்ச்சி மற்றும் அதில் இடுப்பை இலாவகரமாக எப்படி எப்படியெல்லாம் ஆட்டமுடியுமோ அப்படி அப்படியெல்லாம் ஆட்டி நடனமாடும் அழகிய கென்யா பெண்கள். (அவள்கள் எங்களை சாப்பிடவா விட்டார்கள், அவர்களை பார்த்துக்கொண்டே உணவை மூக்குக்குள் திணித்தவர்களும் இல்லாமலில்லை.) நானும் ஒருமுறை அவள்களுடன் நடனமாடினேன் என்றால் பாருங்களேன்???? (இதை நான் யாரிடமும் இதுவரை சொன்னதில்லை..)

உண்மையிலேயே கென்யாபெண்கள் ஒரு வித்தியாசமானவர்கள்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எங்களால் அங்கு அதிகம் ரசிக்கப்பட்டதும் பெண்கள்தான். (இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது, என்ன செய்வது வயசு அப்படி சில பெண்களுடன் அதிகம் பேசலாம், சில பெண்களுடன் அதிகம் சிரிக்கலாம், சில பெண்களுடன் அதிகம் பழகலாம், சில பெண்களுடன் அதிகம் அலட்டலாம். ஆனாலும் ஆண்கள் பெண்களைப்பார்த்து பயப்படும் வினோதத்தையும் இங்குதான் பார்த்தோம். அங்கு ஆண்கள் பெண்களில் ஆசைப்படுவதை விட பெண்கள் ஆண்களில் ஆசைப்படுவதைதான் அதிகம் பார்க்கமுடிந்தது. எமக்கு போதிய அளவு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் எமது அணியில் உள்ள சில காஞ்ச மாடுகள் கம்பில் விழுந்ததையும் பார்க்க முடிந்தது. (சத்தியமாக நாங்கள் இல்லை;).


இது இப்படியே இருக்க, ஒரே ஒரு நாள் மட்டும் இரவு நடனத்துக்கு (Night Disco Club ) போகவேண்டி ஏற்ட்பட்டது. (சகலரும் போனார்கள் அதனால்தான் நானும் போனேன்) அங்கு நிறைந்திருந்தவை மது, மாது, நடனம், வெளிப்படை முத்தம், திறந்த மேனிகள், இலாவகர கட்டியணைப்புக்கள், பொங்கிவளியும் காமம், பெண்களின் உடைகளுக்குள் காணாமல் போன ஆண்களின் கைகள் இப்படி பல (இன்னும் எப்படி சொல்வேன்;). என்ன கொடுமை சரவணா இது என்று சொல்லிக்கொண்டு எம்மை ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுக்கூட்டம் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காய் உடனடியாகவே எமது நடனங்களையும் ஆரம்பித்தோம். எமது ICRC ஆண் நண்பர்களை கடைசிவரைக்கும் அந்த பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே எமது ICRC பெண் நண்பர்களின் வேலையாய் போனது. அதிலும் எனது கற்பை காப்பாற்றிய பெருமை Hasni க்கே சாரும். விதம் விதமான டிஸ்கோ பெண்கள். அவர்களின் வேலை அங்கு வரும் ஆண்களை அணைத்து நடனமாடுவது, பின் அவர்களுக்கு தேவையான சில விடயங்களை தாராளமாய் கொடுப்பது இறுதிக்கட்டத்தில் அவர்களை அவர்களின் அறைகளுக்கு அழைத்துச்சென்று சகலதையும் கொடுப்பது. என்னா வினோதம். நமது பெண்கள் இத்தனை பத்தினிகளா என்று அங்குதான் அங்குதான் புரிந்தது. உண்மையிலேயே நமது பெண்கள் "பெண்கள்" தான். கடைசிவரைக்கும் இந்த சிங்கம் மாட்டவேயில்லை என்பது கவலைக்கிடமான விடயம் என்றாலும் எனது லட்சியம் அப்படித்தான் இருந்தது. ஒருவன் அல்லது ஒருத்தி கெட்டுப்போவதற்கு இந்த நைட் டிஸ்கோகளை தவிர சிறந்த இடங்கள் வேறு எங்கும் இருக்க முடியாது.

என்னதான் இருந்தாலும் இது ஒரு புது அனுபவம். பார்ப்பதற்கு பல விடயங்கள் விநோதமாக இருந்தாலும் படித்துக்கொள்ளவும் நிறையவே இருந்தது. இவ்வாறாக கழிந்த எமது களியாட்டங்கள் ஒருவாறு இறுதிக்கட்டத்தை அடைந்தது. இன்றுவரை என்னால் மறக்கமுடியாத ஒன்று அங்கு அடித்த வெயில். AC யை கட்டிப்பிடித்துக்கொண்டே வாழவேண்டிய கட்டாயம் எமக்கு திணிக்கப்பட்டது. எமக்கு விரிவுரை வழங்கிய நிக்கோலஸ் பிரமாதமான அறிவாளி. என்ன செய்வது கடைசிவரை எம்மைத்தான் அவரால் மாற்றமுடியவில்லை.

ஒருவாறு எமது ஒருவார பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் நேரம் வந்தபொழுது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. இருந்தும் மும்பாசாவிலிருந்து நைரோபியின் (கென்யாவின் தலைநகரம் இது சர்வதேச விமானநிலையம் நோக்கி பயணித்தோம். விமான நிலையத்தில் ஒரு வினோதம். அங்கு நிறைய கென்யா நாட்டவர்கள் எமக்கு உதவி செய்ய அவர்களாகவே முன் வருவார்கள். அப்படி பெருந்தன்மையாக வந்த ஒருவரிடம் மலசலகூடம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தோம். அந்த பெரிய மனிதர் இப்படி வாருங்கள் நான் அழைத்துச்செல்கிறேன் என்று எம்மை அழைத்துச்சென்றார். நாங்களும் அவரை தொடர்ந்து போய் அலுவலையும் முடித்த பின்னர் நான் அவரிடம் நன்றி சொன்ன போது அவர் என்னிடம் 10 டாலர் கொடுக்கும்படி கேட்டார். நானோ ஆச்சரியப்பட்டு எதற்காக என்று கேட்டேன். அவர் லஞ்சம் என்பதை மறைத்து coffee அருந்துவதற்கு என்றார். ஒன்றும் செய்யமுடியாத நிலை, புது இடம், புது மனிதர், பார்பதற்கு வேறு கறுப்பு பூதம் மாதிரியே இருந்தார். காசு கொடுப்பதை தவிர்த்து அருகிலுள்ள coffee shop இல் ஒரு cofee வாங்கி கொடுத்தேன். 10m தூரம் வழி காட்டுவதற்று 08 டொலர் coffee. அதுக்கு ஒரு அரசாங்க வேலை என்று பீலா வேறு.

இன்னுமொரு நல்ல விடயம். கென்யாவில் எங்கு சென்றாலும் சராசரியாக இருவரில் ஒருவர் நன்றாகவே ஆங்கிலம் பேசுகிறார்கள். தாய்லாந்தில் 500 க்கு இருவர் தான் ஆங்கிலம் பேசியது ஞாபகம் வந்தது.

கறுப்பு பெண்களை விட்டுப்பிரிவதென்பது எமக்கு ஏதோ ரொம்ப கஷ்டமான விடயமாகத்தான் அன்று இருந்தது. இருந்தும் இங்கு நமது கறுப்பிகள் இருக்கிறார்கள் தானே என்கின்ற ஒரு சமாதானம். டுபாயை அடைந்து இலங்கையை நோக்கிபுறப்படும் தருணத்தில் தான் கென்யாவை உண்மையாகவே மிஸ் பண்ணுவதாய் உணர்ந்தோம்.

நமது நாட்டில் பெண்களும் சூப்பர். கென்யாவில் பெண்கள்தான் சூப்பர்!!!

கடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொலைக்களம்'

இப்பொழுதெல்லாம் ஒட்டுமொத்த இதயம் கொண்டவர்களையும் வலிகொண்டு நோகடித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயம் இந்த "இலங்கையின் கொலைக் களம்" என்கின்ற சனல் 4 காணொளிப்படம். ஒரு இதயம் உள்ள மனிதனாக அந்த படத்தை பார்ப்பதற்கு இன்றுதான் நேரம் கிடைத்தது. 48.40 நேர அளவுகொண்ட அந்த படத்தொகுப்பை முழுமையாக பார்வையிட்டு முடிக்க எனக்கு எடுத்த நேரம் 01 மணித்தியாலம் 44 நிமிடம். 6 தடவைகள் நிறுத்தி 2 தடவைகள் சில காட்சிகளை rewind செய்து பார்த்ததில் இறுதியாக கிடைத்தது இன்னும் வெளியே வர முடியாத மன அழுத்தமும், வெளியே கொட்டிவிட வேண்டும் என்கின்ற மன ஆதங்கமும் தான்.காணொளி உண்மையானதா அல்லது பொய்யானதா என்கின்ற விவாதங்களுக்கு அப்பால் இவ்வாறான ஒரு நிலைமை எமக்கு ஏன் வந்தது அல்லது திணிக்கப் பட்டது என்பதுதான் எமது இப்போதைய ஆதங்கம். IHL எனப்படுகின்ற சர்வதேச மனிதாபிமான சட்டம், HR எனப்படுகின்ற மனித உரிமைச்சட்டம், ஜெனிவா பிரகடனம், protocols எனப்படுகின்ற வரைமுறைச் சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன? இதெல்லாம் வெறும் கேள்விகள்தான் என்றாலும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருக்கின்ற உலக அமைப்புக்கள் இன்னும் வேடிக்கைதான் பார்க்கின்றனவா என்பது இன்னுமொரு கேள்வி.

யுத்த நேரங்களில் இரண்டு வகையான சட்டபூர்வ விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்கிறது நான் மேலே கூறிய முக்கியமான சர்வதேச சட்டங்கள். ஒன்று யுத்தம் புரிபவர்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதோடு போர்க் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடாத்துதல். இன்னொன்று பொதுமக்களையும் பொது இடங்களையும் பாதுக்காத்தல். இவை இரண்டும் பாரபட்சமின்றி மீறப்பட்டதாக இந்த காணொளி கூறுகிறது, காண்பிக்கிறது.

சரி, அந்த "பெரிய" விடயங்களை விட்டு எமது உணர்வுகளுக்குள் வந்தால் மனிதர்களை மிகக்கேவலமாக எவ்வாறெல்லாம் நடத்தலாம் என்பதை இந்த காணொளி உதாரணமிட்டிருக்கிறது. ஒருபுறம் மரணம், மரண அவஸ்தை, மரண பயம், மரண வேதனை இன்னொருபுறம் சித்திரவதை, கொடூரம். ஆக இந்த சம்பவங்கள் எல்லாம் உலகத்திற்கு பல பாடங்களை புகுத்தியிருக்கிறது. உலகம் பாடம் படிப்பது சரிதான் அதில் கவலைக்குரிய விடயம் அந்த பாடத்திற்கு எங்களை பலியாக்கியது. எங்களை தயவுசெய்து விட்டு விட்டு போய்விடாதீர்கள் என்று சர்வதேச சமூகத்தை மன்றாடி வேண்டிக்கொள்வது, எங்களது இனத்தின் மேல் யார் இட்ட சாபம் என கேட்கத்தோணுகிறது. முடிவு இறுதிவரை, ஏன் இப்பொழுது வரை கூட எங்கள் இந்த ஓலங்கள், கெஞ்சல்கள் யாரையுமே திரும்பிப் பார்க்க வைக்கவில்லை என்பதுதான்.

அதிலும் சிறுவர்களையும் இளம் பெண்களையும் கொடுமையின் உச்சத்திற்கே கொண்டுபோய் இருக்கிறது. கற்பை எடுத்தீர்கள். எங்கள் கேவலம் கேட்ட உயிரையாவது பிச்சையாய் விட்டிருக்கலாம். ஒரு பெண்ணை கற்பளித்துத்தான் ஒரு யுத்தம் வெற்றிபெற வேண்டுமா? ஒரு பெண்ணின் பாலுறுப்புக்களை சிதைத்து, பின்னர் உடைகள் இன்றி கைகளை கட்டி தலையில் சுட்டு, குப்பை வீசுவதுபோல் பள்ளத்தில் எறிந்துதான் ஒரு நாடு பயங்கரவாத்தத்தை வெற்றிகொள்ளவேண்டுமா?

படத்தை பார்த்துமுடிக்கும்வரை அழுகைக்கு நான் இடம் கொடுக்கவே இல்லை. காரணம் அழுது அழுது நாம் சாதித்ததெல்லாம் இந்த 48.40 நேர காணொளி மட்டும்தான். ஒரே ஒரு காட்சியை மாத்திரம் எனது சகோதரி பார்ப்பதற்கு அனுமதித்தேன். இன்னும் அவள் கண் கலங்கிய படியே வீட்டில் அமர்ந்திருக்கிறாள். என்ன செய்வது "கடவுளால் மட்டுமே தமிழனை காப்பாற்ற முடியும்" என்று கூறிப்போன தந்தை செல்வாவின் வார்த்தைகள் பலித்திடுமோ என பயப்பட வேண்டியிருக்கிறது. ஐநா பாதுகாப்புச்சபையில் இந்த படத்தை பார்க்க முடியாமல் கண்ணை மூடிக்கொண்டவர்களையும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களையும் கண்ணீர் விட்டவர்களையும் கேவலமாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. காலைப் பிடித்து கெஞ்சியபோது முகத்தைத் திருப்பிக்கொண்டவர்கள் எங்கள் சாவுகளைப் பார்த்து கண்ணீர் வடிப்பதன் நியாயம் புரியவில்லை.

உலக வரலாற்றில் இதுஒரு மிகப்பெரிய தடமாக பதியப்பட்டிருக்கிறது. எங்கள் இரத்தங்களையும், உடல்களையும், கற்புக்களையும், மானத்தையும் நாங்கள் இழந்த விதத்தை படம் போட்டு காட்டியிருக்கிறோம். வரலாற்றில் எமது இனம் பல விடயங்களில் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த காணொளி உட்டபட. எங்கள் கேவலமான மரணங்கள் உலகத்திற்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்.

பெரியபிள்ளை ஆனவுடனே தங்கள் பெண் பிள்ளைகளை இனத்தின் மானத்தைக் காப்பாற்ற களம் அனுப்பிய தாய்களுக்கு இறுதியில் காலம் கொடுத்த பரிசு தங்கள் பிள்ளைகளின் ஆடையற்ற வெற்றுடலை இந்த உலகம் பார்க்கும் படி செய்ததுதான்.

இந்த காணொளி இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. சிலவேளைகளில் 'சப் எண்டு போய்டும் பாருங்க' என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சிலவேளைகளில் சரிதான். எங்களுக்கா அனுபவம் இல்லை.

நாம் படித்த படித்துக்கொண்டிருக்கிற உலக வரலாற்றில் ஒரு விடயம் மட்டும் உண்மை. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்". வெள்ளைக்கார மாமாமாரே நீங்கள் பைபிள் வாசிக்கவில்லையா? "குற்றம் புரிந்தவன் தண்டனைக்கு உரித்துடையவன்" - இஜேசு.

Popular Posts