Saturday, August 13, 2016

செஞ்சோலைப் படுகொலை நினைவாக.


அப்பாவிப் பாடசாலைச் சிறுவர்களை விடுதலைப் புலிகள் என எண்ணி வான்படை நடாத்திய குரூரமான தாக்குதலில் பலியான அத்தனை இளம் பிஞ்சுகளையும் நினைவில்கொள்ளும் ஓர் நாளில் என்னுடைய “கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்” நூலின் 22 ஆவது அத்தியாயத்திற்காய் எழுதிய பதிவு இது. இன்றும், அதே நாளில் இதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எனத் தோன்றியது. வாசிக்காதவர்களுக்காக.அந்த அப்பாவிச் சிறுவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.


22. தெய்வானை அம்மா

சென்றவாரம் வெளியான என் குட்டி காவியா பற்றிய குறிப்பை வாசித்து பலர் கண்கலங்கியதாக எனக்கு சொன்னார்கள். நான் ஆச்சரியம் கொள்ளவில்லை. காவியா என்னை அடிக்கடி கண்கலங்கவைத்த ஒரு பெண். அவளை வாசிக்கும்போது கண்கலங்குவதன் காரணம் நியாயமானதே. அவளை நீங்கள் அன்பாக விசாரித்த அந்த அழகிய வார்த்தைகளை அவளிடம் முடிந்தால் நிற்சயம் எடுத்துச் செல்வேன். காவியா போன்று திரைக்குப்பின்னால் தூங்கிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான குட்டீஸ்களையும் நான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பதுண்டு. இதையாவது நாம் அவர்களுக்கு செய்யவில்லையென்றால் நாமெல்லாம் எப்படி மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வது. கஷ்டம் என்பதையே அறியாத எத்தனை குழந்தைகள் நம் வீடுகளில் நிறைந்திருக்கிறார்கள். எமது குழந்தைகள் சாதாரணமாக அழுதாலே நம் பெற்றோர்களின் ஜீவன் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. காவியா போன்றவர்களை நாங்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா. உங்களுக்கு காவியாக்கள்  என்றுகூட பல நண்பிகள் இருக்கிறார்கள் என்பதை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டாமா? அவர்கள் காவியா போன்றவர்களை அரவணைத்து வாழ்க்கை பற்றிய மற்றுமொரு அத்தியாயத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.

நடந்து முடிந்த யுத்தத்திலே பல்வேறுப்பட்ட தரப்பினர் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் படு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்மேல் எனக்கு அதிகம் அனுதாபம் உண்டு. கிளைகள் தறிக்கப்படுதல் வளர்ந்த பெரும் மரங்களுக்கு ஆச்சரியமானதாகவோ அல்லது கடும் வலிநிறைந்ததாகவோ இருக்க வாய்ப்பில்லை. அவை அதற்கு எப்படியோ பழக்கப்பட்டு இயைபாக்கம் பெற்றிருக்கும். ஆனால், கிள்ளி எறியப்படும் ஒரு இலையின் வலியை அந்த சிறு தாவரங்கள் எப்படி தாங்கிக்கொள்ளும்? அன்று கிளிநொச்சி தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை  எத்தனை பிஞ்சு இலைகள் வலிக்க வலிக்க பிய்த்தெறியப்பட்டன?

முழுதாகவோ அல்லது பகுதியாகவோ பெற்றோரை பறிகொடுத்து எத்தனை பிஞ்சுகள் முள்ளிவாய்க்காலை தெய்வாதீனமாக கடந்து வந்து சேர்ந்தது. காவியா போன்ற இந்த பிஞ்சுகளை நாம் சந்திக்கும் வரை இந்த வலிகளை நாம் உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏன் பொதுவாக புரிந்துகொள்ள நாங்கள் முயற்ச்சிப்பதும் இல்லை. இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் எத்தனை அநாதை சிறுவர் காப்பகங்கள் வன்னியில் முளைத்திருக்கிறது என்பது எத்தனை பேரிற்கு தெரியும்? அல்லது எத்தனை பேர் இதுபற்றி ஆகக்குறைந்தது சிந்திப்பதற்க்காவது முயற்சித்திருக்கிறோம்? செய்திகளை படித்துவிட்டு 'பாவம்' என சொல்லிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கும் மனிதர்கள்தானே நம்மில் அதிகம்!

நான் இந்த சிறுவர்கள் பற்றிய பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இதே நாளில்தான் (14.08.2014) ஒட்டுமொத்த தமிழரையும் அழுது மாரடைக்கவைத்த அந்த கொடூர சம்பவம் நடந்தேறியது. இற்றைக்கு 8 ஆண்டுகளிற்கு முன்னர் கற்றல் செயற்ப்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செஞ்சோலை எனப்படும் சிறுவர் காப்பகத்தின் 53 பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம், ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத, உச்சக்கட்ட வலிகொடுத்த ஒரு வடுவாக இந்தச்சம்பவம் பதிவானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வாய்பிழந்து ஓலமிட்டது. அழுது அழுது களைத்துப்போனது, அப்பொழுதும் நம் சர்வதேச சமூகத்தினர் வழமைபோலவே கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டு களைத்துப்போய் வைன் குவளைகளை நிறைத்தபடி தங்கள் மனைவியரோடு உட்கார்ந்துகொண்டார்கள். இந்த பதிவில், அதுவும் அதேநாளில், இந்த ஈழத்து  பிஞ்சுக் குழந்தைகளை ஒருகணம் நினைக்க முடிந்தது மிகவும் திருப்தியாக இருக்கிறது. அவர்களுக்கு எனது விழிநீர் அஞ்சலிகள்.

மெனிக்பாம் என்ற சொல்லை இன்றுவரை யாரும் மறந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது ஒவ்வொரு தமிழரினதும் அடிமனதில் டட்டூவாக பதிந்துவிட்ட ஒரு சொல். பாவம், எத்தனையாயிரம் தமிழர்களின் கண்ணீரை தாங்கி நின்ற மண் அது. மெனிக்பாம் என்றதும் என்னவோ, இன்றுவரை எனக்கு முதலில் ஞாபகம் வருவது அந்த முட்கம்பி வேலிகள் தான். அது ஒரு நாகரிக சிறையின் வடிவம். இறுக்கப்பட்ட மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. இருந்தும் நீண்ட கொடிய பயணத்தின் பின்னர், நம் மக்களுக்கு ஆறுதலைக்கொடுத்த மண் அது. அங்குதான் தெய்வானை அம்மாவைச் சந்தித்தேன். அமைதியான, சாந்தம் நிறைந்த முகம். மனச்சோர்வு நிறைந்திருக்கும் ஒரு உருவம் அவர். இல்லையென்றாலும் அவரிற்கு ஒரு ஐம்பத்து ஐந்து வயது இருக்கும். அவரிற்கு ஒரு மகள். அவள் குழந்தையுடனும் கணவருடனும் முள்ளிவாய்க்காலில் காணமல்போய் மேனிக்பாமில்தான் தெய்வானை அம்மாவால் கண்டுபிடிக்கப்பட்டாள். அதுவும் அவள் குழந்தையோடு மட்டும். கணவரிற்கு என்ன நடந்தது என அந்த தெய்வானை அம்மாவின் மகளால் இன்றுவரை சரியாக சொல்ல முடியவில்லை. என்னைப்பார்த்ததும், ஏதோ ஏதோ எல்லாம் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு எதுவும் புரிவதாய் இல்லை. திடிரென அங்கேவந்த தெய்வானை அம்மா, 'தம்பி, குறைநினைக்காதேங்கோ. அவளுக்கு சுகமில்ல..' என அவள் தலையைக்காட்டி சொன்னபோதுதான் அந்த பெண்ணின் நிலை புரிந்தது.

சில வருடங்களின் பின்னர் அதே தெய்வானை அம்மாவை கிளிநொச்சியில் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. என்ன ஆச்சரியம், எனக்கு முதலே தெய்வானை அம்மா என்னை அடையாளம் கண்டுகொண்டார். என்னைப் பார்த்ததில் அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில். 'தம்பி என்னைய நினைவிருக்கா??'. அதிர்ஷ்டவசமாக தெய்வானை அம்மாவை நன்றாகவே எனக்கு நினைவிருந்தது. அவரை நான் அன்றுவரை மறக்காமல் இருந்ததற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. மேனிக்பாமில் பார்த்ததற்கு தெய்வானை அம்மா இப்பொழுது நன்றாக, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். தான் முருகண்டியில் வசிப்பதாக சொன்னார். முருகண்டியில் எங்கே எனக்கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் மூன்று மணி நேரம் கழித்து அவர் வீட்டில் போய் அவரைப்பார்க்க உதவியாய் இருந்தது.

தெய்வானை அம்மாவின் வீடு முருகண்டி கோவிலிலிருந்து ஒரு பத்து நிமிட நடைதூரத்தில் அமைந்திருந்தது. அவரை அவர் வீட்டிற்கு சென்று பார்த்தது எனக்கு அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. மேனிக்பாமில் நான் சந்தித்த தெய்வானை அம்மாவை மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதை அவர் தலையிலோ அல்லது என் தலையிலோ யாரோ எழுதிவைத்திருக்கவேண்டும். முருகண்டி தெய்வானை அம்மாவின் சொந்த ஊர். அவர் இப்பொழுது வசிப்பது அவரது ஊர் என்றாலும் அவரது சொந்தக் காணியில் அல்ல. தெய்வானை அம்மாவின் உறவினர் ஒருவரது காணியில் தனக்கும் தனது பேத்திக்கும் அளவாக ஒரு சிறிய கொட்டில் அமைத்து வாழ்ந்து வருகிறார். அப்படியெனின் அவரது சொந்தக் காணியிற்கு என்ன நடந்தது என என்னிடம் கேட்கவேண்டாம்! இத்தொடரில் அரசியல் பற்றி நான் பேசுவதில்லை.

மெனிக்பாமில் முதல் முதல் தெய்வானை அம்மாவை நான் கண்டபொழுது அவர் தன் புத்தி சுயாதீனமற்ற ஓர் மகளுடன் இருந்தார் என முன்னர் கூறியிருந்தேன். அவரை அன்று என்னால் பார்க்க முடியவில்லை. அந்த மகளிற்கு என்ன நடந்தது என்று கேட்டதற்கு 'அவ மோசம் போட்டா!' என கூறினார் தெய்வானை அம்மா. அந்த இறப்பு ஒரு தற்கொலை என்று நான் அறிந்த பொழுது மிகவும் மனவேதனைப்பட்டேன். ஆனாலும், புத்தி சுயாதீனமற்று இந்த சமூகத்தில் வாழ்வதை விட ஒரேயடியாய் போய்ச்சேர்வது எவ்வளவோ மேல் தான். எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று கேட்டபொழுது, கிணற்றில் விழுந்து மரணமானதாகச் சொன்னார். எனக்கென்னவோ அது தற்கொலை என்பதைவிட ஒரு விபத்தாக இருந்திருக்கவேண்டும் எனத்தோன்றியது.

தெய்வானை அம்மாவின் அந்த மகளிற்கு ஒரு மகள் இருக்கிறது என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். மேனிக்பாமில் இருக்கும் பொழுது இந்த குழந்தைக்கு 5 வயதுதான். இப்பொழுது பாடசாலை செல்லும் ஒரு துடிப்பான மாணவி அவள். தனது அம்மாவின் இறப்பு அச்சிறுமியை அதிகம் பாதித்திருக்கவேண்டும். பேசும் பொழுது தனக்கு யாருமில்லா ஒரு நிலையை வார்த்தையிலும் முக பாவனைகளிலும் அடிக்கடி காட்டிக்கொண்டாள். தனது அம்மம்மாவுடன் வாழ்ந்துவரும் இச்சிறுமி தான் ஒரு வைத்தியராக வருவேன் என்றபோது தெய்வானை அம்மா 'அத பாக்க நான் இருக்கமாட்டேனே!' என சலித்துக்கொண்டார். உண்மைதான். இயற்கையின் நியதியில் தெய்வானை அம்மாவின் வாழ்க்கை இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இயற்கை எய்தலாம். 'எப்பிடியும் பேத்திய ஒழுங்கா படிக்க வைங்க அம்மா.. என்ன கஷ்டம் வந்தாலும் அவள் படிப்பு நிக்காம பாத்துக்கோங்க!' என அறிவுரை சொன்னபோது சிரித்தபடி வீட்டினுள் சென்று ஐந்து கச்சான் கடலை பைகளை கொண்டுவந்து நீட்டினார். எனக்கான அவரது அன்புப்பரிசு அது.  எனக்கு கொடுப்பதற்கு அது மட்டுமே அவரிடம் இருந்தது.

விடைபெறும் நேரம் வந்தது. 'வாறன் அம்மா!' என்றபோது தெய்வானை அம்மா சொன்னார், 'தம்பி இந்த ரோட்டால வந்துபோனா மறக்காம என்னைய வந்து பாத்துட்டு போகணும்.. கோயிலுக்கு பக்கத்திலதான் எண்ட கச்சான் கட இருக்கு. அதில வந்து என்னைய பாத்துட்டு போகலாம்...'

'ஆஹ்.. கச்சான் விக்குறீங்களா??'

'ம்ம்ம்.. அதாலதான் தம்பி எங்க ரெண்டு பேரின்ட வாழ்கையும் ஓடுது! பிள்ளையின்ட படிப்பு உட்பட..'

எனக்கு பெருமையாக இருந்தது. மறுபக்கம் அவரது இந்த வயதிலும் உழைக்கவேண்டும் என்கின்ற இயற்கையின் நியதியைப்பார்த்து சலித்துக்கொண்டேன். உண்மைதான் அந்த கச்சான் வியாபாரத்தால்தான் இந்த இருவரின் வாழ்க்கையும் ஓடுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே A9 வீதியால் திரும்பிக்கொண்டிருந்தேன். முருகண்டியில் கட்டாயமான நிறுத்தம். தெய்வானை அம்மாவின் கச்சான் கடையைத்தேடிக்கொண்டிருந்தேன். 'மாமா..' என பின்னாலிருந்து வந்த குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தேன். அது தெய்வானை அம்மாவின் பேத்திதான். கடலை விற்றுக்கொண்டிருக்கிறாள். அவளிடம் சென்று எங்க அம்மம்மா என்று விசாரித்தேன். அந்த சிறுமி சொன்னாள்.

'மாமா அம்மம்மாக்கு இண்டைக்கு ஒரே தலச்சுத்து. அதான் நான் கச்சான் பேக்க தூக்கிக்கொண்டு வந்தனான். அம்மம்மா பாவம் தானே.. ஆனா இங்க பாருங்க கொண்டுவந்த பேக்குகள எல்லாம் வித்துட்டன். இன்னும் கொஞ்சம் இருக்கு.. அதையும் வித்து முடிச்சிட்டு வீட்ட பொயிடுவன்..'

'இன்னும் எத்தின பை இருக்கு விக்கிறதுக்கு..?'

'இன்னும் பத்தொன்பது பேக் இருக்கு மாமா..'

'சரி அந்த பத்தொன்பதையும் நான் வாங்கவா??'

'ஓகே ஓகே...' 

அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம். பட படவென அனைத்து பைகளையும் எடுத்து எனக்கு ஒரு பெரிய சொப்பின் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். நான் அந்த பெரிய கச்சான் பையை வாங்கிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன். 

;மாமா மாமா..'

'என்னம்மா..?'

'போறதப்பாத்தா நீங்களும் எங்கையோ கச்சான் விக்க போறீங்க போல... நீங்க என்னட்ட ஒரு பேக் 20 ரூபாக்கல்லோ வாங்கினீங்க.. அதால நீங்க 25 ரூபாவுக்கு வில்லுங்க.. அப்பதான் உங்களுக்கு லாபம் கிடைக்கும்!'


Friday, August 5, 2016

ஓர் நரகத்தின் ஆண்கள்.

கண்ணுக்கு மைதீட்டியவன் கையில்
கோடரி இருக்கிறது..
வாளோடு நிற்பவன்
உதட்டுச்சாயம் பூசியிருக்கிறான்.
என் குரவளைக்கு மேல்
வசீகரமான காலொன்று முளைத்து நிற்கிறது.
அருகில் வரும் இன்னொருவன் மெட்டி அணிந்திருக்கிறான்..
அனால் அவன் கையில் கடப்பாரை இருக்கிறது.
என் முகத்தில் ஒரு மூக்குத்தி முகம்
காறித்துப் துப்புகிறது –
ச்சே, என் முகமெல்லாம் மஞ்சள் மஞ்சளாய் நாற்றம்.
இருக்கட்டும் – என்னைக்
கொல்வதற்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் ஐயா..?
என்னை இல்லாதொழிப்பதற்கு
எதற்கு இத்தனை நாட்கள் பொறுத்தருளினீர்கள்.
அதுவேறு
ஒரு அற்ப கொலைக்கு இத்தனை ஆடம்பரம் அதிகமில்லையா?
இங்கே பாருங்கள்,
உங்கள் முகங்களில்தானே தினம் தினம் சிறுநீர் களித்துக்கொண்டிருந்தேன்..
உங்கள் மனைவிகளைத்தானே தினம் தினம் புணர்ந்துகொண்டிருந்தேன்..
உங்கள் தெருக்களில்தானே என் ஈரமான உறுப்புக்களை உலர வைத்துக்கொண்டிருந்தேன்..
இப்படி –
என் சாவு எப்பொழுதும் உங்கள் கால்களில்தானே கிடந்திருக்கிறது..
ஏன் நெருங்கவில்லை…?
அப்பொழுதெல்லாம் நீங்கள்
எவன் மனைவியோடு கலவி பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள்?
இருந்தாலும், ஒரு கோழையைக் கொல்வதற்கு
இத்தனை கலவரங்கள் தேவையற்றது ஐயா…
இன்னுமொன்று,
நீங்கள் விழித்திருக்காத பொழுதுகளிலும், தூங்காத இரவுகளிலும்
நான் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறேன் பார்த்தீர்களா?
கோழைக்கு தைரியம்தான் குறைச்சல், புத்தியல்ல ஐயா.!
என்னைப்படித்துவிட்டு
பின்னர் குரல்வளையை பிடித்து நசுக்குங்கள்..
காரணம் –
என்வாழ்க்கையும் உங்களுக்கோர் நாள் பயன்படலாம் ஐயா!


இரகசிய விசாரணை – ஒரு குறிப்புபொதுவாக நண்பர்களின் கவிதைத்தொகுப்புக்களை பொது வெளியில் விமர்சனம் செய்வதில்லை என்கின்ற சத்திய வேள்வியில் சுமார் மூன்று ஆண்டுகளைப் போக்கிவிட்டேன். மனதில் பட்டதை எழுதியதற்காக என்னைப்பற்றி வசைபாடி நட்பை முறித்துக்கொண்டுபோன அந்த ‘கவிஞர்’ போல இன்னும் பல நண்பர்களை இழப்பதற்கு நான் தயாராக இல்லை. விமர்சனம் என்று வருகின்றபோது வெறும் அண்டப்புழுகனாய் இருப்பதற்கு நான் விரும்புவதில்லை. உண்மையை கறாராகச் சொல்லுவதற்கு எதற்குப் பயப்படவேண்டும்? பிறகு எதற்கு இப்பொழுது இந்த பாதரின் கவிதைப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேன் என நீங்கள் கேட்கலாம். காரணமிருக்கிறது.
முதலாவதாக அருட்பணி.யேசுதாஸ் என்னுடைய ஊர்க்காறர். நாங்கள் இருவரும் ஒரே குளத்தில் நீச்சலடித்தவர்கள். ஒரே பனைமரத்தில் நுங்கு தோண்டியவர்கள். ஒரே வீதி, ஒரே கோவில், ஒரே மறைக்கல்வி, ஒரே பாடசாலை.. இப்படி நெருக்கம் ஏராளம். நமது ஊர் சிறுவன் ஒருவனை ஓர்நாளில் குருவாகப் பார்க்கக் கிடைத்தால் நம் கண்களில் வழியும் விஸ்மிதம் எப்படியிருக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. யேசுதாஸை முதல் முறையாக வெள்ளையில் பார்த்தபோது அப்படித்தானிருந்தது. பெருமையை தலைபூராகவும் தடவிக்கொண்டேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரனின் முதல் முயற்சியை தட்டிக்கொடுக்க வேண்டாமா?
இரண்டாவது, இந்த நூலிற்காக அணிந்துரை எழுதுமாறு அருட்பணி.யேசுதாஸ் என்னைக் அணுகிய காலகட்டத்தில் நான் ஆப்கானிஸ்தானின் குண்டுகளுக்குள் வாழ்க்கையை துரத்திக்கொண்டிருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்கள் அதைச் செய்ய அனுமதிக்கவில்லை. அதையிட்டு இப்பொழுதும் நான் மனம் வருந்துவதுண்டு. அந்த பாவத்திற்கும் இது பரிகாரமாய் அமைந்துவிடுமல்லவா?
இவற்றிற்கெல்லாம் மேலாக, இது ஒரு நூல் விமர்சனம் என்று விளங்கிக்கொள்ளாதவாறு உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் இது விமர்சனம் அல்ல. இது வெறும் வாசக அனுபவப் பகிர்வு. இரகசிய விசாரணையை கையில் எடுத்து, பிரித்து, ஒவ்வொரு பக்கங்களாக புரட்டியபோது என்னுடைய மனதில் என்ன தோன்றிற்று அல்லது என்னுடைய கவிதை பிரியன் என்கின்ற ஆன்மா என்ன பேசினான் என்பது தொடர்பான வெளிப்பாடுதான் இது. ஆக, இது, ‘இரகசிய விசாரணை’ மீதான அமல்ராஜ் எனப்படும் ஒரு தொடக்கநிலை வாசகனின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவம். அவ்வளவுதான்.
அருட்பணி.யேசுதாஸ் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது. தனது முதல் தொகுப்பின் சிருஷ்டிப்பு தொடர்பாக அவரிடமிருந்த அல்லது இருந்துகொண்டிருக்கும் மனக்கிளர்ச்சியை நான் நன்கு அறிவேன். இதே மாதிரியானதொரு மனக்கிளர்ச்சியில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி நானும் தவித்தபடியிருந்தது நன்றாகவே ஞாபகமிருக்கிறது. அது வார்த்தைகளால் நெருங்க முடியாத ஒரு உணர்வு. பத்துப்பிள்ளைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்து தன்னைச் சுற்றி கிடத்தியிருக்கும் ஒரு தாயின் திகைப்பு அது. பெருமகிழ்வின் கிளர்ச்சி.
கடந்த 21 ஆம் திகதி மன்னார் பேராலய மண்டபத்தில் இந்த தொகுப்பு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே நாளில் ஜோர்தானிலிருக்கும் எனது கையிலும் இரகசிய விசாரணை கிடைக்கப்பெற்றது. முதலில் அதற்கு நன்றி பாதர். எடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன். அந்த அனுபவங்களை ஒவ்வொரு கவிதையாக முன்னிறுத்தி நான் சொல்லப்போவதில்லை. அதை அருட்பணி தமிழ்நேசன் புத்தக மதிப்புரையில் அழகாகவே சொல்லியிருக்கிறார். ஆதலால் என்னைக் நெருங்கிப்பற்றிய விடயங்களை மட்டும் சொல்லியபடி என் வேலையைத் தொடரலாம் என்றிருக்கிறேன். இந்த இரகசிய விசாரணையில் மொத்தமாக 50 கவிதைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் புதுக்கவிதைகள், அதுவும் இலகுக்கவிதைகள். அவை அனைத்தினதும் பல்வகைமைத்துவம் அட்டகாசம். ஒவ்வொன்றும் வித்தியாசமான தளங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. அதுவும் நம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்ற, அன்றாட வாழ்க்கையில் கடந்துவருகின்ற சமாச்சாரங்கள். இதுவே இந்நூலின் ‘வெயிட்!’.
ஒரு குருவானவர் கவிதை சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். தன்னிலை சாராத, அறிவுரைகள் நிறைந்த, இடத்துக்கிடம் ஒரு விவிலிய வார்த்தையை இலக்கங்களோடு முன்னிறுத்தி, காதல்-காமம் இவை இரண்டும் வலிந்து தவிர்க்கப்பட்டு… இப்படித்தானே!. ஆனால் இதே மனநிலையோடு உள்ளேசென்ற என்னை இந்த இரகசிய விசாரணை முகத்தில் அறைந்தது. இதுவே அருட்பணி.யேசுதாசிற்கு முதல் கைதட்டலைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். பல கவிதைகிளில் சாதாரண சமூக விலங்கு போன்று தன்னிலை சார்ந்து பேசுகிறார். சாகடிக்கும் அறிவுரைகள் இல்லை, அல்லது அந்த அறிவுரைகளை ‘நறுக்’ என்று நமக்குள் இறக்குகிறார். கிறீஸ்தவர் அல்லாத வாசகர்களுக்கு அலுப்படிக்காத கிறீஸ்தவ போதனை இதில் இருக்கிறது. இலகு தமிழ், இலகு நடை போன்றவற்றில் சமகால கடும்போக்குக் கவிதை நடைகளிலிருந்து விலகி எல்லா வாசகர்களுக்கும் புரியும்படி இருக்கிறது. இந்தக் கவிதைகள் தனது ‘target audience’ ஐ தடையின்றி போயடைகிறது. ஒரு கவிஞனின் கவிதைப் பொருள் தெரிவுகள் யார் அதன் வாசகர்கள் என்பதைப் பொறுத்ததுதான் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி இது தன்வேலையை சரியாகச் செய்திருக்கிறது. பாதரின் கவிதை கத்தோலிக்க போதனையாகத்தான் இருக்கும் என்கின்ற சமய மையவாத மனநிலை தவிர்த்து சகலரும் இதை வாசித்துப் புரியலாம். இது நடைமுறை வாழ்க்கை பற்றிய பொதுவான போதனைகள்!
பொதுவாக நான் ஒரு புத்தகத்தை கையில் தூக்கினால் அதை படித்து முடித்துவிட்டு கடைசியில்தான் அதன் முன்சேர்கைகளைப் படிப்பேன். அதாவது அந்த அணிந்துரை, ஆசியுரை, நயப்புரை போன்ற வஸ்துக்கள். காரணம் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் வேறுயாருமே செல்வாக்குச் செலுத்தக்கூடாது என்று நினைப்பேன். அவரவர் கருத்துக்களை கேட்பதற்கு முன்னர் அந்த பிரதி தொடர்பான எனது சொந்த அபிப்பிராயமே முக்கியம் என்பதான தேடல் அது. ஆதலால் 29 பக்கங்கள் கொண்ட முன்சேர்க்கைகளை இறுதியில்தான் படித்தேன். முதலாவதாக ஒரு நூலிற்கு 8 உரைகள் தேவைதானா என்று யோசித்தேன். இது தொடர்பான விதிமுறைகள் ஏதும் இல்லையென்றாலும் இப்படியான நீண்ட உரைகள் புத்தகத்தின் கனதியை கூட்டும் என்கின்ற கற்பிதம் உண்மையானதல்ல. மாறாக வாசகர்களிடத்தில் அலுப்பையே சம்பாதிக்கும். ஒரு புத்தகத்தின் பிரதான பிரதியை வாசித்தலை விட அது சார்ந்த எந்த நயப்பும் விமர்சனமும் பெரியதேயல்ல. அதிலும் கருத்துரை (அருட்பணி தமிழ்நேசன்), அணிந்துரை (மேமன் கவி), நயப்புரை (ஹேமச்சந்திர பத்திரண) என்கின்ற மூன்றும் நிச்சயம் ‘too much!’ என்பேன். ஒரேயொரு ‘நச்’ நயப்போடு முடித்திருக்கலாம். நிறைந்திருக்கும்.
அடுத்தாக கவிதைகளின் தலைப்புக்களில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. கவிதையின் தலைப்புக்களிலும் கவிதை தொக்கி நிற்கும் என அப்துல் ரகுமான் சொல்லுவார். கவிதைத் தலைப்புக்கள் உணர்ச்சிசார் பொருளோடு (emotive meaning), குறிப்பால் உணர்த்துவதாகவும் (gesture indication) இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நான் சொன்ன இந்த ரகத்தில் ஒரு தலைப்பு இதில் இருக்கிறது. ‘அழுக்குப்படிந்த சவர்க்காரக்கட்டிகள்’. இந்த நூலில் எனக்குப் பிடித்த தலைப்பு இது. அந்த சவர்க்காரக்கட்டியிலிருக்கும் அழுக்குத்தான் அதன் அழகு.
கவிதையின் போக்கு, மொழியின் நடை, புதுக்கவிதையின் பெருள் வீச்சு, பொருள் அளிக்கை மற்றும் உருவகித்தல் நிலை என அனைத்தும் நூலாசிரியரிற்கு சரளமாக வருகிறது. இதற்கு நான் கீழே தந்திருக்கும் வரிகள் உதாரணமானவை. (வேறு வேறு கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு வரிகள் இவை.) இக்கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்தமான வரிகள் இவை என்றும் சொல்ல முடியும்.
சுவாசித்துப் பாருங்கள்
குடிக்கும் தேநீரிற்குள்
எம் வியர்வையும்
இரத்தமும் சேர்ந்து மணக்கும்.
..
விஞ்ஞானபாட ஆசிரியரே
நீர்தானே சொன்னீர்
‘உயிரற்றவை வளராது’.
வந்து பாரும்
வளர்ந்து கொண்டிருக்கம்
புத்தர் சிலைகள்.
..
ஒன்றை மட்டும்
நினைவிற்கொள்!
தேவைக்கு அதிகமாய்
தேடிப் பதுக்கி வைக்கும்
எப்பொருளும்
உனக்குரியதல்ல
..
எழுதும் மூலப்பிரதியை
எவர் வேண்டுமானாலும்
எடுத்துப் படிக்கட்டும்
எழுதுகோல் மாத்திரம்
உன்கையில் இருக்கட்டும்.
..
நான் அழுவது
யாருக்கும் தெரியக்கூடாது
என்பதற்காக
குளிக்கும்வரை
காத்திருக்கிறேன்.
..
அறிவுப்பசி கொண்டு
நூலகத்தை அலசி ஆராய்ந்து
கூடு கட்டிய ஆன்மாக்களுக்கு
அளித்த சிரைச்சேதம்.
..
இத்தோடு ‘இரகசிய விசாரணை’ என்கின்ற முழுக்கவிதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கவிதையின் தொழில்னுட்ப அளிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.
எனக்குப் மிக மிகப் பிடித்த வரிகளை கோடிடு என்றால் மேலே சொன்ன இத்தனைக்கும் கோடு போடுவேன். அத்தோடு இப்பிரதி தொடர்பான அழகியல். இதைவிடவும் அழகான கவிதைகளை அருட்பணி.யேசுதாசினால் படைக்க முடியும் என்று நம்புகிறேன்.
கவிதைச்சூழலில் அம்மா, விலைமாது ஆகிய இரண்டு பேசுபொருள்கள் இல்லாத கவிதைத் தொகுப்புகளை காண்டெடுப்பது அரிது. ஏன், என்னுடைய தொகுப்பிலும் இவை இரண்டும் இருக்கிறது. இந்த தொகுப்பிலும் இருக்கிறது. இவை இரண்டும் கவிதையில் பொதுவான விடயப்பரப்புக்கள் என்றாலும் அதை கவிதையாக கையாழும் ஒவ்வொருத்தரின் பேச்சுப்பரப்பின் வீச்சும், பேசப்படும் விதமும் வித்தியாசப்படுகின்றன. இதில்தான் அவரவர் தனித்துவம் இருக்கிறது. அருட்பணி. யேசுதாசின் தனித்துவம் இரண்டையும் இரசித்து வாசிக்கும்போது புரிந்தது. சொல்லின் வகை புதிது. புழைய தலைப்பில் கவிதை புதிதாயிருக்கிறது.
நாவல் பற்றிய கவிதை. இது பதிய பேசுபொருள் என்று நினைக்கிறேன். நான் இதுவரை எந்தக் கவிதைத் தொகுப்பிலும் ‘நாவல்’ பற்றி கவிதை வாசித்ததில்லை. ஆச்சரியமாக இருந்தது. புதிய முயற்சிகள் இந் நூலில் பல இருக்கின்றன. அவற்றில் இது முக்கியமானதொன்று. அதேபோல ‘எதிர்ப்பால்’ என்கின்ற ஓரினச்சேர்க்கை பற்றிய கவிதை. இதுவும் ஒரு புதிய பேசுதளத்தை கவிதையில் கொண்டுவந்திருக்கிறது. நிச்சயமாக பேசப்படவேண்டிய விடயம்தான்.
ஓவ்வொரு கவிதையும், அதன் கவிதையின்பத்தைத்தாண்டி அது பேசவரும் கருத்தியல்கள் முக்கியமானவை. ஒவ்வொரு கவிதையும் நாம் எம்மொடு எடுத்துச்செல்லவேண்டிய ஏதோவொரு விடயத்தை இறுதியில் கையில் கொடுக்கிறது. அந்தவகையில் இந்தக் கவிதைகள் இறுதியில் சொல்லும் ‘target messages’ கள் முக்கியமானவை. உதாரணமாக இந்த விடயத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையும் அது சொல்லும் டார்க்கட் மெசேச்சையும் இங்கு குறிப்பிட முடியும். ‘கையெழுத்து’ என்கின்ற கவிதையின் இறுதியில் ஆசிரியர் இப்படி முடிக்கிறார்.
‘வெளித் தோற்றத்தில்
மயங்கிய நான்
அவை வெளிப்படுத்தும்
கருத்துக்களைக் கவனிக்கவில்லை’.
புதுக்கவிதைகளில் இருக்கம் ஒரு அழகான வகை ‘கதை சொல்லிக் கவிதைகள்’. ஒரு குறுங்கதையை கவிதை மொழியில் சொல்வது. ஆரம்ப காலங்களில் வெண்பாக்களிலும் இதை முயற்சித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எனக்கு கவிதைகளில் மிகவும் பிடித்த ஒரு பாங்கு இது. கவிக்கோ, மேத்தா, காசி ஆனந்தன் போன்றோர் இதன் கடவுள்கள். இந்த கவிதைத்தொகுப்பிலும் இப்படியொரு வகை இருக்கிறது. அது ‘நவீன அறுவடை’ என்கின்ற ஒரு கவிதை. பாரம்பரிய விவசாயத்தை விழுங்கிவிட்டிருக்கின்ற தொழில்நுட்ப அவதாரங்களால் ஏற்படும் விளைவுகளை சுருக்கமாக ஒரு சாமான்ய உளவனின் கண்கள் கொண்டு பார்க்கப்படுகின்ற கவிதை. இந்த வகைக் கவிதைக்கான ஆரம்ப முயற்சியில் ஆசிரியர் அடித்தாடியிருக்கிறார் என்பது மகிழ்சியாயிருக்கிறது.
இதிலுள்ள இன்னுமொரு கவிதையை வாசித்துவிட்டு எடுத்த எடுப்பில் அடுத்த பக்கத்தை பிரட்ட முடியாமல் போனது. இதற்கு காரணம், அந்த முழுக் கவிதையுமல்ல; அந்தக் கவிதையின் கடைசி நான்கு வரிகள். அந்த நெருடல் கலைந்து போவதற்கு முன்னரே இதை எழுதிவிடுகிறேன். இதுதான் ‘வலியின் வடுக்கள்’ என்கின்ற கவிதையின் அந்த கடைசி வரிகள்.
நல்ல காலம்
எங்களது விளையாட்டைப்போலவே
விடுதலைப்போராட்டமும்
முடிந்துபோனது.
இது தொடர்பான எனது அல்லது ஒரு வாசகனின் புரிதல் எப்படி இருக்கவேண்டும்? அதில் எங்களுடைய எந்த விளையாட்டு விடுதலைப்போராட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது? எனக்கு இந்த வரிகளில் ஏதோ ஒட்டாமல் இருப்பது போலத்தோன்றியது. ஆனால் எதுவாக இருந்தாலும் எதையும் எப்படியும் விமர்சிக்க ஒரு எழுத்தாளனிற்கு உரிமை இருக்கிறது என்பதால் புரிதலின்றியே அடுத்த பக்கத்திற்கு கடந்துபோனேன். இவைதான் அந்த நெருடல்கள். இதற்குள் இருக்கும் அந்த நுண்ணிய அரசியலை எனக்கு அந்த வரிகள் சரியாகக்காட்டவில்லை என்பது எனது தவறாகக்கூட இருக்கலாம்.
இரகசிய விசாரணை, அருட்பணி.யேசுதாசின் சிறந்த முதல் முயற்சி. நிலைத்தல் என்கின்ற தளத்தில் கவிதை இலக்கிய வெளி அவ்வளவு இலகுவானதல்ல. எழுத்தின் தரம் எப்பொழுதும் ஆர்முடுகிக்கொண்டேயிருக்க வேண்டும். நான்காவது கவிதைத் தொகுதியை ஆசிரியர் போடும்போது இந்த முதல் தொகுதி ஒரு குப்பை என அவரிற்குத் தோன்ற வேண்டும். இதுதான் வளர்ச்சி. இந்த கவிதை இலக்கியப் பரப்பில் அருட்பணி. யேசுதாசினால் நிலைக்க முடியும் என்பதை அவரது கன்னி எழுத்துக்களே அடித்துச் சொல்லியிருக்கின்றன. தொடர்ந்தும் கவிதை என்கின்ற ஒரு மகா பிரளயத்தில் உளன்று, அதன் மத்திய இயக்கத்தில் தொடர்ச்சியாக சுழன்று, நிலைத்து, இன்னும் எழுத்துச் சாதனைகள் பல படைக்க இந்த ‘ஊர்க்காறனின்’ அன்பான வாழ்த்துக்கள்.
.

ஆதிரை

download


மூன்றுவாரப் பயணம்… இன்றுதான் கடைசிப் பக்கத்தில் முட்டி பெரும் கனத்தோடு நிமிர்ந்திருக்கிறேன்.
ஆதிரை..!
இது சுமார் இரண்டு தசாப்தகால ஈழத்து வாழ்வியலின் அடுக்கு. வன்னி, புலிகள், போராட்டம், இறுதியுத்தம், முள்ளிவாய்க்கால், மெனிக்பாம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் புலிகள், மீண்டும் வன்னி என சுழலுகின்ற ஒரு பேரிடர்க்காலத்தின் அறியப்படாத முகம்.
அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து அதிக எதிர்பார்ப்புக்களோடு வெளியாகிய போர் சார் படைப்புக்களில் ஆதிரை முக்கியமானது என்றபோதுதான் அதை அவசரமாக படித்து முடித்துவிடவேண்டும் என்கின்ற ஏக்கம் தொற்றியது. அதை வாங்கி கையில் ஏந்தியபோதே அது கனத்தது (664 பக்கங்கள்!). வாசித்து முடிந்து அதை அலுமாரியில் செருகிய பின்னரும் கனக்கிறது. நம் இனத்தினுடைய ஆயுதப்போராட்டத்தையும் அதன் வழிசார் வாழ்வியலையும் நேரடியாக பார்த்து வளராத என்னைப்போன்ற ஒரு “அரச கட்டுப்பாட்டு” சமூகத்திற்கு இந்த ஆதிரை ஒரு வரலாற்றுப் படிப்பினையை நிகழ்த்தியிருக்கிறது.
வாசித்துக்கொண்டிருக்கையில் உணர்வுகளை அடக்க முடியாமல் அவ்வப்போது புத்தகத்தை மூடிவிட்டு ஜன்னல் பக்கம் ஓட வைக்கிறது. போரின் கடைசி நிமிடங்களிலான மனித அவலத்தையும் பின்னர் ஆதிரை பற்றிய கதையையும் சயந்தன் சொல்லும்போது மண்டை வெடிக்கிறது. புலிகள் எனப்படும் ஒரு கட்டமைப்பின் அகவியல்புகள், அதற்குள்ளிருந்து ups & downs, ஈழப்போராட்டத்தின் மீது அந்த “தமிழ்” இளைஞர்கள் கொண்டிருந்த வேட்கை, கடைசி நிலமும் கைநழுவும் வேளையில் அவர்களுக்குள்ளிருந்த உணர்வு ரீதியான உளவியல் போராட்டங்கள் போன்ற சிக்கல்தன்மைகளை ஆதிரை அழகாகப் பேசுகிறது.
ஒரு புனைவிற்கும் ஒரு வரலாற்று குறுப்பிற்கும் இருக்கும் இடைவெளியை இது தீர்க்கமாக போக்கியிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு வரலாற்று பதிவை புனைவு என்னும் கருவியினால் (tool) அழகியல் மற்றும் யதார்த்தத் தளங்களை அடியில் கொண்டு கட்டமுடியுமாயின் அது “ஆதிரை” எனக்கொள்ளலாம். சம்பவங்களையும் பாத்திரங்களையும் timeline வழுவின்றி ஒட்டியும், புனைவு அழகியலின் மொழியை solecism பிறழாமலும் நகர்த்தப்படும் ஆதிரை அட்டகாசமானது.
ஒரு வரலாறாக, ஒரு புனைவு இலக்கியமாக, ஒரு போர்க்காலக் குறிப்பாக, ஒரு தன்னிலை பேசும் ஆவணமாக ஆதிரை தன் வேலையை திறமாகச் செய்கிறது. கதைக்கருவின் விஸ்தீரணம் அந்த கதையோட்டத்தை மிதிக்காமல் நகர்வது ஆசம். கதைசொல்லலில் இருக்கின்ற நுட்பங்களை ஒரு மாணவனாக படிக்கமுடிந்தது.
“ஆதிரை” தொலைக்கப்பட்ட ஆயிரமாயிரம் உணர்வுகளின் திரட்டு. பேசப்படாத, அறியப்படாத ஆயிரமாயிரம் ஈழக்கதைகளின் சாட்சி.
நல்லதொரு வாசிப்பனுபவத்திற்கு நன்றி Sayanthan Kathir. வாழ்த்துக்கள்ணே.
ஆதிரையை இலங்கையிலிருந்து “அன்பளிப்பாக” எனக்கு அனுப்பிவைத்த எங்கள் பிரபலம் அண்ணன் Vikey Wignesh, உங்களுக்கும் நன்றிகள்.

Popular Posts