Friday, December 30, 2011

பயமுறுத்திய பதிவுலகமும் பசுமையான இலக்கியமும் - 2011.

வருடங்கள் முடிவதும் புது வருடங்கள் புலர்வதும் இயற்கையின் நியதி. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பானவையே என்பதை யதார்த்தமாக்கும் ஒரு இயற்கையின் நகர்வு இந்த வருட முடிவும், வருட பிறப்பும். ஒவ்வொரு வருடமும் பிறக்கும் பொழுது மனதில் பல புதிய சத்தியங்களும், முயற்சிகளும் பிறக்கின்றன. அதேபோல வருட முடிவில் அவை நிகழ்ந்தனவா என ஒரு மீள் பார்வை பார்ப்பதே இந்த விடயங்கள் நிகழ்ந்தன என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள உதவியாக அமையும். 

அந்த வகையிலே எனக்கு இந்த 2011 மிகவும் முக்கியமான வருடம் என்றே கூற முடியும். பல விடயங்களை கொடுத்ததும் எடுத்ததும் இந்த 2011 தான். எடுத்தவைகளைப் பற்றி பேசுவது நன்மையளிக்கப் போவதில்லை என்பதாலும் என்னை வருத்தமடையச் செய்யும் என்பதாலும் அதை விடுத்து மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை மட்டும் பேசலாம் என நினைக்கிறேன். (மொக்கையப் போடுறான் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்...ஹி ஹி ஹி )

எனது எழுத்துக் கனவு என்பது நீண்டநாள் வயதைக் கொண்டது. ஆனால் எனது எழுத்துப் பயணம் என்பது மிகவும் குறுகிய காலத்தை கடந்து செல்வது. என்னையும் எனது கவிதைகளையும் 2011 ஏ இலக்கிய உலகத்திற்கு அறிமுகப் படுத்தியது என்பதுதான் இந்த 2011 எனக்கு மிகவும் முக்கியமான வருடம் என சொல்லவேண்டி வந்ததற்கு காரணம். நீண்டநாட்களாக எனது கணினியிலும், மட்டைக் கொவைகளிலும் தேங்கிக் கிடந்த கவிதைகளை தூசு தட்டி வெளியே எடுத்து, எனது அந்த கிறுக்கல்கள் கவிதைகள் தான் என்கின்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த இந்த 2011 ஐ எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்?

எனது முதல் கவிதைத் தொகுப்பான "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற கவிதை நூலையும் இரண்டாவதாக "வேர்களும் பூக்காட்டும்" எனப்படும் உளவியல் நூலையும் நான் வெளியிட்டது இந்த வருடத்தில் தான். இந்த இரண்டு நூல்களிற்கும் பிள்ளையார் சுழி போட்டு எனது இந்த இலக்கிய பயணத்தை இந்த வருடம் இனிதே ஆரம்பித்து வைத்த அந்த நல்ல மனிதர்களை மறந்து விட முடியாது. கலைஞர் பாலச்சந்திரன், எழுத்தாளர் சிவகரன், தமிழ் மணி அகளங்கன், கவிஞர் மன்னார் மணி, அருட்திரு செபஸ்டியன் அடிகளார் மற்றும் அன்பிற்குரிய A.R.V.லோஷன் அண்ணா போன்றவர்களே அவர்கள். இவர்களுக்கும் நான் என்றும் கடமைப் பட்டே இருக்கிறேன். ஆக, இந்த இரண்டு நூல்களின் வெளியீட்டின் பின்னரே 'பி.அமல்ராஜ்' என்கின்ற ஒரு நபரை கொஞ்சம் அதிகமான மனிதர்களுக்கு தெரிய வந்தது. மிகப் பரந்த இலக்கிய உலகத்தில் எனக்கும் ஒரு சிறு இடத்தையும் ஒரு மிகச் சிறிய பெயரையும் பெற்றுத் தந்த இந்த 2011 ஐ மறக்க முடியாது. 

இந்த இலக்கிய உலகத்தில் எனக்கென்று ஒரு சிறு இடத்தைத் தவிர பல இலக்கிய நண்பர்களையும் பல இலக்கிய மேதாவிகளின் உறவுகளையும் பெற்றுத்தந்த இந்த வருடம் என்றும் எனது மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கும். 

இதை தவிர்த்து அடுத்து மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தேறியதும் இந்த வருடம் தான். எனக்கு மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பம் வரை இந்த பதிவுலகம் பற்றி எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. தற்செயலாக ஒருமுறை லோஷன் அண்ணாவின் வலைப் பூவிற்கு சென்று பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் அவருடைய அந்த வலைப்பூவில் நான் முதல் முதல் வாசித்த பதிவு 'நல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்???'  என்கின்ற வெறித்தனமான ஒரு பதிவு. எனக்கு பதிவுலகில் ஆரம்பமே அமர்களமாய் இருக்கிறதே என அந்த முழு பதிவையும் வாசித்து விட்டு அட பதிவுலகத்திற்குள் இத்தனை ப்ராப்ளமா என எண்ணிக்கொண்டு ஒரு பெருமூச்சு வேறு விட்ட பின் சரி நாமும் எழுதலாம் என எண்ணி ஆரம்பித்ததே இந்த புலம்பல் என்னும் எனது வலைப்பூ. அப்பொழுதெல்லாம் இந்த பதிவர்களுக்கிடையில் நடைபெறும் சர்ச்சைகளை லோஷனின் களத்தினூடாக நான் அதிகம் ரசித்ததுண்டு. (அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த லோஷனின் களத்தைத் தவிர வேறு எவரின் வலைப்பூவும் அறிமுகமில்லை..) என்னமாயா அடிச்சுக் கொள்ளுறாங்க என முகத்தை நீட்டியபடிதான் எனது இந்த பதிவுலகத்துள் என்னால் நுழைய முடிந்தது.இலக்கிய உலகத்தின் உள் வெளிக் குத்துக்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தமையால் இந்த பதிவுலக முரண்பாடுகள் எனக்கு அந்தளவிற்கு ஆச்சரியமாய் தெரியவில்லை. இவ்வாறு இந்த பதிவுலகத்தையும் அறிமுகப் படுத்தியது இந்த 2011 தான். ஏதோ அன்றிலிருந்து மனதில் பட்டதை அப்பப்போ எனது வலைப்பூவில் பதிவதுண்டு. அப்பொழுதெல்லாம் (இப்பொழுதும் தான்) மனதில் படும் சகல உணர்வுகளையும் கொட்டிவிடுவதற்கு ஒரு நல்ல தொட்டியாகவே நான் எனது வலைப்பூவை பயன்படுத்துகிறேன். (சத்தியமா பேர், புகழ், சிறந்த வலைப்பதிவர் என்கின்ற மகுடம் என எதற்காகவும் நான் பதிவிடுவதில்லேங்க... அட சத்தியமா.. அப்பிடி முயற்சித்தாலும் நடக்குமாங்க... ஐயோ ஐயோ..)

பதிவுலக ஆரம்பமே இப்படி இருக்க, இன்றுவரை எனக்கு இந்த பதிவுலக உள்குத்து வெளிக்குத்துக்கள் புரியவே இல்லேங்க.. (கொய்யாலே, இப்பதான் 77 பதிவு போட்டிருக்காய், அதற்குள்ள இதெல்லாம் தெரியணுமாக்கும் என நீங்கள் நாக்கைக் கடிப்பதும் புரிகிறது..) சரி அதை விடுத்து, இவ்வாறு இந்த வருடம் இந்த அருமையான வலைப்பூவையும் பதிவுலகத்தையும் காட்டியிருக்கிறது என்பது சந்தோசமான விடயம். 

அதன் பின்னர், என்னால் அதிகமான பதிவர்களின் வலைப்பூக்களை சென்று பார்க்க முடிந்ததும் அவர்களுடனான நட்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்ததும் இந்த வருடத்தின் சாதனை என்று கூட சொல்ல முடியும். அவ்வாறு நான் தொடரும் அந்த பதிவர்களின் வலைப்பூக்கள் ஏராளம். எனது வலைப்பூவையும் சில பிரபல பதிவர்கள் வாசிக்கிறார்கள் என்பது எனக்கு பெருமையே. அதிலும் ஈழவயலில் என்னை சேர்த்துக்கொள்ள நிரூபனிற்கு வந்த துணிவை என்னால் இன்றுவரை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எனது பதிவுகளின் மேல் அவர் கொண்ட நம்பிக்கையும், என்மேல் கொண்ட நம்பிக்கையுமே அவரை இப்படி ஒரு விடயம் செய்வதற்கு தூண்டியிருக்கும் என எண்ணுகின்றேன். அதற்காக அவரிற்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். 

ஆக, எனது எழுத்துப் பயணத்தின் மிக முக்கிய கட்டம் இந்த 2011 இலேயே நிகழ்ந்திருக்கிறது. எனது எழுத்துக்களை இலக்கியம், பதிவுலகம் என இரு பெரும் தளங்களில் கொண்டு போய் சேர்த்த இந்த வருடம் எனக்கு என்றுமே பொன்னான வருடமே. இந்த கடந்த கால மீட்டல் எனக்கு மிகவும் ஒரு மன சந்தோசத்தை கொடுத்திருந்தாலும் இவற்றை அடுத்த வருடம் காப்பாற்றியாக வேண்டும் என்பது மனதளவில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் ஆகும்.

பி.கு. இந்த பதிவு எவரையும் புகழ், துதி பாடும் பதிவு என யாராவது மக்கள்ஸ் எடுத்துக்கொண்டால்.. ப்ளீஸ் அப்பிடி எடுத்துக் கொள்ளாதேங்கோ... வெறுமனே இது எனது 2011 பயணத்தை மீட்டிப் பார்க்கும் பொழுது ஆங்காங்கே கொட்டிய உணர்வுகளை பதிவாக்கியிருக்கிறேன். அவ்வளவுதான். ஓகே....??? அது.


எனது நண்பர்கள், உறவுகள், இலக்கிய நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், வாசக நண்பர்கள் அனைவரிற்கும் பிறக்கப்போகும் புத்தாண்டு சகல சௌபாக்கியங்களும் கொடுக்கும் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கின்றேன். 

Thursday, December 22, 2011

மதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.


கவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை  விரும்பாதோரும்  இவை ஆட்கொள்ளாதோரும்  இருக்கவே  முடியாது. அவ்வாறான  இந்த உணர்வியல் விடயங்களை எமக்கு இலகுவாக கிடைக்கச்செய்யும் ஒரு ஊடகம் தான் நம்ம தமிழ் சினிமா.

பரந்துபட்ட சினிமா உலகத்தில் எத்தனையோ புதிய புதிய படைப்புக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தும், அவை அனைத்துமே ரசிகர்களின்  மனங்களில்  தங்க  முடிவதில்லை. அதேபோல  சில படைப்புக்கள் வந்தவுடனேயே மனங்களில் ஏறி நிரந்தரமாக அமர்ந்துகொண்டு எங்கள் ரசனைக்குள் ரகளை செய்யக்கூடியவை. இவ்வாறான படைப்புக்களில் முதல் இடம் பெறுபவை இந்த திரைப்பட பாடல்கள். திரைப்படம் வருவதற்கு முன்னாலே வெளிவந்துவிடுகின்ற இந்த பாடல்கள் அந்த திரைப்படத்திற்கான தலை எழுத்தாகவும் அமைந்து விடுகின்றன. பாடல்களை வைத்துக்கொண்டு திரைப்படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் எப்பொழுதுமே சினிமாவில் அதிகம். அந்தவகையில் வெளிவரும் பாடல்கள் சில எங்கள் ரசனையை பாடாய் படுத்தாமல் போய்விடுவதில்லை.

இவ்வாறான இந்த பாடல்களில் மிகப் பிரதானமாக மூவரின் பங்கு இருக்கிறது. பாடல் ஆசிரியர், இசை இயக்குனர், பாடகர். இந்த மூன்று பேருமே இந்த இசை உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கக் கூடியவர்கள். அதற்கு நல்ல கூட்டணி மனநிலை அவசியம். இளையராஜா, வாலி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, ஹரிஹரன் பின்னர் ஹரிஸ் ஜெயராஜ், ந.முத்துக்குமார், கார்த்திக் என்கின்ற எனக்கும் பிடித்த ஒரு வெற்றிக் கூட்டணி இன்னும் இருக்கிறது. (இதை விடவும் பல உண்டு)

இந்த கூட்டணிகளிலே எனக்கு அதிகம் பிடிக்கும், லயக்கும் ஒரு நபர் இந்த பாடலாசிரியர். அவர்களால்  எழுதப்படும்  எங்களை  மயக்கும்  அந்த வரிகளுக்காகவே அவர்களை எமக்கு பிடித்துப் போகிறது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் என நீளும் எனது பிடித்தமான சினிமா பாடலாசிரியர்கள் (கவிஞர்களைப் பற்றி சொல்லவில்லை) என்கின்ற வரிசையிலே அண்மைக்காலமாய் இன்னொருவரும் சேர்ந்திருக்கிறார். அவர்தான் வெறுமனே வயசான, கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் வாரிசு மதன் கார்கி.


ஷங்கரின் இந்திரன் திரைப்படத்தின் 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' என்கின்ற பாடலோடு சினிமாவில் அறிமுகமானதில் இருந்து கார்க்கியை எனக்கு பிடித்துப்போனது. அவரது அந்த இந்திரன் பாடல் ஒருவரின் முதல் பாடல் என்கின்ற மட்டத்தை தாண்டி அனுபவ பாடலாசிரியருக்குரிய ஒரு முகத்தைக் காட்டியமை அவரை இலகுவாக அனைவரும் உயர்வாய் எடுத்துக்கொள்ள வழிகோலியது எனலாம். எனக்கும் கார்கி என்கின்ற ஒரு பாடலாசிரியரை அதிகம் பிடித்துக்கொள்ள காரணமானவை அவரது வெறும் நான்கு பாடல்கள் தான்.

ஒன்று இந்திரன் பட 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ', இரண்டாவது கோ பட 'என்னமோ  ஏதோ', மூன்றாவது 180 பட 'நீ கோரினால்', நான்காவது  இப்போ  மனங்களை  வசீகரிக்கும்  நண்பன் திரைப்பட "அஸ்க் லஸ்க்கா" பாடல்.


இந்த சகல பாடல்களிலும் ஒரு வித்தியாசமான ஒரு வசீகரம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். அதுவே என்னை முதல் முதல் ரசிக்க வைத்த விடயம். நான் பொதுவாகவே இசையையும் கவிதையையும் அதிகம் ரசிப்பவன் என்பதாலோ என்னவோ கார்கியின் பாடல்களை நல்ல கவிதைகளாகவே பார்க்க முடிகிறது. கார்கியின்  இந்த நான்கு பாடல்களுமே மெகா கிட் ஆனா பாடல்கள். அண்மைக்காலங்களில்  நான்  அதிக தடவைகள் கேட்ட பாடல் என்கின்ற பெருமையை முதலில் கோ படத்தின் என்னமோ ஏதோ பாடலும் இப்பொழுது நண்பன் திரைப்படத்தின் அஸ்க் லஸ்க்கா எடுத்துக்கொண்டன. (இதன் ப்ரோமோ வடிவம் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தது இந்த பதிவு எழுதும் வரை.)

கார்கியின் இந்த இரண்டு பாடல்களிலும் நான் மயங்கிப் போனது சுவாரசியமான விடயம். இந்த என்னமோ ஏதோ பாடலின் வரிகள் ஒரு காந்தசக்தி கொண்டவை. ஒவ்வொரு வரிகளிலும் தனது தந்தையின் ரத்தம் தெரிகிறது.


ஏனோ குவியமில்ல குவியமில்ல ஒரு காட்சிப்பேளை
உருவமில்லா உருவமில்லா நாளை.
நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே..
இந்த வரிகள் மிகவும் இயல்பானவை. ஆனாலும் இதற்குள் முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் புதிய கருத்தை புதிய வார்த்தைகளால் ஆனால் இயல்பாக சொல்கின்றமை. அதுவும் மெலடி என்பதால் அந்த டியுன் இற்கும் முண்படாமல்.. என்ன அழகு.

இதைபோலவே, அடுத்து  நம்  மனங்களை  காற்றில்  பறக்க வைத்துக்கொண்டிருக்கும் நண்பன் திரைப்பட அஸ்க் லஸ்க்கா பாடல். எத்தனை முறை கேட்டாலும் கவி வரிகள் ரசனையை முத்தமிடுகிறதே தவிர  அலுத்துப்  போவதாய்  இல்லை. ப்ரோமோ  பாடலை  மட்டும் கேட்டுவிட்டு இந்த பதிவை போடும் அளவிற்கு அந்த பாடல் என்னை கவர்ந்து தொலைத்தது உண்மைதான்.


லூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டும் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே....
இந்த வரிகளை என்னால் உதடுகளிலிருந்து வாபஸ் பெறவே முடியவில்லை. நேற்று மதியம் முதல் உதட்டிற்கும் குரல் வளைக்கும் இடையில் சலிப்ன்றி ஓடித்திரிகிறது இந்த வரிகள். இதே போல குரலில் கேட்காவிடினும் (ப்ரோமோ பாடலில் இந்த வரிகள் இல்லை) வரிகளாய் ஜன ரஞ்சகம் செய்த இன்னும் சில வரிகள்.

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை
நீ கொள்ளை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே..

யப்பா... அவர்  பாடல்களில்  நான்  அவதானிக்கும்  இரண்டு விடயங்களிற்காக, கார்க்கியை எனக்கு அதிகம் பிடிக்கிறது இப்பொழுது காரணம்,

ஒன்று, தந்தை  போன்ற  அதீத தேடல் கார்கியின் பாடல்களை இன்னுமொரு தளத்திற்கு கொண்டு போய்விடுகிறது. உதாரணமாக இதுவரை எழுதியுள்ள சுமாராக ஐம்பது பாடல்களில் இரண்டு பாடல்கள் வேற்று மொழிகளில் எழுதப்பட்டவை. ஒன்று ஏழாம் அறிவில் வந்த ஒரு சீன மொழிப் பாடல், இன்னொன்று 180 திரைப்படத்திற்காய்  எழுதிய  அந்த  போர்த்துகீஸ் மொழிப்பாடலுமாகும்.

இரண்டாவது, வார்த்தை ஜாலங்களும், யாரும் எண்ணாத கோணத்திற்கு கருத்துக்களை கொண்டுபோய் நிறுத்தும் விதமும். இவ்வாறாக இந்த இரண்டு சிறப்பியல்புகளும் கார்க்கியை ஒரு சிறந்த பாடலாசிரியராக மாற்றும் என்பதில் எவரிற்கும் நம்பிக்கை உண்டு.


மதன் கார்க்கியை, கவிப்பேரரசின் மகன் என்பதற்கல்ல, ஒரு இயல்பான, ரசனை  மிக்க, அழகான  கவிதைகளை  பாடலாய்  தரும்  ஒரு  இளம் பாடலாசிரியராக  எனக்குப்  பிடிக்கும். இன்னும்  பல  பாடல்களுக்காய் காத்திருக்கும்  நல்ல  அழகிய  கவிதைப்  பாடல் விரும்பிகளுள்   நானும் ஒருத்தன்.


கோ திரைப்பட 'என்னமோ ஏதோ' திரைப்பட பாடலை கேட்க.
என்னமோ ஏதோ

நண்பன் திரைப்பட 'அஸ்க் லஸ்க்கா' ப்ரோமோ பாடலைக் கேட்க்க.
அஸ்க் லஸ்க்கா_ப்ரோமோ

நண்பன் திரைப்பட 'அஸ்க் லஸ்க்கா' முழு பாடல் வரிகளையும் பார்க்க.
'அஸ்க் லஸ்க்கா' வரிகள்_மதன் கார்கி ப்ளாக்.


.

Sunday, December 18, 2011

வாய்க்குள் போனதும் ஆம்பிளையாகும் நம்ம குடிமக்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. நேரமும் மனநிலையும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இன்று நான் உங்களோடு பேச வரும் விடயம் இந்த நல்லவங்க கெட்டவங்க என்கின்ற விடயத்தை அடித்தளமாகக் கொண்டது. மனிதர்களை இன்று நாங்கள் பல வகையறாக்களுக்குள் பிரித்து பார்க்க முடியும். அந்த சகல பகுப்பாய்வுகளையும் தாண்டி மிகவும் சாதாரணமாக நாம் மனிதர்களை வகைப்படுத்திக் கொள்ளும் ஒரு இலகுவான வகைப்படுத்தல் தான் இந்த 'நல்லவர்கள் கெட்டவர்கள்' என்கின்ற பாகுபாடு. 

ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் என்று எதைவைத்து பேரம் பேசுகிறார்கள் என்றால் அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. எந்த அளவுகோலைக் கொண்டு ஒரு மனிதரை நல்லவர் என்று சொல்லமுடியும்? அதேபோல கெட்டவர் என்று? இந்த விடயங்களை ஆராய்ந்தால் பல விடயங்கள் திரைக்கு வரும். ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் என்று அளப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதாரண அளவுகோல்கள் பல. ஒழுக்கம், சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், சமூக கட்டமைப்பிற்கு பொருந்துகையுடைய விடயங்கள், சமய நெறி, குடும்ப பழக்க வழக்கங்கள், பாரம்பரிய முறைமைகள் என பல அளவுகோல்களை சொல்ல முடியும். இந்த அளவுகோல்களைத் தாண்டி ஒரு சுவாரசியமான விடயமும் இருக்கிறது. அதாவது ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை அவர் மேல் நமக்கு இருக்கும் விருப்பு வெறுப்புக்களும் தீர்மானிக்கின்றன. பெரும்பாலும் நமக்கு பிடிக்காத ஒருத்தர் நமக்கு கெட்டவராகவே தென்படுவார். (அதேபோல கெட்டவர்கள் எல்லாரும் நமக்கு பிடிக்காதவர்கள்தான்) ஆக ஒருவர் மீதுள்ள நமது தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்களும் அவரை நல்லவரா கெட்டவரா என பாகுபடுத்துவதில் பெரும் இடம் வகிக்கின்றன. 

நல்லவர்கள் என்று இங்கு யாரும் இல்லை என்கின்ற ஒரு கோட்பாட்டை நான் அதிக காலம் கொண்டிருந்தாலும் பின்னர் கெட்டவன் என்று ஒன்று இருக்கும் பொழுது நல்லவன் என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும் என்கின்ற தர்கவியல் கோட்பாட்டினால் இப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியாயிற்று. அப்படியெனின் இந்த கெட்டவர்கள் எனப்படுவோர் யார்? எப்படி பெயரிடப்படுகிரார்கள்? என்னைபொறுத்த மட்டில் ஒருவன் செய்யும் தவறுகள் அல்லது திட்டமிட்டு செய்யப்படும் விடயங்கள் அவனையும் அவன் சார்ந்தவர்களையும் பாதிக்காமல் அல்லது வதைக்காமல் இருக்குமேயானால் அதை அவன் தவறு அல்லது தான் கெட்டவன் என்று அறிந்துகொள்ள அதிக நாட்கள் ஆகும். அவன் செய்யும் தவறுகளினுடைய வீரியம் குறையும் பொழுது அவன் கெட்டவன் என்கின்ற வகைப்படுத்தலின் தேவையும் குறையத்தான் செய்யும். 

சரி, விடயத்திற்கு வருகிறேன். பல நல்லவர்களை பார்த்திருந்தாலும் எப்பொழுதும் நாம் அனுபவிக்கும் சில கெட்டவர்களின் நினைவுகள் எம்மைவிட்டு அவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவதில்லை. அந்தவகையில், நான் பார்த்த ஒரு மிகப் பெரிய கெட்டவன் என்கின்ற ஆளுமை நமது சமூகத்தில் ஏராளமாய் திரியும் 'குடிமக்கள்". அதுதான் போதை ஏறும்போது மட்டும் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முனைபவர்கள். 'மது அருந்துபவர்கள்' என்கின்ற பதத்திற்கும் 'குடிகாரர்கள்' என்கின்ற பதத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருக்கிறது. கருத்தியலில் நோக்கின், மது அருந்துபவர்கள் எல்லாம் 'குடிகாரர்கள்' இல்லை. இங்கு குடிகாரர்கள் என நான் கருத்தியலில் சொல்ல முற்படும் மனிதர்கள் போதையில் சுய நினைவை மறந்து வன்முறையாளர்களாக மாறுபவர்கள். மது அருந்துதல் என்பது இன்று சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பழக்க வழக்கமாக இருந்தாலும் அது நமது சமூகத்தை முழுமையாக விட்டு நீங்கவில்லை. நீகவும் போவதில்லை. காரணம் நவீன சமூக நகரமயமாக்கல் உலக வளர்ச்சியில் மது அருந்துதல் என்பது ஒரு ஊக்கப்படுத்தப்படா பண்பாடாகவே வளர்கிறது. இந்தப் பண்பாட்டு சிக்கலுக்குள் வாழ்க்கை ஓட்டும் மனிதர்கள் இதை இப்பொழுதெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. வெளிநாட்டில்  வொட்காவும் வைனும் அருந்துபவனும் நம்ம ஊரில் பட்ட சாராயம் அருந்துபவனும் வகைப்படுத்தலில் குடிகாரன்தான். ஆக, நவீன மயப்படுத்தப்படும் இந்த சமூகம் விரும்பா மனித பழக்க வழக்கம் கூட  என்றோ ஒருநாள் வாழ்வியலில் சாதாரணமான விடயமாக போகலாம்.

நம்ம விடயத்திற்கு வந்தால், இந்த நம்ம குடிமக்கள் என போற்றப்படுவோர் செய்யும் அட்டகாசங்கள் நமது ஊர்களில் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. சிலரிற்கு சாராயத்தை கண்டால் மட்டுமே ஆண்மை மலரும். ரோசம் குதிக்கும். மானம் துள்ளும். படிக்கட்டில் மனைவி பேச்சை கேட்டு சமத்தாய் இருந்த சுப்பு மாமா வடி அடித்தால் மட்டும் முப்பது வருடம் கழிச்சும் இன்றும் அன்னம்மா அக்காவிடம் சீதனம் கேட்பதும் நமக்கு தெரியும். என்ன சொன்னாலும் கேட்கும் நம்ம சுந்தரம் மாமாவும் இப்படித்தான் கொஞ்சம் சாராயம் குடித்துவிட்டால் நான் சொல்லுற படிதான் நீ கேட்கணும் எண்டு மனைவி தலையை பிடித்து பிய்ப்பார் என்பதும் நாமறிந்த உண்மை.  500 ரூபாவிற்கு குடித்துவிட்டு வீடுவரும் சோமு அண்ண அன்று இரவு முழுவதும் தற்செயலாக மனைவி சந்தையில் தொலைத்த நூறு  ரூபாய்க்காய் மனைவியை வெளுத்து வாங்குவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி பல கதைகள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும்.


ஆக, நமது சமூகத்தில் இப்படிப்பட்ட குடிமக்களால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் நம்ம பெண்கள்தான். இந்த குடிமக்கள் தங்கள் போதை ஞானத்தில் நிரூபிக்க நினைக்கும் தங்கள் செத்துப்போன ஆண்மையை இலகுவாக காட்டுவதற்கு இலகுவாக கிடைப்பவர்கள் இந்த பெண்கள். என்றோ ஒருநாள் போதையில் வீரம் பேசும் போதை ஆண்மை கொண்டவனை மனைவி கடப்பாரையால் வெளுக்கும் வரை இந்த குடிமக்கள் மாறப்போவதில்லை. 

ஆகவே, மக்கள்ஸ், போதையில் வரும் வீரம் மொக்கை வீரம். போதையில் வரும் ஆண்மை செம மொக்கை காமடி. ஆக, நீங்கள் போதையில் உங்களை இளக்காதவரை மது உங்களை எதுவும் செய்யப்போவதில்லை. போதையில் உங்களை நீங்களே கட்டுப்படுத்தத் தெரியாவிடின் அந்த மதுவை விலக்குவது உங்களுக்கு நன்மை. குடித்தாலும் உங்கள் வீரத்தை வீதியில் உள்ள போலீஸ் காரனிடம் காட்டுங்கள். வீட்டிலுள்ள அந்த அக்காவிடமோ, அண்டியிடமோ அல்லது அம்மாவிடமோ காட்டாதீர்கள். உங்களை நீங்களே குறைத்துக்கொள்ளும் அதிகமான சந்தர்ப்பம் உங்களிற்கு போதையில்தான் ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். 

.

Friday, December 16, 2011

காதல் பாடம்.

காதலை
நீ
எப்படி பார்த்திருக்கிறாய்?
கனவாய்..
கவிதையாய்..
காமமாய்..


இனிப்பை எடுத்து 
கசக்கி வீசியதும் 
குப்பையில் குடியேறும் 
இனிப்புப் பையின்
கண்ணீரை
பார்த்ததுண்டா நீ??

வாசல் வரை
வந்த உன்னை
இதயம் வரை
கொண்டு போனதில்
நான் பட்ட கஷ்டங்களை
அனுபவித்ததுண்டா நீ ?

விழியில் வந்துபோனதும்
என் 
மொழிகூட நீயென
என்
கவிதை மேலே 
சத்தியம் செய்ததை
அறிந்ததுண்டா நீ?

வீடு குழம்ப
முற்றம் முறைக்க 
எங்கள் சமையலறை 
சாம்பல் கூட எரிய
உன்னை
மனைவியாக்கிய 
அந்த 
புயல்
முத்தமிட்டுப்போன 
குடிசையை
பார்த்ததுண்டா நீ? 

ஒன்றை தெரிந்துகொள்,
காதலும்
கடவுளும்
ஒன்றுதான்..
நல்ல
மனிதனாக இருந்தால் போதும்,
நம்பிக்கை ஒன்றிலேயே
வாழ்க்கையை ஓட்டிவிடலாம்.

காதலில் 
மற்றவர்களை பார்க்கும்
உன் கண்ணால்
உன்னை இருமுறை
பார்த்திருக்கலாம்
காதலும் பிழைத்திருக்கும்
வாழ்க்கையும் தப்பியிருக்கும்.

ஏதோ,
உன்னை
இதயம்வரை
கொண்டுபோனத்தில் 
ஒரேயொரு நன்மை.
இரத்தம் 
இப்பொழுதெல்லாம்
திமிர் பிடித்து அலைகிறது
உன்னைபோலவே..

நீயும்
நானும்
காதலித்ததில்
இருவரும்
இறுதிவரை 
சேமித்துக்கொண்டது
'சுயநலம்' தவிர
வேறு என்ன?

உணர்வை
மதிக்கத்தெரியாத 
உங்களுக்கு
காதலும்
காமமும்
ஒன்றுதான்.

ஒன்றை புரிந்துகொள்,
காதலில்
கலியாணத்தைவிட  
கௌரவம் 
மிகவும் முக்கியம்..

மனிதனை
மதிக்கத்தெரியாத உனக்கு
எப்படி
இதயத்தை பூசிக்கத்தெரிந்திருக்கும்?

என்னை
வெறுத்தால்
இதயம் அனாதையாகும்.
எரித்தால்???

காதல்
அசிங்கப்படும்போதுதான்
ஆண்கள்
கற்பழிக்கப் படுகிறார்கள்.

ஆகமொத்தத்தில்
உங்கள் கற்பும்
எங்கள் கற்பும்
காதலால்தான் 
காப்பாற்றப்படுகிறதே ஒழிய 
காமத்தால் அல்ல.

.

Friday, December 2, 2011

எழுத வந்தவர்களும் எழும்பி ஓடியவர்களும்.

எழுது கோல்களின் முனைகளை சவரம் செய்து காலத்திற்கு ஏற்றாற்போல் படைப்புக்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் நமது இலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. உலகத்தில் அந்தந்த தாய் மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் இலக்கிய உலகத்தில் தமிழ் இலக்கிய உலகம் என்பது கி.மு.300 தொடங்கி இன்றைவரை கட்டி எழுப்பப்படும் ஒரு பழமை மிக்க இலக்கிய தளம் ஆகும். சங்க இலக்கியம் தொடங்கி (கி.மு.300௦௦ - கி.பி. 300) இந்த பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் வரை மிகவும் நீண்ட வயதினைக் கொண்டது நமது இந்த தமிழ் இலக்கிய உலகம். இந்த நீண்ட கால இலக்கிய போக்கிலே அந்தந்த காலங்களுக்கு ஏற்றாற்போல் ஆங்காங்கே பிறப்பெய்திய பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், புராண இலக்கியங்கள், சமையம் சார் தமிழ் இலக்கியங்கள், புதினம், புதுக்கவிதை, ஆராட்சிக்கட்டுரைகள், அறிவியல் இலக்கியங்கள் என காலத்தின் கண்ணாடியாக உருப்பெற்ற தமிழ் இலக்கியங்கள் இந்த நீண்ட கால புராதன தமிழ் இலக்கிய வெற்றிக்கு வழிகோலின எனலாம். இப்படிப்பட்ட தமிழ் இலக்கிய உலகில் நமது ஈழத்து இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. தமிழ் இலக்கியம் என்று வருகிறபொழுது ஈழத்து தமிழ் இலக்கியத்தை புறம் தள்ளிவிட்டு ஆராய்வது அடிப்படையிலேயே பொருத்தமற்றது என்பது யாவரும் அறிந்த வெளிப்படை உண்மை. 

அந்த வகையில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் தொடர்ச்சியாக நடை பெற்றிருப்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கும். ஈழத்து பூதந்தேவனாரின் சில அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை பாடல்கள் தொடங்கி இன்றைய இளம் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் வரை இந்த ஈழத்து தமிழ் இலக்கிய உலகு விரிந்து செல்கிறது. இவ்வாறான இந்த தொன்மையான ஈழத்து இலக்கிய படைப்புக்கள் இன்று காலத்திற்கு ஏற்றாற்போல் நவீனத்துவ முறைமைகளின் அடிப்படையில் புத்துணர்ச்சி பெற்று காலத்தை காட்டும் கண்ணாடியாக படைக்கபடுதல் ஈழத்து இலக்கிய போக்கில் ஒரு நல்ல வளர்ச்சியின் குறிகாட்டியாகவே நோக்கப் படுகிறது. இவ்வாறானதொரு நீண்ட இலக்கிய தளத்தில் எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வதற்கு என்னால் முடியாது என்பதாலும் அதற்குரிய அறிவும் பக்குவமும் இன்னும் எனக்கு வரவில்லை என்பதாலும் மிகச்சாதாரணமாக இந்த நவீன காலத்தில் இளம் தலைமுறை படைப்பாளிகள் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றி அதிக பிரசங்கித் தனம் இல்லாமல் எளிமையாக பேச முயல்வதுதான் எனது இந்த கட்டுரையின் முதல் நோக்கம். 

இன்றைய ஈழத்து தமிழ் இலக்கிய மேடையில் மிகப் பிரதானமாக மூன்று தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்கள் பேனாக்களோடு படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியத்தை தவிர்த்து பொதுவாகவே தலைமுறை இடைவெளி என்பது இன்று பல மட்டங்களிலே பரவலாக பேசப்பட்டு வருகின்ற அல்லது பல எதிர் மறை விமர்சனங்களை உருவாக்கிவருகின்ற ஒரு விடயம். இதற்கு எங்களுடைய வீடுகளிலே எங்கள் பாட்டன் பாட்டிக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் இடையில் அரங்கேறும் மோதல்களும், பாடசாலைகளிலே ஆசிரியரிற்கும் மாணவனிற்கும் இடையில் உருவாகும் அறிவுரை சார் சண்டைகளும், வேலைத் தளங்களிலே மூத்த அதிகாரிகளுக்கும் இளம் தலைமுறை வேலையாட்களுக்கும் இடையில் நடைபெறும் கருத்துச் சண்டையும் பொதுவான உதாரணங்களாகும். இதற்கு காலத்தின் நவீனத்துவ மாற்றமும், பழமைவாத அல்லது புராதன கொள்கைவாத கோட்பாடுகளும், சுழல் கலாச்சார கொள்கைகளும் மற்றும் மிக முக்கியமான தன முனைப்பான குறிக்கோள் (ego), பகட்டு மரியாதை தேடல் முனைப்பு போன்ற உளவியல் சார்ந்த விடயங்களும் காரணங்கள் என சொல்ல முடியும். இவ்வாறான இந்த தலைமுறை இடைவெளி குடும்பங்களை தாண்டி, குழுக்களைத்தாண்டி,  சமுதாயங்களைத்தாண்டி, இலக்கிய சூழலில் எவ்வாறான தாக்கங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தால் அதன் விளைவுகள் வாய்விட்டு பேசக்கூடியவை. 

நான் ஏற்கனவே மேலே கூறியதைப்போல இரண்டு மூன்று தலைமுறை படைப்பாளிகள் ஒரே தளத்தில் நின்று இலக்கியங்களை படைக்கும் பொழுது, இங்கு உருவாகும் சில பல தலைமுறை இடைவெளி தொடர்பான முரண்பாட்டு விடயங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அந்தவகையிலே, ஈழத்து தமிழ் இலக்கிய உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முது பெரும் இலக்கிய ஜாம்பவான்களோடு அதே தளத்தில் புதிதாக எழுதுகோல்களுடன் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகள் எவ்வாறு ஒருவரை ஒருவர் முகம் கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விடயம். முதலிலே, இந்த மூத்த இலக்கியவாதிகளை இந்த இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் மனங்களிலும் தலைகளிலும் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதற்குரிய காரணங்களை இந்த இளம் படைப்பாளிகள் சிறப்பாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஒரு விடயத்திலே தேர்ச்சி, அனுபவம் மிக்கவர்கள் எப்பொழுதுமே அந்த விடத்திற்குள் வரும் புதுமுகங்களுக்கு நல்ல வழிகாட்டிகள் என்பதாகும். இரண்டாவது, இந்த தேர்ச்சி மிக்கவர்களிடமிருந்து இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ளவேண்டிய விடயங்கள் ஏராளமாக இருக்கிறது என்பதாகும். மூன்றாவதாக, இந்த இளம் தலைமுறையினரால் நமது பெரியவர்களை புறம்தள்ளிவிட்டு தனித்து இலக்கிய கிரீடத்தை தலையில் சுமந்துகொள்ள அறிவு, அனுபவம் ரீதியாக தகுதியானவர்கள் அல்ல என்பதாகும். அடுத்து, மூத்த படைப்பாளிகள் அவர்களின் முன்னோர்களிடமிருந்து எடுத்துக்கொண்டுவந்த இந்த இலக்கிய பொறுப்பை இந்த தலைமுறையினர் மூலமாகவே அடுத்த சந்ததியினரிற்கு கடத்த முடியும் என்கின்ற “பொறுப்பு கடத்தல்“ சரியாக நடைபெற இந்த மூத்த எழுத்தாளர்கள்தான் மிக முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள் என்பதாகும். இவ்வாறன பல உண்மையான விடயங்களை இந்த இளம் தலைமுறையினர் சரியாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.

ஆகவே, இந்த மூத்த படைப்பாளிகளை இளம் படைப்பாளிகள் எப்பொழுதுமே தங்கள் வழிகாட்டிகளாக, குருக்களாக, முன்னோடிகளாக, பல்கலைக் கழகங்களாக ஏற்று போற்றுகிறார்கள். மதிக்கிறார்கள். வணங்குகிறார்கள். அந்தவகையிலே இளம் எழுத்தாளர்கள் தங்கள் மூத்தவர்கள் மட்டில் சரியான புரிதல்களை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியும். ஆனாலும், இது எந்தளவிற்கு நூறு வீதம் உண்மை என்பதையும் நாம் சற்று எண்ணிப்பார்த்தல் அவசியம். இந்த மனநிலையில் இல்லாத சில இளம் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது கைகளில் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லையே. இவ்வாறு சில இளம் எழுத்தாளர்கள் ஏன் தங்கள் மூத்த படைப்பாளிகளை மதிப்பதில்லை, கொண்டாடுவதில்லை என்றால் அதற்கும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று சிறியவர்களின் குழந்தை செருக்கு, அவர்களின் குறுகிய மட்டுப்படுத்தப் பட்ட மனநிலை என அடிப்படையான இரு காரணங்களைச் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் மீதான சில மூத்தவர்களின் தவறான போக்குகளும் நடத்தைகளும் காரணமாக அமைந்து விடுகின்றன. 

பொதுவாகவே, அண்மைக் காலங்களில் இந்த சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான சில முரண்பாடுகள் நா தொடங்கி முகப் புத்தகம் வரை விரிந்து கிடக்கின்றன. பெர்யவர்கள் இளம் படைப்பாளிகளை குறை சொல்வதும், இவர்கள் பெரியவர்களை பொல்லாப்பு பேசுவதும் சகஜமாகிப் போன ஒன்று. இந்த முரண்பாட்டு மோதல்களிற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அதற்கு இருவரும்தான் காரணம் என அடித்து கூறமுடியும். இன்று வரை பல மூத்த எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களில் அதிகம் நாட்டம் கொண்டு வாசிப்பதும் இல்லை. அதேபோல, சிறுசுகளும் தங்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிப்பதுவும், அவர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. இதுவே இந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்று சொல்லமுடியும். அதில் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. ஒரு மூத்த படைப்பாளி தன்னை அடையாள படுத்திக்கொள்ள முன்பெல்லாம் பல வருடங்கள் எடுத்தன. பல கஷ்டங்களை முகம்கொள்ள வேண்டி இருந்தன. சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், இன்றைய இளசுகள் வெறும் குறுகிய காலங்களில் தங்களை வேகமாக அடையாள படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இன்று அவர்களிற்கு தேவையான அளவு வேகமான சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றன. எனவே, தன்னை அடையாள படுத்திக்கொள்ள பத்து வருடங்கள் பல கஸ்ரங்களை பொறுத்திருந்த ஒரு மூத்த படைப்பாளி வெறும் சில மாதங்களிலேயே தன்னை ஒரு கவிஞனாக அடையாள படுத்திக்கொள்ளும் ஒரு இளம் படைப்பாளியை எப்படி நோக்குவார் என்பது கஷ்டமான விடயம்தான். இதை நான் உளவியல் அடிப்படியில் சொல்கிறேன். 


அதேபோல, நான் வெறும் ஒரே வருடத்தில் பல நூல்களை போட்டிருக்கிறேன், பொதுவாக அனைத்து ஊடகங்களும் என்னை அடையாள படுத்தி விட்டன, இலக்கிய உலகத்தில் இப்பொழுது என்னை பொதுவாக அனைவரிற்கும் தெரிகிறது. அப்படியெனில் இந்த மூத்த படைப்பாளிகள் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என ஒரு இளம் படைப்பாளி சொன்னதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இதையும் தாண்டி வயதெல்லை கடந்து நோக்குகிற பொழுது இலக்கியம் என்பதில் மூத்தவர்களும் இளையவர்களும் சமம்தானே. அப்படியாயின் தங்கள் எழுத்துக்கள் மற்றவருடைய எழுத்துக்களுடன் ஒப்பீடு செய்யும் பொழுது தரமிக்கவையாக இருக்காவிடில் இங்கு ஏற்றத்தாழ்வுகள் தானாகவே வந்துவிடும். இதை தவறு என்றும் நான் சொல்வதாக இல்லை. படைப்புக்கள் வயதைத்தாண்டியும் தரம் என்று வருகிற பொழுது இயல்பாகவே இந்த இரு தலைமுறையினரிற்கும் இடையில் போட்டித்தன்மை வந்துவிடுகிறது. தரத்தைப் பற்றி பேசுகிறபொழுது வயது, தலைமுறை இடைவெளி என்பன காணாமல் போய் விடுகின்றன. போய்விட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சிறியவர்கள் இடையில் சில மனக்கசப்புக்கள் வந்துவிடுகின்றன (எழுத்தாளனும் ஒரு சராசரி மனிதன் தானே). இவ்வாறான தரம் குறைந்த எழுத்துக்களை எப்பொழுதுமே எவருமே கொண்டாடுவதில்லை. எனவே, சிறியவர்களோ பெரியவர்களோ தரமான படைப்புக்களை படிக்கும்பொழுது மிகவும் இலகுவாக அவர் அடையாள படுத்தப்பட்டுவிடுகிறார். என்னைபொறுத்த மட்டில், எழுத்திலே, "தரமான சரக்கிருப்பவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.."

ஆக, இந்த இளம் தலைமுறையினர் சில விடயங்களை மிகச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்திலே பல விடயங்களைக் கற்பதற்கு மிகவும் பொருத்தமான புத்தகம் எது என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயமாக அது ஒவ்வொரு வாழும் மூத்த இலக்கியவாதிகள்தான் என்று சொல்வேன். இவர்களை விலக்கி, இலக்கியத்தில் அறிவும் அனுபவமும் பெற நினைப்பது சிறியவர்களின் முட்டாள்த்தனம் என்றே சொல்லத் தோணுகிறது. இந்த மூத்த படைப்பாளிகளை நாம் அவர்களின் காலங்களுக்குள் எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்தி எம்மை வளர்த்துக்கொள்வதே ஒரு இளம் படைப்பாளியின் புத்திசாலித்தனம் என நான் சொல்வேன். அத்தோடு, இன்னுமொரு விடயத்தையும் மிகவும் வெளிப்படையாக சொல்லியே ஆகவேண்டும். இந்த நமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளிகளை பகைத்து எம்மால் இலக்கிய உலகத்தில் மேலே வரமுடியாது என்பதையும் வெளிப்படையாக சிறியவர்கள் புரிந்தே கொள்ளவேண்டும். (இதனாலோ என்னவோ, சில இளம் படைப்பாளிகள் பல மூத்த இலக்கியவாதிகளிற்கு குடை பிடிக்கிறார்கள், இடுப்பு சொறிகிறார்கள்..) காரணம், ஒரு மூத்த இலக்கியவாதி ஒரு சாதாரண ஒருவரை இவர் ஒரு நல்ல கவிஞர் என்று சொன்னால் இலக்கிய உலகம் அவரை முளுமனதாகவே ஏற்று போற்றுகிறது. அதேபோல, ஒரு நல்ல இளம் கவிஞரை ஒரு மூத்த இலக்கியவாதி இவர் நல்ல கவிஞர் இல்லை என்று சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். 

அதேபோல, எமது மதிப்பிற்குரிய மூத்த இலக்கிய ஜாம்பவான்களும் சிறியவர்களின் ஏக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் எழுதினாலும் பேசினாதும் சிறியவர்கள் சிறியவர்கள்தானே? சிறியவர்களை வளர்த்துவிடவேண்டிய தார்மீக சமூகப் பொறுப்பு மூத்த படைப்பாளிகள் ஒவ்வொருவரின் தோள்களிலும் இருக்கிறது என்பது எமக்கு தெரியும். ஆகவே இந்த மூத்தவர்கள் இந்த சமூக வரலாற்று தவறினை இளைக்க விரும்பமாட்டார்கள் என்பது திண்ணம். இந்த இலக்கியத்தை அடுத்த சந்ததியினரிற்கு மூத்த படைப்பாளிகள் கொண்டுசெல்ல விரும்பினால் அது இந்த இளம் தலைமுறை படைப்பாளிகளால் மட்டுமே முடியும்.  அத்தோடு, சிறியவர்கள் மூத்தவர்களின் படைப்புக்களை வாசிக்கவேண்டியது கட்டாயக் கடமை. அதேபோல, மூத்தவர்களும் இந்த இளையவர்களின் படைப்புக்களை வாசித்து அவர்களை இனம்கண்டு தோள் கொடுக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தவிர்த்து இளம் படைப்பாளிகளை அவர்களின் படைப்பினைக்கொண்டு மட்டும் அவர்களை அடையாள படுத்துவதை எப்பொழுதும் நேர்மையாக செய்தல் மிகவும் அவசியமான ஒன்று ஆகும். அதேபோல, தங்கள் எழுத்துக்களை கோவைகளிலும், கைகளிலும், கடதாசிகளிலும், வலைப் பூக்களிலும், முகப் புத்தகங்களிலும் வைத்துக்கொண்டு மூத்த படைப்பாளிகளின் ஒரு சிறிய தட்டிக்கொடுப்பிற்காய் காத்துக்கிடக்கும் எத்தனையோ புதுமுக படைப்பாளிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத மூத்தவர்களையும் அதேபோல தங்கள் நேரத்தை செலவழித்து, நின்று அவர்களை தட்டிக்கொடுத்து போகும் மூத்தவர்களையும் நான் தினம் தினம் பார்க்கிறேன். இவை அனைத்தும் அவரவர் மேல் திணிக்கப் பட்டிருக்கின்ற இலக்கியக் கடமைகள் என்பதை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது. 

இறுதியாக, இவ்வாறான சில சிறிய சிறிய விடயங்களே இந்த இலக்கிய தலைமுறை இடைவெளியை அகலப் படுத்துகிறது. இவ்வாறன சின்ன சின்ன விடயங்களை முகம் கொள்ள முடியாமல் எழுத்தும் வேண்டாம் இந்த இலக்கியமும் வேண்டாம் என ஒதுங்கியவர்களையும் ஓடியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அத்தோடு, இந்த சிறு சிறு விடயங்களினால் மன உளைச்சலோடு வெளியிலும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல புதியவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறான பயம் பொருந்திய, மணி கட்ட துணிவு இல்லாத சில இளைய படைப்பாளிகளுக்காகவே இந்த கட்டுரை. பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி மற்றவரின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் இந்த இடைவெளிச் சிக்கல் மாயமாக மறைந்துவிடும். நிறைகளை கூற மனமில்லாத படைப்பாளிகள் மாற்றாரின் படைப்பின் மேல் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதும் ஆரோக்கியமான தலைமுறை இடைவெளியை உருவாக்காது. ஆக, இது எங்கள் இலக்கியம், எங்கள் மொழி, எங்கள் உலகம். நாங்களே எங்களை வளர்த்துக்கொள்தல் அவசியம். அதற்காக வானிலிருந்து எவருமே குதிக்கப்போவதில்லை. எங்கள் மூச்செல்லாம் இலக்கியத்தின் மேலும், படைப்புக்களின் மேலுமே இருக்கவேண்டுமே தவிர தனிப்பட்ட மனித ஆசா பாசங்களின் அடிப்படையில் அமைதல் கூடாது. இந்த கட்டுரையின் நோக்கத்தை இக்கட்டுரை கடைசி வரை நிறைவேற்றி இருக்கிறதா என்பதை விட இக்கருத்துக்களை கருத்துக்களாகவே எடுத்துகொள்தல் இக்கட்டுரைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு என நினைக்கிறேன்.

இம்மாத ஜீவநதியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. நன்றி ஜீவநதி.

.

Friday, November 25, 2011

நெல்லும் பூசணியும் - காதல் vs திருமணம்.

அண்மையிலே படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரை என்னை அதிகம் கவர்ந்தது. அதை வாசித்து முடித்து இற்றைக்கு இரண்டு வாரங்கள் ஆகியும் அதை அப்படியே மனதில் வைத்திருக்கும் எனது நினைவு அதை மீண்டும் மீண்டும் ரசித்துக்கொண்டே இருக்கிறது. எப்பொழுதுமே வித்தியாசமான கோணங்களில் வாழ்வியலைப் பார்க்கும் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் நான் அதிகம் விரும்புபவன். அந்தவகையில் இந்த கருத்தியல் என்னை கொஞ்சம் நின்று ஜோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான்.

அதிகம் பேசாமல் விடயத்திற்கு வருகிறேன். ஒரு மாணவன் தனது இரண்டு முக்கிய கேள்விகளை அவனுடைய ஆசிரியரிடம் கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டான். ஆசிரியரும் அவன் கேட்க இருக்கும் வினாக்களுக்கு விடையளிக்க தயாரானார்.

முதலாவது கேள்வி, "காதல் என்றால் என்ன?"

ஆசிரியர், பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"உன்னுடைய கேள்விக்கு பதில் அளிப்பதாயின் நான் சொல்வதை நீ செய்யவேண்டியிருக்கும். அதோ தெரிகிறதே நெல் வயல். அந்த நெல் வயலில் போய் அவ் நெற் செடிகளில் மிகவும் நீளமான செடியை பிடுங்கிக் கொண்டு வா. ஆனால் அதை செய்யும் பொழுது நீ இரண்டு நிபந்தனைகளை கருத்தில் கொள்தல் வேண்டும். ஒன்று, இவ்வயலின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் போகும் வரை நீ ஒருமுறைதான் பயணிக்க முடியும். இரண்டாவது, நீ செடிகளைக் கடந்துபோகும் பொழுது மீண்டும் பின் நோக்கி வந்து எந்த செடியையும் பறிக்க முடியாது. அவ்வளவுதான்.."

ஆசிரியர் கூறியதை செய்வதற்க்காக அந்த வயல் நோக்கி புறப்பட்டான் மாணவன். வயலினுள் இறங்கி நடக்கும் பொழுது கண்ணில் ஒரு உயர்ந்த செடி தென்படவே அருகில் சென்று பறிக்க முற்படும் பொழுது மனம் சொன்னது இன்னும் அதிகம் செடிகள் இருக்கின்றனவே, இதை விட உயரமான செடி தொடர்ந்து நடக்கும் பொழுது கண்களில் தென்படலாம் என.. ஆக அவனை இன்னும் உயரமான செடி ஒன்று காத்துக்கொண்டு இருக்கலாம் என எண்ணியபடி தொடர்ந்தும் நடந்தான். இவ்வாறாக வயலின் அரைப்பகுதியை கடந்த அவன் நான் இப்பொழுது பார்க்கும் செடிகள் எல்லாம் முன்னர் பார்த்த செடிகளை விட உயரம் குறைந்த செடிகளாகவே இருக்கின்றனவே எனக்கண்டான். அதையும் கடந்து இன்னும் முன்னேறிப் போகப் போக அவனால் முன்னர் பார்த்த அந்த உயர்ந்த செடிகளை விட உயரமான செடிகள் கண்களில் படவேயில்லை. ஆக, அவனது வயலின் எல்லையைக் கடந்த பொழுது அவன் கையில் எந்த செடிகளும் இருக்கவில்லை. எனவே, வெறும் கையேடு ஆசிரியரிடம் திரும்பி வந்தான் மாணவன்.

ஆசிரியரிடம் வெறும் கையேடு வந்து நின்றதும் ஆசிரியர் ஆரம்பித்தார்.."இதுதான் காதல்!! நீ எப்பொழுதும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டபடி ஒருவரை விட ஒரு படி மேலான இன்னொருவரே தேவை என தேடிக்கொண்டிருக்கிறாய். .. இறுதியில், பயணம் முடிகையில், நீ தேடிய அந்த நபரை நீ இழந்துவிட்டதை உணர்கிறாய்...." என பதில் அளித்தார் அந்த ஆசிரியர்.

சபாஷ் டீச்சர்!! இதை விட காதலிற்கு என்ன விளக்கம் வேண்டும்?? இப்பொழுது மாணவனது இரண்டாவது கேள்விக்கு சந்தர்ப்பம்.

"டீச்சர், அப்படியெனின் "திருமணம்" என்றால் என்ன? அந்த ஆசிரியரிடம் மாணவன் கேட்டான். அதற்கு தனது பாணியிலே ஆசிரியர் பதிலைத் தொடர்ந்தார்.

"இப்பொழுது இதோ தெரிகிறதே இந்த பூசணிக்காய்த் தோட்டம். அந்த தோட்டத்தினுள் சென்று அந்த தோட்டத்திலேயே விளைந்திருக்கின்ற மிகவும் பெரிய பூசணிக்காயை பறித்துக்கொண்டு வா. திரும்பவும் மேலே சொன்ன அந்த இரண்டு நிபந்தனைகளையும் நீ ஏற்கவேண்டும். ஒன்று, ஒருமுறை மட்டுமே நீ அந்த தோட்டத்தினூடாக பயணிக்க முடியும். இரண்டு, ஒன்றை கடந்து சென்ற பின் மீண்டும் திரும்பி, கடந்து போன எந்த பூசணியையும் நீ பறிக்க முடியாது. புரிகிறதா.." கூறி அனுப்பினார் ஆசிரியர்.

மாணவன் அந்த பூசணித் தோட்டத்தினுள் நடக்க ஆரம்பித்தான். இம்முறை அவன் முதல் முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆகவே, அவன் அந்த பூசணித் தோட்டத்தின் நடுப் பகுதியை அடைந்ததும் அதிகம் எதிர்பார்க்காமல் ஒரு அளவான, அப்பகுதியில் கிடைத்த ஒரு நடுத்தர அளவுடைய பூசணிக்காய் ஒன்றை கண்டு, திருப்திகொண்டு அதை பறித்தெடுத்தான். அதன் பின்னர் வேறு எந்த பூசணிக்காயையும் கணக்கெடுக்காமல் வேகமாக வரம்பு நோக்கி நடந்தான். காரணம், மிகப் பெரிய செடியைத் தேடி நடந்ததில் பெரிய செடிகளைக் கூட தவறவிட்டுவிட்டு எதுவுமே இல்லாமல் போன அந்த முதல் முறை கிடைத்த அனுபவம் போல் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருந்தான் அவன். பறித்த அந்த பூசணிக்காயை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் வந்து சேர்ந்தான் அந்த மாணவன்.

"இம்முறை நீ ஒரு பூசணிக்காயோடு வந்திருக்கிறாய். நீ பாதிவழி போனதும் கிடைத்த ஒரு நடுத்தர அளவான பூசணியை பறித்துக்கொண்டாய். அதாவது இதை விட பெரிய பூசணி கிடைக்காமல் போகலாம் என உணர்ந்து, இது போதும் என திருப்திப் பட்டு இதை பறித்துக்கொண்டாய். இப்பொழுது நீ பார்த்தவரை இந்த பூசணிதான் பெரியது, இது எனக்கு போதும் என நம்பியதனாலேயே இதை பறிக்க உனது மனம் விரும்பியது. இறுதியில் உனக்கு ஆகிலும் சிறியதும் இல்லாமல் ஆகிலும் பெரியதும் இல்லாமல் உனக்கு திருப்தியான அளவில் ஒரு பூசணி கிடைத்தது.. மகிழ்கிறாய். இதுதான் திருமணம்..." என இலாவகரமாக கூறிமுடித்தார் அந்த ஆசிரியர்.

யப்பா.. எப்படியொரு விளக்கம். ஏதோ என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆசிரியரின் டீலிங் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கே எப்படி? இதுதானே உண்மை?? யதார்த்தமான உதாரணமும் பதிலும். நாம் எப்பொழுதும் அதிகபட்சமான விடயங்களுக்கு ஆசைப்பட்டே எமக்கு போதுமான விடயங்களை இழந்து விடுகின்றோம். இது நமது இளசுகளிற்கு ஒரு நல்ல பாடம் என நினைக்கின்றேன்.

 
.

Monday, November 21, 2011

எனது ஓர் நிமிட நாயகி.

எனது
இந்த
இரவல்
இலக்கியத்தின்
ஒரு நிமிட
நாயகி அவள்.

ஐந்து மீட்டரில் அவள் - அன்று
ஐம்பது கனவுகளோடு நான்.

அன்று
பக்கத்தில் வந்தது
பௌர்ணமி - பெண்ணே
அனைத்தும் கலந்த
வர்ணம்நீ.

ஒருமுறை வந்தாள்
ஒரே முறைதான் சிரித்தாள்
ஓரிரு வரிகள் மட்டும் பேச
ஒருவாறு அனுமதி தந்தாள்.

நடு நாக்கு
நடுங்கியதில்
வந்த வாக்கு - அங்கேயே
முடங்கியது.

நாக்கு மேட்டில்
விழுந்து எழுந்து
நிமிர்ந்த வார்த்தை
உதட்டில் புரண்ட போது
'வருகிறேன்' என்றாள்
கண்களால்.

மீண்டும் வலிந்து
தொண்டையில் திணித்த - அந்த
மூன்றெழுத்து வார்த்தையை
சமாதானம் செய்வதற்குள்ளே
சாகப்போவதாய்
சத்தியாக்கிரகம் செய்தது
அவள் - என்
மனதில் விட்டுப் போன - அந்த
விடுப்புக் காதல்.

ஒரே நிமிடத்தில்
காதல் - இன்று
ஏனிந்த மனங்களிடையே
மோதல்..

அவளும்
வருவதாய் இல்லை.
நிலவும்
வளர்வதாய் இல்லை.
என்னைச்சுற்றிய காதல் இருள்
சொட்டுச் சொட்டாய்
குறைவதாயும் இல்லை.

வந்து போனவள் யார் - அன்றுமுதல்
என் மனதில் அக்கப்போர்.
ஒரே நிமிடம்
ஒரே பார்வை
விழுந்தது நான்
எழுந்தது அவள்.
இதுதான் காதலா?

மெல்லப் போனது
பாவை - இப்போ என்
கைகளிலெல்லாம் காதல்
ரேகை.
உதிர்த்துப் போனாள் ஒரு
சிரிப்பு,
யாருக்குத்தெரியும் - இப்போவென்
தவிப்பு??

என்னை - அவள்,
பூவிழி பார்வையில்
முடிந்து போனாளா?
இல்லை,
கரு நிற தோகையால்
கடைந்து போனாளா?
கண்ணிரு வீச்சிலே
மயக்கிப் போனாளா?
இல்லை - என்னை
பொன்னுருக்கும் பார்வையாலே
மடக்கிப் போனாளா?

ஒரே ஒரு சிரிப்பிலே
எனக்கு
ஊட்டியையும் கொடைக்கானலையும்
ஒரே நிமிடத்தில்
காட்டிப்போனவள்
அவள்.

புலம்பி புலம்பியே
புத்திகெட்டுப் போனது
எனது
காதல்,
வீதியில் அன்று
போட்டுவிட்டு வந்தாலும்
இன்றும் - என்
இலக்கிய நாயகி
அவளேதான்
என்
வலது சோணையிலே.

.

Saturday, November 12, 2011

அம்மா நீ என் நிரந்தர நாயகி.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எனது அம்மாவிற்காக தூரத்தில் இருந்துகொண்டு அனுப்பும் எனது பிறந்தநாள் பரிசு..

அப்பாவைப்போல்
எனக்கும்
நீதான்
நிரந்தர நாயகி.

இன்று 
உனக்கு
கொடுப்பதற்கு 
எதுவும் இல்லை
நீ கொடுத்த
மூச்சையும் பேச்சையும் தவிர..

எனக்கு
மூச்சூதியவள் நீ..
அப்படியெனின்
இந்த ஆதாமிற்கு
நீ தானே கடவுள்.

உன்னை உரசிப்பார்த்தேன்
உணர்வு கிடைத்தது.
நீ வாயசைத்தாய்
நான் பேசினேன்.
நான் சிரிக்க 
நீ அழுதாய்
காரணம் கேட்டபோது
நீ எண்ட செல்லம் என்றாய்..

உன் 
கைபிடித்து நடந்தேன்
கால்கள்
பூபெய்தியது..
உன்னை 
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்
வானம் அருகில் தெரிந்தது.

நீ
அடிக்கும்போதெல்லாம்
நான் அழுவேன்.
என்னில்தான் தவறு,
ஆனால்
இறுதியில்
இருவரும் அழுவோம்..

என்மேல்கொண்ட
உன் பயணம் 
நீண்டது..
என்னை
உண்டாக்கியது முதல்
உருவாக்கியது வரை.

என்னை உச்சரி
என்றாய்,
நான்
வாசித்தேன்,
என் 
விரல்களில் பிறந்தன
கவிதைகள்..

உனது
சிரிப்பு மட்டும்தான்
ஏனோ
இன்றும்
எனக்கு
மாறா மந்திரம்.

இன்று
உனக்காக எதுவும் 
கொடுப்போம் என்றாலும்,
பழக்கம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேன்.

இருந்தும்,
பிறந்தநாள் தர்மம்
எதையும் கொடுத்தே ஆகவேண்டும்.
அதற்காய்
உனக்கு
மூன்று பரிசுகள் 
என்னிடமிருந்து..
ஒன்று 'நான்'
இரண்டு 'நான்'
மூன்றும் 'நான்'!!!

.

Wednesday, November 2, 2011

வேலாயுதம், ஹன்சிகா மாயம் செய்தாயோ?


எத்தனை நாள்தான் கணினியையே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது என்கின்ற அந்த எண்ணத்திற்கு எனது நண்பன் இன்று போட்ட முற்றுப்புள்ளி "வாடா மச்சான் வேலாயுதம் பார்க்கப் போவோம்.." அதுவும் சரிதான், அனைவரும் கன்னா பின்னா என்று எழுதும் ஒரு திரைப்படத்தை திரையரங்கு வரை போய் பார்ப்பது என்பது ஏதோ மனதளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்தது உண்மை. இளைஞர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இரண்டு ஹீரோக்களின் படங்கள் இம்முறை ஒரேதடவையில் வெளியாகியிருந்தமை எனது ஐந்து மணிநேர பொழுதுபோக்கிற்கு சக்கரை போடாற்போல்தான் என எண்ணிக்கொண்டிருந்தேன். அந்தவகையில் இன்றுதான் வேலாயுதம் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. மகிழ்ச்சிதான்..

என்னைபொறுத்த வரையில் ஒரு நடுநிலையான சினிமா ரசிகனாக ஒரு திரைப்படம் என்னை எந்தவழியில் எல்லாம் பாதித்திருக்கிறதோ அவை அனைத்தையும் எழுத்தில் சொல்லிவிடுவதில் எந்த தப்பும் இருப்பதாய் தெரியவில்லை. நாம் நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ தீயதை, பிடிக்காததை மறைத்துவிட வேண்டும் என்றோ எனது மனநிலையில் என்றுமே நான் சிந்தித்ததில்லை. அதற்காக எனது ரசனை நடுநிலமையானதாகவும், நல்லதை மட்டும் கொண்டாடுவதாக இருக்காமையும் அவசியம். சரி.. இவற்றை விடுத்து விடயத்திற்கு வருகிறேன்.

இங்கு நான் அந்த படம் தொடர்பாக விமர்சனம் எழுத வரவில்லை. விருப்பமும் இல்லை. காரணம் எனது விமர்சனம் சிலவேளைகளில் எனது சில நண்பர்களை மனம் நோகப் பண்ணலாம் என்பதால். ஆனால், எப்பொழுதுமே ஒரு திரைப்படத்தை பார்த்து வந்ததன் பின் அது தொடர்பாக மனதில் எழும் உணர்வுகளை எழுத்துக்களில் கொட்டிவிட்டால் நின்மதியாக தூங்கி விடலாம். அந்தவகையில் இந்த வேலாயுதம் என்னில் ஏற்படுத்திய உணர்வு, ரசனை மீதான தாக்கங்களை (நான் ரசித்த விடயங்களை மட்டும்) சொல்லிவிடுகிறேன்.

முதலில் ராஜா என்கின்ற ஒரு இயக்குனரிற்காகவும் விஜய் என்கின்ற ஒரு மாஸ் ஹீரோ விற்காகவும் இந்தப்படத்தை கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தது என்னவோ உண்மைதான். பின்னர், நண்பர் மைந்தன் சிவா சொன்னது போல விஜய் இன் பாணி இதுதான் என்பதை ஏற்றுக்கொண்டதினால் நான் எனது எதிர்ப்பார்ப்பை அதிகம் பெருசு படுத்தவில்லை.

முதலில், நான் ஒரு தீவிர இசை ரசிகன் என்பதனால் என்னை அதிகம் கட்டிப்போட்ட பாடல்களோடு இதை ஆரம்பிக்கலாம். என்னதான் சொன்னாலும், ஆத்திசூடி ஆத்திசூடி என மெட்டுப் போட்டு பாடிய விஜய் அன்டனியால் 'மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ' என ஒரு சாகடிக்கும் (இசையால்) மெலோடியை கொடுக்க முடிந்தது ஆச்சரியம் தான். முதலில் அவரிற்கு வாழ்த்துக்கள்.

இந்த மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ என்கின்ற பாடல் என்னை அதிகம் பாதித்தது உண்மைதான். எப்பொழுதுமே எமது உணர்வுகளை அல்லது ரசனையை எமக்கு தெரியாமலேயே சில விடயங்கள் தொட்டு போய்விடுகின்றன. அவ்வாறான ஒரு சந்தர்பத்தை இன்று நான் இந்த பாடலை பார்த்து கேட்ட போது உணர்ந்துகொண்டேன். திரையிலே அந்த இனிமையான இசை முடிந்ததும் எப்பொழுது வீடு போய் இரண்டு காதுகளிலும் எனது ஹெட் போனை அணிந்து உச்ச சத்தத்தில் ஆசை தீர கேட்பேன் என ஆவல் பட்டு அவசரப்பட்டேன். என்னவோ, அந்த இனிமையான மெட்டும், பாடல் வரிகளும் அதற்கு காரணங்கள் என்று மட்டும் கூறி வரிகளிற்கு ஏற்றாற்போல் கொஞ்சற் குரலில் பாடிய சங்கீதாவை ஓரம் கட்டி விட முடியாது. இவரின் குரல் மிக முக்கிய காரணம் அந்த பாடல் மனங்களில் அப்படியே ஓரமாய் போய் படிந்துகொல்வதற்கு.
நானே செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
என்ற வரிகளை எப்படி எனது உதடுகளில் இருந்து அகற்றுவது எனதெரியவில்லை. இன்னும் வாயில் அங்கும் இங்கும் இந்தப் பாடல்தான். 

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள் அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

இந்தவரிகள் யாரைத்தான் ரசிக்கவிடாமல் பண்ணக்கூடியவை. கேட்டவுடனேயே எனது ipod வரை ஓடிச்சென்று குந்திக்கொண்ட பாடல்களில் மங்காத்தாவின் நண்பன் பாடலிற்கு அடுத்ததாய் இந்த "மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ, கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ.." பாடல்தான். (7ஆம் அறிவு பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை காரணம் அவற்றை திரையில் இன்னும் அனுபவிக்கவில்லை..). இப்படத்தின் மற்ற பாடல்களும் சூப்பர் தான். அதிலும் ரத்தத்தின் ரத்தமே பாடலும், முளைச்சு மூணு இலையும் விடல என்கிற பாடலும் எனது கைதட்டை பெற்றனவே. ரத்தத்தின் ரத்தமே எனது நண்பனை அதிகம் கவர்ந்தது என்னை அந்தளவிற்கு பாதிக்கவில்லை. (அதற்கு எனக்கு ஒரு தங்கை இல்லாதது காரணமோ தெரியவில்லை.) ஆனாலும் அது ஒரு நல்ல செண்டிமெண்ட் பாடல்தான். 

அடுத்து, சண்டைக்காட்சிகள். என்னவோ ஏதோ எனக்கு பிடித்திருந்தன. இம்முறை கொஞ்சம் யதார்த்தத்திற்கு முரண் படமால் சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மகிழ்ச்சி. அடுத்து விஜயின் கோழி பிடிக்கும் கதை.. சிறப்பான ஒரு கற்பனை என்றே தோணியது. அத்தோடு ஆங்காங்கே கோழி என்ற பெயரில் இரட்டை அர்த்த பேச்சுக்களும் கலக்கல் தான். இதுவரை நான் பார்த்த கதைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகள் மிகச்சரியாக பொருந்திய சந்தர்ப்பங்கள் இதுதான் என சொல்ல தோணுகிறது. அந்த இடங்களில் திரையரங்கு அதிர்கிறது. அனைத்து இளம் ரத்தங்களின் சார்பிலும் சபாஷ் ராஜா.. ஹி ஹி ஹி ...

இறுதியாக, எப்படி சொல்வது.. (கொஞ்சம் வெக்கமா இருக்கு பாஸ்..) நம்ம ஹன்சிகா.. படத்திற்கு ஒரு பிளஸ். எனது மனதிற்கும் ஒரு ரிலாக்ஸ். 'இன்னா தண்டி உடம்பும் இடுப்பும்..' என தன்னை மறந்து ஆவென பார்த்துக்கொண்டிருந்த நண்பனை ஆமோதிக்கவே வேண்டியதாயிற்று. ஆமா, யாரோ சொன்னது போல பிசைஞ்சு எடுத்த ரொட்டி மாவுதான்.. இதுவரை நான் ரசிக்காத ஒரு நாயகி... இன்றோடு நம்ம பாடும் அவுட்.  ஐயோ ஐயோ.. கொண்ணுட்டாயா. ஒரு சின்ன கேள்வியோடு வெளியே வந்தேன். போகிற போக்கில் நமிதாவை ஓரம் கட்டிவிடுமோ இந்த குண்டு பொண்ணு???

தானும் தன்னுடைய வேலையும் என்று வந்துபோகும் ஜெனிலியா அடக்கமாக (நடிப்பில்) இருக்கிறார். படத்தின் கதையோடு ஹன்சிகாவை விட ஜெனிலியா அதிகம் ஒன்றிப் போவதால் நேரம் எடுத்து அவரை ரசிக்க முடியவில்லை.. ஒரு கட்டத்தில் படத்திற்கு எதற்காக ஹன்சிகாவின் தேவை என்றும் எண்ண தோன்றியது?? எங்களை உசுப்பேத்த மட்டும்தானா??

ஆக, இவை மட்டும்தான் என்னை அதிகம் கவர்ந்த விடயங்கள். படம் சூப்பரோ, சூப்பர் இல்லையோ, நான் மேலே சொன்ன எனக்கு பிடித்த விடயங்கள் அனைத்தும் சூப்பருங்க. இந்த விடயங்களை அதிகம் ரசித்ததில் இந்த மாலை எனக்கு போதுமானதாகவே நிறைவேறியது. 

மறந்திடாம அந்த பாடல வடிவா கேட்டுடுங்க மக்கள்ஸ்... உங்கள் மனதையும் உசுப்பி போகும்...

Monday, October 31, 2011

ஒரு விலைமாது விம்முகிறாள்.

கெட்டவளா நான்?
கேட்காமல்
கொட்டிவிடாதீர்கள்.
 
ஒரு வாய்
கஞ்சி கொடுத்து
கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்கள்
நல்லவளாய் இருக்கிறேன்.
 
போராட்டம் என்று
தீ மூட்டிப்போனவன்
திரும்பவே இல்லையே
இன்றுவரை..
 
போராட்டத்தில்
அவன் மரித்தான்.
பசியோடு
நாங்கள் மரிக்கிறோம்.
 
தேசத்திற்காய்
அவன் எரிந்தான் - தினம்
தேகத்திற்காய்
நான் எரிகிறேன்.
 
எனது
மூன்றும்
முனங்கியபடி
மூலையில் இருக்கிறதே
பசியோடு,
யாரறிவார்?
 
அவர்கள் என்னை
அசிங்கம் செய்தால்தான்
இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள்.
 
என்னமோ,
மானத்தை விட - என்
மக்கள் முக்கியம்
எனக்கு!
 
நானும் என்ன
காமத்திற்காகவா
காடையர்களை சுமக்கிறேன்?
 
என்
உணர்வுகள் செத்து
காலம் கடந்து போச்சு,
சுகமும் சூம்பி
சூடில்லாமல் போச்சு.
 
மரத்து விட்டதாய்
உரத்து ஏசுகிறார்கள்.
நீங்களே சொல்லுங்கள்,
காமத்திற்காகவா - நான்
கட்டில் விரிக்கிறேன்??
வெறும் காசிற்குத்தானே..
 
எல்லை மீறி
மழுவர் போகையில்
விட்டுவிட நினைப்பேன் - வலி
கொட்டிவிடும் வேளைகளில்..
இருந்தும்,
கொட்டும் பஞ்சத்தில்
குழந்தைகள் பாவமே??
 
சிலர் அஞ்சுவார்கள்  
சிலர் மிஞ்சுவார்கள்
அதற்குள்ளும் சிலர்
கொஞ்சி கொஞ்சி மெச்சுவார்கள்..
 
எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...
 
நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.
 
நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??

பி.கு. ஜீவநதி நவம்பர் மாத இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை. பிரசுரித்த ஆசிரியர் பரணீதரனிற்கும் துணை ஆசிரியர் துஷியந்தனிற்கும் எனது நன்றிகள்.


Wednesday, October 26, 2011

இம்முறை இலக்கிய தீபாவளி.. மன்னார் இலக்கிய கருத்தாடல்.

முதலில் எனது சகல நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இம்முறை தீபாவளி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அதிலும் ஒவ்வொரு பட்டாசு வெடியிலும் எங்கள் பிள்ளைகளின் முகத்தில் தவழ்ந்த புன்னகையை ரசித்ததோடு, பட்டினியால் வாடும் சிறு பிள்ளைகளின் கண்ணீரையும் ஒருமுறை சிந்தித்திருந்தால் இதை விட சிறப்பான தீபாவளி நமக்கு என்றும் இல்லை என உணர்ந்திருக்க முடியும். சரி, விடயத்திற்கு வருகிறேன். இம்முறை தீபாவளி எனக்கு ரசிக்கக்கூடியதாய் இருந்தது எதோ உண்மைதான்.. காரணம்??

தழல் இலக்கிய வட்டமும் மன்னார் எழுத்தாளர் பேரவையும் இணைந்து நடத்திய "போருக்கு பின்னதான ஆக்க இலக்கிய போக்கு" என்னும் தலைப்பில் அமைந்த இலக்கிய கருத்தாடலில் பங்கேற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி. மன்னாரின் சகல இலக்கிய படைப்பாளிகளின் நீண்ட நாள் கனவுகள் இன்று காலை பத்து மணிக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டன. இதற்கு முதலில் இதை முன்னின்று ஒழுங்கமைத்த நண்பர் மன்னார் அமுதனிற்கு பெரும் நன்றிகள். அத்தோடு தலைமை தாங்கியது தொடக்கம் எமக்கு தேவையான சகல வசதிகளையும் செய்துதந்த அருட்பணி.தமிழ் நேசன் அடிகளாரையும் மறந்து விட முடியாது..

மேற்படி தலைப்பில் அருமையான சொற்பொழிவை நிகழ்த்திய தோழர் தேவா அவர்கள் இன்னும் எனது கண்களை விட்டு அகலவில்லை. அவரது புலம் பெயர் இலக்கிய அனுபவங்கள் அவரது சொற்பொழிவிற்கும் தலைப்பிற்கும் பெரும் பங்களித்தன எனலாம். அத்தோடு, பங்கெடுத்த சகல படைப்பாளிகளின் கருத்துக்களும், விவாதங்களும் ஒரு சிறந்த, ஆக்க பூர்வமான இலக்கிய கருத்தாடலை நகர்த்திச் செல்ல பெரிதும் உதவின. அத்தோடு மன்னாரின் இறந்தகால, நிகழ்கால, எதிர்கால தனித்துவ படைப்பிலக்கிய வரலாறு பற்றிய பலரின் மன ஆதங்கங்கள் கருத்துக்களாய் வெளிப்பட்டன.

இதிலே என்னை அதிகம் கவர்ந்த பகுதி என நான் எடுத்தவுடன் சொல்லக்கூடிய பகுதி, கவிஞர் நிஷாந்தனுடைய கேள்வியும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களும். 'நேரடி வெளிப்பாட்டு இலக்கியம்' அல்லது போரியல் 'உண்மை இலக்கியம்' படைக்கும் இன்றைய இலக்கியவாதிகளின் பாதுகாப்பு பற்றிய கேள்வி அது. நமது ஈழத்திலே ஒரு மறைமுக, முடக்கப்பட்ட எழுத்து வாழ்க்கை போரிற்கு பிற்பட்ட படைப்பிலக்கியவாதிகளிடம் திணிக்கப்பட்ட ஒரு விடயம். பல விடயங்களை வெளிப்படையாக எழுத முடியாமல் தவிப்பது போரிற்கு பிந்திய கால இலக்கிய போக்கின் ஒரு குறைபாடு என்று கூறலாம். ஆனாலும் இது இளைக்கியம் தொடர்பான வரைமுறை அல்ல என்பதால் அது எங்கள் சக்தியைத்தாண்டி அப்பாற்பட்டது என்று நான் ஒருவாறு தப்பித்துக்கொள்ள முடியும். ஆக, போரின் நேரடி ரணங்களை பிரதிபலிக்கின்ற சில எழுத்துக்கள் அல்லது படைப்புக்கள் பல மட்டறுக்கப்பட்ட அல்லது நாசூக்கான வெளிப்பாட்டு மரபை கொண்டு உருவாக்கப் படுகின்றனவாகவே அமைகின்றன. இந்த நேரடி வெளிப்பாட்டு இலக்கியத்தினால் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய நேர்ந்த சில காத்திரமான இலக்கிய படைப்பாளிகளையும் இந்த கருத்தாடல் நினைவு கூர்ந்தது.

அத்தோடு, நான் அதிகம் எனது காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு அவதானித்த விடயம், எமது ஈழ போராட்டம் பற்றி அதிகமான புலம் பெயர் படைப்புக்கள், இலக்கியங்கள் என்ன பேசுகின்றன என்பதாகும். இதை மிகவும் அழகாக விபரித்த தோழர் தேவா அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்வது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன். சாராம்சமாக, ஈழத்து அடக்குமுறை சார் வலிகளும், சிந்தப்பட்ட குருதியும் புலம் பெயர் நாடுகளிலே 'யதார்த்த இலக்கியம்' என்பதையும் தாண்டி தங்கள் நிலைப்பிற்கு இந்த விடயங்களை கட்டாயமாக எழுதியே தீரவேண்டும் என 'சுயநல இலக்கியங்களை' படைக்க வழிகோலியதையும் கவலையோடு நினைவுகூர்ந்தது இந்த கருத்தாடல் களம்.

.
பல வகையான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. அதிலும் போரிற்கு பின்னதான புலத்தில் படைக்கப்படும் படைப்புக்கள் புலம் பெயர் நாடுகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் என ஒரு நீண்ட கருத்தாடல் பல மன ஆதங்கங்களுக்கு நின்மதி சேர்த்தது. அதிலும் போரிற்கு பிற்பட்ட காலங்களில் படைக்கப்படும் இலக்கியங்களில் கருச்செர்க்கப்படும் விடயங்களான பெண்ணியம், சாதியம், பிரதேசத்துவம் போன்ற கருத்துக்களும் ஓரளவு சிலாகிக்கப்பட்டன. இதற்கு பெரிதும் வழிகோலியது தோழர் தேவா அவர்களின் சொற்பொழிவு எனலாம்.

எனக்கு, தனிப்பட்ட முறையில் இது மன்னாரில் முதலாவது இலக்கிய கருத்தாடல் என்பதால் என்னை அதிகம் கவர்ந்தது என்பதற்கு ஒரு காரணம் எனலாம். இது தொடரும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தென்பட்டாலும் அதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கிறது..
.
ஆக, இம்முறை தீபாவளி ஒரு ஆக்கபூர்வமான 'இலக்கிய தீபாவளி'யாய் முற்றுப்பெற்றது.


.

Thursday, October 20, 2011

முள்ளிவாய்க்கால் செதுக்கிய முகம்.நாங்களும் கறுப்பாய் இருப்பதனால் எங்களையும் காகங்கள் என்று எண்ணி விடுகிறார்களோ என எண்ணியபடி மத்தியான சோற்றிற்காய் நிறுவனம் கொடுத்த அந்த சிவப்பு பிளாஸ்டிக் வாளியோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தான் முகுந்தன். மதியம் 12 மணி. அங்கு துரத்தி துரத்தி சூடு வாங்கியதால் இந்த சுடும் வெயில் கூட முகுந்தனுக்கு பெரிதாய் சுடவில்லை. எட்டிப்பார்த்ததில் எண்பது பேர் வரை இவனிற்கு முன்னால் நிற்கிறார்கள் என கணக்க்கிட்டுக்கொண்டான். இது வாக்கு போட நிற்கும் வரியல்ல, வயிற்றை நிரப்ப நிற்கும் வரி. எனவே, பொறுமையோடு நின்றுகொண்டிருந்தான் முகுந்தன்.


அது ஒரு அழகற்ற அகதிகள் முகாம். அது சுற்றும் அடைக்கப்பட்டிருந்ததால் அதற்குள் காற்றும் அவ்வளவு இல்லை கருணையும் அதிகம் இல்லை. அக்கறையின் மிகுதியில் பாதுகாப்பு என அந்த முழு முகாமையும் அடைத்து நின்றது முள்வேலி. அந்த முள்வேலிக்கருகில் வெளியில் புதினம் பார்க்க வந்ததற்காகவே பலரை புத்தி கலங்க அடித்தவர்கள் அந்த பாதுகாப்பாளர்கள். அந்த ஆயிரம் ஆயிரம் வெள்ளை தோல் குடில்களை (tents) விட அந்த ஜேசு பிரான் பிறந்த வைக்கோல் குடில் எவ்வளவோ மேல். 

"ராமு ஐயா, கொஞ்சம் கெதியாதான் நடங்கோவன்..." அவசரப்படுத்திய முகுந்தனை அவசரமாய் பார்த்தார் ராமு.

"முன்னுக்கு நிக்கிற உவன் நடந்தால் தானே மோனே நான் நடக்குறதுக்கு..." அந்த தள தளத்த குரல் வந்து போனது முகுந்தனிடம். 

அந்த முகாமில் உள்ள பறவைகள் கூட பறப்பதில்லை. காரணம் பறவைகள் வெளியே சென்றால் அவைகளின் சிறகுகளும் எவ்வாறோ வெட்டப்படலாம் என அந்த மனிதர்களைப்பார்த்து தங்களுக்கு தாங்களே தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டன. இப்பொழுது முகுந்தன் நிற்கும் இந்த வரிசையைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அங்கு வசிக்கும் அனைவரும் தங்கள் மூன்று நேர சாப்பாட்டிற்காய் மூன்று நேரமும் வரிசையில் நிற்க வேண்டும் என்பது அந்த முகாம் சமையலறை பொறுப்பாளரின் விருப்பம் ஆசை. ஆக, கௌரவத்தையும் வெட்கத்தையும் வேண்டா வெறுப்பாய் தங்கள் மனைவிகளிடம் கொடுத்துவிட்டு ஆளுக்கொரு வாளியோடு இங்குவந்து வரிசையில் நிற்பவர்கள் இங்குள்ள ஆண்கள். அதையும் தாண்டி, "சும்மாதானே இங்க படுத்திருக்கீங்க,. ஒரு பத்து மணிபோல போய் அந்த வரில இருந்தீங்க எண்டா மத்தியான சாப்பாட்ட எல்லாருக்கும் முதல் எடுத்திண்டு வந்திடுவீங்க.." என்கின்ற மனைவிகளின் தொல்லைக்காகவும் அந்த வரிகளில் நேரத்திற்கே போய் அமர்ந்து அரட்டை அடிப்பவர்கள் இந்த ஆண்கள்.   இவர்களைப்போலத்தான் இந்த முகுந்தனும். பல தடவைகள் இப்படி பிச்சை எடுத்தா சாப்பிட வேண்டும் என இவன் இதயம் கொதிக்கும் பொழுது வயிறு நிராயுத பாணியாய் நிற்கும். இறுதியில் பலமுறைகள் இதயத்தை சமாளிக்கும் முகுந்தனுக்கு தன் வயிற்றை சமாளிக்க முடிவதில்லை. 

"ஐயா.. அடுத்தது நீங்கதான்..."

"ஓமட மோனே.. இங்க இப்படி சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க வேண்டி வரும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே அவங்கள் அடிச்ச செல்லிட்ட ஒரு பிச்ச கேட்டிருப்பன் மகன்..நிம்மதியா, கௌரவமா போய் சேர்ந்திருப்பன்" சாமர்த்தியமாக சொல்லிமுடித்த ராமு ஐயாவை சோறு அழைத்தது..

"அடுத்தது ஐயா வாங்க..." வாயில் அரைப் புன்னகையோடு அழைத்தார் உணவு பரிமாறுபவர்.

"உந்தா தம்பி.. உதுக்குள்ள போடு.."

"என்ன ஐயா.. உங்களுக்கு இன்னும் அந்த நிறுவனம் பிளாஸ்டிக் வாளி தரலையோ...? இண்டைக்கும் சொப்பின் பையோட வந்திருக்கீங்க.."

"இல்லை மோனே, அவங்கள் கனக்க பிள்ளைகள் இருக்கிற குடும்பங்களுக்குதான் முன்னுரிமையாம் எண்டு சொல்லுறாங்கோ.. நாளைக்கு சிலநேரம் வாரம் எண்டு போயினம்... பாத்தீங்களோ தம்பி, அங்க கனக்க பிள்ளைகள் இருந்தாக் கஷ்டம், இங்க கனக்க பிள்ளைகள் இல்லாட்டி கஷ்டம்.."

சாமர்த்தியமாக பேசி சொப்பின் பைக்குள் வாங்கிய சாப்பாட்டோடு விடைபெற்றார் ராமு ஐயா.. 

"அடுத்த ஆள்..."

"ஆமா அண்ண..."

"என்ன பெயர்..?"

"முகுந்தன்.. K பிளாக்.."

"சரி வாளிய துறங்கோ.. எத்தின பேர்???"

"நான்கு அண்ணே.."

" சரி இந்தாங்கோ போடுறன் பாருங்கோ, எட்டு கரண்டி சோறு, நாலு கரண்டி பூசணிக்காய் குழம்பு, நாலு கரண்டி பருப்பு குழம்பு... அவ்வளவுதான்!!"

"நன்றி அண்ணே.." என விடை பெற்றான் முகுந்தன். 

தூரத்தில் உணவு வாளியோடு வந்துகொண்டிருக்கும் முகுந்தனை பார்த்த பொழுது இங்கு முகுந்தன் வீட்டு வெற்று வயிறுகள் புன்னகைத்தன. "சாமீ என்னா பசி.." என வியந்தாள் பெரியவள். "இண்டைக்கும் இந்த நாசமாய் போன பூசணிக்காய் கறிதானோ தெரியல.." கடுகடுத்தாள் சிறியவள். குடிலுக்குள் வந்த பிளாஸ்டிக் வாளியை திறந்தாள் முகுந்தனின் அம்மா. சோற்றின் மேல் ஊற்றப்பட்ட பூசணி குழம்பும் பருப்பு குழம்பும் ஒன்றாய் சேர்ந்ததில் புதிதாய் ஒரு பழுப்பு மஞ்சள் நிறத்தில் ஒரு குழம்பு தென்பட்டது அந்த வெள்ளை சோறுகளின் மேல். 

"..சீ.. இத சாப்பிடுவானா மனுஷன்.. இண்டைக்கும் அதே கொடுமை தானா.. கடவுளே.. எனக்கு வேணாம்.." என முடிவோடு எழுந்த சிறியவளை பார்த்து "அம்மா உங்களுக்கு தெரியாதா நாம முள்ளி வாய்க்காலில எத்தன நாள் பட்டினியா கிடந்தம் எண்டு...? அதால இப்பிடி எல்லாம் சொல்லகூடாது.. இந்தா.." என கண்கள் இரண்டையும் இறுக்கி மூடிய சிறியவளின் வாய்களுக்குள் திணித்தாள் முகுந்தனின் தாய். 

"தம்பி சாப்பிட்டு, முன்னுக்கு ஒருக்கா போயிட்டு வா... இண்டைக்கு இன்னும் கொஞ்ச ஆக்கள இங்க கொண்டுவாறாங்களாம்.. போய் பாரு. தெரிஞ்ச ஆக்கள் யாரும் வந்தா கேட்டுப்பாரு நம்ம அப்பாவ எங்கையாவது கண்டனீங்களோ எண்டு.."

இதைக்கேட்டதுதான் தாமதம். உடனே எழுந்த முகுந்தன் கைகளை வேகமாக கழுவிவிட்டு முகாமின் வாசல் நோக்கி பறந்தான். அவன் விட்டு வந்த அப்பாவின் ஞாபகங்களோடு தினம் தினம் செத்துப் பிழைத்து போராட்டம் நடத்துபவன் அவன். வேகமாய் வாசல் வரை ஓடினான்.

"டேய், எங்க மச்சான் போறாய்??" இடைமறித்தான் ஒரு நண்பன். 

"இல்ல மச்சான்... இண்டைக்கு புதுசா கொஞ்சபேர கொண்டுவாறாங்களாமே..." 

"அடே, அவங்க காலமையே வந்திட்டாங்கடா.. M பிளாக் ல விட்டிருக்காங்கடா.."

"அப்படியெண்டா வாவன் ஒருக்கா அங்க போட்டு வருவம்..." என முகுந்தன் கூறிமுடிப்பதற்குள்ளேயே நகர ஆரம்பித்தான் முகுந்தனின் நண்பன்.

இம்முறையாவது அப்பாவை வழிகளில் யாராவது கண்டிருக்க மாட்டார்களா? என்கின்ற ஏக்கத்தோடு M பிளாக் நோக்கி நண்பனோடு பயணித்தான் முகுந்தன். ஆமாம். போரின் இறுதிக் கட்டத்தில் புதுமாத்தளனிலிருந்து வருகின்ற பொழுது இடையில் தன் குடும்பத்தை தவறியவர் முகுந்தனின் தந்தை. இன்று வரை அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது முகுந்தன் வீட்டாட்களின் வழமையான கண்ணீரிற்கு முதல் காரணம். இன்றாவது யாராவது ஒருவர் என் அப்பாவை எங்காவது கண்டிருக்க வேண்டும் என தனது இஷ்ட தெய்வமாகிய முருகனை வணங்கியபடி நடந்துகொண்டிருந்தான் முகுந்தன். 

"மச்சான், இதுதாண்டா M பிளாக்..!!"

"அப்பிடியா.. சரி சரி வா, போய் பாப்பம்..." 

"டேய் நாம சும்மா போற மாதிரி எல்லா ரென்ட் டையும் பாப்பம்.. யாரும் தெரிஞ்சவங்க இருந்தா கேப்பம்.."

"ஆமாடா..." என தனது நண்பன் பின்னால் மெது மெதுவாய் ஒவ்வொரு காலடிகளை எடுத்துவைத்தபடி நடந்தான் முகுந்தான். ஒவ்வொரு ரென்ட் பக்கமும் போய் மேலோட்டமாய் பார்த்து வர வர தன் தந்தை பற்றி தெரிந்தவர்களை சந்திக்க இருக்கும் சந்தர்ப்பம் குறைந்துகொண்டே போனது. காரணம் அதுவரை தெரிந்த முகங்கள் இவர்கள் கண்களில் படவே இல்லை. 

இறுதி ரென்ட் !! கடைசி நம்பிக்கை!! 

"மச்சான் வா, இதுதான் கடைசி ரென்ட். இதுக்குள்ள கடசியா பாப்பம்..." என்கின்ற தனது நண்பனின் வார்த்தைகளின் படி அந்த ரென்ட் இனுள்ளும் முகுந்தன் பார்த்தபொழுது அங்கும் எதிர்பார்த்த முகங்கள் இருக்கவில்லை. அன்றும் அப்பா ஏமாற்றினார். இன்றும் அப்பாவைக் கண்டவர்கள் எவரும் இல்லை. அப்பா இருக்கின்றாரா இல்லையா என்பதை கூட யாரும் சொல்கிறார்கள் இல்லையே அனா கண் கலங்கினான் முகுந்தன்.  ஓடிக்கறுத்த முகம், சீ.. அப்பாவ நாங்க எங்கதான் தேடுறது என்கின்ற கேள்விக்குறியோடு அந்த M ப்ளோக்கை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். 

"முகுந்தன் !!.."

முன்னே போன முகுந்தனையும் அவன் நண்பனையும் பின்னே வந்த குரல் இடை மறித்தது. யாரோ என்னை எனது பெயர் சொல்லி கூப்பிடுகிறார்களே, என உணர்ந்த முகுந்தன் "கடவுளே, என்னை அழைக்கிற இந்த மனிதர் எனது அப்பா பற்றி தகவல் சொல்வதற்காகவேண்டியே என்னை அழைத்திருக்க வேண்டும்" என மனதிற்குள் எண்ணியபடி, ஒரு பக்கம் சந்தோசம், ஒரு பக்கம் ஆவல், ஒரு பக்கம் எதிர்பார்ப்பு என பல உணர்வுகளை கண்களுக்குள் ஒழித்து வைத்தபடி, மெதுவாக கண்களை மூடிக்கொண்டு வலப்பக்கமாக குரல் வந்த பின் திசை நோக்கு 'கடவுளே கடவுளே..' என திரும்பினான் முகுந்தன். 

"முகுந்தன்..!!"

என்றவாறு பின்னாலே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் திடீரென முகத்தை திருப்பிக்கொண்டான் முகுந்தன். காரணம் அவள் முகம் பார்க்கக் கூடியதாய் இல்லை. வலப்புற காதும் வலப்புற கண் மணியும் முகத்தில் இல்லை. மூக்கின் ஒரு துவாரம் மட்டுமே இருக்கிறது. வலப்புற கன்னம் ஒரு பயங்கர குழி போன்று அதனூடாக வலப்புற பல்தாடை கொஞ்சம் வெளியே தெரிகிறது. ஆக வலப்புற முகம் சிதைந்திருக்கிறது. வலப்புற வலக்கையில் அரைவாசி இல்லை. ஒரு செம்மஞ்சள் நிற சட்டை அணிந்திருக்கிறாள். கால்களில் ஒரு தேய்ந்த செருப்பு. கூந்தல் வாரி ஒரு வாரம் இருக்கும். இதுவே அந்த பெண்ணின் தோற்றம்.

"கடவுளே.. இது என்ன அலங்கோலமான முகம்.. சிதைக்கப்பட்ட உருவம்.. இவளது வலப்பக்கத்தில் துப்பாக்கி ரவைகள் அல்லது செல் துகள்கள் கண்டபடி பாய்ந்திருக்க வேண்டும். வலப்பக்கமாக வந்த குண்டு இவள் வலப்பக்க முகத்தை சிதைத்து போய் இருக்குறது..இவள் வைத்திய சாலையிலேயே இறந்திருக்கலாமே..இப்படி எப்படி இந்த சமூகத்தில் வாழும் இந்த பெண்...?? ஏன் இவளை வைத்தியர்கள் காப்பாற்றினார்கள்?!!!"

ஆச்சரியத்தில் உறைந்து போன முகுந்தனையும் அவன் நண்பனையும் அடுத்து அவள் வாயிலிருந்து வந்த "முகுந்தன்.." என்கின்ற தள தளத்த வார்த்தை வழமைக்கு கொண்டுவந்தது.

"முகுந்தன்.. என்னை தெரிகிறதா??"

"இல்லை..யே.." 

என அருகில் சென்று கொஞ்சம் அவளை உற்றுப் பார்த்த முகுந்தன். "டேய்... கவிதாவா...ஐயோ..." என அவளை கட்டி அணைத்தபடி சத்தமிட்டு அழ ஆரம்பித்தான் முகுந்தன்.

ஆமாம். அவள் கவிதா. இவன் காதலி. ஆறுமாதத்திற்கு முதல் கடைசியாக முள்ளி வாய்க்காலில் வைத்து கதைத்தவர்கள் மறு நாளே முள்ளி வாய்க்காலிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் அனைவரையும் போன்று. அன்று பிரிக்கப்பட்ட இந்த காதலர்கள் இன்றுதான் மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள். தன முழு நிலா இப்பொழுது தேய்ந்து போய் இருப்பதை இவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

"கவிதா... உன்னிடமிருந்த எனது கண்களை யார் பறித்தார்கள்? என் முகத்தை எனது கைகளை விட உனது விரல்கள்தானே அதிகம் தாங்கின.. அவை எங்கே இப்பொழுது?? உனது முகத்தில் இருந்த அந்த அழகிய பௌர்ணமி எங்கே?? உன்னை யார் சிதைத்தார்கள்.. சொல் கவிதா??? உனது கரத்தை எங்கே விட்டு விட்டு வந்தாய்?? அது என்னுடையது அல்லவா? உன் முகத்தை சிதைத்தவர்களை சொல்.. இன்றே வதைத்து கொல்கிறேன்.. இது என்ன கவிதா... உன்னை நான் இப்படி பார்ப்பதை விட இருவரும் இறுதியாக ஒன்றாக நாம் இருந்த அந்த முள்ளி வாய்க்கால் பங்கருக்குள்ளே இறந்திருக்கலாம்.. ஐயோ.. கடவுளே... நீ ஏன் இவ்வளவு வன்மைக்காரன்?? எனது பூவிற்கு நான் இங்கு கொடி வைத்திருக்கிறேன், நீ ஏன் அதை இப்படி கசக்கி வைத்திருக்கிறாய்..??? கடவுளே.. நீ ஒரு வன்மைக்காரன் தான்.. இவளை பார்.. இவள் உடலை சிதைத்து யார் உனக்கு பலிகொடுத்தார்...?? 

தனது இரு கைகளாலும் கவிதாவை இறுக்கி அணைத்தபடி புலம்பிக்கொண்டிருந்த முகுந்தன் அவள் முகத்தை நிமிர்த்தி, இவன் விரல்களால் தடவி, காணாமல் போன அவள் வலக் கண்ணிலும், வலக் காதிலும், வலக் கன்னத்திலும் இவன் உதடு பரப்பி, எச்சில் படிய ஆசை ஆசையாய் முத்தமிட்டு தனது வீடு நோக்கி அழைத்துச்சென்றான் முகுந்தன்.

"கவி, உன்னை உயிரில் சுமந்தேன். முள்ளி வாய்க்கால் உன்னை சிதைத்தாலும் உன்னை நான் மீண்டும் சிற்பம் ஆக்குவேன், எனது வாழ்க்கைத் தோட்டத்தில். வா.. உனது ஒற்றைக் கண் களவாடப் பட்டதிலிருந்து உனது கண்ணீர் அரைவாசியாய் குறைக்கப் பட்டாயிற்று.. இனி, அந்த இடக்கண்ணில் கூட நான் அதை பார்க்க மாட்டேன். நீயும்தான். இந்த உலகமும்தான்..வா கவிதா.. நாம் வாழ்ந்துவிடலாம் அழகிய கவிதைகளாக.." என கவிதாவை அணைத்துக்கொண்டு தனது வீடு நோக்கி பயணித்தான் முகுந்தன். 


.

Popular Posts